ஆண்டவர் மன்னிப்பாரா? - 6 கொலைகளை அரங்கேற்றிய ஜாலியின் ஆவணப்படம் உணர்த்துவது என்ன?

ஒரு கிரைம் - திரில்லர் படத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் மக்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த ஆவணப்பத்தை சமூக ஊடங்களில் மீம்ஸ் மூலம் டிரெண்டாக்கி வருகின்றனர் இன்றைய தலைமுறையினர்.

Update: 2024-01-15 18:30 GMT
Click the Play button to listen to article

ஒரே வீட்டில் அடுத்தடுத்து மரணங்கள்... ஆனால் ஓரிரு ஆண்டுகளிலல்ல; கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 6 பேர் மரணம். ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு மரணிக்கும் வயதும் இல்லை. அப்படி இருந்தும் எப்படி குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் தொடர் கொலைகள்? என்ற கேள்வி எழுந்த ஒரு நபர் அமெரிக்காவிலிருந்து கேரளாவிலுள்ள தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு பல சந்தேகங்களும் கேள்விகளும் எழவே அருகிலிருக்கும் காவல் நிலையத்தை அணுகி உதவி கேட்கிறார். அப்போதுதான் வெளிச்சத்திற்கு வருகிறது அந்த 6 மரணங்களும் கொலைகள் என்று. அதுவும் அதே வீட்டில் அவர்களோடு ஒன்றாக வசித்து வந்த அந்த வீட்டுப் பெண்ணே ஒவ்வொருவரையும் கொலை செய்திருப்பது தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக, சாப்பிடும் உணவில் சயனைடு கலந்துகொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவரவே அந்த சம்பவம் கேரளாவை மட்டுமல்ல; இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்தது. இந்த கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது 2019ஆம் ஆண்டு. 6 கொலைகள் செய்தும் ஜாலி ஜோசப் என்ற பெண், மாட்டிக்கொள்ளாமல் இருந்தது எப்படி? 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது இந்த வழக்கு ட்ரெண்டாவது ஏன்? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

ஜாலி ஜோசப்பின் பிண்ணனி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமமான வாழவராவை சேர்ந்தவர் ஜாலி ஜோசப். இவருடைய அப்பா ஒரு விவசாயி. இவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு மூத்த சகோதரர்கள், இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு இளைய சகோதரர் என இவரது குடும்பத்தில் மொத்தம் 6 பிள்ளைகள். வாழவராவிலுள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற ஜாலி மேற்படிப்பை நெடும்கண்டத்திலுள்ள எம்இஎஸ் கல்லூரியில் படித்திருக்கிறார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான ஜாலிக்கு சிறு வயதிலிருந்தே பணக்காரியாக வேண்டும் என்று ஆசை. அந்த சமயத்தில்தான் கோழிக்கோடு கூடத்தாய் பகுதியைச் சேர்ந்த ராய் தாமஸ் என்ற நபரை ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கிறார் ஜாலி. பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பையன்போல தெரிந்த ராயை காதலிக்கிறார் ஜாலி. ராய் படித்து முடித்துவிட்டு ஹைதராபாத்தில் வேலைக்கு செல்ல காத்திருப்பதாக ஜாலியிடம் கூறுகிறார். பதிலுக்கு ஜாலியும், தான் என்.ஐ.டியில் கெஸ்ட் லக்சரராக வேலைபார்ப்பதாக ராயிடம் கூறுகிறார். இதனையடுத்து இவர்களது காதல் மேலும் வலுக்கிறது. ஒருவழியாக இருவர் குடும்பமும் சம்மதிக்க 1997ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கிறது. தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் பிறந்தன. இந்நிலையில்தான் ராய்க்கு வேலை எதுவும் இல்லையென்று ஜாலிக்கு தெரியவருகிறது. அதேபோல் ஜாலியும் என்.ஐ.டியில் வேலை பார்க்கவில்லை என்பது அவருடைய மாமியாரான அன்னம்மா தாமஸுக்கு தெரியவருகிறது. ஜாலி தான் வேலை பார்ப்பதாக கூறிய பொய்யை கண்டறிந்த அன்னம்மா, அதனை வீட்டிலிருப்பவர்களுக்கு தெரிவிக்காமல், ரகசியமாக ஜாலியை அழைத்து வேலைக்கு போகும்படி வற்புறுத்தியிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த ஜாலி தனது வீட்டிலிருப்பவர்களை சோற்றில் விஷம் வைத்து கொல்ல முடிவெடுத்திருக்கிறார்.

