'வாடிவாசல்' படத்தில் அஜித்தா? - வெற்றிமாறன் பளீர்

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.

Update:2023-12-12 00:00 IST
Click the Play button to listen to article

 வாடிவாசல்’ படத்தில் அஜித்தா? வெற்றிமாறன் பளீர்

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையில், ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இப்படத்தினை அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்துள்ளதால், படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘விடாமுயற்சி’ படத்தினை தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ என்ற வெற்றிப்படத்தினை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து அஜித் தனது 63-வது படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘விடுதலை 2’ படத்தினை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்க இருந்த ‘வாடிவாசல்’ படத்தினை அஜித்தை வைத்து இயக்கப்போவதாக சமீபகாலமாக தகவல்கள் உலா வருகின்றன. காரணம் 'பருத்திவீரன்' பட விவகாரத்தில் சூர்யா-அமீருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதால், ‘வாடிவாசல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அமீருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று சூர்யா மறுத்துவிட்டதாக வந்த தகவல்கள்தான். ஆனால் இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்டபோது, ‘வாடிவாசல்’ முழுக்க முழுக்க சூர்யாவிற்காகவே எழுதப்பட்டது. அதற்காக அவர் நிறைய பயிற்சிகளை எடுத்து வருகிறார். ‘விடுதலை 2’ படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படத்தின் பணிகள் தொடங்கிவிடும். அதில் சூர்யாதான் நடிக்கிறார். சூர்யாவிற்கு பதில் அஜித் நடிப்பதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.


நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் 

அக்கா மகனை ஹீரோவாக்கும் தனுஷ்

'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ் அடுத்ததாக தனது 50-வது படத்தை அவரே இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில், தனுஷுடன் சேர்ந்து அண்ணன் செல்வராகவன், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், நடிகைகள் துஷாரா விஜயன், அமலா பால் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ், ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கனவே 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன', 'அசுரன்', 'மாறன்', 'வாத்தி', தற்போது வெளியாக உள்ள 'கேப்டன் மில்லர்' என்று பல்வேறு படங்களில் தன்னுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றிய ஜீவியேதான், மூன்றாவதாக தான் இயக்கவுள்ள படத்திற்கும் இசையமைக்க வேண்டும் என்று தனுஷ் கேட்டுக்கொண்டதால், அப்படத்திற்கும் இசையமைக்கிறாராம் ஜீ.வி.பிரகாஷ். படத்தின் கதாநாயகனாக நடிகர் தனுஷ் தனது அக்கா மகனை அறிமுகப்படுத்தி, முக்கிய வேடத்தில் தானும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தனது 50-வது படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு, இந்த புதிய படத்தை எடுக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கான கதையை தற்போது எழுதி முடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், நடிகர் தனுஷ் இயக்க இருக்கும் 3-வது படத்திற்கு தான் இசையமைக்க உள்ளதாக கூறியுள்ளார். கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் அறிவிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தனுஷின் குடும்பத்தில் இருந்து மூன்றாவதாக ஒரு ஹீரோ வரப்போகிறார் என்ற தகவல் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகர் தனுஷ் 

சூர்யாவை பாராட்டிய 'அனிமல்' வில்லன்

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க, இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஒன்றாக இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளைப்போன்று உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், இதில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியது தொடர்பாக பாலிவுட் நடிகரான பாபி தியோல் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர் 'கங்குவா' படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். நான் இதுவரை ஏற்று நடித்த வேடங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. சூர்யா ஒரு மிகச்சிறந்த மனிதர். அதே நேரம் தனது நடிப்புத்தொழிலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர். அப்படிப்பட்டவரோடு இணைந்து பணியாற்றியது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. எனக்கு தமிழ் தெரியாது. என்னால் தமிழை ஒன்றிரண்டு மாதங்களில் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் கூறினேன், இப்படத்தில் நடித்தது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது என்று. நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் இந்த படத்தில் பேசப்படும். இயக்குநர் சிறுத்தை சிவாவும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என பாராட்டி பேசியிருந்தார். ரன்பீர் கபூர் நடிப்பில் அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றுள்ள 'அனிமல்' படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து கவனம் ஈர்த்துள்ள பாபி தியோல் 'கங்குவா' படம் குறித்து பேசியுள்ளது சூர்யா ரசிகர்கள் இடையில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் போஸ்டர் 

