சிஏஏ-விற்கு வலுக்கும் எதிர்ப்பு - இச்சட்டம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

இந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாவிட்டாலும் 6 ஆண்டுகள் இங்கு வசித்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அப்படியென்றால் முஸ்லீம்களின் நிலை?

Update:2024-03-19 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இந்தியாவில் தங்கி குடியுரிமை பெறுவோர்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழும்பி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் முஸ்லீம்கள் இந்த சட்டத்தின்கீழ் புறக்கணிக்கப்பட்டதுதான். தேர்தல் சமயத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் நோக்கம் என்ன? இது பாஜக வாக்குவங்கியை அதிகரிக்கும் சூழ்ச்சியா? மதச்சார்பற்ற நாட்டில் பிளவை ஏற்படுத்தும் நோக்கமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியும், அதிலிருக்கும் சாதக பாதகங்கள் பற்றியும் இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?

1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது குடியுரிமை சட்டம். அதன்பிறகு மோடி அரசாங்கம் 2016ஆம் ஆண்டு மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை (Citizenship Amendment Act) கொண்டுவந்தது. ஆனால் அப்போது மாநிலங்களவையில் இதற்கு பெரும்பான்மை கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போனது. பாஜக ஆட்சியும் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பாஜக, இச்சட்டத்தை திருத்தியமைக்க, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. அதன்பின்னர் தற்போது நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 11ஆம் தேதியன்று குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக இந்தியாவில் ஒரு நபர் குடியுரிமை பெறவேண்டுமானால், பல்வேறு கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் உள்ளன. ஆனால் இந்த புதிய சட்டத்தின்மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து வசிக்கும் முஸ்லீம் அல்லாத பிற மதத்தினர் 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை பெற்றுவிடலாம். இந்த மூன்று நாடுகள் தவிர மற்ற நாடுகளிலிருந்து வருபவர்கள், முஸ்லிம் அல்லாத எந்த மதம் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியாவில் 11 ஆண்டுகள் வசிக்கவேண்டும் என்கிறது திருத்தப்பட்ட சட்டம். இப்போது இந்த சட்டத்தின்படி, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாவிட்டாலும் 6 ஆண்டுகள் இங்கு வசித்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அப்படியென்றால் முஸ்லீம்களின் நிலை? இதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.


பிற நாட்டினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தில் திருத்தம் - சிஏஏ

2019ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டபோதே இதை அமல்படுத்தாமல் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்போது அமல்படுத்துவது ஏன்? என்ற கேள்வியை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். ஆனால் குடியுரிமை திருத்த சட்டம் என்பது பிற நாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம்தானே தவிர, இங்கு இருப்பவர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல என்கிறது அரசாங்க அறிவிப்பு. இந்த சட்ட திருத்தத்தின்மூலம் எந்தவொரு இந்திய குடிமகனும், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் தங்கள் குடியுரிமையை இழக்கமாட்டார்கள் என்கிறது அந்த அறிக்கை. குறிப்பாக, புனர்வாழ்வு மற்றும் குடியுரிமை தொடர்பான சட்ட தடைகளை நீக்குவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்கிறது அரசு.

யார் யாருக்கெல்லாம் இந்த சட்டம் பாதகமாக அமையும்? ஏன்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லீம் அல்லாத பிற மதத்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களுடைய மொழி, கலாசாரம் மற்றும் சமூக அடையாளத்தை இந்த சட்டம் பாதுகாக்கும் எனவும் கூறுகிறது அரசு. ஆனால் பிற மதத்தவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் முக்கியத்துவம் கொடுத்தால் அந்த நாடுகளிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் முஸ்லீம்களின் நிலை என்ன? என்ற கேள்வியை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். 2019ஆம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபோதே நாடு முழுவதுமுள்ள முஸ்லீம் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. முஸ்லீம்களுக்கு மட்டும் ஏன் குடியுரிமை வழங்கக்கூடாது? என கேள்வி எழுப்பின. அப்போது நடந்த போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியானதால் 4 ஆண்டுகள் கழித்து தற்போது சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்குகிற அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது விதியை மீறும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மதசார்பற்ற நாட்டில் மதப்பிளவை ஏற்படுத்தும் பாஜகவின் சதி என்றும் குற்றஞ்சாட்டுகின்றன. மதத் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் முயற்சி என பாஜக அரசு கூறினாலும், முஸ்லீம்களை நாடற்றவர்களாக ஆக்கும் முயற்சி இது என முஸ்லீம் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


