நான் கூத்தாடி தான்! ஆனா.. - அனைத்து கட்சிகளையும் அலறவிட்ட விஜய்யின் முதல் மாநாடு!

ஜனநாயகம், சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமூக நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சிக் கொள்கை, இயற்கைவள பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கேற்ற வளர்ச்சி, உற்பத்தி திறன், உடல்நலனை கெடுக்கும் எவ்வகை போதையும் இல்லா தமிழகம் என்ற அடிப்படையில் சமதர்ம சமூகத்தை உருவாக்குவதுதான் நமது முக்கிய குறிக்கோள். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கொள்கை கோட்பாட்டில் மாற்றங்களும் வந்துதான் தீரும்

Update:2024-10-29 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அரசியல் தலைவர் விஜய்யின் பேச்சு. அரசு தரப்பிலிருந்து பல்வேறு நிபந்தனைகள் ஒருபுறம்; எதிர்பார்த்ததைவிட கட்டுக்கடங்கா கூட்டம் மறுபுறம் என அக்டோபர் 27ஆம் தேதி நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தியது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு. நடிகர் விஜய் கட்சி தொடங்கப் போகிறார் என்பதில் ஆரம்பித்து கட்சி அறிவிப்பு, சினிமாவிலிருந்து விலகல், கட்சிக்கு ஆள் சேர்ப்பு, கட்சி கொடி மற்றும் பாடல் அறிவிப்பு என விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்புமே தொடர்ந்து பேசுபொருளாகியது. இருப்பினும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் அதன் கொள்கைகள்தான் ஒரு கட்சியை நிலைக்கச்செய்யும் என அரசியல்வாதிகள் கூறிவர, தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைபாடுகள் குறித்து வாய்திறக்காமல் இருந்துவந்தார் விஜய். இதனால் கட்சி தொடங்குவதற்கு முன்பே படுத்துவிட்டது என விமர்சிக்கப்பட்ட நிலையில், விஜய்யின் போக்கு என்னவாக இருக்கும்? யாரை தனது அரசியல் முன்னோடியாக நிறுத்தப்போகிறார்? யாரை தனக்கு எதிரியாக காட்டப்போகிறார்? வெளிப்படையாக பேசுவாரா? என்பது போன்ற கேள்விகளும் விவாதங்களும் அனைத்து அரசியல் தலைவர்கள் முதல் சமூக ஊடகவாசிகள் வரை அனைத்து தரப்பினரிடையேயும் மாறி மாறி நடந்து வந்தன. இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி நடந்த முதல் மாநாட்டில் அரங்கத்தையே தெறிக்கவிட்டது விஜய்யின் அனல்பறந்த பேச்சு. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருந்தாலும், தான் கட்சி தொடங்கியதன் நோக்கம் என்ன? தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் என்னென்ன? யார் தனது அரசியல் முன்னோடிகள்? எதற்காக அவர்களை தேர்ந்தெடுத்தார்? கட்சியின் கொடி மற்றும் பாடல் விளக்கம், தனக்கு அரசியல் எதிரிகள் யார் யார்? தனது கட்சித் தொண்டர்கள் என்னென்ன செய்யவேண்டும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்விதமாக எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல் வெளிப்படையாக பேசி, அனைத்து தரப்பினரையும் அலறவிட்டிருக்கிறார். விஜய்யின் பேச்சை மற்ற கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மாநாடு அறிவிப்பும் எழுந்த மறைமுக எதிர்ப்புகளும் 

