எதார்த்த நடிகை, தன்னம்பிக்கை நாயகி! ஜெயசுதா பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு
வசீகரமான சிரிப்பு… அழகான முகத்தோற்றம்… கம்பீரமான உடல்வாகு, இனிமையான குரல் வளம்.. ஆகிய பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர்தான் நடிகை ஜெயசுதா.
வசீகரமான சிரிப்பு… அழகான முகத்தோற்றம்… கம்பீரமான உடல்வாகு, இனிமையான குரல் வளம்.. ஆகிய பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர்தான் நடிகை ஜெயசுதா. 12 வயதில் நடிக்க தொடங்கிய இவர், 50 ஆண்டுகளை கடந்து, தற்போது திரையுலகில் பொன்விழா நாயகியாகவும் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என தென்னிந்திய மொழிகளை கடந்து அனைத்திலும் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்ற ஜெயசுதா, நடிப்பைத் தாண்டி அரசியலிலும் கால் பதித்து வெற்றி வாகை சூடியவர் ஆவார். இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் பல ஏற்ற இறக்கங்களை இவர் சந்தித்திருந்தாலும், இன்றும் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்று திரை வானில் மீண்டும் எழுந்து பிரகாசமாக பறந்து வருகிறார். இப்படி தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழும் ஜெயசுதா 17.12.24 அன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், நடிகை ஜெயசுதாவின் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
ஜெயசுதாவின் துவக்ககாலம்
எதார்த்த நடிகை என்று தெலுங்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் கொண்டாடப்பட்ட நடிகையான ஜெயசுதா, 1958-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி திருப்பதியை பூர்வீகமாக கொண்ட ராமேஸ்வர ராவ், ஜோகா பாய் தம்பதியருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். சுஜாதா என்ற இயற்பெயர் கொண்ட ஜெயசுதாவின் தங்கைதான் நடிகை சுபாஷிணி. இவர் ரஜினியின் ‘ஜானி’ திரைப்படத்தில் வரும் ஆசைய காத்துல தூதுவிட்டு பாடலில் மெயின் ரோலில் வந்துவிட்டு போயிருப்பார். அம்மா ஒருபுறம் நடிகையாக தெலுங்கு திரையுலகில் பயணித்தவர். இவரது அத்தையான எலந்தப்பழம் புகழ் அலேக் நிர்மலாவும் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நன்கு அறியப்படும் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர். இப்படி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் திரையுலகை சுற்றியும், அவரது வீடு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகிலும் இருந்ததால் சிறுவயதில் இருந்தே படிப்பை விட நடிப்பு, விளையாட்டு இரண்டின் மீதும் அதீத ஆர்வம் இருந்துள்ளது.
சினிமா துறையில் காலடி எடுத்துவைத்தபோது ஜெயசுதா...
குடும்பத்தினரும் மகளின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்காமல் எல்லாவற்றிற்கும் பச்சைக்கொடி காட்ட படிப்போடு சேர்ந்து சினிமாவுக்கு தேவையான விஷயங்களிலும் கவனம் செலுத்தி நாட்டியம் போன்ற கலைகளையும் கற்றுக்கொண்டார். இப்படி சினிமாவுக்காக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வந்த நேரத்தில்தான் அடிக்கடி அத்தை நிர்மலாவுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று வந்த ஜெயசுதாவுக்கு சினிமா வாய்ப்பும் தானாக தேடி வந்தது. அதுவும் அவரது அத்தை அலேக் நிர்மலாவுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால் ஜெயசுதாவின் குடும்பத்தினரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதன்படி 1972-ஆம் ஆண்டு ஜெயப்பிரதா பிக்சர்ஸ் தயாரிப்பில், லக்ஷ்மி தீபக் என்பவரது இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, விஜயநிர்மலா, எஸ்.வி. ரங்காராவ், சரோஜா தேவி, ஜமுனா,அஞ்சலி தேவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான ‘பண்டந்தி கபூரம்’ என்ற தெலுங்கு படத்தில் தனது 12-வது வயதில் அறிமுகம் ஆனார்.
