கர்ப்பகாலத்தை என்ஜாய் செய்யும் அமலா பால் - நெட்டிசன்கள் புகழாரம்!

அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று அமலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது நீண்டகால நண்பர் ஜெகத் தேசாய் என்பவர் அவரை புரபோஸ் செய்து மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து சில நாட்களுக்குள்ளேயே கொச்சியில் வைத்து இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.

Update:2024-03-19 00:00 IST
Click the Play button to listen to article

பெரும்பாலான நடிகைகள் தங்கள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்துவிட்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் சில நடிகைகள் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கிறார்கள். அப்படியே நடித்தாலும் தங்கள் கர்ப்பகாலங்களில் மீடியா முன்பு வருவதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் அதற்கு ஒருசில நடிகைகள் விதிவிலக்காக நடந்துகொள்வார்கள். அப்படித்தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்ததிலிருந்தே தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் கணவருடன் ரொமான்ட்டிக் போட்டோஸ் மற்றும் கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பது குறித்த போட்டோஸ்களை பதிவிட்டு வருகிறார் நடிகை அமலா பால். அதோடு நின்றுவிடாமல் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் சமீபத்தில் தனது திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பல முன்னணி நடிகைகள் பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்துவரும் நிலையில், அமலா பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. அமலா பாலின் பின்னணி என்ன? திரைவாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன? மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை குறித்தெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


பள்ளிப்பருவம் மற்றும் குடும்பத்தினருடன் அமலா பால்

இளம்வயதிலேயே கிடைத்த திரை வாய்ப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமலா பால். 1991ஆம் ஆண்டு பிறந்த இவர் பால் பொண்ணு என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக முதலில் அனகா என மாற்றியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு அமலா பால் என மாற்றிவிட்டார். அமலா சினிமாவில் நடிப்பதில் அவருடைய அப்பாவுக்கு உடன்பாடே இல்லையாம். ஆரம்பத்தில் அவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது சகோதரன் அபிஜித்தின் ஆதரவு இருந்ததால் எப்படியோ அப்பாவை சம்மதிக்க வைத்திருக்கிறார். அமலா பாலின் அம்மா ஒரு பாடகி மற்றும் அப்பா கல்லூரியின் நாடகத்துறையில் இருந்ததால் சிறுவயதிலிருந்தே இவருக்கு நடிப்பின்மீது ஆர்வம் அதிகமாக இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்தவுடனே 2009ஆம் ஆண்டு வெளியான ‘நீலத்தாமரா’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார் இயக்குநர் லால் ஜோஸ். அந்த படத்தின்மூலம் அறிமுகமான அமலாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனது அம்மாவை போன்றே பாடகியாக உருவெடுத்தார். ‘விகடகவி’, ‘வீரசேகரன்’, ‘இது நம்ம கதா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் அந்த படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். ஆனால் ‘விகடகவி’ வெளிவருவதற்கு முன்பே சில படங்கள் வெளியாகின. ‘வீரசேகரன்’ படம் சர்ச்சைக்குள்ளான நிலையில் அதில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார் அமலா பால். 


அமலாவின் ஆரம்பகால திரைப்படங்கள்

தொடர்ந்து 2010ஆம் ஆண்டு சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த ‘சிந்து சமவெளி’ வெளியானது. இந்த படமும் பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளான நிலையில் அமலா பாலுக்கு கொலை மிரட்டல்களும் விடப்பட்டன. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு வெளியான ‘மைனா’ திரைப்படம் அதற்கு முன்பு திரைத்துறையில் அமலா பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. தமிழ் திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகி என்ற இடத்தை மைனா கதாபாத்திரம் பெற்றுத்தந்தது.

‘மைனா’ படத்தின் வெற்றியால் தமிழ், மலையாளம் என பிஸியான அமலாவுக்கு அதே ஆண்டு தெலுங்கில் ‘பெஜவாடா’ எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழிலும் ‘தலைவா’, ‘தெய்வ திருமகள்’, ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதனிடையே இவர் நடிப்பில் வெளியான மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களும் ஹிட்டடித்தன. அதனாலேயே 2017ஆம் ஆண்டு ‘ஹெப்புளி’ என்ற கன்னட வாய்ப்பும், 2023ஆம் ஆண்டு ‘போலா’ என்ற இந்தி பட வாய்ப்பும் அமலாவைத் தேடிவந்தன. ஆனால் திருமணம் மற்றும் அதனால் ஏற்பட்ட சர்ச்சைகளால் இந்தி பிரவேசத்திற்கு முன்பு கொஞ்சகாலம் திரையுலகிலிருந்து விலகியிருந்தார் அமலா.