கடந்த சில ஆண்டுகளாகவே திரைப்படங்களில் அரசியல் பேசிவந்த விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசியலில் களமிறங்குவதாக கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது கட்சியை பதிவு செய்து அதில் ஆள்சேர்க்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றன. மேலும் அந்த அறிவிப்பிலேயே ஏற்கனவே கமிட் செய்திருக்கும் படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு, அதன்பிறகு முழுநேர அரசியலில் பணியாற்ற இருப்பதாகவும், விரைவில் தனது கட்சியின் பெயர் மற்றும் பிற விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். விஜய் அரசியலுக்கு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தது அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காத விஜய், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். கட்சிக் கொடியில் மஞ்சள், சிவப்பு நிறங்கள், யானை, நட்சத்திரம் மற்றும் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனால் விஜய்யின் அரசியல் கொள்கை மற்றும் கோட்பாடுகள் என்னவாக இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பியபோதும், அதுகுறித்து எந்த விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. எந்த இடத்தில் நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த அனுமதிகோரி மனு அளித்தார். மனுவை பரிசீலித்த காவல்துறை 21 கேள்விகளை தவெகவிடம் எழுப்பியது. இதற்கு தவெக சார்பில் பதில் அளிக்கப்பட்ட நிலையில், 33 நிபந்தனைகள் விதித்து, அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என உத்தரவிட்டு, காவல்துறை அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டார் விஜய்.


தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி அறிமுகத்தின்போது

மாநாடு முன்னேற்பாடுகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 85 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் மாநாடு நடத்த விவசாயி மணி என்பவருடன் தவெக ஒப்பந்தம் போட்டு, அக்டோபர் 4ஆம் தேதி பந்தல்கால் போடப்பட்டு வேலைகள் மும்முரமாக ஆரம்பித்தன. 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேடை, சுமார் 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்துசென்று தொண்டர்களை சந்திக்கும்விதமாக ரேம்ப், அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாளின் கட் அவுட்ஸ், மாநாட்டு மேடையில் ‘வெற்றிக் கொள்கை திருவிழா’, 55 ஆயிரம் இருக்கைகள், 40 எல்.இ.டி திரைகள் என பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுபோக, மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்க, 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், 1 லட்சம் பிஸ்கட் பாக்கெட்ஸ், 300 மொபைல் டாய்லெட்ஸ், 700 வாட்டர் டேங்க்ஸ் மற்றும் வாகனங்களை நிறுத்த பிரத்யேக இடம் மற்றும் மருத்துவ குழுவினர் போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும் தொண்டர்களுக்கு மாவட்டவாரியாக கேபின்கள் பிரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் 27ஆம் தேதி, அதிகாலையிலிருந்தே மக்கள் வெள்ளம் அந்த பகுதியில் அலைமோத தொடங்கியது. ஆயிரக்கணக்கில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டும், விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநாடு 5 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணியளவில் முடியும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், காலையிலிருந்தே மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்தான் நிலவியது. மேலும் தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். ஒருவழியாக மதியத்திற்கு மேல் நிலைமை சரிசெய்யப்பட்டு, மாநாட்டு விழா 4 மணியளவில் தொடங்கியது.


தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள்

விஜய் பேசியவற்றின் ஹைலைட்ஸ்!