கே.பாலச்சந்தரின் அறிமுகம்
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரால் தமிழில் அறிமுகமான நடிகை ஜெயசுதா
தெலுங்கில் ‘பண்டந்தி கபூரம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜெயசுதாவை தேடி வந்தது. 1973-ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில் பிரமீளாவிற்கு தங்கையாக, மறைந்த நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும் தனித்துவமாக தெரியும்படியான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயசுதா நடித்திருந்ததால் அடுத்தடுத்து கே.பாலச்சந்தரின் இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படி இரண்டாவதாக ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற படத்தில் தனது பெயரான சுதா என்ற பெயரிலேயே தன்னுடன் வயதில் மூத்தவராக, வயதான கதாபாத்திரத்தில் வரும் பூர்ணம் விஸ்வநாதனுக்கு மனைவியாக வெகு இயல்பாக நடித்து ரசிக்க வைத்திருந்தார். இப்படி கே.பாலச்சந்தர் என்ற ஜாம்பவானின் கையால் குட்டுப்பட்டு வந்ததாலோ என்னவோ தமிழில் அடுத்தடுத்து எஸ்.பி. முத்துராமன், ஏ.சி. திரிலோகச்சந்தர், டி.ஆர். ராமண்ணா என அப்போதைய முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களிலும் சிவாஜி கணேசன், ரவிச்சந்திரன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று மிகவும் பிஸியான நடிகையாக மாறிப்போனார். அப்படி ‘பெத்த மனம் பித்து’, ‘பாரத விலாஸ்’, ‘பாக்தாத் பேரழகி’ தொடங்கி ‘பட்டிக்காட்டு ராஜா’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘நான் அவனில்லை’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆயிரத்தில் ஒருத்தி’, ‘அபூர்வ ராகங்கள்’ என 80-களில் மட்டும் எண்ணற்ற படங்களில் நடித்தார். இதில் 1973-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்து வெளிவந்த ‘பாரத விலாஸ்’ படத்தில் சிவாவஜிக்கு மருமகளாக, சிவகுமாருக்கு மனைவியாக வந்து நடித்த ஜெயசுதா, 1979-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பட்டாக்கத்தி பைரவன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருந்தார். இதற்கிடையில் 1974-ஆம் ஆண்டு ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படத்தில், வில்லியாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து அதிலும் அசத்தினார்.
‘வெள்ளிக்கிழமை விரதம்’ படத்தில் வில்லியாகவும் கலக்கிய ஜெயசுதா
இப்படி நடிக்க வந்த ஆரம்ப கால கட்டங்களிலேயே தன் அழகாலும், தேர்ந்த நடிப்பாலும் ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட ஜெயசுதா, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களை தாண்டி அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்தார். அதில் இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்ததுதான் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் . இப்படத்தில் கர்நாடக சங்கீத பாடகியாக, ஸ்ரீவித்யாவுக்கு மகளாக, ரஞ்சனி என்னும் கதாபாத்திரத்தில் தோன்றி தன் எதார்த்த நடிப்பால் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார். மூன்று தேசிய விருதுகளையும், மூன்று தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பாலச்சந்தரின் மற்றொரு வெற்றி படமான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில், ரஜினியை காதல் வயப்படுத்தும் காமினியாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றி நடிப்பில் பட்டையை கிளப்பினார். இப்படி மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே பள்ளி படிப்பையும் விட்டு விடாது 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார்.
தெலுங்கு திரையுலகில் உச்சம்
தெலுங்கு திரையுலகில் தன் சிறந்த நடிப்புக்காக விருதுகளை அள்ளி குவித்த நடிகை ஜெயசுதா
தமிழ் திரையுலகில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே தெலுங்கிலும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து அங்கும் என்.டி ராமராவ், நாகேஸ்வரராவ், சோபன்பாபு போன்ற முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்களிலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவை காட்டிலும், தெலுங்கில் உச்சம் பெற்ற நடிகையாக மாறினார். ஜெயசுதாவுக்கு தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் என்ற ஜாம்பவானால் எப்படி ஒரு பிரேக் கிடைத்து புகழ் பெற்றாரோ, அதை போன்றே தெலுங்கில் நந்தி விருதை பெரும் அளவுக்கு, சகஜ நடிகை என்று தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மிகப்பெரிய உச்சம் பெற வைத்த படமாக 1979-ஆம் ஆண்டு வெளிவந்த 'இடி கதா காடு ' என்ற படம் அமைந்தது. இந்த படம் தமிழில் வெளிவந்த ‘அவர்கள்’ படத்தின் தெலுங்கு பதிப்பு. இப்படத்திற்கு பிறகு தெலுங்கில் நடித்த சில படங்களுக்கு சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், பல படங்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருதையும் பெற்ற ஜெயசுதா, தமிழ், தெலுங்கை தாண்டி மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்தார். ஆனால், தமிழ், தெலுங்கு சினிமா அளவுக்கு அவரால் அங்கெல்லாம் பிரகாசிக்க முடியவில்லை. காரணம், ஜெயசுதா தெலுங்கில் வருடத்திற்கு குறைந்தது 10 படங்களிலாவது நடிக்கும் அளவுக்கு புகழ்பெற்ற உச்ச நடிகையாக இருந்ததால்தான். இப்படி தெலுங்கில் பிசியாக நடித்து வந்ததால்தான் ஜெயசுதாவால் பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்க முடியவில்லை.
