விமர்சனங்களை நான் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை! - விஜயதரணி எம்.எல்.ஏ
பெண்கள் அரசியலுக்கு நிச்சயம் வரவேண்டும். பெண்களுக்கு தேவையான ஒன்றும்கூட. பெண்களாலும் இளைஞர்களாலும்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
`மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்ற வரிகளுக்கு சொந்தக்காரரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் தலைமுறையை சேர்ந்தவர்தான் விஜயதரணி. இவர் கவிமணியின் கொள்ளுப்பேத்தி. இவர் தமிழ்நாட்டின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். இவர் அரசியல்வாதி மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும், சிறந்த பாடகராகவும், நடன கலைஞராகவும் திகழ்கிறார். விஜயதரணியுடனான ஒரு சுவாரஸ்ய உரையாடல்...
பெண்களுக்கு அரசியல் வேண்டும் என்கிறீர்களா? அல்லது வேண்டாம் என்கிறீர்களா?
அரசியல் தளம் என்பது வெறும் ஆண்களுக்கான தளம் அல்ல. சொல்லப்போனால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அரசியலுக்கு மிகவும் உகந்தவர்கள். பொதுவாகவே பெண்கள் பரந்த கண்ணோட்டம் கொண்டவர்கள். அதேபோல் சிறந்த முடிவெடுக்கும் திறனையும் கொண்டுள்ளனர். இந்த திறனைக்கொண்டு உரிய நோக்கத்துடன் செயல்பட்டால் அதுவே அரசியலின் சிறந்த தலைமைத்துவம். எனவே பெண்கள் அரசியலுக்கு நிச்சயம் வரவேண்டும். பெண்களுக்கு தேவையான ஒன்றும்கூட. பெண்களாலும் இளைஞர்களாலும்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
பெண்களை அரசியலுக்கு அழைக்கும் விஜயதரணி
உங்களின் அரசியல் வழிகாட்டி யார்?
அரசியல் வழிகாட்டி என்று யாருமில்லை. கல்லூரியில் படித்தபோது மாணவர் சங்கத்தை வழிநடத்திய அனுபவத்தோடு அப்படியே அரசியலில் நுழைந்தேன். கட்சியில் சேர்ந்து அதில் பல பதவிகளை வகித்து இந்திய அளவில் பல வேலைகளை செய்து படிப்படியாக பல ஆண்டுகளுக்கு பின்னரே சட்டமன்றத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிபெற்றேன். எனவே கட்சியில் இருந்து என்னை ஊக்குவித்த அனைவரையும் என் தாயாரையும் என் அரசியல் வழிகாட்டியாகக் கூறலாம். அரசியல் பல கசப்பான அனுபவங்களைத் தரும். ஆனால் அதுவே பிற்காலத்தில் நமக்கு உதவும். நமக்கு எந்த பாதை சரியானது என்பதை நாம்தான் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும். எனவே மற்றவர்களைக் காட்டிலும் நமக்கு நாமே ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் விஜயதரணி
அரசியலில் உங்களுக்கு எதிராக வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
விமர்சனங்கள் என்பது வரத்தான் செய்யும். அதுவும் நன்றாக செயல்பட்டால் அதிக விமர்சனம் வரும். விமர்சனங்கள் அதிகம் வர வர மக்களுடைய பார்வை நம்மேல் இருக்கும். பெண்கள் அரசியல் ஆளுமைகளை வேண்டுமென்றே தவறான விமர்சனங்களுக்கு உட்படுத்துவர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நமது பணியை நாம் செய்தோமானால் அது ஒரு இடர்பாடாகவே இருக்காது. நம் பணியில் கவனம் சிதறாமல் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும்.
விஜயதரணி எம்.எல்.ஏ
தமிழ்ப்பற்றுமிக்க உங்களுக்கு இந்தி மொழி தெரியுமா?
இந்தி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பள்ளியில் இந்தி பாடம் இல்லை. பின்னர் இந்தி பிரசார சபா மூலம் பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா வரை படித்தேன். அடுத்தடுத்து படிக்க எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுதும் இந்தி பேசுபவர்களிடம் பேசி பேசி இந்தி மொழியை பயின்று கொண்டுதான் இருக்கிறேன். இதை தவிர மலையாளம் நன்றாக பேசுவேன். ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம் தவிர்த்து இன்னும் பல மொழி கற்ற பன்மொழி வித்தகராக இருந்தால் அது நமக்கு பல்வேறு விதங்களில் பலனளிக்கும்.
தொகுதி மக்களுடன் உரையாடியபோது...
`மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்ற வரிகளை வர்ணித்த உங்கள் தாத்தா கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை பற்றி ஒருசில வார்த்தைகள்...
மிகப்பெரிய தவத்தின் மூலமாகத்தான் ஒரு பெண்ணாக நாம் இந்த உலகத்தில் அவதரிக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் பெண்ணாக பிறந்துவிட்டோமே என்று யாரும் சொல்லக்கூடாது. அனைத்துப் பெண்களையும் படைப்பாளி என்று கூறலாம். அறிவு சார்ந்த பல விஷயங்களை ஆண் பெண் என யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் இந்த மனிதகுலத்தையே உருவாக்குவது ஒரு பெண்தான். அந்த பெண் பாத்திரத்தை உயர்த்தி அவருடைய அழகான வரிகளால் பெருமைப் படுத்திருக்கிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என் தாத்தா சிறந்த மழலை கவிஞரும் கூட. இவரைப் போற்றும் விதத்தில் முந்தைய அரசு சுசீந்திரத்தில் ஒரு சிலையையும் 1 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபமும் அமைத்தது. தற்போதைய அரசு மழலையருக்கான `கவிமணி விருது’ என்று அவர் பெயரில் விருதை அறிவித்துள்ளனர்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
என் தாத்தா மொழிப்போர் தியாகியும் கூட. கன்னியாகுமரி - தமிழ்நாடு இணைப்பிற்காக போராட்டம் தொடங்க வழக்கறிஞர் மார்ஷல் நேசமணியை போராட்டத்திற்கு அழைத்தார். ஆனால் நேசமணி ஐயா போராட்டம் நடத்த வரவில்லை என்று மறுத்து விட்டார். 2 வருடங்களுக்கு பின்னர் அவரே எங்கள் தாத்தாவிடம் வந்து இப்பொழுது போராட்டம் தொடங்கலாம் என்று அழைத்தார். இப்படி கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்பிற்கு தொடங்கிய போராட்டத்திற்கு ‘ஒரே மேடையில் 2 மணிகள்’ என்று அறிவிப்பு வெளியானது. இதனை பல புத்தகங்களை படித்து தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் சிறந்த மொழிப்போர் தியாகியாகவும் இருந்துள்ளார் என்பது மிகுந்த பெருமையை அளிக்கிறது. நான் அவருடைய பேத்தி என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருத்த மகிழ்ச்சியும் பெருமையும் கூட.