‘கொஞ்சம் பார்த்துக்கோங்க!’ - நம்பி விட்டுச்சென்ற சொத்தை அபகரித்த சொந்தம்! கடமையை செய்த சட்டம்!
சொத்துகளை பதிவு செய்ய வரும் நபர் குறித்தும் சொத்து குறித்தும் முறையாக விசாரிக்காமல் போலி ஆவணத்தை பதிவு செய்தால் ஆவணதாரர்கள்மீதும், பதிவு அலுவலர்கள்மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டதிருத்தத்தின்கீழ் அரசுக்கு அதிகாரம் உண்டு.
எங்கு திரும்பினாலும் கொலை, கொள்ளை குறித்த செய்திகளை கேட்கிறோம். குற்றங்களை கண்டறியும் தொழில்நுட்பங்களும், அதற்கான தண்டனைகளும் அதிகரித்தாலும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன. குறிப்பாக, தேர்வு முதல் தேர்தல் வரை எல்லா இடங்களிலும் ஆள் மாறாட்ட குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நிலம், வீடு என சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஆள் மாறாட்டங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. வெளியாட்கள்தான் இதுபோன்று ஏமாற்றுகிறார்கள் என நினைத்து தனது உறவினரிடமே பல கோடி சொத்தை பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச்சென்ற பெண்ணிற்கு துரோகம் செய்திருக்கிறது ஒரு குடும்பம். ஆம், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம் சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு இடத்தை வாங்கியிருக்கிறது. கணவரின் இறப்புக்கு பிறகு தனது மகன்களுடன் சிறிது நாட்கள் சொந்த ஊருக்கு போய்வரலாம் என நினைத்த மனைவி, தனது உறவினர் ஒருவரிடம் தங்களுடைய இடத்தை பத்திரமாக பார்த்து பராமரிக்கும்படி விட்டுச் சென்றிருக்கிறார். ராஜஸ்தானிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த குடும்பத்தால் சென்னைக்கு திரும்பிவர முடியவில்லை. நாட்கள் செல்ல செல்ல அந்த பெண்ணின் உறவினருக்கு நிலத்தின்மீதான ஆசை அதிகரிக்கவே, நிலத்தை கையகப்படுத்திவிட்டார். இந்தநிலையில், மகன்களுடன் சென்னைக்கு திரும்பிவந்த அப்பெண், தனக்கு அதிர்ச்சி அளித்த தனது உறவினரின்பேரில் போலீஸில் புகாரளித்தார். விசாரணையில் ஆள் மாறாட்டம் செய்து ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை உறவினர் அபகரித்தது தெரியவரவே, குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. பலகோடி மதிப்புள்ள அந்த இடத்திற்கு சொந்தமானவர் யார்? குற்றவாளிகள் சிக்கியது எப்படி? இதுபோன்ற ஆள் மாறாட்ட சம்பவங்களுக்கு என்ன தண்டனை? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
உறவினரின் நிலத்தை ஏமாற்றிய ரங்கோட் சிங் மற்றும் அவரது மனைவி ஜிந்தா தேவி
உறவினர் செய்த நம்பிக்கை துரோகம்
1970 கால கட்டங்களிலிருந்து தென்னிந்தியாவிற்கு பிழைப்புத் தேடிவரும் வட இந்தியர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பீகார், அசாம் போன்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தினக்கூலிகளாக தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி இன்றளவும் வருகின்றனர். அதேபோல் தங்களது தொழிலை விரிவாக்க மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்தவர்கள் இங்குவந்து கடை வைத்து வருமானம் பார்த்து வருகின்றனர். அப்படி ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்ந்தவர்தான் சாந்திலால். இவர் தனது மனைவி பாமரிபாய் மற்றும் இரண்டு மகன்களுடன் சென்னை பாரிமுனையில் உள்ள தம்புநாயக்கன் தெருவில் வசித்துவந்துள்ளார். 1995ஆம் ஆண்டு அந்த பகுதியிலேயே ஒரு இடத்தை வாங்கியிருக்கிறார். குடும்பத்துடன் சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட சாந்திலால், 2011ஆம் இறந்துபோகவே, அவருடைய மனைவி பாமரிபாய் தனது மகன்களுடன் ராஜஸ்தானுக்கே செல்ல திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, தங்களுடைய நிலத்தை சென்னையில் வசிக்கும் உறவினரான ரங்கோட் சிங் மற்றும் அவரது மனைவி ஜிந்தா தேவி ஆகியோர்வசம் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு ராஜஸ்தானுக்கு சென்றுவிட்டார்.
கொஞ்சநாட்களிலேயே திரும்பி வந்துவிடலாம் என நினைத்த பாமரிபாயால் பல வருடங்களாக திரும்பி வர முடியவில்லை. அதற்குள் நிலத்தின் மீதான ஆசை, ரங்கோட் சிங் குடும்பத்துக்கு அதிகரித்துவிட்டது. அதனால் போலி ஆவணங்களை தயார் செய்து நிலத்தை தன்வசப்படுத்திவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாமரிபாய் தனது மகன்களுடன் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். தனது இடத்திற்கு சென்ற பாமரிபாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. உறவினரால் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட பாமரிபாயின் மகன் நிரஞ்சன், இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் ரங்கோட் சிங் அரங்கேற்றிய நாடகம் முழுவதும் அம்பலமானது.
பாரிமுனையில் உள்ள தம்புநாயக்கன் தெரு - சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம்
குற்றவாளி சிக்கியது எப்படி?
