72 வயதிலும் அடங்காத நடிப்பு பசி - பிரம்மிப்பூட்டும் மம்மூட்டி

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக, மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி.

Update:2024-02-27 00:00 IST
Click the Play button to listen to article

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக, மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் ‘தளபதி’, ‘அழகன்’, ‘மறுமலர்ச்சி’, ‘ஆனந்தம்’ போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். கிட்டத்தட்ட 53 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அசைத்து பார்க்க முடியாத ஒருவராக இருந்து வரும் இவர், 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்ற பெருமைக்குரியவர். நடிகராக மலையாள சினிமாவில் அறிமுகமாகி 19-ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நடிகர் மம்மூட்டி 72 வயதிலும் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து, இன்றைய தலைமுறை நடிகர்களுக்கே சவால் கொடுக்கும் விதமாக இன்றும் இளமை மாறாது அதே அழகு கொஞ்சும் நடிப்புடன், தனது பாத்திர படைப்புகளுக்கு ஏற்றவாறு உயிரோட்டத்துடன் நடித்து தனக்கான ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். அப்பேற்பட்ட மாஸ் ஹீரோவான மம்மூட்டி கடந்த ஆண்டுதான் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து "காதல் தி கோர்" என்ற படத்தில் இதுவரை எந்த முன்னணி ஹீரோவும் ஏற்று நடிக்க தயங்கும் ஒரு பாத்திரத்தை வெகு அசாதரணமாக நடித்து பிரமிக்க வைத்திருந்தார். அந்த வகையில், தற்போது மாந்திரீகத்தை மையமாகக்கொண்டு ஹாரர் திரில்லர் படமாக வெளிவந்துள்ள ‘பிரம்மயுகம்’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து ரசிக்க வைத்துள்ளார். அதுகுறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

மம்மூட்டியின் ஆரம்பகால வாழ்க்கை

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் மம்மூட்டி 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி அன்று, இஸ்மாயில், பாத்திமா தம்பதியருக்கு பிறந்த 6 பிள்ளைகளில், மூத்த மகனாக கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு அருகில் உள்ள, சந்திரூர் என்ற கிராமத்தில் பிறந்தார். முகமது குட்டி என்ற இயற்பெயர் கொண்ட மம்மூட்டியின் அப்பா ஜவுளி மற்றும் அரசி வியாபாரம் செய்து வந்தார். இதனால் சினிமாவை பற்றி பெரிதும் தொடர்பே இல்லாத குடும்பத்தில் பிறந்த மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு சிறுவயதில் இருந்தே சினிமா மீது தீராத காதல் இருந்துள்ளது. ஆனால் அதனை எப்போதும் யாரிடமும் மம்மூட்டி வெளிப்படுத்திக் கொண்டது இல்லை. குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஆல்பர்ட் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கியவர், 1960க்கு பிறகு குடும்பம் எர்ணாகுளத்திற்கு மாற, பிறகு வேறுவழியின்றி அந்த பகுதியில் இயங்கி வந்த அரசினர் பள்ளியில் சேர்ந்து பள்ளி கல்வியை முடித்தார். பின்னர் அதே பகுதியில் இயங்கி வந்த மஹாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்து கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்த நேரத்தில்தான், அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயர் பிடிக்காமல், தனது பெயரை மாற்ற நினைத்துள்ளார். ஆனால் ஏற்கனவே அவரது நண்பர்கள், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் முகமது குட்டி பெயரை சுருக்கி மம்மூட்டி என்று அழைக்க அந்த பெயரே பின்னாளில் நிலைத்துவிட்டது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே மம்மூட்டி ஆசைப்பட்டது போன்று 1971-ஆம் ஆண்டு ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ எனற மலையாள படத்தில் அங்கீகரிக்கப்படாத துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வர அதனை சந்தோஷமாக ஏற்று நடித்தார். ஆனால் படிப்பதை விட்டுவிட்டு இப்படி சினிமாவிற்கு சென்று நடிப்பதை மம்மூட்டி குடும்பத்தினர் பெரிதாக விரும்பவில்லை. காரணம் பாரம்பரியமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த நமக்கு சினிமாவெல்லாம் வேண்டாம் என்பதுதான் அவரது பெற்றோரின் வேண்டுகோளாக இருந்தது.


