3-ம் முறையாக பிரதமரான நரேந்திர மோடி! கெத்து காட்டிய தமிழகம்! - 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து ஓர் அலசல்!

இந்தமுறை தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்று அனைத்து எதிர்க்கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டது. இருப்பினும் கடந்த இரண்டு தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாஜக கூடுதலாக இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது அக்கட்சிக்கு கிடைத்த சிறு ஆறுதல் என்று சொல்லலாம்.

Update:2024-06-11 00:00 IST
Click the Play button to listen to article

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 18வது மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகி ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியையும் மற்றொரு தரப்பினருக்கு வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது. இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளார் நரேந்திர மோடி. இதனால் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்று முறை தொடர்ந்து ஆட்சியமைத்த பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். இருப்பினும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜக 63 இடங்களை இழந்திருப்பது அக்கட்சியின் செல்வாக்கு மக்களிடம் குறைந்து வருவதையும், அதே சமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு மவுசு கூடி வருவதையும் காட்டுகிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா மற்றும் அயோத்தி ராமர் கோயிலை வைத்து பிரசாரம் செய்துவந்த பாஜகவிற்கு அம்மாநிலமே பெரும் அடியை கொடுத்திருக்கிறது எனலாம். இதுபோக எந்தெந்த மாநிலங்களில் பாஜகவின் கை இறங்கியிருக்கிறது? தமிழகத்தில் பாஜகவின் நிலை என்ன? எம்.பியாக பொறுப்பேற்கும் பெண் வேட்பாளர்கள் யார் யார்? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக அலசலாம்.

கட்சிகளும் வெற்றி தோல்வி நிலவரங்களும்

இந்திய நாடாளுமன்றத்திலிருக்கும் மொத்தம் 543 இடங்களில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க குறைந்தது 272 இடங்களில் வெற்றிபெறவேண்டும். கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக இந்த தேர்தலில் வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு மேலும் 32 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது பாஜக. இதுபோக, ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் சிவ சேனாவின் ஷிண்டே பிரிவு, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்றவை மொத்தம் 12 இடங்களில் வெற்றிபெற்றன. கூட்டணி கட்சிகளின் ஆதரவே இல்லாமல் கடந்த இரண்டு முறை ஆட்சியமைத்த பாஜக, இம்முறை அக்கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. அதேநேரம் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 99 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், திமுக 22 இடங்களையும், சிவசேனா 9 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 7 இடங்களையும், ஆர்.ஜே.டி மற்றும் சிபிஎம், தலா 4 இடங்களையும், மற்ற தனி கட்சிகள் இணைந்து 19 இடங்களையும் பிடித்திருக்கின்றன. இப்படி மொத்தம் 234 இடங்களை தன்வசப்படுத்தி பலமான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது காங்கிரஸ்.


தேர்தலுக்கு முன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி; தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆலோசனையில் என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணி

பாஜகவை கைவிட்ட மாநிலங்கள் எவை?

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவில் 14 தொகுதிகளை இழந்திருக்கிறது பாஜக. அதேசமயம் 13 இடங்களில் வென்றிருக்கிறது காங்கிரஸ். கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 12 இடங்களை அதிகமாக கைப்பற்றியிருக்கிறது. இதுபோக, உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரின் கட்சிகள் உட்பட இந்தியா கூட்டணியிலிருக்கும் கட்சிகள் மொத்தம் 30 இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 17 இடங்களைத்தான் கைப்பற்றியிருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கை ஓங்கியிருக்கிறது. இந்தியாவில் 48 தொகுதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் மேற்குவங்கத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு என்றே சொல்லலாம். காரணம் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியிருந்த பாஜக, தற்போது 12 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. இது மம்தா பானர்ஜிக்கு கிடைத்த வெற்றி!