விழா மேடையில் விஜய்யுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு துணை செயலாளர் தாஹிரா மற்றும் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். விஜய் பேசுவதை கேட்பதற்காக காத்திருந்த மக்களுக்கு எந்தவித அதிருப்தியும் ஏற்படவில்லை. ஒரு குழந்தை என விஜய் பேச ஆரம்பித்தபோதே, மாநாட்டு திடலில் விசில் சத்தமும் ஆரவாரமும் விண்ணை பிளந்தன. கட்சிக் கொள்கை குறித்து பேசவுள்ளதாக கூறியிருந்த நிலையில், அதுபற்றி விரிவாக பேசினார். தவெக தலைவர் விஜய் பேசுகையில், “ஒரு குழந்தை முதன்முதலாக அம்மா என்று சொல்லும்போது அந்த அம்மாவிற்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த உணர்வை அம்மாவால் விளக்கமுடியும், ஆனால் குழந்தைக்கு அதை சொல்லத் தெரியாது. ஆனால் வெள்ளந்தியாக சிரிக்க மட்டும்தான் தெரியும். அப்படியொரு உணர்வோடுதான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். அதே குழந்தையின்முன்பு பாம்பு வந்து படமெடுத்தாலும், தனது அம்மாவை பார்த்து சிரித்த அதே சிரிப்புடன் பாம்பையும் கையில் பிடித்து விளையாடும். இங்கு அந்த பாம்புதான் அரசியல், அதை கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பதுதான் உங்கள் விஜய். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ஏன் அவர்கள் இவர்கள் என பிரித்துபார்க்க வேண்டும்? இந்த மண்ணுக்காக அடையாளம் வாங்கி தந்து அடையாளமாக மாறிப்போனவர்களைத்தான் நமது கொள்கைத்தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்களது கொள்கைத் தலைவர். ஆனால் அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை, அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்களும் இல்லை. அறிஞர் அண்ணா சொன்னதைப் போன்று ‘ஒன்றே குலம்’ ஒருவனே தேவன்’ என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ஆனாலும் பெரியார் சொன்ன பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை போன்றவற்றை நான் முன்னெடுக்கப் போகிறோம். அடுத்து பச்சைத் தமிழன் பெருந்தலைவர் காமராஜர் மதசார்பின்மை, நேர்மையான நிர்வாக செயல்பாட்டிற்கு முன்னுதாரமாக இருப்பதால் அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். இந்திய துணைகண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர். இந்தியாவின் இவருடைய பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகிறவர்கள் நடுங்கிப்போவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்த அவரை எங்களுடைய வழிகாட்டி என்று சொல்வதில் பெருமைகொள்கிறோம். பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம். சொந்த வாழ்க்கையின் சோகத்தை மறந்து, போர்க்களம் புகுந்து, ஆணைக்காட்டிலும் வீரமான வேகமான வீரப் புரட்சியாளர் வேலுநாச்சியார். அடுத்து முன்னேற துடிக்கும் சமூகத்தில் பிறந்து அதற்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள். இவர்கள்தான் நமது கொள்கைத் தலைவர்கள். நமது கொள்கை கோட்பாடுகளையும், வழிகாட்டி தலைவர்களையும் மனதில் நிறுத்தி, நாம் செயல்படுவதை பார்த்து, இவர்கள் வேகமானவர்கள் ஆனால் விவேகமானவர்கள் என எல்லாரும் சொல்லவேண்டும். சொல் அல்ல முக்கியம்... செயல்தான் முக்கியம். அதற்காக வெறுப்பு அரசியலை கையிலெடுக்க போவதில்லை.


த.வெ.க மாநாட்டில் கட்சிக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டிகள் குறித்து விளக்கிய விஜய்

