மணிப்பூர் கலவரம்: பின்னணி என்ன? - ஓர் அலசல்!

பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு பேரணிக்குப் பிறகு பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்து அதுவே வன்முறையாக மாறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2023-08-01 05:15 GMT
Click the Play button to listen to article

மெய்தேய் மற்றும் குக்கி, நாகா பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலம் மணிப்பூர். ஏப்ரல் 19-ஆம் தேதியன்று அம்மாநில உயர் நீதிமன்றம் அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தது. அதில், மெய்தேய் இனத்தையும் பழங்குடியின பிரிவில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டது.

சுமார் 28 லட்சம் மக்கள்தொகை கொண்ட மணிப்பூரில், மெய்தேய் இனத்தவர் 53 சதவிகிதமும், குக்கி பழங்குடி இனத்தவர் 30 சதவிகிதமும் வசிக்கின்றனர். இந்த குக்கி இனத்தின் கீழ் பல்வேறு பழங்குடி சமூகங்களும் அடக்கம். இந்நிலையில் மெய்தேய் இனத்தவருக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கினால், அரசின் சலுகைகளை எடுத்துக்கொள்வார்கள் என்று அச்சப்படுகின்றனர் பழங்குடியினர். எனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மணிப்பூரின் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் சுராசந்த்பூரில் பேரணி நடத்தப்பட்டது. சுராசந்த்பூர் தவிர தமெங்லாங், காங்போகபி, உக்ரூல், சேனாபதி, தெங்க்னௌபால் மற்றும் சந்தேல் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரணி நடத்தப்பட்டது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அங்கிருந்துதான் வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு பேரணிக்குப் பிறகு பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்து அதுவே வன்முறையாக மாறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரு இனங்களுக்கிடையேயான மோதல் பெண்களுக்கு எதிரான வன்முறையாக மாறியது எப்படி?

இரண்டு இனத்தவருக்கும் மோதல் வெடித்த மறுநாளான மே 4-ஆம் தேதி, இரு மெய்தி இனப்பெண்களை குக்கி இனத்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்துவிட்டதாக வதந்திகள் பரவின. இதனை நம்பிய மெய்தேய் இனத்தவர் பழிவாங்கும் நடவடிக்கையாக, காங்போக்பி மாவட்டத்தில் குக்கி இனத்தவர் அதிகம் வாழும் ஒரு கிராமத்தை சூழ்ந்து சூறையாடினர். வீடுகளை தீவைத்து எரித்து, அடித்து நொறுக்கினர். அக்கிராமத்தினர் பயந்து காடுகளுக்குள் ஓடி ஒளிந்தனர். ஆனால் அங்கும் விடாது துரத்திச்சென்ற மெய்தேய் இனத்தவர், மூன்று பெண்களைப் பிடித்து அவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு பெண் படுகாயமடையவே, 2 பெண்களின் ஆடைகளை களைந்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று அவமானப்படுத்தினர். ஆனால் இந்த சம்பவம் குறித்த வீடியோ 78 நாட்களுக்குப் பிறகுதான், அதாவது ஜூலை 20-ம் தேதிதான் சமூக ஊடகங்கள் மூலம் வைரலாக வெளிவந்து, நாட்டையே உலுக்கியது. அதிலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அதன்பின்னரே வெளியுலகுக்குத் தெரியவந்தது.


அந்த வீடியோ வெளியான பிறகே முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியின் வீட்டை மெய்தேய் இனப்பெண்களே தீயிட்டுக் கொளுத்தினர். மணிப்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2 மாதங்களாக தொடந்து கொண்டிருக்கும் வன்முறையையும் பதற்றத்தையும் அரசுகளால் ஏன் தடுக்க முடியவில்லை?

மத்திய மற்றும் மாநிலங்களில் ஆளும் பாஜக அரசால் இரு இனத்தவருக்கு இடையே நடக்கும் மோதலை கட்டுக்குள் கொண்டுவர இயலாத நிலை இன்றுவரை நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை தலைதூக்கிய பிறகே மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் வீடியோ அறிக்கை வெளியிட்டு அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அண்டை மாநிலமான மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அரசியலும் தேர்தலும் காத்திருக்கலாம். ஆனால் நமது மணிப்பூரைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று ட்வீட் செய்திருந்தார். பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை டேக் செய்து, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். `மணிப்பூர் பற்றியெரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தங்களை கைவிட்டு விட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு எதையும் செய்யாததால் இரு இனத்தவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள மாறிமாறி வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டே வருவதால் நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே இருப்பதாக மணிப்பூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மணிப்பூர் கலவரம் குறித்து கருத்துத் தெரிவிக்காத பிரதமர் மோடி, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச்சென்ற வீடியோ வெளியான பிறகே, ”இதயம் கனத்துள்ளது” என்று கவலை தெரிவித்தார். மணிப்பூர் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 15 நாட்களுக்குள் அமைதி திரும்பவேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தாரே தவிர, அரசிடம் முறையிட்டதாக தகவல் இல்லை.


மேலோங்கும் இனவெறி

இனம், மொழி, மதம் என தற்போது நாடெங்கும் வெறுப்பு அரசியலே மேலோங்கி நிற்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது. மெய்தேய் இனத்தைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் பிரேன் சிங், குக்கி இனத்தவருக்கு எதிராகவே செயல்படுவதாகவும், மெய்தேய் இனத்தவர்களின் பிரதிபலிப்பாகவே இருப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மணிப்பூரை பொருத்தவரை அனைத்து இனங்களிலுமே போதை வியாபாரம் செய்பவர்கள் உள்ளபோதிலும், அதனை பழங்குடியினத்தவரின் தொழில் எனவும், அவர்கள் எல்லைதாண்டி வந்து குடியேறிய வந்தேறிகள் எனவும் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் குறிப்பிட்டதே மெய்தேய் இனத்தவரின் ஆதரவு அவருக்கு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியது.

எது எப்படியோ மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பி, மீண்டும் அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அரசியல் நடுநிலையாளர்களின் கருத்து. வலுவான ராணுவ பலம், படை பலத்தைக் கொண்டுள்ள மத்திய அரசு நினைத்தால் மணிப்பூரில் கலவரங்களை ஒடுக்கி நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். மணிப்பூர் மாநிலத்தைக் கையாள்வதில் மத்திய அரசு முழுமையான தீவிரத்தை காட்டும் வரையில் அங்கு வன்முறை ஓய்வது கடினமே.

Tags:    

மேலும் செய்திகள்