1000 கோடி வசூல் எல்லாம் எங்களுக்கு ஜுஜுபி! பேச்சுக்கு ஏற்றார்போல் சாதிக்குமா "கங்குவா"?

பான் இந்தியா படமாக மட்டுமின்றி உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக 10 மொழிகளில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம்.

Update: 2024-10-21 18:30 GMT
Click the Play button to listen to article

ஒரு காலத்தில் திரையுலகில் ஒவ்வொரு மொழிப் படங்களுக்கும் இடையே ஹீரோக்களை முன்னிறுத்தி வசூல் ரீதியாகவும், எத்தனை நாட்கள் ஓடி வெற்றி பெறுகிறது என்ற அடிப்படையை வைத்தும் ஒரு கடுமையான போட்டி என்பது இருந்து வந்தது. அதனால் அந்தந்த மொழி படங்களை தாண்டி பிற மொழி படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவே இருந்தது. ஆனால், என்று பாகுபலி என்ற ஒரு மாபெரும் வெற்றிப்படம் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்ததோ அன்றில் இருந்து அனைத்து தரப்பினரிடையே யும், அனைத்து மொழி படங்களையும் பார்க்க கூடிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. மொழியை கடந்து இன்று உருவாகும் அனைத்து படங்களுமே பான் இந்தியா படங்களாகத்தான் எடுக்கப்படுகின்றன. அதிலும் தெலுங்கில் ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘புஷ்பா’ தொடங்கி கன்னடத்தில் ‘கேஜிஎப்’, ‘காந்தாரா’, பாலிவுட்டில் ’பதான்’, ‘ஜவான்’ மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என வரிசையாக எத்தனையோ படங்கள் வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட் வெற்றியை பதிவு செய்தது மட்டுமின்றி அதில் பல படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் நிகழ்த்தி அசத்திக் காட்டி இருக்கிறது. இருந்தும் நமது தமிழில் ‘விக்ரம்’,‘லியோ’, ‘ஜெயிலர்’ என பல படங்கள் பான் இந்தியா ரேஞ்சுக்கு பேசப்பட்டாலும், ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இதுவரை எந்த தமிழ் படமும் நிகழ்த்திக்காட்டவில்லை. அப்படியான ஒரு முயற்சியை ‘பொன்னியின் செல்வன்’ என்ற படைப்பின் மூலமாக மணிரத்னம் தொட்டு பார்த்திருந்தாலும் வசூல் என்ற உச்ச இலக்கை மட்டும் அவரால் எட்டி பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், பான் இந்தியா படமாக மட்டுமின்றி உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக 10 மொழிகளில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம். அவ்வப்போது புது புது அப்டேட்டுகள் வெளி வந்து ரசிகர்களின் பீப்பியை எகிற வைத்துள்ள இத்திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

நாங்க எல்லாம் அப்பவே அப்படி…

பயத்தோடும், ஒருவித அச்சத்தோடும் தன் சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் சூர்யா தான் இன்று தென்னிந்திய திரையுலகமே பார்த்து பொறாமைப்படும் ஒரு துணிச்சல் மிக்க ஹீரோவாக தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார். ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், தொடக்கத்தில் பெரும்பாலும் தோல்விகளையும், மோசமான விமர்சனங்களையும் மட்டுமே சந்தித்தார். அந்த விமர்சனங்களே அவர் அடுத்தடுத்த நிலைகளை அடைய ஊன்றுகோலாக இருந்தது என்று கூட சொல்லலாம். அதிலும் திரைத்துறைக்குள் நுழைந்து நான்கு வருடங்களுக்கு பிறகே இயக்குநர் பாலாவின் ‘நந்தா’ படத்தின் மூலம் மறுபரிமாணம் பெற்றவர் தொடர்ந்து வெற்றிப்பாடிகட்டுகளை நோக்கி நகர ஆரம்பித்தார். அப்படி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக 'காக்க காக்க', திறமையான தொழில் அதிபராக 'கஜினி', காதலை யாராலும் வெறுக்க முடியாது என்பதை அழகாக எடுத்துச் சொன்ன 'மௌனம் பேசியதே', நகைச்சுவையிலும் தன்னால் பிராமத்தப்படுத்த முடியும் என்பதற்கு 'பிதாமகன்', மாஸான போலீசாக 'சிங்கம்', கிளாஸான நெடுமாறனாக வாழ்ந்துகாட்டிய 'சூரரைப் போற்று' என வித்தியாசமான பரிமாணங்களில் பிரகாசித்தவர். ‘ஜெய்பீம்’ படத்தின் வாயிலாக குரலற்ற மக்களின் குரலாகவும் ஒலித்தார்.