வீட்டில் நடந்த அடுத்தடுத்த இறப்புகள்

இந்நிலையில் திடீரென 2002ஆம் ஆண்டு ஜாலிக்கு ஆதரவாக இருந்த அன்னம்மா இறந்துபோகிறார். இதனால் ஜாலி மற்றும் அவரது குடும்பத்தார் மனமுடைந்து இருக்க, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்த மாமனார் டாம் தாமஸ் இலங்கையிலிருக்கும் தனது மகளை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி மாமனாரை கேரளாவிற்கு அழைக்கிறார் ஜாலி. துணைக்கு தனது மனைவியும் இல்லையே என்ற அக்கறையில் கேரளா வந்த டாம் தாமஸ் 2008ஆம் ஆண்டு திடீரென இறந்துபோகிறார். இந்நிலையில்தான் ஜாலியின் வாழ்க்கையில் அடுத்த சோகம் நடந்தேறுகிறது. தனது அம்மா, அப்பா இருவரும் இறந்த நிலையில் குடும்ப பொருளாதாரம் குறித்து கவலையுற்றிருந்த ஜாலியின் கணவர் ராய் தாமஸ் 2011ஆம் ஆண்டு பாத்ரூமில் தற்கொலை செய்துகொள்கிறார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என வற்புறுத்திய அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவும் 2014ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறக்கிறார். 


டாம் தாமஸின் வீடு மற்றும் முதல் கணவர் ராய் தாமஸுடன் ஜாலி

அடுத்தடுத்து குடும்பத்தினர் பிரிந்த சோகத்தில் இருந்த ஜாலிக்கு உதவியாக இருந்தது தாமஸின் அண்ணன் மகன் ஷாஜு சக்காரியா மற்றும் அவரது குடும்பத்தினர். இந்நிலையில்தான் ஷாஜுவின் குடும்பத்திலும் அடுத்தடுத்து சோகம் நிகழ்கிறது. ஷாஜுவின் மனைவி சிலி மற்றும் அவர்களுடைய குழந்தை அல்ஃபைன் இருவரும் 2016ஆம் ஆண்டு குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து இறந்துபோகின்றனர். இப்படி இரண்டு குழந்தைளுடன் ஆதரவற்றிருந்த ஜாலியும், ஷாஜுவும் ஒருவருக்கொருவர் துணையாகவும், ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி 2018ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொள்கின்றனர். இந்நிலையில்தான் இதுகுறித்து சந்தேகமடைந்த ராய் தாமஸின் தம்பி ரோஜோ அமெரிக்காவிலிருந்து கேரளாவிற்கு வந்திருக்கிறார். அப்போது தனது அண்ணன் ராய் தாமஸின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை பார்த்தபோதுதான் ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. அப்போதுதான் ஜாலியின் உண்மை முகம் வெளிவரத் தொடங்கியது.

14 ஆண்டுகளாக அரங்கேற்றிய தொடர் கொலைகள்

மீண்டும் அன்னம்மா இறப்புக்கு வருவோம். அவ்வளவு நாட்கள் வீட்டிலிருந்தே பழகிய ஜாலிக்கு வேலை செல்வதில் நாட்டமில்லை என தெரிகிறது. வீட்டு பொறுப்புகள் அனைத்துமே அன்னம்மா கையில் இருந்தது அவருக்கு மேலும் எரிச்சலூட்டியிருக்கிறது. இதனால் தனது மாமியார் அன்னம்மாவை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார் ஜாலி. ஏற்கனவே ஒருமுறை கொலை திட்டம் தீட்டி அது சொதப்பிய நிலையில் இம்முறை தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காக தனது நண்பர் ஒருவரின் உதவியை நாடியிருக்கிறார். அந்த நபரிடமிருந்து சயனைடு வாங்கி வந்த ஜாலி, தனது மாமியாருக்கு கொடுத்த மட்டன் சூப்பில் அதனை கலந்து கொடுத்திருக்கிறார். சயனைடு கலந்த சூப்பை குடித்த அன்னம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2002.

