'அனிமல்' பெஸ்ட்டா... பீஸ்ட்டா...? தொடரும் பாலிவுட் வசூல்

பாலிவுட் சினிமா பல வெற்றிப்படங்களை கொடுத்து கோடிகளை வாரி குவித்து வந்தாலும், ‘அனிமல்’ படம் மட்டும் சற்று வித்தியாசமானது.

Update:2023-12-19 00:00 IST
Click the Play button to listen to article

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் தற்போது உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதலே பாலிவுட் சினிமா பல வெற்றிப்படங்களை கொடுத்து கோடிகளை வாரி குவித்து வந்தாலும், ‘அனிமல்’ படம் மட்டும் சற்று வித்தியாசமானது. காரணம் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ள இப்படம் ஒரு ராவான அடல்ட் தீம் படமாக உருவாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருவதால்தான். இருந்தும் வணீக ரீதியாக சாதனைகளை நிகழ்த்திவரும் இப்படம் குறித்தும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பாலிவுட் சினிமா எப்படி மீண்டெழுந்து வசூல் ரீதியாக பல வெற்றிகளை குவித்து வருகிறது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

பாலிவுட்டின் மோசமான 2022

இந்திய திரையுலகை பொறுத்தவரை 'பாகுபலி' படத்தின் ரிலீசுக்கு பின் அண்மை காலமாக வெளிவரும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் எடுக்கப்படுகின்றன. இருந்தும் அந்த அந்த மொழிப்படங்களுக்கு இடையே இருக்கும் போட்டி மட்டும் அன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு என்பது இந்திய திரையுலகம் பல மாற்றங்களை கண்ட வருடமாகத் தான் சொல்ல வேண்டும். காரணம் பல ஆண்டுகளாக உலக அரங்கில் இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமாதான் என்ற பிம்பத்தை உடைத்து, அதன் ஆதிக்கத்தை பின்னுக்கு தள்ளி கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை நிகழ்திக்காட்டியதால் தான். அதிலும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் பிரமாண்டமான வெற்றியை பெற்றதோடு, 1300 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் முன்னிலை வகித்தது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் சோசியல் மீடியா டிரண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றது மட்டுமின்றி 'ஆஸ்கார்' விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்று உலக அளவில் கவனம் ஈர்த்தது.


'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்2', 'காந்தாரா', மற்றும் 'விக்ரம்' ஆகிய படங்களின் காட்சிகள் 

இதேபோல், கன்னடப் படங்களான 'கேஜிஎஃப்2' மற்றும் 'காந்தாரா' ஆகியவை முறையே ரூ.1200 கோடி மற்றும் ரூ.410 கோடி வசூலித்தன. அதே போல் தமிழிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படமும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இவைகள் தவிர பல தென்னிந்தி படங்கள் இந்திய அளவில் அந்த ஆண்டு கவனம் பெற்றதோடு, கலைக்கு மொழி தடையில்லை என்பதை மிக அழுத்தமாக நிரூபித்தன. இருந்தும் பாலிவுட்டிலோ ஆமிர்கானின் 'லால் சிங் சத்தா', ரன்வீர் சிங்கின் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்', கங்கனாவின் 'தாகத்', பிரபாஸின் 'ராதே ஷியாம்', அக்‌ஷய் குமாரின் 'சாம்ராட் பிருத்விராஜ்' மற்றும் ரன்பீர் கபூரின் 'ஷம்ஷேரா' உள்ளிட்ட பல படங்கள் அந்த சமயம் வெளிவந்தும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. குறிப்பாக 2022 ஆம் ஆண்டு அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவான 'பிரம்மாஸ்திரம்' படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் ரூ.410 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், நாகர்ஜுனா ஆகியோரும் நடித்திருந்தனர். இருந்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது. இப்படத்திற்கு பிறகு, தென்னிந்திய மொழிப்படங்களுக்கு இணையாக, எப்படியாவது பாலிவுட்டிலும் வசூல் சாதனையை நிகழ்த்தக் கூடிய படத்தினை எடுத்து விட வேண்டும் என தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

