அம்பானியின் அசுர வளர்ச்சி! - அரசு எப்படி உதவுகிறது!?

அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக, விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டது. மேலும் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் சுங்கப்பிரிவு, குடியேற்றப்பிரிவு அதிகாரிகளும் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

Update: 2024-03-11 18:30 GMT
Click the Play button to listen to article

இந்தியாவில் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் பெயர் எப்போதுமே இருக்கும். தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் இவர். சமீபத்தில் இவருடைய கடைசி மகனின் ப்ரீ- வெட்டிங் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. ரூ. 1000 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த விழாவில் சினிமா, விளையாட்டுத் துறையின் உச்ச நட்சத்திரங்கள் முதல் உலக பணக்காரர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டனர். அரசு எடுக்கும் முடிவுகளில் அம்பானியின் கை பின்னாலிருக்கும் என்ற பேச்சு எப்போதுமே இருந்துவருகிறது. இந்நிலையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு அரசு சார்பாக பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஒருபுறம் அம்பானி வீட்டு நிகழ்ச்சியின் பெருமை குறித்து பேசப்பட்டாலும், மறுபுறம் சாமானியராக இருந்திருந்தால் அரசு இப்படி செய்திருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துவருகிறது. அப்படி என்னென்ன நடந்தது அந்த நிகழ்ச்சியில்? அம்பானியுடன் அரசு நெருக்கம் காட்டுவது ஏன்? அம்பானி நிறுவனத்தை வளர்க்க அரசு துணைபோகிறதா? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக அலசலாம்.

யார் இந்த அம்பானி?

மும்பை ஏடன் நகரிலுள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் மாதச்சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியராக இருந்தவர் திருபாய் அம்பானி. அங்கு தொழிலை கற்றுக்கொண்டு தனது கடின உழைப்பால் 1960களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு முகேஷ், அனில், தீப்தீ சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என நான்கு குழந்தைகள். தனது பள்ளி, பொறியியல் கல்லூரி படிப்பை மும்பையிலேயே படித்த முகேஷ், எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது அப்பாவின் தொழிலில் உதவுவதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு 1980-இல் மும்பைக்கே வந்துவிட்டார். அதன்பிறகு அப்பாவின் தொழிலில் அவருக்கு பக்கபலமாக இருந்த முகேஷ் சில பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அதனை திறம்பட செய்துவந்தார். குறிப்பாக, ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனங்களில் ஈடுபாடு காட்டினார் முகேஷ். ஆனால் என்னதான் மூத்த மகனான முகேஷ் தனக்கு உறுதுணையாக இருந்தாலும் அப்பா திருபாய், இளைய மகனான அனிலை பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய கூட்டங்களில் முன்னிலைப்படுத்தி வந்தார். 2002ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த திருபாய் அம்பானி இறந்த நிலையில், சொத்து பங்கீடு குறித்து அவர் உயில் எதுவும் எழுதி வைக்காததால் எந்தெந்த நிறுவனங்களை யார் யார் கவனித்துக்கொள்வது என்ற பிரச்சினை குடும்பத்துக்குள் எழுந்தது.

மிடில் க்ளாஸ் குடும்பத்திலிருந்து வந்த திருபாய் அம்பானி முதலில் 2BHK குடியிருப்பில்தான் வசித்துவந்தார். தொழில் வளர்ச்சியடைந்த பின்னர் ‘ஸீ வின்ட்’ என பெயரிடப்பட்ட 14 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அங்கு குடும்பத்துடன் குடியேறினார். அனில் மற்றும் முகேஷ் அம்பானியின் குடும்பம் அதே வீட்டில் வெவ்வேறு தளங்களில் வசித்துவந்த நிலையில் திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு பிரிந்துசெல்ல திட்டமிட்டது. குறிப்பாக, 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருபாய் இறந்த நிலையில் அதே ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்தில் குடும்பச் சண்டை பிரச்சினையாக வெடித்தது. இதனால் இவர்களுடைய பங்குச்சந்தை முதலீட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. 


