“30 வயசுல ப்ரஷர் இருந்துச்சு.. ஆனா இப்போ இல்ல” - மனம்திறந்த நடிகை ஆண்ட்ரியா!
தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்துவந்தாலும் மற்றொருபுறம் இசையையும் விடவில்லை. தன்னை ஒரு நடிகை என்று சொல்வதைவிட பாடகி என்று சொல்வதற்கே அதிக முன்னுரிமை அளிக்கும் ஆண்ட்ரியா தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பாடல்களை பாடிவருகிறார்.
திறமைகள் என்றும் திரைக்கு பின்னாலேயே இருக்காது என்பதற்கு சிலர் உதாரணமாக இருப்பார்கள். அந்த வரிசையில் நடிகை ஆண்ட்ரியாவும் ஒருவர். முதலில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி இருந்தாலும் இவரது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் ஹிட்டான போதிலும் சமீப காலமாக வெளியாகிற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இந்நிலையில் ‘கா’ மற்றும் ‘பிசாசு 2’ என அடுத்தடுத்து இவருடைய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ஆண்ட்ரியா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. சினிமா பின்னணி இல்லாத இவர் திரைத்துறையில் எப்படி கால்பதித்தார்? காதல் சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
ஆண்ட்ரியா ஜெரெமையா - யார் இவர்?
ஆண்ட்ரியா ஜெரெமையாவுக்கு இப்போது 40 வயது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு ஃபிட்டாகவும், அழகாகவும் தன்னை பராமரித்து வருகிறார். ஆண்ட்ரியா ஆங்கிலோ - இந்தியன் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். இவருடைய அப்பா சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியாவிற்கு சிறுவயதிலிருந்தே இசையின்மீது அதீத ஆர்வம் இருந்தது. 8 வயதிலிருந்தே கிளாசிக்கல் பியானோ வாசிக்க கற்றுவந்த இவர், 10 வயதில் Young stars என்று அழைக்கப்பட்ட Jackson Five என்ற இசைக்குழுவிலும் இணைந்து பாடிவந்துள்ளார். ஒருபுறம் இசைத்திறமை வளர வளர மற்றொருபுறம் தான் அழகாக இல்லை என்ற எண்ணமும் இவருக்குள் வளர்ந்திருக்கிறது. அதனாலேயே ஆரம்பத்தில் வந்த நடிப்பு வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். 12ஆம் வகுப்பு முடிக்கும்வரை தான் ஒரு மனநல மருத்துவர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்திருக்கிறார். அதேசமயம் இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் ஸ்டேஜ் டிராமக்களிலும் நடித்திருக்கிறார். பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மாணவர் செனட்டின் தலைவராக இருந்ததால் கலைஞர்களை ஊக்குவிக்க, 'The Show Must Go On' (TSMGO) என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்திவந்த ஆண்ட்ரியாவிற்கு திரை வாய்ப்பு தேடிவந்தது.
ஆண்ட்ரியாவின் சிறுவயது மற்றும் தாயார்
பாடகி டு நடிகை
ஸ்டேஜ் ட்ராமாக்களால் கிடைத்த பெயரால் ஆரம்பத்தில் விளம்பரம் மற்றும் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் 2005ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். அதே ஆண்டு வெளியான ‘அந்நியன்’ படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடி பின்னணி பாடகியாகவும் அறியப்பட்டார். தொடர்ந்து இசை வாய்ப்புகள் தேடிவரவே, அடுத்த ஆண்டே தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தெலுங்கில் ‘பொம்மரிலு’ படத்தில் We Have a Romeo என்ற பாடலை பாடினார். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என பாடல்களில் பிஸியானாலும் நடிப்பதற்கு சற்று தயக்கம் காட்டி வந்துள்ளார். அதற்கு காரணம், தான் அழகாக இல்லை என்ற அவருக்குள் இருந்த எண்ணம்தான் என நேர்க்காணல் ஒன்றில் அவரே தெரிவித்திருந்தார். எப்படியோ, 2007ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் கல்யாணி வெங்கடேஷ் என்ற கதாபாத்திரம்மூலம் தமிழ் ரசிகர்களிடையே தன்னை ஒரு கதாநாயகியாக அறிமுகப்படுத்திக்கொண்டார். இருப்பினும், ரசிகர்கள் இவரை அங்கீகரித்தது என்னவோ, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான். தமிழில் ஓரிரு படங்களில் நடித்த ஆண்ட்ரியா, அத்தோடு நின்றுவிடாமல், ‘அன்னையும் ரசூலும்’ படத்தில் நடித்து மலையாள திரையுலகிலும் அறிமுகமானார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்துவந்தாலும் மற்றொருபுறம் இசையையும் விடவில்லை. தன்னை ஒரு நடிகை என்று சொல்வதைவிட பாடகி என்று சொல்வதற்கே அதிக முன்னுரிமை அளிக்கும் ஆண்ட்ரியா தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பாடல்களை பாடிவருகிறார்.