நம்பிக்கை தந்த ஷாருக்கான்

இந்தியாவின் மிகப்பெரிய திரைத்துறையான இந்தி திரைப்படத்துறைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெரியளவில் எந்த படங்களுக்கும் கிடைக்காமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் அந்த சறுக்கலுக்கு முற்றுப்புள்ளியை வைத்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி உடை, சர்ச்சையை ஏற்படுத்தியதால், படம் வெளியாகும் வரை பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் சிலர் படத்தின் போஸ்டர்களை கிழித்தும், பேனர்களை எரித்தும் போராட்டத்த்தில் ஈடுபட்டனர். இப்படி பல எதிர்ப்புகளை மீறி கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளிவந்த இப்படம் உலக அளவில் 1060 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனைப் படைத்தது. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டரான ஷாருக்கானுக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றியின் மூலம் அதுவரை, பாலிவுட் சினிமா பல தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், 'பதான்' படத்தின் மூலம் மீண்டும் அதன் தரத்தை உயர்த்திக்கொண்டது. தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த சல்மான்கானின் 'டைகர் 3', அக்ஷய்குமாரின் ‘ஓஎம்ஜி 2’, இந்தியளவில் கடுமையான விமர்சனத்தையும், எதிர்ப்பையும் பெற்ற 'தி கேரளா ஸ்டோரி' போன்ற படங்களும் வசூலை வாரி குவித்தது. குறிப்பாக சன்னி தியோலின் ‘கதார் 2’ திரைப்படம் சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.600 கோடி வசூலை குவித்து மாஸ் காட்டியது.


நடிகர் ஷாருக்கானின் 'பதான்' பட காட்சிகள் 

இதன்பிறகு, மீண்டும் ஷாருக்கான், தமிழ் சினிமா இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' படத்தில் நடித்தார். இப்படத்தில் ஷாருக்கானுடன், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலமாக ஷாருக்கான் சொந்தமாக தயாரித்திருந்த இந்த படத்திற்கு, அனிருத் இசை அமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்தது. இந்தியாவில் மட்டும் 26 நாளில் ரூ.611 கோடியும், உலகம் முழுவதும் ரூ.1100 கோடியும் வசூலித்த இப்படம், பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸில் முதலாவதாக இருக்கும் ஆமிர்கானின் ‘தங்கல்’திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்திய திரைப்படத்துறையில் தொடர்ந்து இரண்டுமுறை ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தவர் என்ற பெருமை ஷாருக்கானுக்கு கிடைத்தது.

ரன்பீர் கபூரின் புதிய கூட்டணி

'பிரம்மாஸ்திரம்' படத்திற்கு பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் 'தூ ஜூதி மெயின் மக்கார்' என்ற படத்தில் ரன்பீர் கபூர் நடித்தார். ஒரு காதல் கலந்த குடும்ப திரைப்படமாக வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களோடு சுமாரான வெற்றியையே பெற்றது. இதன் பின் ஆக்ரோஷமான அக்ஷன் படத்தில் நடிக்க முடிவு செய்த ரன்பீர் கபூர், இந்த முறை தென்னிந்தியாவின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக விளங்கும் சந்தீப் ரெட்டி வங்காவுடன் கூட்டணி அமைத்தார். ஏற்கனவே தெலுங்கில் வெளிவந்து ஹிட் அடித்த 'அர்ஜுன் ரெட்டி' என்கிற ஒற்றை படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றிருந்த சந்தீப் ரெட்டி, கடந்த 2019 ஆம் ஆண்டு அதே 'அர்ஜுன் ரெட்டி' படத்தை 'கபீர் சிங்' என்கிற பெயரில் ஷாஹித் கபூரை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டையும் கலக்கினார். இதனால் பல நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த நேரத்தில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே 'அனிமல்' என்ற டைட்டிலுடன் ரன்பீர் கபூர் - சந்தீப் ரெட்டி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளிவந்தது. டி-சீரிஸ் பிலிம்ஸ் , பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், தினம் தினம் புது புது அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியது. இந்த நேரத்தில் தான் கடந்த செப்டம்பர் 28 அன்று 'அனிமல்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றது.


ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா

டீசரின் முதல் காட்சியிலேயே இந்த படம் அப்பா - மகன் உறவைப் பற்றி சொல்ல வந்துள்ள படம் என்பதை உணர்த்தும் விதமாக. ‘இந்த உலகத்திலேயே என் அப்பா தான் பெஸ்ட்’ என்கிற வசனத்தை ரன்பீர் கபூர் பேசியிருப்பார். இருந்தும் அப்பாவாக வரும் அனில் கபூரோ அடுத்த காட்சியிலேயே மகனை அடிப்பது போல் காட்டி ‘புள்ளைய எப்படி வளக்குறதுன்னே எனக்கு தெரியல’ என பேசும் போது, தந்தைக்கும் - மகனுக்கும் இடையிலான சிக்கலான விஷயங்களை உணர்வு பூர்வாமாக இப்படம் பேச வந்துள்ளது என்பதை தெளிவாக உணர்த்தியிருந்தது. இதை ஆணித்தனமாக நிரூபிக்கும் வகையில் கடந்த மாதம் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலரும் நாயகன் ரன்பீர் கபூருக்கும் அவரது தந்தையாக வரும் அனில் கபூருக்கும் இடையே நிலவும் டாக்சிக்கான உறவுமுறையை மிக தெளிவாக காட்டியதோடு, படத்திலும் சற்று வன்முறை அதிகம் இருப்பது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ‘சாக்லெட்’ பாயாக இருக்கும் ரன்பீர் ஒருகட்டத்தில் தாடி வளர்த்து ‘பீஸ்ட்’ மோடுக்கு மாறுகிற நிகழ்வெல்லாம் ட்ரைலரில் தெறி மாஸாக இருந்தது, இதனாலேயே இப்படத்தின் ஓப்பனிங் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதை கணித்த பாலிவுட் வட்டாராம் ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு, அதிகளவிலான திரையரங்குகளையும் கைப்பற்றினார்.


'அனிமல்' படத்தில் அனில் கபூர் மற்றும் ரன்பீர் சிங் 

சுமார் படம் சூப்பரான வசூல்

இந்த வருடம் துவக்கம் முதலே பாலிவுட் சினிமா 'பதான்' துவங்கி 'ஜவான்' வரை வசூல் வேட்டை நிகழ்த்தி வந்த நிலையில், 'அனிமல்' திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என மாஸ் மசாலா படமாக வெளிவந்துள்ள இப்படம் பெரும்பாலான ரசிகர்களின் மனதை வென்ற அதே வேளையில் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. பாலிவுட் சினிமா வரலாற்றில் இந்த வருடம் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய முதல் நாள் வசூலை குவித்த ‘அனிமல்’ திரைப்படம், முதல் வார இறுதியில் இந்தியாவில் மட்டுமே சுமார் ரூ.201 கோடியை எட்டி பாக்ஸ் ஆஃபீஸை மிரட்டியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் 300, 400 என கோடிகள் எகிற, இப்படம் 5வது நாள் முடிவில் உலகளவில் ரூ.481 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் தெரிவித்துள்ளது. தற்போது இரண்டு வாரங்களின் முடிவில் 800 கோடியை உலகளவில் நெருங்கியுள்ள இப்படம், பாலிவுட்டின் ‘பதான்’, ‘ஜவான்’ படங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் ரூ.1000 கோடியைத் தாண்டி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் தந்தை மீது அதீத பாசம் வைத்திருக்கும் மகனின் கதையாக வெளிவந்திருக்கும் இந்த படம் விமர்சன ரீதியாக கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக படத்தில் வரும் ஆணாதிக்க கதைச்சொல்லலுக்கும், அளவுக்கு மீறிய வன்முறைக்கும், பெண்ணடிமைக் கருத்துகளுக்கும் எதிராக தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


'ஜவான்', 'அனிமல்', 'பதான்' படத்தின் புகைப்பட காட்சிகள் 

இதில் இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் 'அனிமல்' படத்தை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததோடு, மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சனும் 'பெண்கள் மீதான வெறுப்பை இந்த படம் நியாயப்படுத்துகிறது' என கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். ஏன் நம் தமிழ் நாட்டிலும் கூட மதன் கௌரி போன்ற பல நபர்கள் இப்படத்தை விமர்சித்து பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில், அவற்றையெல்லாம் மீறி இப்படம் வசூலை அள்ளி குவித்து வருவது ஆச்சரியமான சமூக அச்சமாக பார்க்கப்படுகிறது. இப்படி சுமாரான படம் சூப்பரான வசூல் என்ற பாணியிலும், வொர்ஸ்ட் கான்சப்ட் பெஸ்ட் கலெக்ஷன் என்ற தோரணையிலும் இந்த வருட இறுதியில் வெளிவந்துள்ள இப்படம் வசூல் வேட்டை நடத்தி ஆரோக்கியமான சினிமா வர்த்தகத்தை பாலிவுட்டில் ஏற்படுத்தியிருந்தாலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க இப்படம் உதவுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருந்தும் இந்த வருடம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வரும் டிசம்பர் 21 ஆம் தேதி ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவர இருக்கும் ‘டங்கி’ திரைப்படம் இவை அத்தனையையும் பூர்த்தி செய்யும் என நம்பலாம்.

Tags:    

மேலும் செய்திகள்