அமலா பாலின் ஹிட் படங்கள்

இயக்குநருடனான மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

இளம்வயதிலேயே முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஹீரோயினாக உருவாகியிருந்த அமலா பால், ‘தெய்வ திருமகள்’ மற்றும் ‘தலைவா’ போன்ற படங்களை இயக்கிய ஏ.எல். விஜய்யை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என கணவர் கூறியிருந்தாராம். அதற்கு முதலில் கட்டுப்பட்ட அமலா பால், பின்னர் தொடர்ந்து படங்களில் கமிட் ஆனார். இதனாலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு 2017ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தது இந்த ஜோடி. தொடர்ந்து சில பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த அமலா பால், மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இருவரும் ஒன்றாக இருப்பது மற்றும் லிப் லாக் செய்வது போன்ற புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடவே சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் அந்த செய்தி முற்றிலும் பொய் எனவும், அது மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் விளக்கம் அளித்தார் அமலா பால்.

இதற்கிடையே அமலாவின் முன்னாள் கணவரும் இயக்குநருமான ஏ.எல். விஜய் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் தனியாகவே சுற்றிவந்த அமலா, அவ்வப்போது ஹாட் போட்டோஷூட்ஸ் செய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். இதனால் எப்போது அமலா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறார் என நெட்டிசன்கள் அவரை நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று அமலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது நீண்டகால நண்பர் ஜெகத் தேசாய் என்பவர் அவரை புரபோஸ் செய்து மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து சில நாட்களுக்குள்ளேயே கொச்சியில் வைத்து இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.


முன்னாள் கணவர் ஏ.எல். விஜய் மற்றும் தற்போதைய கணவர் ஜெகத் தேசாயுடன் அமலா பால்

இந்த ஜெகத் தேசாய் கோவாவைச் சேர்ந்தவர் என்றும், அமலா அங்கு சுற்றுலா சென்றபோது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அது பின்னாளில் காதலாக மாறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமணமான இரண்டு மாதங்களிலேயே அமலா கர்ப்பமடைந்திருப்பதாகக் கூறி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தொடர்ந்து தனது திரைப்பட போஸ்டர்கள், ஆன்மிக சுற்றுலாக்கள், தியானம் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தனது கணவருடனான நெருக்கமான புகைப்படங்களையும் பதிவிடுகிறார். தனது முன்னாள் கணவர் விஜய்யை வெறுப்பேற்றவே அமலா இவ்வாறு செய்வதாக நெட்டிசன்கள் கலாய்த்தாலும் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை.

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அமலா

கர்ப்பமடைந்திருப்பதால் அடுத்தடுத்த படப்பிடிப்புகளை சற்று தள்ளி வைத்திருக்கும் அமலா பால், ஏற்கனவே நடித்து முடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. பிரித்விராஜ், அமலா பால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படமானது ஆடுஜீவிதம் என்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கேரளாவிலிருந்து பிழைப்பைத் தேடி வெளிநாட்டுக்கு செல்லும் இளைஞன் ஒருவன் சந்திக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது ஆடுஜீவிதம் நாவல். பிரபல எழுத்தாளர் பென் யாமினின் இப்படைப்பானது 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.


‘தி கோட் லைஃப்’ திரைப்பட போஸ்டர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கணவர் மற்றும் அம்மாவுடன் அமலா பால்

இந்த படத்திற்காக 10 ஆண்டுகள் உழைத்திருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர் பிளெஸ்சி. பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘தி கோட் லைஃப்’, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

கேரளாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அமலா பால் தனது கணவருடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முழுவதிலுமே தனது கணவருடன் சிரித்து பேசி கலகலப்பாக இருந்த அமலா பாலின் மீது மீடியாக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு பெரும்பாலான நடிகைகள் விரும்பாத நிலையில், கர்ப்பிணியான அமலா பால் தனது கணவருடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து நெட்டிசன்கள் இவரை பாராட்டி வருகின்றனர். பிற நடிகைகளை போல இல்லாமல் தானே கார் ஓட்டுவது, உடற்பயிற்சி, ஆன்மிக சுற்றுலா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் என அமலா பால் தொடர்ந்து தன்னை மகிழ்ச்சியாகவும் பிஸியாகவும் வைத்துக்கொள்கிறார் என்றும், தனது கர்ப்பகாலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார் என்றும் நெட்டிசன்கள் அமலா பாலை புகழ்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்