ஆண்ட்ரியாவின் ஸ்டேஜ் பாடல்கள்
பல பாடல்களை பாடியிருந்தாலும் ஆண்ட்ரியா குரலில் தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் நோக்கியா, கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன், உன்மேல ஆசதான், இதுவரை இல்லாத உணர்விது, பூக்கள் பூக்கும் தருணம், மாமா டவுசர், ஊ சொல்றியா போன்ற பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அந்த அளவிற்கு தனது குரல்வளத்தை இந்த பாடல்களில் காட்டியிருப்பார் ஆண்ட்ரியா.
சிறந்த பாடகி மட்டுமல்ல; ‘விஸ்வரூபம்’, ‘வட சென்னை’, ‘தரமணி’, ‘துப்பறிவாளன்’, ‘அரண்மனை - 2’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பையும் தந்திருக்கிறார். இவர் நடிகை, பாடகி மட்டுமில்லாமல் ஒரு டப்பிங் ஆர்டிஸ்டும்கூட. ஸ்டைலாக ஆங்கில உச்சரிப்பு கலந்த தமிழில் பேசுவார் ஆண்ட்ரியா. ஸ்டைலான குரல்வளத்தால் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆடுகளம்’, ‘நண்பன்’, ‘தங்க மகன்’ போன்ற படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் செய்திருக்கிறார். மேலும் ஆங்கில பாடல்களை உச்சரிப்பு மாறாமல் அப்படியே சிறப்பாக பாடக்கூடியவர் இவர். அதனாலேயே ‘மதராசப்பட்டினம்’ படத்தில் இடம்பெற்றுள்ள பூக்கள் பூக்கும் தருணம் பாடலில் வரக்கூடிய ஆங்கிலப்பாடலை ஆண்ட்ரியாதான் பாடவேண்டும் என கேட்டு பாடவைத்தாராம் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார். நடிப்பு மற்றும் பாடல்களுக்காக விஜய் விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் தென்னிந்திய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும் நடனமாடிக்கொண்டே பாடல்களை பாடும் திறமைகொண்ட இவர் பல்வேறு லைவ் ஸ்டேஜ் நிகழ்ச்சிகளிலும் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆண்ட்ரியாவின் ஹிட் படங்கள்
காதல் தோல்வியும் சர்ச்சைகளும்
‘3’ படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம்வரும் அனிருத்தும் ஆண்ட்ரியாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டன. இசையால் எவ்வளவு பேரும் புகழும் கிடைத்ததோ அதே அளவிற்கு காதல் சர்ச்சைகளில் சிக்கித் தவறாக பேசப்பட்டார். அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானபோதே நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார். இருவர் தரப்பிலிருந்தும் எதுவும் இதுகுறித்து வெளிப்படையாக பேசப்படாத நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், குறிப்பாக லிப்-லாக் போட்டோ ஒன்றும் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள் இருவரையும் சிக்கவிட்டது. அப்போது இதுகுறித்து இருவரும் பேசாத நிலையில் சமீபத்தில் தனது ப்ரேக்-அப் குறித்து அனிருத் மனம் திறந்திருந்தார். அதில் 19 வயதிலேயே தனக்கு பிரேக் ஆனதற்கு காரணம், தன்னைவிட 6 வயது மூத்தப்பெண்ணை காதலித்ததுதான் என்று கூறியிருந்தார். இருப்பினும் இப்போது யாரையும் காதலிக்கவில்லை எனவும், காதலித்தாலும் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணைத்தான் காதலிப்பேன் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த காதல் முடிவுக்கு வந்தபோது அனிருத்துக்கு வயது 19. ஆண்ட்ரியாவுக்கு வயது 25. “நாங்கள் இருவரும் பிரிந்ததற்கு வயது வித்தியாசம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதுதான் பிரேக்-அப்பிற்கு முழு காரணம் என்று சொல்லமுடியாது. எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை என்பதுதான் முக்கிய காரணம்” என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