அப்பா திருபாய் அம்பானியுடன் மகன்கள் அனில் மற்றும் முகேஷ்

ஒருவழியாக குடும்பச்சண்டை முடிவுக்கு வந்த பின்னர் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மேன் மற்றும் மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டார் முகேஷ் அம்பானி. துணைத் தலைவராக பொறுப்பேற்றார் அனில் அம்பானி. ஆனால் உள்ளுக்குள்ளேயே பிரச்சினைகள் இருந்துவந்துள்ளது. ஒருகட்டத்தில் அடிதடி சண்டை நிலைமைக்கு சென்றதால் இரண்டு வருடங்களுக்கு பிறகு அண்ணன், தம்பி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இப்படியாக பிரச்சினை பிரதமர் வரைக்கும் சென்றது. பின்னர் திருபாயின் மனைவி கோகிலா பென் இருவரையும் அழைத்து பல வெளிநாட்டு சேவை நிறுவன அதிகாரிகளின் முன்னிலையில் சொத்துக்களை பிரித்துக்கொடுத்தார். இதில் முகேஷ் அம்பானிக்கு பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு தேடல், சுத்திகரிப்பு மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனங்களும், வர்த்தக பிரிவுகளும் கொடுக்கப்பட்டன. பின்னர் இது மொத்தமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என பெயர் மாற்றப்பட்டது. முகேஷ் அம்பானி அதற்கு உரிமையாளரானார். அதேபோல் அப்போது செழிப்பாக இருந்த நிதி சேவை வர்த்தகம், மின்சாரம், எண்டர்டெயின்மெண்ட் மற்றும் டெலிகாம் வர்த்தக் பிரிவுகள் அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டன.

வளர்ச்சியடையாத பகுதிகள் தனக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் அயராது உழைத்த முகேஷ் அம்பானியின் திறமை அவரது சொத்து மதிப்பை பலமடங்கு கூட்டியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை முதலீட்டில் தாராளமயமாக்கலை கொண்டுவந்தார். இதனால் வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவில் குவிந்தன. அசுர வளர்ச்சியடைந்தது ரிலையன்ஸ் நிறுவனம். மில்லியனில் இருந்த முகேஷின் சொத்துமதிப்பானது பில்லியனுக்கு மாறியது. தற்போது இந்தியா மட்டுமல்ல; உலகமே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். ஆனால் அனில் அம்பானி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார். நீத்தா அம்பானியை திருமணம் செய்துகொண்ட முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் என மூன்று குழந்தைகள். தொழிலில் ஏற்பட்ட அசுர வளர்ச்சிக்கு பிறகு 2010ஆம் ஆண்டு மும்பையில் ‘அண்டிலியா’ என பெயரிடப்பட்ட 27 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் குடியேறியது இக்குடும்பம். தனது தொலைநோக்கு பார்வை மற்றும் தொழில் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்கு பல விருதுகளை பெற்றிருக்கிறார் முகேஷ் அம்பானி. குறிப்பாக பங்குச்சந்தை முதலீட்டில் மட்டுமில்லாமல் ஜியோ அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் பிற நெட்வொர்க்குகள் எப்படி காணாமல் போயின என்பது குறித்து அனைவருக்குமே நன்கு தெரியும்.

அம்பானியுடன் நெருக்கம் காட்டும் பிரதமர்

இந்தியாவில் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி உருவான பிறகு மத்திய அரசின் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனால் அரசு மற்றும் அம்பானி குழுமத்திற்கு இடையேயான உறவின் நெருக்கம் குறித்து சொல்லவேண்டுமானால், அரசு விவிஐபிக்களுக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பு முகேஷ் அம்பானிக்கும், ஒய் பிரிவு பாதுகாப்பு அவருடைய மனைவியான நீத்தா அம்பானிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. 


முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 

ஆனால் 2009ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்புவரை, குறிப்பாக திருபாய் அம்பானி காலத்திலிருந்தே காங்கிரஸுடன் நெருக்கம் காட்டிவந்த ரிலையன்ஸ் நிறுவனம், அந்த தேர்தலுக்கு பின்பு பாஜகவுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பரிமால் நாத்வானிக்கும், மோடிக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்த காரணத்தால், மோடிக்கு அறிவுரை வழங்கும் முக்கிய நபர்களில் ஒருவராக அறியப்பட்டார் நாத்வானி. அதுவே ரிலையன்ஸ் நிறுவனம் மோடியுடன் இணக்கமாக ஒரு வழியாக அமைந்தது. ஆனால் அதற்கு முன்பே, 2001ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற போதிருந்தே குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட மோடிக்கும், அம்பானிக்கும் உறவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனாலேயே ரிலையன்ஸ் நிறுவனத்தை குஜராத்தில் வளர்க்க, மோடி உதவியதாகவும் பரவலாக பேசப்பட்டது. இதனாலேயே எரிவாயு விலை ஏற்றம், நெட்வொர்க் தொடர்பான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திடல் போன்றவற்றில் காங்கிரஸ் அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவதாக அப்போது குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், குஜராத்தில் மோடிக்கு ஆதரவாக அம்பானி குழுமம் இருப்பதால் இனிமேல் என்றுமே காங்கிரஸுடன் நெருக்கமாக இருக்கமுடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்து நரேந்திர மோடி பிரதமரான பிறகு அம்பானியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக மாறியது மத்திய அரசு. குறிப்பாக, ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றினார் நரேந்திர மோடி. ஆனால் சட்டப்படி ஒரு பிரதமர் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களில் பங்கேற்கக்கூடாது. அதற்கு, ஒரு பிரதமர் செய்யும் வேலையா இது? என எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பின. மேலும் HAL போன்ற அரசு நிறுவனங்கள் வசம் செல்லவேண்டிய ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அதனை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யுமாறு வலியுறுத்தினார் மோடி. இதனால் HAL மூலம் எளிதில் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டிய ராணுவத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. ரஃபேல் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பெரிதும் தெரிந்திராத ரிலையன்ஸ் நிறுவனமும் அதுபற்றி கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்ததால் ஜெட்டின் விலையையும் மூன்று மடங்கு உயர்த்தியது. அந்த தொகையை நாட்டின் வளர்ச்சிக்கு எனக்கூறி வருமான வரியிலிருந்து எடுத்தது மத்திய அரசு. மேலும் இந்தியாவின் ரயில்வே மற்றும் நெட்வொர்க்குகள் தொடர்பான அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்க முனைப்புக்காட்டி வரும் மத்திய அரசு, அம்பானி மற்றும் அதானி குழுமங்களுக்கு மட்டுமே ஆதரவான அரசாக இருப்பதாகவும், சாமானியர்கள் மேலும் தாழ்ந்த நிலைக்கே தள்ளப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர் பொதுமக்கள். குறிப்பாக, இந்தியாவில் 2020-இல் 102ஆக இருந்த பில்லினியர்களின் எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டில் 166ஆக உயர்ந்தது.


ஜாம் நகர் மற்றும் வந்தாரா வனப்பகுதியில் அம்பானி குழுமத்தின் ஆதிக்கம்

குறிப்பாக 2014-இல் மோடி பிரதமரான பிறகுதான், இதுபோன்ற கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பானது பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசியபோது, “2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம், பரிமாற்றம், சுரங்கம், பசுமை எரிசக்தி, எரிவாயு விநியோகம், சமையல் எண்ணெய் என எல்லா இடங்களிலும் அம்பானியும், அதானியும் காணப்படுகிறார்கள்” என குற்றஞ்சாட்டினார். அரசின் முக்கிய நிறுவனங்களை தனியார்மயமாக்கி அதனை தனக்கு நெருக்கமானவர்களிடம் சலுகைகளுடன் கொடுப்பதால் அரசு ஒப்பந்தங்கள் எளிமையாவதாகவும், சர்வாதிகாரம் மேலோங்குவதாகவும் கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