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

1997-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'ஜெயதே' என்ற படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமாகி ‘பாஞ்ச்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர்தான் அனுராக் காஷ்யப். இதன்பிறகு , ‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்ற இவர் தற்போது ராகுல் பாட், சன்னி லியோன் ஆகியோரை வைத்து ‘கென்னடி’ என்ற படத்தினை இயக்கி அதன் ரிலீஸுக்காக காத்துள்ளார். இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக தமிழ் திரையுலகில் மாஸ் காட்டி வரும் ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து, புதிய படம் ஒன்றினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் பேட்டி அளித்திருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், “அனுராக் காஷ்யப் என்னை அவரது இயக்கத்தில் நடிக்க அழைத்ததாக கூறியிருந்தார்". அனுராக் காஷ்யப், தமிழில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா முரளி ஆகியோர் நடித்து வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாகவும், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'லியோ' படத்தில் ஒரு சிறிய தோற்றத்திலும் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்

'பாக்கியலட்சுமி' வீட்டில் புதிய ஹீரோ!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில், மிக முக்கியமானதாகவும், பல குடும்பங்களின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகவும் முதன்மையான இடத்தில் இருக்கும் ஒரு சீரியல் என்றால் அது 'பாக்கியலட்சுமி' தான். இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியாக முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா ஷெட்டி பல குடும்பங்களின் ஆதவரைப் பெற்றுள்ளார். அதேபோன்று இந்தத் தொடரில் ஒரே ரோலில், ஹீரோ, வில்லன் என பன்முகத்திறமையோடு பாக்கியலட்சுமியின் கணவர் கோபியாக நடித்துவரும் சதீஷ்குமாரும் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் வைத்துள்ளார். இதில் கோபிக்கு அம்மாவாக, பாக்கியாவிற்கு மாமியாராக ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் 'சங்கராபரணம்' ராஜலட்சுமி. இவரின் மகன் ரோஹித் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பல்லகோட்டிக்கி பண்டகே ஒச்சிந்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.


மகன் ரோஹித்துடன், சங்கராபரணம் ராஜலட்சுமி 

இந்நிலையில், பாக்கியலட்சுமி தொடரின் நடிகர்கள் ராஜலட்சுமியின் மகன் ரோஹித்துக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருவது மட்டுமின்றி, படம் வெளியான முதல் நாளே அனைவரும் ஒன்றாக திரையரங்கிற்கு சென்று படத்தினை பார்த்து மகிழ்ந்துள்ளனர். அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக நடிகை கம்பம் மீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜலட்சுமியும், அவரது மகன் ரோஹித்தும் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'பல்லகோட்டிக்கி பண்டகே ஒச்சிந்தி'... இது தெலுங்கு படம். இதுல நம்ம 'சங்கராபரணம்' ராஜலட்சுமி மேம் பையன் ரோஹித் ஹீரோவா அறிமுகம் ஆகியிருக்கிறார். படம் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள். சீக்கிரமா தமிழுக்கும் வாங்க தம்பி என்று சொல்லி பதிவிட்டுள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் 'அவெஞ்சர்ஸ்’ நாயகன்


அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸ், குடும்பத்தினருடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்திருந்த தருணம் 

'தி அமெரிக்கன் பிரசிடெண்ட்', 'தி கேம்' , 'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்தான் அமெரிக்க நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ். இவர் இரண்டு ஆஸ்கர் விருது, ஐந்து கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் கூட கோவாவில் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்ட மைக்கேல் டக்ளஸிற்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதினை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மைக்கேல் டக்ளஸ், தற்போது தனது மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் மகன் டிலான் ஆகியோருடன் இந்தியாவில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில், தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வருகை தந்திருந்த மைக்கேல் டக்ளஸ், தனது குடும்பத்தினருடன் அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அக்கோயிலின் கட்டடக் கலை மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை வியந்து பார்வையிட்டதுடன், பிரம்மாண்டமாக இருந்த ராஜகோபுரத்தையும் ஆச்சரியமாக ரசித்தார். அதன்பிறகு அதுகுறித்த தகவல்களையும் கேட்டறிந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு தனது குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்ட மைக்கேல் டக்ளஸ், அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்