அரசியல் எல்லாம் நமக்கு எதற்கு, நடித்தோமா நாலு காசு பார்த்தமோ என இருக்கலாம் என்றுதான் நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அது சுயநலம் என்று புரிந்துகொண்டேன். மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது போன்ற பல கேள்விகள் மனதில் வந்தபோது பதிலாக கிடைத்ததுதான் அரசியல். ஆனால் பயம் இருந்தாலும் சில விஷயங்களை பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கி அடிக்கவேண்டுமென்று தோன்றியது. ஆனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானமும் யோசனையும் இருக்கவேண்டும். எதிரிகளில்லாத வெற்றி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் களம் இருக்கமுடியாதே. நாம் கட்சி அறிவித்தபோதே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று ஆரம்பித்து, பிறப்பை வைத்து ஏற்ற தாழ்வுகள் இல்லை, அது கூடாது என்று சமதர்ம சமத்துவ கொள்கையை கையில் எடுத்தபோதே கொஞ்சம் கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது. மக்களை மதம், சாதி, இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என சூழ்ச்சி செய்து பிரித்து ஆளும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும்தான் நமக்கு எதிரியா என்றால் அது மட்டும் இல்லை. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பதும் நமது கடமை. பிளவுவாத அரசியலைக்கூட எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஊழலை கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகமும், கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். அதற்கு முகமூடிதான் முகமே. இதுபோன்ற ஊழல் கபடதாரிகள்தான் நம் கூடவே இருந்துகொண்டு நம்மை ஆண்டுகொண்டும் இருக்கின்றனர். மக்களுக்கு தெளிவாக தெரியும் யார் இங்கு வரவேண்டும், யார் வரவே கூடாதென்று. மகத்தான அரசியல் என்றால் அது மக்களுடைய அரசியல். எதற்கும் தயாராக இருக்கும் மக்களுடன் சேர்ந்துதான் இந்த அரசியல் முடிவை எடுத்திருக்கிறேன். அதனால் மீடியா ட்ரோல்கள், சோஷியல் மீடியா ட்ரோல்கள், ஆபாசம் போன்றவற்றை வைத்து அவதூறு பரப்புவது, பயம் காட்டுவது, ஏ டீம், பி டீம் வைத்து பொய் பிரச்சாரம் செய்து இந்த படையை வீழ்த்திவிடலாம் என்று கனவிலும் நினைக்கவேண்டாம். மாற்றம் வந்துவிடாதா என்று ஏங்கும் மக்களை ஏமாற்றும் ஊழல் கபடதாரிகளை ஜனநாயக போர்க்களத்தில் நாம் சந்திக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. 2026இல் தேர்தல் கமிஷன் அதற்கான ஒரு நாளை குறிக்கும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் மக்கள் த.வெ.க பட்டனில் அழுத்தும் ஒவ்வொரு வாக்கும் அணுகுண்டாக விழப்போகிறது. இது கண்டிப்பாக நடக்கும்.


மாநாட்டில் விஜய்யின் ஆவேசப் பேச்சு

குறிப்பிட்ட ஒரு கூட்டம், ஒரே பாட்டை பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட கலரை பூசிக்கொண்டு, அவர்கள் மட்டும் அண்டர்க்ரவுண்ட் டீலிங் எல்லாம் போட்டுக்கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் அறிக்கைவிட்டுக்கொண்டு, எப்போதும் ஃபாசிசம் பற்றிதான் பேசுவார்கள். ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தை காட்டுவதே வேலையாக இருக்கிறது. அவர்கள் ஃபாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயசமா? மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனை எதிர்க்கிறவர்கள்மீது குறிப்பிட்ட கலரை பூசும் மோடி மஸ்தான் வேலைகள் இனிமேல் எடுபடாது. ஏனென்றால் எங்களுடைய கோட்பாடே பிறப்பால் அனைவரும் சமம் என்பதுதான். எனவே நாட்டை பாடுபடுத்தும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை எதிரி. திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநல கூட்டம்தான் நமது அரசியல் எதிரி. கொள்கை கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப்போவதில்லை. இவை இரண்டும்தான் நமது மண்ணின் இரண்டு கண்கள் என்பதுதான் நமது தாழ்மையான கருத்தும். இந்த மண்ணுக்காக மதசார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என்பதை நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம். ஜனநாயகம், சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமூக நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சிக் கொள்கை, இயற்கைவள பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கேற்ற வளர்ச்சி, உற்பத்தி திறன், உடல்நலனை கெடுக்கும் எவ்வகை போதையும் இல்லா தமிழகம் என்ற அடிப்படையில் சமதர்ம சமூகத்தை உருவாக்குவதுதான் நமது முக்கிய குறிக்கோள். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கொள்கை கோட்பாட்டில் மாற்றங்களும் வந்துதான் தீரும்” என்று அனல்பறக்க பேசினார்.

அதுபோக, பெண்களை முன்னிறுத்தும் அரசியலாகத்தான் தனது அரசியல் இருக்கும் என்றும், வாழ்வதற்கு வீடு, வயிற்றுக்கு சோறு, வருமானத்திற்கு வேலை இவைதான் என்னுடைய அடிப்படையாக இருக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து தனது கட்சிக் கொடியில் இடம்பெற்றிருக்கும் வண்ணங்கள், யானை, பூ மற்றும் நட்சத்திரங்களுக்கான விளக்கத்தையும் கொடுத்தார்.