அம்பானி வீட்டு திருமணத்துக்கு அரசு ஆதரவு

சாமானியர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்றாலே அதற்கு பல்வேறு விதிமுறைகள் இருக்கும். ஆனால் அம்பானி வீட்டு திருமணத்துக்கு அரசு விதிமுறைகளே மாற்றப்பட்டுள்ளன. ஆம், மார்ச் 1ஆம் தேதிமுதல் 3ஆம் தேதிவரை அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் என்ற இந்திய மருந்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விரேன் மெர்ச்சண்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டிற்கும் திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. இதற்காக, குஜராத்தின் ஜாம்நகரிலுள்ள உள்ளூர் விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து தற்காலிகமாக 10 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. வெகு விமரிசையாக நடந்துமுடிந்த இந்த விழாவில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பாப் பாடகி ரிஹானா, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் உலகளாவிய முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் லாரி போன்ற பெரும்புள்ளிகள் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர, இந்தியாவிலுள்ள தொழிலதிபர்கள் மற்றும் அனைத்துத் துறை நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு விமானநிலையம் தனிநபர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்த்தை பெற்றிருப்பது இதுவே முதன்முறை. வழக்கமாக, 6 சிறிய விமானங்கள் மட்டுமே ஒருநாளில் வந்துசெல்லக்கூடிய ஜாம்நகர் விமான நிலையத்தில் ஒருநாளில் மட்டும் 140 விமானங்கள் வந்துபோயின. அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக, விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டது. மேலும் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் சுங்கப்பிரிவு, குடியேற்றப்பிரிவு அதிகாரிகளும் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.


ஆனந்த் மற்றும் ராதிகா திருமண முன்வைபத்தில் கலந்துகொண்ட உலக பெரும்புள்ளிகள்

உலக பணக்காரர் பட்டியலில் இருக்கும் முகேஷ் அம்பானி தனது கடைசி மகனின் திருமண முன்வைபவத்தை ஏன் குஜராத்தில், அதிலும் குறிப்பாக வனப்பகுதியில் வைத்து நடத்தினார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அதற்கு மணமகன் ஆனந்த் அம்பானியே பதிலும் அளித்திருந்தார். சிறுவயதிலிருந்தே விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள்மீது அதீத அன்பு வைத்திருக்கும் ஆனந்த் அம்பானியின் விருப்பத்தின்பேரில் ஜாம்நகரில் 3000 ஏக்கரில் ‘வந்தாரா’ என்ற பெயரில் ஒரு பெரிய வனமே உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாதுகாப்பின்றி, காயமடைந்த நிலையில் ஆதரவற்று இருக்கும் உயிரினங்கள் மீட்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுதான் ‘வந்தாரா’ அமைப்பின் நோக்கமும்கூட. இதுவரை 1000க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் மீட்கப்பட்டு அங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு உள்ளன. தவிர, காண்டாமிருகங்கள், சிறுத்தைகள் மற்றும் முதலைகளும் உள்ளன. இங்குள்ள விலங்குகளை பராமரிக்க 2,100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு 1 லட்சம் சதுர அடியில் மருத்துவமனையும், ஐசியு, எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி மற்றும் அல்ட்ராசவுண்ட் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைக்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் செயல்படுகிற முதல் தனியார் உயிரியல் பூங்கா இதுதான். ஆனால் இங்கு விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது? மேலும் ஆனந்த் அம்பானியின் ப்ரீ-வெட்டிங் நிகழ்ச்சியில் யானைகள் மற்றும் பிற விலங்குகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. விலங்குகளுக்கு அடிபட்டால் யார் பொறுப்பு? என அதனை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்ட நிலையில், அந்த நிகழ்வை ரத்துசெய்தது அம்பானி குடும்பம். இருப்பினும் தனியார் பூங்காக்கள் விதிகளை மீறி செயல்பட்டால் வனத்துறை என்ன நடவடிக்கை எடுக்கும்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. விதிமீறல் குறித்து தகவல் கிடைத்தால் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியாயினும் இது வெறும் ட்ரெய்லர்தான்! மெய்ன் பிக்சர இன்னும் பார்க்கலல்ல! என்ற டயலாக்தான் அம்பானி வீட்டு திருமணத்தில் உண்மையாகி இருக்கிறது. மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்த கொண்டாட்டத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. திருமணம் ஜூலை மாதம் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ப்ரீ வெட்டிங்கில் கலந்துகொள்ளாத நமது பிரதமர் மோடி முதல் பிற முக்கிய தலைவர்கள் பலர் திருமணத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலகின் முக்கியப் புள்ளிகள் பலர் முன்வைபவத்தில் கலந்துகொண்டதே அடுத்த பிசினஸிற்கான அடித்தளம்தான் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்