கடுமையாகும் போக்சோ... அதிகரிக்கும் குற்றங்கள்... - இதே நிலை தொடர்ந்தால்?

நிறையப்பேருக்கு இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. போக்சோ குற்றங்கள் குறித்தும், இந்த சட்டம் குறித்தும் இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Update: 2023-12-25 18:30 GMT
Click the Play button to listen to article

உலக நாடுகள் பலவற்றிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சட்டங்கள் ஒருபுறம் கடுமையாக்கப்பட்டாலும் மற்றொரு புறம் குற்றங்கள் குறைந்தபாடில்லை. குறிப்பாக, பெண் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கொடூரங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை 18 வயதுக்கு கீழான சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது, குழந்தை திருமணம் செய்வது என்பது போன்ற குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் போக்சோ சட்டம். ஆனால் நிறையப்பேருக்கு இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. போக்சோ குற்றங்கள் குறித்தும், இந்த சட்டம் குறித்தும் இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

தமிழகத்தில் அதிகரிக்கும் போக்சோ குற்றங்கள் 

இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி மற்றும் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகத்தான் திகழ்ந்து வருகிறது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.சி.ஆர்.பி வெளியிட்ட தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. காரணம், 2022ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, 2021ஆம் ஆண்டு 8,501 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு 9,207 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கூடுதலாக, போக்சோ சட்டத்தின்கீழ் 2021இல் 4,415 வழக்குகள் பதிவான நிலையில் 2022-இல் 4,906 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. மேலும் போக்சோ வழக்குகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் இருக்க, தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அத்துடன் சென்னையில் மட்டும் 736 குற்றங்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிராக நடந்துள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இதுபோன்ற குற்றங்களை சென்னை மாநகர காவல்துறை உன்னிப்பாக கவனித்து குற்றங்களின் எண்ணிக்கையை தினந்தோறும் கணக்கெடுத்து வருகிறது.


தமிழகத்தில் அதிகரிக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

மேற்கூறிய தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டு, 4,906 போக்சோ வழக்குகள் பதிவான நிலையில், மத்திய பிரதேசத்தில் 5,951 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 7,970 வழக்குகளும் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது சட்டப்படி ஆயிரக்கணக்கில் வழக்குகள் பதிவாகியிருந்தாலும், சட்டத்தின் வெளிச்சத்திற்கு வராத எத்தனை குற்றங்கள் அரங்கேறி இருக்கும் என்பதை நினைக்கும்போதே பதைபதைக்கிறது. குறிப்பாக நகரப்புறங்களில் குற்றங்கள் மூடி மறைக்கப்படுவதைப்போல் கிராமப்புறங்களில் குற்றங்கள் சாதாரணமாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் திருமணம் என்று சொன்னால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு சாதாரணமாக கடந்து செல்வார்கள். ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல; சட்டம் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. 18 வயதுக்கு கீழுள்ள பெண்களை திருமணம் செய்வதும், பாலியல் உறவுக்கு உட்படுத்துவதும் சட்டப்படி குற்றம். அவர்களுக்கு கட்டாயம் போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கப்படும்.

போக்சோ சட்டம்

இந்தியாவை பொருத்தவரை 18 வயதுக்கு கீழுள்ள சிறார்களை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க இயற்றப்பட்டதுதான் போக்சோ சட்டம். குறிப்பாக, டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை, காஷ்மீரில் கத்துவா சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, உ.பியின் உன்னாவ் பகுதியில் மாணவி கடத்தப்பட்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. இந்த நிகழ்வுகள் அரசியல் சாசனத்தையே உலுக்கிய நிலையில்தான் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி இந்திய அரசால் போக்சோ சட்டம் இயற்றப்பட்டது.


பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சிறார்களுக்கான போக்சோ சட்டம்

நமது நாட்டில் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர், சிறுமிகள் எந்தவிதமான உடல் மற்றும் மனரீதியான பாலியல் வன்முறைகளுக்கு ஆளானாலும் இந்த சட்டத்தின்கீழ் பாதுகாப்பும் நீதியும் வழங்கப்படும். அதாவது பாலியல் ரீதியான தாக்குதல்கள், குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பது, பாலியல் தொந்தரவு போன்ற அனைத்து குற்றங்களுக்கும் இந்த சட்டத்தின்கீழ் தண்டனை உண்டு. குறிப்பாக, போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை என்பது நிச்சயம் உண்டு. அதாவது குறைந்தபட்சமாக 6 மாதகால சிறை தண்டனை அல்லது சிறைதண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். அதிலும் குறிப்பாக, சமீபத்தில் வெளியான சட்டம் குறித்த தீர்மானங்களின்படி கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற போக்சோ குற்றங்களுக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படும் என கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது அரசு.

சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லையா?

என்னதான் சட்டம் கடுமையாக்கப்பட்டாலும் சட்டம் குறித்த விழிப்புணர்வு இருந்தால்தானே அதுகுறித்த புரிதலும் பயமும் மக்கள் மனதில் இருக்கும். தமிழகத்தை பொருத்தவரை கிராமங்களில் 18 வயதுக்கு கீழுள்ள பெண்களை திருமணம் செய்து வைப்பது சாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை கடமையாகக் கொண்டுள்ளனர் பல பெற்றோர். இப்படி 18 வயது நிறைவடையும் முன்பே பெண்களை திருமணம் செய்யும் மணமகன் மற்றும் உறவினர்களுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இருப்பினும் கிராமங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் 70% பேர் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கின்றனர். இப்படி கிராமங்களுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் விழிப்புணர்வு நன்றாகவே இருப்பதாக கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள்.


குழந்தை திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள்

மேலும் பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லாததால் நடந்தேறும் குழந்தை திருமணங்கள் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பள்ளி மாணவிகள் பலரும் ஆசிரியர்கள், பியூன்கள், டியூஷன் ஆசிரியர்கள், வேன் ஓட்டுநர்கள் என பலராலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, மதுரை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டு மாடியில் துணி காயவைத்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒருவர் கண் மற்றும் வாயை அடைத்துள்ளார். ஒருவழியாக கண்களை மூடிய கைகளை தள்ளி பார்த்த சிறுமிக்கு அதிர்ச்சி அளித்தார் பக்கத்து வீட்டு அண்ணா. இப்படி அன்பாக பழகிய அண்டை வீட்டுக்காரர்களால் பெண் பிள்ளைகளுக்கு ஒருபுறம் பிரச்சினை.

மற்றொரு புறம் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரணாக நிற்கவேண்டிய ஆசிரியர்களே மாணவிகளை தங்களது பாலியல் இச்சைகளுக்கு பலியாக்குகிறார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்தது. போட்டிகளுக்கு மாணவிகளை அழைத்துச்செல்வதாகக் கூறி, அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச்சென்று மிரட்டி, ஆபாச வீடியோக்களை காட்டி அதுபோல நடந்துகொள்ளுமாறு அவர்களை வற்புறுத்தியதுடன் அவர்களையும் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார் தமிழாசிரியர் ஒருவர். இதனால் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயலவே, நல்லவேளையாக தாயார் தனது மகளை தடுத்து விசாரிக்க, வெளிச்சத்திற்கு வந்தது ஆசிரியரின் திருவிளையாடல். இதுபோன்ற சட்டம் குறித்து அறிந்திருந்தும் எத்தனை அண்ணன்கள், எத்தனை ஆசிரியர்கள் சிறுமிகளின் கற்பை சூரையாடுகிறார்களோ?

சட்டம் பிறப்பித்தால் மட்டும் போதுமா? அதுகுறித்த விழிப்புணர்வும், பயமும் அனைவர் மனதிலும் இருந்தால் மட்டுமே பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல அனைத்துக் குற்றங்களையும் தடுக்கமுடியும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்தாலே குற்றங்கள் குறைக்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்