1979-க்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகளை தவறவிட்ட ஜெயசுதா
குறிப்பாக ரஜினியுடன் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்திலும், கமலஹாசனுடன் ‘சலங்கை ஒலி’ படத்திலும் ஜோடியாக நடிக்க கேட்டு வாய்ப்பு வந்தும் அவரால் அதை ஏற்று நடிக்க முடியவில்லையாம். இப்படி 1979-க்கு பிறகு ஜெயசுதா தமிழில் தவறவிட்ட படங்கள் ஏராளம். இருப்பினும் 13 வருட இடைவெளிக்குப் பிறகு எந்த ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தாரோ, அதே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அக்காவாக அதுவும் ஐபிஎஸ் அதிகாரியாக ‘பாண்டியன்’ படத்தில் நடிப்பின் மற்றொரு பிம்பத்தை கொண்டு வந்து, பார்த்தவர்கள் பலரையும் அசரடித்தார். இந்த நேரம், விஜயகாந்தின் ‘ராஜதுரை’ படத்திலும் நடிக்க கேட்டு வாய்ப்பு வர அப்படத்தில் விஜயகாந்திற்கு மனைவியாக, அம்மாவாக என இருமாறுபட்ட தோற்றங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து, கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் பாரதிராஜாவின் ‘அந்திமந்தாரை’, மணிரத்தனத்தின் ‘அலைபாயுதே, விஜயகாந்துடன் ‘தவசி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் அம்மா வேடங்களை ஏற்று நடிக்க தயங்கவில்லை. அதன்படி சரத்குமாரின் ‘1977’ படத்திலும், 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தோழா’ படத்தில் கார்த்திக்கு அம்மாவாகவும், 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் பிரகாஷ்ராஜிற்கு மனைவியாக, அரவிந்த் சுவாமி, சிலம்பரசன், அருண் விஜய் ஆகிய மூவருக்கும் அம்மாவாக நடித்த ஜெயசுதா, இறுதியாக தமிழில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து அசத்தினார். இப்படி கதாநாயகி, குணச்சித்திரம் என பல பரிமாணங்களில் நடித்தவர், அடுத்ததாக தயாரிப்பாளர் என்ற அவதாரத்தையும் எடுத்தார். அதன்படி தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களையும் சொந்தமாக தயாரித்து சுமாரான அளவில் வெற்றியையும் கண்டார்.
அம்மா வேடங்களிலும் மிளிர்ந்த நடிகை ஜெயசுதா
அரசியலும், தனிப்பட்ட வாழ்க்கையும்
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியல் களத்தில் குதித்த ஜெயசுதா, மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009 சட்டமன்றத் தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் இரண்டாவது முறையாக நின்று தோல்வியை தழுவினார். ராஜசேகர ரெட்டியின் மறைவிற்கு பிறகும் , காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து பயணித்து வந்த இவர், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளால் கொஞ்ச காலம் அரசியலில் இருந்து ஒதுங்கினார். பிறகு 2016-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, மீண்டும் அரசியல் பணியை தொடங்கிய ஜெயசுதாவுக்கு அந்த கட்சியிலும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாததால் அக்கட்சியை விட்டு விலகினார். தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்ததுதான் நான் அரசியல் பயணத்தில் செய்த தவறு என்று தைரியமாக பேசவும் செய்தார்.
2016-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டபோது
இப்படி எப்போதும் துணிச்சல் மிக்க பேச்சு மற்றும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்ட ஜெயசுதா, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான வட்டே ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு, சிறிது நாட்களிலேயே அவரை பிரிந்தார். இதற்கு பிறகு, தனக்கு நல்ல நண்பராக இருந்த ஹிந்தி நடிகர் ஜிதேந்திராவின் உறவினரான நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ஜெயசுதாவுக்கு, நிஹார் மற்றும் ஸ்ரேயான் ஆகிய இரண்டு மகன்கள் பிறந்தனர். மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த இந்த தம்பதிகள் நல்ல வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் திருஷ்டிபட்டது போல கணவர் நிதின் கபூர், பட தயாரிப்பில் தொடர் தோல்விகளை சந்தித்து மொத்த சொத்துக்களையும் இழந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 2017-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். கணவரின் மறைவிற்கு பிறகு அதிலிருந்து வெளியே வரமுடியாமல் மிகவும் வேதனைப்பட்ட ஜெயசுதா, தன் பிள்ளைகளுக்காகவாவது வாழ வேண்டும் என்று தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் எத்தனையோ உச்சங்களைத் தொட்டபோதும் சரி, பல சறுக்கல்களை சந்தித்தபோதும் சரி, எதையுமே தன் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வரும் ஜெயசுதாவின் வாழ்க்கை பயணத்தில் என்றுமே அமைதியும், சந்தோஷமும் நிறைந்திட இந்த பிறந்தநாளில் நாமும் வாழ்த்தி பிராத்திப்போம்.