அன்னம்மா - டாம் தாமஸ் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்த பையன் ராய் தாமஸ். இவருடைய தம்பி ரோஜோ அமெரிக்காவில் வசிக்கிறார். தங்கை ரெஞ்சி இலங்கையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். ஏற்கனவே கூறியதுபோல பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஜாலிக்கு, மாமியார் இறப்பும் கைகொடுக்கவில்லை. காரணம், வீட்டு பொறுப்புகள் அனைத்தும் தன்வசம் வந்திருந்தாலும் வெளிநாட்டில் வசிக்கும் மகனுக்கும் தனது கணவருக்கும் சொத்தை பங்கிட்டு கொடுப்பதாக மாமனார் கூறியிருக்கிறார். அதோடு நின்றுவிடாமல் அதற்கான ஆவணங்களையும் தயார் செய்திருக்கிறார். இதனை அறிந்துகொண்ட ஜாலி அடுத்து மாமனாருக்கும் உணவில் சயனைடு கலந்து கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்ட மாமனார் டாம் தாமஸும் 2008ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இருவருமே வயதானவர்கள் என்பதால் யாருக்கும் ஜாலிமீது சந்தேகம் ஏற்படவில்லை. இதற்கிடையே ராயின் அப்பா டாம் தாமஸ் தயார் செய்து வைத்திருந்த பத்திரங்களை அழித்துவிட்டு போலி ஆவணங்களை தனது கணவர் பேரிலும், தன் பேரிலும் தயார் செய்திருக்கிறார் ஜாலி. இருந்தாலும் வேலைக்கு செல்லாத கணவனுடன் சொத்துக்களை பங்குபோடுவதில் ஜாலிக்கு விருப்பமில்லை.


ஜாலி ஜோசப்பால் கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் அவருக்கு உதவியர்களின் விவரங்கள்

 அடுத்து ஜாலியின் டார்கெட் அவரது கணவர் ராய்தான். ஏனெனில் வீட்டிலேயே இருந்த ராய் மீது ஜாலிக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே ராயின் உறவினரான ஷாஜி என்பவருடன் பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு பிடித்த வாழ்க்கையை தன் மனதுக்கு பிடித்தவருடன் வாழ எண்ணிய ஜாலி அடுத்து சயனைடு வைத்தது தனது சொந்த கணவனுக்குத்தான். ஆனால் அவருக்கு இறக்கும் வயது இல்லை என்பதாலும், தன்மீது சந்தேகம் திரும்பிவிடக்கூடாது என்பதாலும் ஜாலி ஒரு புதுக்கதையை கட்டிவிட்டார். ராய் தாமஸ் பாத்ரூமுக்குள் இறந்துகிடக்க, உள் தாழிடப்பட்டிருந்த அந்த பாத்ரூம் கதவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடைத்து உடலை எடுத்திருக்கிறார் ஜாலி. இருப்பினும் ஒரே வீட்டில் ஓரிரு ஆண்டுகளில் அடுத்தடுத்த மரணம் ஏற்பட்டது குறித்து சந்தேகித்த அன்னம்மாவின் தம்பியும், ராயின் மாமாவுமான மேத்யூ, ராயின் உடலை கட்டாயம் பிரேத பரிசோதனை செய்யவேண்டுமென வற்புறுத்தியுள்ளார். அதன்பேரில் பிரேத பரிசோதனையும் நடந்தேறியது. அதில் ராய் உடலில் சயனைடு இருப்பது தெரியவந்தது. அதையும் மறைக்க ஜாலி ஒரு கதையை உருவாக்கினார். ராய் மதியம்தான் உணவு சாப்பிட்டதாகவும், இரவு இறப்பதற்கு முன்பு உணவு சாப்பிடவில்லை எனவும் கூறியதுடன், பாத்ரூமின் கதவு உள் தாழிட்டிருந்ததையும் குறிப்பிட்டார். மேலும் கடன் பிரச்சினை அதிகமாக இருந்ததாகவும், தனது கணவர் அதை நினைத்து மன குழப்பத்தில் இருந்ததாகவும் கூறினார். என்ன இருந்தாலும் ராயின் மனைவியாயிற்றே, போலீசாரும் கோர்ட்டும் ஜாலியை நம்பியதுடன் அவரை நிரபராதி எனவும் கூறி வழக்கை முடித்துவைத்தது.

இருப்பினும் மேத்யூ மீது ஜாலிக்கு ஒருபுறம் கோபம். அவரை எப்படியாவது பழிவாங்க நினைத்த ஜாலி, மேத்யூவின் மனைவி ஊருக்கு சென்றிருந்த சமயத்தில் அவருடைய உணவிலும் சயனைடை கலந்துவிட்டார். 2014ஆம் ஆண்டு மேத்யூவும் இறந்துபோனார்.