நடிகை ஆண்ட்ரியா மற்றும் இசையமைப்பாளர் அனிருத்
அதனைத் தொடர்ந்து தமிழ்சினிமாவில் புகழ்பெற்ற அரசியல்வாதி ஒருவர் ஆண்ட்ரியாவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக 2019ஆம் ஆண்டு வதந்திகள் பரவின. யார் அந்த அரசியல்வாதி? என தெரிந்துகொள்ள நெட்டிசன்கள் ஆர்வம்காட்டிய நிலையில் அனிருத் விஷயத்தில் வாய் திறக்காமல் இருந்த ஆண்ட்ரியா, இந்த வதந்தியை முற்றிலுமாக மறுத்துவிட்டார். மேலும் அதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், “10 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்டபோது எனது தோழி ஒருவர் எழுதிய கவிதைகளை வெளியிடுமாறு அழைப்பு விடுத்தார். அப்போது ஒரு கவிதையை வாசித்தேன். அது காதல் தோல்வி பற்றிய கவிதையாக இருந்ததால் என்னுடைய அனுபவம் பற்றி கேட்டார்கள். நானும் எனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டேன். ஆனால் அது பிரபல அரசியல்வாதியுடன் ஏற்பட்டதாக தவறாக புரிந்துகொண்டு மீடியாக்கள் வதந்திகளை பரப்பிவிட்டன” என்று கூறியிருந்தார். அப்போதே தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதி இருப்பதாகவும் அது விரைவில் வெளிவரும் எனவும் கூறியிருந்தார். புத்தக விற்பனையை அதிகரிக்கத்தான் இந்த வதந்தியோ? என நெட்டிசன்கள் அவரை கலாய்த்தனர்.
சிறுவயதில் கசப்பான அனுபவம்
கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஆண்ட்ரியா நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தொடர்ந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் ‘பிசாசு 2’ மற்றும் ‘கா’ என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. அதில் தனது சிறுவயதில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்திருக்கிறார் ஆண்ட்ரியா.
பிசாசு - 2 மற்றும் கா பட போஸ்டர்கள்
“அப்போது எனக்கு 11 வயதிருக்கும். எனது அப்பாவுடன் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தேன். அப்பா பக்கத்தில்தான் அமர்ந்திருந்தேன். திடீரென பின்னாலிருந்து ஒரு கை என் முதுகில்பட்டது. அப்பாவின் கைதான் என நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் அந்த கை எனது டீஷர்ட்டுக்குள் போனது. நான் அப்பாவை பார்த்தபோது அவர் தனது கைகளை முன்பக்கமாக வைத்திருந்தார். நான் உடனே சீட்டின் முன்பாக நகர்ந்து அமர்ந்துகொண்டேன். அப்பா, அம்மாவிடம் அப்போது அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. நான் ஏன் சொல்லவில்லை என்று எனக்கே தெரியவில்லை. அப்போது எனக்கு தவறு என தெரிந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறியிருக்கிறார். மேலும் அதே பேட்டியில் 40 வயது ஆகியும் திருமணம் ஆகாதது குறித்து கேட்கப்பட்டபோது, “30 வயதில் கல்யாண பிரஷர் இருந்தது. ஆனால் இப்போது அதை தாண்டி வந்துவிட்டேன். நிறையப்பேர் கல்யாணத்துக்கு பிறகும் சந்தோஷமாக இல்லையே. நிறையப்பேர் கல்யாணம் ஆகாமலே சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். எனக்கு எந்தமாதிரியான வாழ்க்கை இருக்கும் என எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய மகிழ்ச்சிக்கு நான்தான் பொறுப்பு” என கூறியிருந்தார். எப்படியாயினும் இவ்வளவு தெளிவுடன் இருக்கும் ஆண்ட்ரியா எப்போது, யாரை திருமணம் செய்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களுக்கு இருக்கத்தானே செய்யும்?