கோலாகலமாக நடந்த ஜி20 உச்சி மாநாடு... சர்ச்சையை கிளப்பிய ‘பாரத்’ பெயர்ப் பலகை

இந்தியா என்ற பெயரை அரசு புறக்கணிப்பதாகவும், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘INDIA'என்று பெயர் வைத்ததாலேயே அரசு இந்தியா என்ற பெயரை பயன்படுத்த மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டின.

Update:2023-09-19 00:00 IST
Click the Play button to listen to article

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 18வது ஜி20 உச்சி மாநாடு, செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சில முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பல நாடுகளின் அதிபர்கள் வருகைபுரிந்த இம்மாநாட்டிற்காக டெல்லி மாநகரமே சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என நமது நாட்டின் பெயர்ப்பலகை பிரதமர் மோடிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது பேசுபொருளாகியிருக்கிறது. ஜி20 மாநாட்டின் முக்கியத்துவங்கள் என்னென்ன? இந்தியா பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

ஜி20 மாநாடு

ஜி20 மாநாடு என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய பன்னாட்டு அமைப்பு. இதற்கென நிலையான தலைவரோ அல்லது பிரத்யேக செயலகமோ கிடையாது. ஆண்டுதோறும் ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஏதேனும் ஒரு நாடு பல செயல்திட்டங்களை தலைமையேற்று கூட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது. இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் இந்த கூட்டங்களில் பங்குபெறுவது வழக்கம்.


ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள்  

இந்தியாவில் ஜி20 திருவிழா

இந்த ஆண்டு ஜி20 மாநாடானது இந்தியாவில் நடத்தப்பட்டது. இதற்காக கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் ஜி20 மாநாடு குறித்த விளம்பரங்கள் இடம்பெற்று வந்தன. குறிப்பாக, ஜி20 -இன் அதிகாரப்பூர்வ லோகாவில் ஆளும் கட்சியை குறிக்கும் வகையில் தாமரை இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் புகைப்படமும் அதனுடன் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை உணர்த்தும்விதமான காட்சிகளும் இருந்தன.

பொதுவாக ஜி20 மாநாட்டை நடத்த, சுமார் 830 கோடி ரூபாய் செலவாகும். இந்த மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில பிரதான சாலைகளில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. விமானங்கள் மற்றும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. டெல்லி நகரம் முழுவதும் நீரூற்றுகள், பூந்தொட்டிகள், பன்னாட்டுக் கொடிகள் என அலங்கரிக்கப்பட்டன. முக்கிய இடங்களில் சாலையோரங்களில் வசித்தவர்களும், பிச்சை எடுத்தவர்களும் இடம் மாற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.


இந்தியாவில் ஜி20 மாநாடு

ஜூலை 26 அன்று, பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி ஜி20 மாநாடுதான். பாரத் மண்டபம் ரூ. 2,700 கோடி செலவில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜி20 மாநாட்டால் இந்தியாவிற்கு என்ன பலன்?

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏழை நாடு என்று அழைக்கப்பட்டது. ஆனால் இந்தியா தனது பொருளாதார வளத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் புரட்சிகளை செயல்படுத்தி வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றானது. தற்போது இந்தியாவின் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ந்துகொண்டே வரும் நிலையில், உலக பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனா சற்று பின்னடவை சந்தித்து வருகிறது. இதனால் கூடிய விரைவில் ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகிவிடும் என்கின்றன கருத்துக் கணிப்புகள். இதனாலேயே உலக நாடுகளின் கண்கள் இந்தியாமீது உள்ளது.

இந்தியாவின் நடைபெற்ற ஜி20 மாநாட்டால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான அந்நிய முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘ஸ்டார்ட்-அப் ஜி20’ ஆலோசனைக் கூட்டமானது டெக்னாலஜி மற்றும் அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டுவரும். இந்தியாவின் வளர்ச்சி மேல்நோக்கி செல்லும்.


இந்தியா vs பாரத்

இந்தியாவா? `பாரத்’தா?

ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்ததால், ஒருபுறம் இந்தியா முக்கியத்துவம் மிகுந்த நாடாக மாறியிருந்தாலும், அம்மாநாட்டில் நடந்த சில விஷயங்கள் உள்நாட்டு சர்ச்சைகளை மேலும் தூண்டியிருக்கிறது என்றே சொல்லலாம். முதலாவதாக, உச்சி மாநாட்டில் பங்கேறக வந்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்து அளித்தார். அந்த அழைப்பிதழில் ’இந்திய குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடாமல் ’பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அரசியல்ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் மோடி முன்பு வைக்கப்பட்டிருந்த பலகையிலும் இந்தியா என்று குறிப்பிடாமல் பாரத் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இந்தியா என்ற பெயரை அரசு புறக்கணிப்பதாகவும், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘INDIA'என்று பெயர் வைத்ததாலேயே அரசு இந்தியா என்ற பெயரை பயன்படுத்த மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டின. ஆனால், இந்திய அரசியல் சாசனத்தின் முதல் பிரிவில் இந்தியா அல்லது பாரத் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே பாரத் என குறிப்பிடுவதில் தவறில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.


ஜி20 மாநாடும், பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் யுக்தியும்

ஆனால், “ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்பு வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தியாவை ‘பாரத்’ என்று குறிப்பிட்டது பாஜக அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது”, “பாஜகவின் கேலிக்கூத்துகளில் இதுவும் ஒன்று. உலக நாடுகளுக்கு இந்தியா என்றால்தான் தெரியும். அரசியலமைப்பிலும் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தனது தோல்விகளை மறைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது” என்பது போன்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இந்தியா இதற்கு முன்பு இத்தனை சர்வதேச தலைவர்கள் ஒரே நேரத்தில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை நடத்தியது இல்லை. ஜி20 மாநாட்டால் இந்தியா சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டாலும், உள்நாடு அரசியல், சர்ச்சைகள் போன்றவை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? நாட்டு மக்கள் ஆளும் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனரா? அல்லது மாற்றத்தை எதிர்பார்க்கின்றனரா? நமது நாட்டின் பெயர் இந்தியாவா? அல்லது பாரத்தா? என்பது குறித்த கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்குமா?

Tags:    

மேலும் செய்திகள்