'நேருக்கு நேர்' மற்றும் 'சிங்கம்' திரைப்படங்களில் சூர்யாவின் தோற்றம் 

இந்த வளர்ச்சியின் வெளிப்பாடே நடிக்கவே தெரியாத இவனுக்கெல்லாம் எதற்கு சினிமா என்று கேட்ட காலம் போக, இந்த கதையில் சூர்யாவை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்று தயாரிப்பாளர்களே காத்திருக்கும் அளவுக்கு அவரின் நிலையை உயர்த்தியது . அதிலும் குறிப்பாக, 'நந்தா', 'கஜினி' ,'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களிலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருந்த சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த ‘சுரரைப் போற்று’ திரைப்படத்தில் தன் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வாங்கி இந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக மாறிப்போனார். மேலும், அடுத்த ஆண்டே வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் சூர்யாவை ஆஸ்கர் வரை அழைத்து சென்றது. இப்படி பல வெற்றி முத்திரைகளை பதித்து தன்னை விமர்சித்தவர்களுக்கு எல்லாம் சொல்லால் அல்லாமல் செயலால் நிரூபித்துக் காட்டிய சூர்யா இன்று பான் இந்திய ஸ்டாராக 'கங்குவா' திரைப்படத்தின் மூலம் உயர்ந்து நிற்க இருக்கிறார். ஏற்கனவே மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 'ரத்த சரித்திரம் 2' ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் சூர்யாவிற்கு அடையாளம் இருந்தாலும், பான் இந்தியா ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெறுவதற்கான சூழல் தற்போது தான் அமைந்துள்ளது.


 ஆஸ்கர்வரை சென்ற சூர்யாவின் 'ஜெய் பீம்' - 'கேஜிஎஃப்' யாஷ் 

10 மொழிகளில் ரிலீசாகும் 'கங்குவா'

கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் சிறிது நேரமே வந்து போனாலும், பார்த்தவர்கள் அனைவரையும் பதறவிட்டு போயிருந்தார் நடிகர் சூர்யா. இப்படியானதொரு வித்தியாசமான வேடத்தில் முழுநீள படத்தில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில்தான் ‘கங்குவா’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 14-ஆம் நூற்றாண்டை மையமாக கொண்டு ஒரு பீரியட் படமாக உருவாகி உள்ள இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நடிகர் சூர்யாவுடன், நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி என்ற நட்ராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாபி தியோல் வில்லன் கேரக்டரில் மிரட்டி உள்ள அதே வேளையில், தற்காலம் மற்றும் எந்த காலம் என்றே கூற முடியாத அளவில் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்துள்ளதோடு, 10 கெட்டப்புகளிலும் தோன்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. 3டி முறையில் 10 மொழிகளில் நேரடியாக வெளிவர உள்ள இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், முதல் பாடல் ஆகியவை ஏற்கனவே வெளியான நிலையில், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், அன்று ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியானதால் பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு தற்போது அடுத்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் 'கங்குவா' திரைப்படம் வெளிவர இருக்கிறது.


'வேட்டையன்' திரைப்படத்தால் நவம்பர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட 'கங்குவா' ரிலீஸ்

இந்த நிலையில், தமிழ் சினிமாவுக்கும், இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாவது பாடல் கடந்த 20-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ‘கங்குவா’ திரைப்பட புரமோஷனில் சூர்யா, திஷா பதானி, இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பளார் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் பலர் சூர்யாவை சூழ்ந்துகொண்டு அன்பை வெளிப்படுத்தவே, சூர்யாவும் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தவிர பட குழுவினர் பிரத்யேக பேட்டியும் கொடுத்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஞானவேல்


முதலில் அஜித்திடம் கூறப்பட்ட 'கங்குவா' கதை - சிவாவை வாழ்த்திய அஜித்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக பார்த்து பார்த்து மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள 'கங்குவா' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 3,500 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். இதில் வட இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கும், புரொமோஷன் பணிகளுக்காகவும் சுமார் ரூ.22 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஸ்பானிஷ், சைனீஸ் உட்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சில புதுமைகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒருவரின் குரலை அசலாக இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்ய முடியும் என்பதால், அதை அடிப்படையாகக் கொண்டு, ‘கங்குவா’ படக்குழு பிறமொழி டப்பிங்கில் சூர்யாவின் குரலேயே ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தியிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தினை பார்த்த பாலிவுட் இயக்குநர் ஒருவர் வெகுவாக பாராட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ‘தி கோட்’, மெய்யழகன்’ ஆகிய படங்களின் நீளம் அதிகமாக இருந்ததாக விமர்சனம் எழுந்திருந்த நிலையில், ‘கங்குவா’ படத்திற்கும் அதே பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று படக்குழுவினர் சுதாரித்துக்கொண்டு படத்தின் நீளத்தை சரியாக பார்த்து குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


'கங்குவா' ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கும் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

சமீபத்திய பேட்டி ஒன்றில், இதுவரை பான் இந்தியா படமாக வெளிவந்த எத்தனையோ படங்கள் ஆயிரம் கோடியை நெருங்கி வசூல் சாதனை செய்துள்ளது. அதேபோல் ‘கங்குவா’ திரைப்படமும் அந்த இலக்கை எட்டுமா? என்ற கேள்வி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “படம் ரூ.500 கோடி, ரூ.700 கோடியை நெருங்கினாலும் ஜிஎஸ்டி செலானை எங்களது ஸ்டூடியோ கிரீன் அக்கவுண்ட்டில் பதிவேற்ற சொல்லிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் “நான் 2 ஆயிரம் கோடி வசூலை எதிர்பார்க்கிறேன். நீங்கள் என்னவென்றால் வெறும் ரூ.1000 கோடி வசூல் என குறைத்து மதிப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்” எனவும் தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் சிலர் கேலி செய்திருந்தாலும், சிறுத்தை சிவாவின் இயக்கமும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள 3டி தொழில்நுட்பமும் கை கொடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் 'கங்குவா' திரைப்படம் கவர்ந்தால் ஞானவேல் ராஜாவின் இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்