நாடு முழுவதும் சிஏஏ-க்கு வலுக்கும் எதிர்ப்பு

மேலும் பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் சிஏஏ -வை அமல்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளன. மேலும், இந்திய அரசியலமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என கூறும்போது, இந்த சட்டம் மத பாகுபாட்டிற்கு அங்கீகாரம் தருகிறது எனவும் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் எதிர்ப்பு அதிகமாக இருப்பது ஏன்?

இலங்கையில் சிக்கித்தவிக்கும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்தும், அவர்களை மீட்பது குறித்தும் பல தசாப்தங்களாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சிஏஏ-வில் முஸ்லீம்களுடன் சேர்த்து இலங்கைத் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் பிற நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்போது இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தமிழகத்தில் தஞ்சம் புகும் தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை என்பது எந்தவிதத்தில் நியாயமாக இருக்கும்? என கேள்வி எழுப்புகின்றனர் தமிழ்நாட்டினர். பல்வேறு மதத்தினரும், சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழும் நாட்டில் இதுபோன்ற சட்டங்களை கொண்டுவருவது மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி என்கின்றனர். குறிப்பாக, கிறிஸ்தவர்களை சேர்த்துக்கொண்டு முஸ்லீம்களை சேர்க்காதது இருபிரிவினருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தை வெளிச்சம்போட்டு காட்டுவதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.


குடியுரிமை சட்டத்தின்கீழ் இடம்பெறாத இலங்கைத் தமிழர்கள்

அரசியல்வாதிகளின் கருத்து

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நல்லது இருந்தால் அதை ஆதரிக்கலாம். கெட்டது இருந்தால் அதை திரிணாமுல் காங்கிரஸ் கண்டிப்பாக எதிர்க்கும். இது உரிமைகளைப் பறிக்கும் செயல்” என்று கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருக்கிறார். அதில், “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாத கொள்கையாக மாற்றியது பாஜக அரசு. இஸ்லாமிய மதத்தவரையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சிஏஏ சட்டத்தை பாஜக அரசு இயற்றியுள்ளது. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்த்தன. மக்கள் எதிர்ப்பு காரணமாக இதுவரை அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் வைத்திருந்தது பாஜக. இப்போது தேர்தலில் அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சட்டத்திற்கு எதிராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறுகையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார். அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “மக்களவைத் தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி அதன்மூலம் மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.


சிஏஏ-விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் தலைவர்களான மு.க ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் விஜய்

பாஜவின் சூழ்ச்சியா?

ஒருபுறம் மக்கள் எதிர்ப்புக் காட்டினாலும் மற்றொரு புறம் இந்த சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடுவது பற்றி உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டதே சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்கான பாஜகவின் சூழ்ச்சிதான் என்கின்றனர் இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள். குறிப்பாக, வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் இந்த குடியுரிமைச் சட்டத்தால் மோடிக்கு வாக்களிப்பார்கள் என பாஜக நம்புவதாக கூறுகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் போதிய வேலை வாய்ப்பின்றி மக்கள் தவித்துவரும் சூழலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தினர்களுக்கு குடியுரிமை அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக மோடி பேசுகிறார். இதனால் இங்கு இருப்பவர்களின் நிலையை மோடி மிகவும் மோசமாக்குகிறார் என கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள். மேலும் எல்லோரையும் இணைக்கும் நோக்கத்துடன் இந்த சட்டத்தை கொண்டுவந்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படியென்றால் குறிப்பிட்ட மதத்தை மட்டும் புறக்கணிப்பது ஏன்? என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர். ஒருபுறம் தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதை இச்சட்டம் தடுக்கும் என்றாலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு குடியுரிமை வழங்கப்படாதது அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவே அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

எப்படியாயினும் இந்த சட்டத்தால் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா? அல்லது நாட்டினரிடையே வெறுப்பை சம்பாதிக்குமா? என்பது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி நிலை வெளிவந்த பிறகே தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்