இந்தியாவில் 80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் பாஜக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்திலும் ராமர் கோயில் குறித்து பேசிவந்த பாஜகவுக்கு இது மிகப்பெரிய அடி என்றே சொல்லலாம். கடந்த தேர்தலில் 69 இடங்களை பெற்று, வாக்குறுதி அளித்ததைப்போலவே ராமர் கோயிலை கட்டியெழுப்பியபோதிலும் இந்தமுறை வெறும் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ராமர் கோயில் விவகாரத்தை ஆயுதமாக கையிலெடுத்த பாஜக வசம் இருந்த பைசாபாத் தொகுதி 2009ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கைக்கு போனது. பிறகு அடுத்த தேர்தலில் பாஜகவிடமே சென்றுவிட்டது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத், பாஜகவின் லல்லுசிங்கை 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். அதேபோல், பாஜக பெரும் நம்பிக்கை வைத்திருந்த கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களும் கைவிட்டுவிட்டன.


தேர்தல் முடிவில் பாஜகவிற்கு ஏமாற்றமளித்த மாநிலங்கள்

கடந்தமுறை, கர்நாடகாவில் 25 இடங்களை பெற்றிருந்த பாஜக, இந்தமுறை 17 இடங்களிலும், பீகாரில் 17 இடங்களை கைப்பற்றியிருந்த பாஜக இந்த முறை 12 இடங்களிலும்தான் வென்றிருக்கிறது. அதேசமயம் கடந்தமுறை வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இப்போது கர்நாடகாவில் 9 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தானிலும் கடந்த தேர்தலில் 24 இடங்களை பிடித்த பாஜக இம்முறை 14 இடங்களைத்தான் பிடித்திருக்கிறது. குறைந்தது 400 தொகுதிகளிலாவது வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பேசிவந்த பாஜகவுக்கு 2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவானது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதேசமயம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தல் ஒரு ஆறுதலான மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. 

நிபந்தனையுடன் கூட்டணி!

பாஜக கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி 16 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 12 இடங்களையும் தன்வசம் வைத்திருக்கின்றன. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்தின. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார், சில கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை முன்வைத்தனர். குறிப்பாக, சந்திரபாபு நாயுடு 3 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர்கள் பதவி, தனது கட்சி எம்.பிக்களுக்கு வேண்டுமெனவும், அதில், வேளாண்மை, ஐடி, சுகாதாரம், போக்குவரத்து, நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளில் விருப்பமிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல், பீகாரின் நிதிஷ்குமாரும் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது குறைந்தபட்ச பொது செயல்திட்டம் வகுக்கவேண்டும் எனவும், 3 கேபினட் மற்றும் 2 இணை அமைச்சர் பதவிகள் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார். அதோடு கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம், வேளாண்துறையை கேட்டது. பீகாரில் 5 தொகுதிகளை பிடித்து பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் சில நிபந்தனைகளை விதித்தது. கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனித்து செயல்பட்ட பாஜகவிற்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க கூட்டணிகளின் நிபந்தனைகள் குறித்து கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை எடுப்போம் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்தது.


தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்

3-ம் முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி!

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மொத்தம் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதில் 30 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 36 பேர் இணையமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்பு அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். கூட்டணி கட்சிகளுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகளின் படி, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் கட்சியினருக்கு தலா 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 36 வயதேயான கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு மிக இளம்வயதில் அமைச்சரான சிறப்பை பெற்றிருக்கிறார்.  

தனித்து நிற்கும் தமிழகம்

பொதுவாக தென் இந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு பலிக்காது என்ற வாக்கு இந்தமுறை மாறியிருக்கிறது. ஏற்கனவே கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தனது செல்வாக்கை நிலைநாட்டியிருக்கும் பாஜக இந்தமுறை கேரளாவில் ஒரு தொகுதியை கைப்பற்றிவிட்டது. திருச்சூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து எம்.பியாகியுள்ளார் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி. ஆனால் அப்படியே தமிழ்நாட்டின் பக்கம் திரும்பினால் பாஜகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்று தனது இருப்பை நிலைநாட்டியிருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக 26.93 சதவீதமும், அதிமுக 20.46 சதவீதமும், பாஜக 11.24 சதவீதமும், காங்கிரஸ் 10.67 சதவீதமும் வாக்குகள் பெற்றிருக்கின்றன. இதுபோக, தேமுதிக 2.59 சதவீதமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.52 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 2.15 சதவீதமும், இந்திய யூனியன் லீக் 1.17 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.


தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி

பாஜக இந்தமுறை தமிழ்நாட்டில், மற்ற கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி சேராமல், தனது தலைமையில் கூட்டணி அமைத்து மும்முரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர்களை தனது வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது. குறிப்பாக, தெலங்கானா ஆளுநராக பதவிவகித்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியை உதறிவிட்டு பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டன. அதிமுக தனித்து போட்டியிட்டதால் பாஜகவும் அதிமுகவும் சமமான வாக்குகளை பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தென் தமிழகத்தில் ஒரு திராவிட கட்சியும் வெற்றிபெறாது என சவால்விட்டார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழகத்திற்கு விசிட் அடித்தார். ஆனால் அவை அனைத்துக்கும் தக்க பலன் கிடைத்ததா என்றால், இல்லை என்பதுதான் பதில். 2014ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் அப்போது திமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அதிமுக 37 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன. ஆனால் அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகளால் தற்போது திமுக வெற்றிக்கனியை தனக்கு சாதகமாக்கி பறித்துவிட்டது. இந்தமுறை தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்று அனைத்து எதிர்க்கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டது. இருப்பினும் கடந்த இரண்டு தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாஜக, 81 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு சதவீதத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது அக்கட்சிக்கு கிடைத்த சிறு ஆறுதல் என்று சொல்லலாம்.

18 -வது மக்களவையின் பெண் எம்.பிக்கள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 797 பெண் வேட்பாளர்கள் நாடு முழுக்க போட்டியிட்டனர். பாஜக சார்பில் 69 பெண் வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 41 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். அதில் பாஜகவைச் சேர்ந்த 30 பேரும், காங்கிரஸைச் சேர்ந்த 14 பேரும், திமுகவைச் சேர்ந்த 3 பேரும் வெற்றிபெற்றிருக்கின்றனர். இதில் இருவர் 25 வயது இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் 78 பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், இம்முறை 74 பேராக அது குறைந்திருக்கிறது.


தேர்தலில் வெற்றிபெற்ற மற்றும் தோல்வியுற்ற பிரபல பெண் வேட்பாளர்கள்

இந்தமுறை வெற்றிபெற்றவர்களில் 30 பேர் ஏற்கனவே எம்.பிக்களாக பதவி வகித்தவர்கள். இதன்படி பார்த்தால் 18வது மக்களவையில் 13.62% பெண் எம்.பிக்கள் இடம்பெறுகின்றனர். ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக பதவிவகித்த ஸ்மிருதி இரானி, உ.பியின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதேபோல சுல்தான்பூரில் போட்டியிட்ட மேனகா காந்தியும் தோல்வியடைந்துள்ளார். அதேசமயம் கங்கனா ரனாவத், ஹேமா மாலினி, டிம்பிள் யாதவ் மற்றும் மிசா பாரதி போன்ற கவனம்பெற்ற பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிமணி, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மக்களவையில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சௌமியா அன்புமணி போன்றோர் தோல்வியை தழுவி ஏமாற்றமளித்திருக்கின்றனர்.

எப்படியாயினும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களவையில் இடம்பெறும் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துகொண்டேதான் போகிறது. 2004இல் 45 பெண்களும், 2009இல் 58 பெண்களும், 2014இல் 62 பெண்களும் இடம்பெற்ற நிலையில் 2019-உடன் ஒப்பிடுகையில் இந்த முறை 4 எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது சட்டமாக 2029ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்