திரையில் நடிகர் மம்மூட்டியின் இளமைக்கால புகைப்பட காட்சிகள் 

ஆனால் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்காது நம் மகன் எப்படியும் ஒருநாள் மலையாளத் திரையுலகில் பெரிய அளவில் கொடிகட்டிப் பறக்கப்போகிறான் என்பது. இருந்தும் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து பி.ஏ பட்டப்படிப்பை முடித்த மம்மூட்டி, எர்ணாகுளத்திலேயே இயங்கி வந்த அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சியும் மேற்கொண்டார். ஆனாலும், சினிமா மீதான மோகம் அவரை விட்டு போகவில்லை. அதற்கான முயற்சிகளில் முழுமையாக இறங்க முடிவு செய்த மம்மூட்டி ஒருபுறம் தனது வழக்கறிஞர் தொழிலை தொடர்ந்து கொண்டே ஒன்றிரண்டு சினிமா படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் 1970-களின் இறுதிவரை அவருக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. எல்லாம் தோல்வியாகவே அமைந்தது. இருப்பினும் பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்த மம்மூட்டி தனது நடிப்பு பசிக்கு தீனி போடும் விதமாக மேடை நாடகங்களிலும் நடித்துவந்தார். இப்படி நாடகம், வழக்கறிஞர் தொழில் என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்த போதுதான் எம்.டி.வாசுதேவன் நாயர் என்பவரது இயக்கத்தில் ‘வில்கனுண்டு ஸ்வப்னங்கள்’ என்ற மலையாளப் படத்தில் சுகுமாரன், சுதிர் ஆகியோருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம்தான் மம்மூட்டியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து விஜயன் என்ற கதாபாத்திரத்தில் சர்க்கசில் பைக் சாகசம் செய்யும் சாகச வீரராக மம்மூட்டி நடித்திருந்த ‘மேளா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.


மலையாள சினிமாவில், துவக்கக்காலத்தில் நடிகர் மம்மூட்டியின் தோற்றம் 

மம்மூட்டி பெற்ற தேசிய விருதுகள்

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமா எடுக்கும் மலையாளத் திரையுலகில் மம்மூட்டி ஒரு நட்சத்திர நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் பெற்றது என்னவோ 1981-ஆம் ஆண்டு பி.ஜி.விஸ்வம்பரன் இயக்கத்தில் வெளியான ‘ஸ்போதானம்’ திரைப்படத்தில் இருந்துதான். இப்படத்தில் நடிக்கும் போது புதுமுக நடிகர் என்பதற்காக மிகவும் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லையாம். இருந்தும் மிகவும் சிரத்தை எடுத்து நடித்து கொடுத்தாராம் மம்மூட்டி. அதனால்தான் அப்படம் அவருக்கு நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது. மம்மூட்டியின் விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக அதே ஆண்டில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க, அதில் ‘த்ரிஷ்னா’ படம்தான் சோலோ ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. இதற்கு பிறகு, அதே 1981-ஆம் ஆண்டில் கேரளாவில் இந்து - முஸ்லீம் அரசியல் பிரச்சினையை மையமாக வைத்து ஐ.வி.சசி என்பவர் இயக்கியிருந்த ‘அஹிம்சா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் சுகுமாரன், மோகன்லால், ரதீஷ் ஆகியோருடன் இணைந்து மம்மூட்டி துணை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக முதல் முறையாக கேரள அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். இதுதவிர இப்படத்திற்கு பிறகுதான் மம்மூட்டிக்கான ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது. இதன்பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்த மம்மூட்டியின் திரைவாழ்க்கை வருடத்திற்கு 35-ல் இருந்து 40 படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அதிலும் 1986-ஆம் ஆண்டில் மட்டும் 36 படங்களில் நடித்தார்.


