லிப் லாக் காட்சியா? இவ்வளவு சம்பளம் கொடுங்க! - கேட்டு வாங்கும் அனுபமா பரமேஸ்வரன்

சமீபத்தில் வெளியான ‘சைரன்’ படத்தில் நடிப்பதற்கு ரூ. 1.50 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘தில்லு ஸ்கொயர்’ படத்திற்கு ரூ. 1.60 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update:2024-02-27 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதுமே ரசிகர்களை பெற்ற ஒரு மலையாள திரைப்படம் என்றால் அது ‘பிரேமம்’. அந்த படத்தில் நிவின் பாலியுடன் நடித்த மூன்று கதாநாயகிகளுமே அடுத்தடுத்து திரை வாய்ப்புகளை பெற்று பிரபலமடைந்தனர். அதில் ஒருவர்தான் ‘மேரி’ கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தால் கிடைத்த புகழால் தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். அடுத்தடுத்து தெலுங்கில் பிஸியானதால் தமிழ் திரையுலகம் பக்கம் நீண்ட நாட்களாக வரவில்லை. அதன்பிறகு இப்போது ‘சைரன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு தன்னை நினைவூட்டியிருக்கிறார் அனுபமா. சமீபத்தில் தனது 28வது பிறந்தநாள் கொண்டாடியிருக்கும் அனுபமாவின் திரைப்பயணம் குறித்து சற்று விரிவாக காணலாம்.

அனுபமா பரமேஸ்வரன் - ஓர் அறிமுகம்

கேரள மாநிலம் திரிச்சூரில் பிறந்து வளர்ந்தவர் அனுபமா. இவர் கோட்டயத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ் பயின்றுகொண்டிருந்த சமயத்தில்தான் ‘பிரேமம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு நடிப்பில் பிஸியானதால் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. முதல்படமே மாஸ் ஹிட்டடித்திருந்தாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் என்பது தெலுங்கு திரையுலகில் இருந்துதான் வந்தது.


மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் அனுபமாவின் அறிமுக கதாபாத்திரங்கள்

குறிப்பாக, ‘பிரேமம்’ மலையாள ரீமேக்கில் சாய் பல்லவி கதாபாத்திரத்தை ஸ்ருதி ஹாசன் ஏற்று நடிக்க மற்ற இரண்டு கதாநாயகிகளாக அனுபமா மற்றும் மடோனாவே நடித்திருந்தனர். தெலுங்கில் ‘அ ஆ’ என்ற படத்தில் 2016ஆம் ஆண்டு அறிமுகமான பிறகே ‘பிரேமம்’ தெலுங்கு ரீமேக் வெளியானது. அதன்பிறகு அதே ஆண்டு தமிழிலும் ‘கொடி’ படத்தின் மூலம் அறிமுகமானார் அனுபமா. ஆனால் தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வந்தார். 2019ஆம் ஆண்டு புனீத் ராஜ்குமாருடன் இணைந்து ‘நடசார்வபோம்வா’ என்ற ஹாரர் படத்தில் நடித்ததன்மூலம் கன்னடத்திலும் அறிமுகமானார். 2016ஆம் ஆண்டுக்குப்பிறகு 2021ஆம் ஆண்டுதான் மீண்டும் தமிழில் அதர்வா ஜோடியாக ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் தோன்றினார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதன்பிறகு மலையாளத்திலும் சரிவர வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் தெலுங்கு திரையுலகம் அனுபமாவை கைவிடவில்லை. 2022ஆம் ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் 5 தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகின. என்னதான் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இவர் பிரபலமானாலும் பிற நடிகைகளுக்கு ஓரிரு படங்களிலேயே கிடைக்கும் விருதுகளும் அங்கீகாரங்களும் இவருக்கு கிடைக்கவில்லை.


 ‘சைரன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் அனுபமா 

மீண்டும் தமிழில்

தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனுபமாவின் சுருட்டை முடிக்கென இங்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அழகிய சிரிப்பு மற்றும் அவரது குறும்புத்தனங்களை சமூக ஊடகங்களில் அவர் வெளியிடும் பதிவுகளின்மூலமே தெரிந்துகொள்ளலாம். இந்நிலையில் தற்போது தமிழில் ‘சைரன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருக்கிறார் அனுபமா. படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தைக்கொண்ட இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல்ரீதியாக சுமாரான படமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே ஜெயம் ரவியின் ஜோடியாக வருகிற அனுபமா தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன. இந்நிலையில் ‘சைரன்’ படத்தின்மூலம் அனுபமாவிற்கு தொடர்ந்து தமிழ்ப்பட வாய்ப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனுபமா மற்றும் கிரிக்கெட் வீரர் பும்ரா

அனுபமாவை சுற்றும் சர்ச்சைகள்

காதல் சர்ச்சைகள் இல்லாத பிரபலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஒரு காதல் சர்ச்சையில் மாட்டிய அனுபமா அதற்கு விளக்கமும் அளித்தார். 2019ஆம் ஆண்டு அனுபமா கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வதந்திகள் சுற்றிவந்தன. குறிப்பாக, சமூக ஊடங்களில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அதனால்தான் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும் பேசப்பட்டது. அதனை ஆமோதிக்கும்விதமாக இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் மாறி மாறி ஒருவர் பதிவுக்கு மற்றவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பும்ராவும் தானும் நல்ல நண்பர்கள் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா. நடிகைகளுடன் பும்ரா இணைத்து பேசப்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே நடிகை ராசி கண்ணா அவரை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதைத் தவிர யார் என்றே எனக்கு தெரியாது என கூறிவிட்டார் ராசி கண்ணா.

எப்போதும் சமூக ஊடங்களில் பிஸியாக இருக்கும் அனுபமா ஹாட் போட்டோஷூட்களை நடத்தி அதனை பதிவிடுவார். மேலும் தனது அன்றாட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு அனுபமா போட்ட பதிவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சில சமயங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவும் அனுபமா தவறுவதில்லை. இதனாலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.


அனுபமாவின் சோஷியல் மீடியா பதிவுகள்

சொத்து மதிப்பு இவ்வளவா?

அனுபமாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களுடன் அவரது சொத்துமதிப்பு குறித்த செய்திகளும் தற்போது வைரலாகி வருகின்றன. ஒரு படத்திற்கு ரூ. 1 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறாராம் அனுபமா. குறிப்பாக, ஒரு படத்தில் லிப் லாக் காட்சிகளில் நடிக்கவேண்டி இருந்தால் கூடுதலாக 50 லட்சம் கேட்டே வாங்குகிறாராம். சமீபத்தில் வெளியான ‘சைரன்’ படத்தில் நடிப்பதற்கு ரூ. 1.50 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘தில்லு ஸ்கொயர்’ படத்திற்கு ரூ. 1.60 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். இப்படி தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என வலம்வருகிற அனுபமாவின் சொத்து மதிப்பு  ரூ.35 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஆடம்பர பங்களாக்கள் மற்றும் சொகுசு கார்களும் இவரிடம் உள்ளதாம். குறுகிய கால திரைவாழ்க்கையில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் அனுபமா அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்