தன்னை கூத்தாடி என விமர்சித்தவர்களுக்கு விஜய் பதிலளித்து பேசியபோது

நான் கூத்தாடிதான்!

கொள்கை கோட்பாடுகளை விளக்கியபிறகு, இதுவரை தன்னைப் பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசினார். அதில், “என்னதான் நீங்கள் அனைவரும் என்னை தளபதி தளபதி என்று ஆசையாக கூப்பிட்டாலும், கூத்தாடி கூத்தாடி என்று சொல்கிறார்களே அந்த விஜய்யாக பேசுகிறேன். கூத்து இந்த மண்ணோடும் மக்களோடும் கலந்த ஒன்று. இந்த பெயர் எனக்கு மட்டும் வந்தல்ல; அன்றைக்கு நம்ம ஊரு வாத்தியார் எம்.ஜி.ஆரையும், ஆந்திராவில் அவங்க ஊரு வாத்தியார் என்.டி.ஆரையும் அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது அப்படித்தான் கூப்பிட்டார்கள். நம்மை கூப்பிடாமலா இருப்பார்கள்? ஆனால் அந்த இரண்டு கூத்தாடிகளும்தான் இரண்டு மாநிலங்களிலும் ஆகப்பெரும் தலைவர்களாகி இன்றைக்கும் மக்கள் மனதில் நீங்கா புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல; மக்களின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடுதான் சினிமா. திராவிட இயக்கம் பட்டிதொட்டியெங்கும் பரவியதே சினிமாவை வைத்துதான். கூத்து சாதாரண வார்த்தையல்ல. அது அனைத்தையும் சோர்வில்லாமல் கொண்டாட்டமாக பேசும். கூத்தாடியின் உள்ளிருக்கும் கோபத்தையும் சோகத்தையும் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. கூத்தின் குறியீடாக மாறிய கூத்தாடி நினைத்ததை செய்துமுடிப்பான். அவனை பார்க்கும் மக்கள் அனைவரும் அவன் நம்மைபோலவே இருக்கிறானே என்று நினைப்பார்கள். அதனால்தான் கொண்டாடுகிறார்கள். அன்றைக்கு கூத்து, இன்றைக்கு சினிமா. ஆரம்பத்தில் நான் சினிமாவுக்கு வந்தபோது, முகம் சரியில்லை, ஆள் சரியில்லை, நடை சரியில்லை என்றெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் ஒவ்வொரு வாய்ப்புக்காவும் சுற்றி, சுழன்று, உழைத்து மேலே வந்தவன்தான் இந்த கூத்தாடி. உழைப்பு என்னுடையது என்றாலும் நான் மேலே வந்ததற்கு காரணம் நீங்கள்தான். சாதாரண இளைஞனாக இருந்த விஜய், நடிகனாகி, பிறகு வெற்றிபெற்ற நடிகனாகி, பிறகு பொறுப்புள்ள மனுஷனாகி, இப்போது பொறுப்பான தொண்டானாகி இருக்கிறேன். இனி பொறுப்பான தலைவனும் ஆவேன்” என்று கூறினார்.

என்னதான் விஜய் உணர்ச்சிபொங்க பேசியிருந்தாலும் அவருடைய அரசியல் பேச்சு மனப்பாடம் செய்யப்பட்ட ஸ்க்ரிப்ட் என்றும், இதே வேகம் கடைசி வரை இருக்கவேண்டும் என்றும் பலதரப்புகளிலிருந்தும் பலதரப்பட்ட கருத்துகள் எழுந்துவருகின்றன. இருப்பினும் முதல் பேச்சிலேயே ஒருவரின் முழு தகுதியையும் கூறமுடியாது என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை நிர்ணயிக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்