நிரஞ்சன் அளித்த புகாரின்பேரில் சென்னை காவல்துறை உடனடியாக விசாரணையை முடுக்கியது. சென்னை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவானது வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையை மேற்கொண்டது. அதில் ரங்கோட் சிங்கும் அவரது மனைவி ஜிந்தா தேவியும், பாமரிபாய் மற்றும் அவரது மகன் ஜித்தேந்திர குமார் போன்று ஆள்மாறாட்டம் செய்து பாமரிபாய்க்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள்மூலம் அபகரிப்பு செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனிடையே சௌகார்பேட்டையில் வசித்துவந்த ரங்கோட் சிங்கும், அவரது மனைவி ஜிந்தா தேவியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தியதில் குற்றம் நிரூபணமானது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது.
ஆள் மாறாட்டம் குறித்து இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
உண்மையில் இருக்கும் நபருக்கு பதிலாகவோ அல்லது இறந்துவிட்ட ஒரு நபராக மற்றொருவரை காட்டியோ காரியத்தை நடத்துவது ஆள் மாறாட்டம் எனப்படுகிறது. தனிநபர் தானாகவும் இதுபோல் ஏமாற்றலாம் அல்லது பிறரின் தூண்டுதலின்பேரிலும் வேறொரு நபராகவும் நடிக்கலாம். உண்மைக்கு புறம்பாக ஒருவரைப்போல் நடித்தோ அல்லது ஒரு நபருக்கு பதிலாக மற்றொரு நபரை காட்டியோ வஞ்சிப்பது குற்றம் என்கிறது இந்திய சட்டப்பிரிவு 416. உதாரணத்திற்கு, ஒரு பெரிய பணக்காரருடைய பெயரும் தனது பெயரும் ஒன்றாக இருக்கும் பட்சத்திலோ அல்லது ஒரு நபர் இறந்துவிட்ட பிறகு அந்த நபர்தான் தான் என சொல்லி சொத்துக்களை கையகப்படுத்துவதும் ஆள்மாறட்டம்தான்.
ஆள்மாறாட்டம், போலி ஆவணம் என தெரிந்தால் சட்டப்படி ஆவணங்களை ரத்துசெய்யும் உரிமை பதிவு அலுவலருக்கு உண்டு
இப்படித்தான் சாந்திலால் வழக்கிலும் நடந்திருக்கிறது. சாந்திலால் இறந்துவிட்டதால் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் அவருடைய மனைவி மற்றும் மகன்களுக்குத்தான் சட்டபடி சொந்தமாகும். எனவே சாந்திலாலின் மனைவி மற்றும் மகன் போல ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கையகப்படுத்தியிருக்கின்றனர் ரங்கோட் சிங் மற்றும் அவரது மனைவி ஜிந்தா தேவி.
இதுபோன்ற மோசடி மற்றும் ஆள் மாறாட்ட குற்றங்களை கட்டுப்படுத்தவே, பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலி என தெரிந்தால் அதை ரத்துசெய்யும் உரிமையை பதிவு அலுவலருக்கு வழங்கும் சட்டத்திருத்தம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 1980இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் மோசடி அல்லது ஆள் மாறாட்டம் நடந்தது கண்டறியப்பட்டால் ஆவணங்களை ரத்துசெய்யும் உரிமை பதிவு அலுவலருக்கு அளிக்கப்படவில்லை. அதன்பிறகு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அப்போதைய குடியரசு தலைவரிடம் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின்மூலம் சொத்துக்களை இழந்தும், ஏமாற்றப்பட்டும் தவிக்கும் நிலைகள் தடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
நில அபகரிப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க சட்டப்பிரிவு 22 - பி உருவாக்கம்
நில அபகரிப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு அளிக்கும் இந்த சட்டமானது பிரிவு 22 - பி என உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்து பதிவு செய்தவற்றை பத்திர பதிவு அலுவலரே ரத்து செய்துவிடுவார். சாந்திலால் இட மோசடி மற்றும் ஆள் மாறாட்ட வழக்கில் ரங்கோட் சிங் மற்றும் அவரது மனைவி ஜிந்தா தேவி அபகரித்த ரூ. 2 கோடி மதிப்புள்ள இடமானது மீண்டும் பாமரிபாய் மற்றும் அவருடைய மகன்களையே சேரும். அவர்கள் வழங்கிய போலி ஆவணங்களும், அதன்மூலம் செய்யப்பட்ட பதிவும் ரத்து செய்யப்படும். ஆவணத்தை ரத்து செய்யும் சட்டமானது பிரிவு 77ஏ என சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் சொத்துகளை பதிவு செய்ய வரும் நபர் குறித்தும் சொத்து குறித்தும் முறையாக விசாரிக்காமல் போலி ஆவணத்தை பதிவு செய்தால் ஆவணதாரர்கள்மீதும், பதிவு அலுவலர்கள்மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டதிருத்தத்தின்கீழ் அரசுக்கு அதிகாரம் உண்டு. அதன்படிதான், இப்போது ரங்கோட் சிங்கும், அவரது மனைவி ஜிந்தா தேவியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கின்மூலம் நாம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். ஆசை என்று வந்துவிட்டால் சொந்தம், வெளியாட்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எனவே இதுபோன்று சொத்துக்களை பிறரிடம் சிலகாலத்திற்கு ஒப்படைக்கும்போது முறையான பாதுகாப்பு ஆவணங்களை தயார்செய்து அதன்பிறகே ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் சொத்துக்களை முற்றிலும் இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாம்.