நடிகர் மம்மூட்டி விருது பெற்ற தருணங்கள் 

1981-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இறுதிக்குள் குறுகிய காலத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற சமயத்தில்தான் மலையாள சூப்பர் ஸ்டாராக மாறியிருந்த மம்மூட்டியையும், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்து சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியையும் ஒன்றாக இணைத்து ‘தளபதி’ என்றொரு படத்தினை எடுத்து மாபெரும் வெற்றி கண்டார் மணிரத்னம். அதற்கு முன்பாகவே 1990-ஆம் ஆண்டு ‘மௌனம் சம்மதம்’ என்ற படத்தில் மம்மூட்டி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தாலும், 1991-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான ‘தளபதி’ படம் மம்மூட்டியை மற்றுமொரு உயரத்திற்கு அழைத்துச் சென்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ‘அழகன்’, ‘கிளிப்பேச்சை கேட்கவா’, ‘ஆனந்தம்’, ‘மறுமலர்ச்சி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்று நிறைய வெற்றிப் படங்களில் நடித்த மம்மூட்டி, அதோடு நின்றுவிடாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்தார். இருப்பினும் அவரது தாய் மொழியான மலையாளத்தில்தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். அதனால்தானோ என்னவோ மலையாளத் திரையுலகில் மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று யாரும் தொட்டு பார்த்திட முடியாத உச்சத்தில் தற்போதும் இருந்து வருகிறார்.


'தளபதி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், நடிகர் மம்மூட்டி  

இன்றும் நடிப்பில் மிரட்டும் மம்மூட்டி

புதிய தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின் மூத்த நடிகர்கள் ஓரம்கட்டப்பட்டு, தற்போது என்ன செய்கிறார்கள் என்று தேடும் அளவுக்கு நிலைமை மாறிப்போகும் சூழ்நிலையில், இன்றும் தமிழ் திரையுலகில் எப்படி ரஜினி, கமல் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டு தொடர்ந்து ஸ்டார் என்ற அந்தஸ்திலேயே பயணித்து வருகிறார்களோ, அதேபோன்று மலையாளத் திரையுலகிலும் மோகன்லால், மம்மூட்டி போன்றவர்களும் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் என்ற இடத்திலேயே பயணித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், மம்மூட்டி எந்த இடைவெளியும் எடுக்காமல் யாருக்கும் தான் சளைத்த ஆள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுத்து மலையாளத் திரையுலகில் தன்னை தக்க வைத்து வருகிறார். அதிலும் தனது மகனான துல்கர் சல்மானும் இந்திய அளவில் அறியப்படும் ஹீரோவாக கொடிகட்டி பறந்து வரும் நிலையிலும், 72 வயதான மம்மூட்டி இதற்கு முன்பிருந்ததை விட தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்றும் வித்தியாச வித்தியாசமான கதை தேர்வுகளை செய்து வருடத்திற்கு 4, 5 படங்களில் நடித்து, அவற்றை வெற்றிப்படங்களாக மாற்றிக்காட்டி பல இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடித்து வருகிறார்.


 திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டியின் வித்தியாசமான தோற்றங்ள்

அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு, 10 வருட இடைவெளிக்குப்பிறகு தமிழ் திரையுலக பக்கம் வந்த மம்மூட்டி, ராம் இயக்கத்தில் ‘பேரன்பு’ படத்தில் பல நடிகர்கள் ஏற்று நடிக்க முன்வராத நிலையிலும், தைரியமாக அமுதவன் பாத்திரத்தை மிக மிக நேர்த்தியாக நடித்து அசத்தியிருந்தார். இதற்கு பிறகு தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுபடியும் மலையாளத் திரையுலகில் பிஸியானார். அப்படி கடந்த 2022 ஆம் ஆண்டு பல படங்களில் நடித்திருந்தாலும் ரத்தீனா என்பவரது இயக்கத்தில் வெளியான "புழு" என்கின்ற படத்தில் நெகட்டிவ்வான ரோலில் நடித்திருந்த மம்மூட்டிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதற்கு பிறகு 2023 ஆம் ஆண்டில் மட்டும் 4 வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். இதில் தெரியாத ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருப்பவர்களோடு சகஜமாக பழகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஜேம்ஸ் என்ற சுந்தரம் கதாபாத்திரமாகட்டும், 'கண்ணூர் ஸ்குவாட்' படத்தில் காவல்துறை அதிகாரி ஜார்ஜ் மார்ட்டின் வேடமாகட்டும், அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற 'காதல் தி கோர்' படத்தில் தன்பாலின ஈர்ப்பாளரராக வரும் 'மேத்யு தேவஸ்ஸி' பாத்திரமாகட்டும் அனைத்துமே ஒன்றுக்கொன்று வேறுபட்டு வித்தியாசமான கதைக்களங்களுடன் வெளிவந்து இந்த தலைமுறை நடிகர்களே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு அனைத்துமே மெகாஹிட் வெற்றியினை பெற்றது. இப்படி நடிப்பு வேட்கையுடன் தொடர்ந்து நடித்து வருவதை பார்க்கும்போது அடுத்த தேசிய விருதையும் எப்படியாவது நாம் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு கதைகளை தேர்வு செய்து மம்மூட்டி நடித்து வருகிறாரோ என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.


இயக்குநர் ராமின் 'பேரன்பு' படத்தில் நடிகர் மம்மூட்டியின் தோற்றம்

மலையாள திரையுலகை மிரளவைத்துள்ள ‘பிரம்மயுகம்’

மலையாள மக்கள் வித்தியாசமான கதைக்களங்களைத்தான் விரும்புகிறார்கள் என்பது தெரிந்து, மலையாள பட தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கு ஏற்ற மாதிரியான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்து வருகின்றன. அந்த வரிசையில், திரையுலகு பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் நடிகர் மம்மூட்டி தனது படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படம் எடுத்து வருவதாக மலையாள மனோரம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல்தான் சமீபகாலமாக மம்மூட்டியின் படங்களும் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு ஹாரர் திரில்லர் படமாக வெளிவந்துள்ள ‘பிரம்மயுகம்’ திரைப்படமும் மலையாள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ராகுல் சதாசிவம் என்பவரது இயக்கத்தில் கொடுமொன் பொட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மம்மூட்டி, நடிப்பில் மிரள வைத்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், மணிகண்டன் ஆச்சாரி மற்றும் அமல்டா லிஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தில் வரும் 4 கதாபாத்திரங்களில் ஒரே ஒரு பெண் வேடமாக யட்சி எனும் பேய் வேடத்தில் அமல்டா லிஸ் நடித்திருப்பதுதான். 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு திகில் படமாக கறுப்பு-வெள்ளை நிறத்தில் வெளிவந்துள்ள இப்படத்தை சக்ரவர்த்தி ராமச்சந்திரன் மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


‘பிரம்மயுகம்’ படத்தில் கொடுமொன் பொட்டியாக வரும் மம்மூட்டி

வெறும் மலையாள மொழியில் மட்டுமே வெளியாகியுள்ள இப்படம், மற்ற மொழிகளிலும் ‘பான் இந்தியா’ படமாக வெளியாகி இருந்தால் இந்நேரம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை நிகழ்த்தியிருக்கும் என்று பலரும் கூறிவருகின்றனர். மேலும் 72 வயதிலும் நடிகர் மம்மூட்டி எப்படி இதுபோன்ற கதைகளை தேர்வு செய்கிறார்? ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எப்படி அவரால் மட்டும் வெரைட்டி காட்டி நடிக்க முடிகிறது? என விமர்சகர்கள் வியக்கின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தனது விடாமுயற்சியின் மூலமும், கடின உழைப்பின் மூலமும் தொடர் வெற்றியினை பெற்றுவரும் நடிகர் மம்மூட்டி மீண்டும் ஒரு தேசிய விருதினை பெற, திரையுலகில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்து தெரிவிப்போம்

Tags:    

மேலும் செய்திகள்