அடுத்தடுத்து கொலைகள்... சரி, ஜாலிக்கு இத்தனை சயனைடு எங்கிருந்து கிடைத்தது? என்ற கேள்விதானே பலருக்கும் எழுகிறது. அங்குதான் ராயின் உறவினரும் ஜாலியின் நண்பருமான ஷாஜி வருகிறார். ஷாஜி தனது குடும்ப பொருளாதாரத்தை சிறப்பாக கையாளும் நபராக இருந்திருக்கிறார். இதனால் அவர்மீது ஜாலிக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பது ஷாஜியின் மனைவி சிலியும் அவர்களுடய 2 வயது குழந்தையான அல்ஃபைனும்தான் என நினைத்த ஜாலி, 2016ஆம் ஆண்டு சிலிக்கு மட்டுமில்லாமல் குழந்தைக்கும் உணவில் சயனைடை கலந்திருக்கிறார். குழந்தை இறப்பின்போது வாயில் நுரை தள்ளவே அவர்களுடைய குடும்பத்தில் மரபுரீதியாகவே வலிப்பு பிரச்சினை இருக்கிறது என்றும், அதனால்தான் குழந்தை இறந்துவிட்டது என்றும் கூறிவிட்டார் ஜாலி. அடுத்த இரண்டே ஆண்டுகளில், அதாவது 2018ஆம் ஆண்டு ஜாலியும் ஷாஜியும் திருணம் செய்துகொண்டனர்.


ஜாலி கொலைசெய்த அவருடைய குடும்ப உறுப்பினர்கள்

எங்கிருந்து கிடைத்தது சயனைடு?

ஷாஜியுடன் நெருங்கி பழகியதுடன் கொலைகளை அரங்கேற்ற அவரிடமே சயனைடையும் பெற்றதாக தெரிகிறது. ஷாஜிக்கு மட்டும் எங்கிருந்து அவ்வளவு சுலபமாக சயனைடு கிடைக்கும் என்று தோன்றுகிறதல்லவா? ஷாஜிக்கும், நகை கொல்லரான ப்ராஜிக்கும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. அவர் நகை தயாரிக்க பொட்டாசியம் சயனைடு வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஜாலியின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருப்பதாக ஷாஜியிடம் உதவி கேட்கவும், அவரும் தனது நண்பர் ப்ராஜியிடமிருந்து சயனைடை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் சயனைடு வைத்து கொன்றது எலிகளுக்கு அல்ல; குடும்பத்தினருக்குத்தான் என்று ஷாஜிக்கே பின்னர்தான் தெரியவந்திருக்கிறது. இதற்கிடையே குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் தனது குடும்பத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த இறப்புகள் குறித்து சந்தேகமடைந்த ராய் தாமஸின் தம்பி ரோஜோ, கேரளாவிற்கு வந்தபோதுதான் அனைத்து உண்மைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்திருக்கிறது. தனது அண்ணன் ராய் இறந்தபோது அவர் இரவு உணவு எதுவும் சாப்பிடவில்லை என்று ஜாலி கூறியிருந்தார். ஆனால், அவர் சாப்பிட்ட உணவில் சயனைடு கலந்து இருந்ததாக போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அடுத்தடுத்த இறப்புகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். மேலும் காவல்துறையின் உதவியையும் நாடியிருக்கிறார்.

ஒரே நாளில் தோண்டப்பட்ட 6 உடல்கள்

அந்த ஆறு மரணங்களின்போதும் அருகிலிருந்தது ஜாலி மட்டும்தான் என்ற சந்தேகம் எழவே முதலில் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஜாலி அதற்கு ஒத்துழைப்பதாக தெரியவில்லை. ஜாலியின் செல்போன் ஹிஸ்ட்ரியை ஆய்வுசெய்தபோது போலீசாருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது, அவர் ஷாஜியிடம் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார் என்று. அவரைத் தொடர்ந்து அந்த வழக்கில் ஜாலி உட்பட 4 பேர் சிக்கினர். 2019ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி இந்த வழக்கை கையிலெடுத்த கோழிக்கோடு புறநகர் எஸ்.பி கேஜி சைமன், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களை அரங்கேற்றினார். இதற்கிடையே சொத்துக்கள் குறித்து ஜாலி தயாரித்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யென தெரியவருகிறது. ஒரே நாளில் கூடத்தாய் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 6 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவை அனைத்திலும் விஷம் கலந்திருந்தது தெரியவரவே போலீசார் தங்களது கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கினர்.

ஒருகட்டத்தில் ஜாலி தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த 6 கொலைகளையும் ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்பது குறித்தும் விவரிக்க விவரிக்க போலீசாரே ஆடிப்போயினர். சிறு வயதிலிருந்தே மனதுக்குள் சிறு விதையாக விழுந்த பண ஆசை எவ்வளவு பெரிய விருட்சமாக வளர்ந்து பரந்திருக்கிறது என்ற செய்திகள் உலகம் முழுவதும் பரவின.


தோண்டி எடுக்கப்பட்ட 6 பேரின் உடல்கள்

மீண்டும் ட்ரெண்டாவது ஏன்?

கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு சாதாரண குடும்ப பெண்ணின் மாஸ்டர் ப்ளான் மற்றும் தனது திட்டங்களை 16 வருடங்கள் யாருமே கண்டுபிடிக்காமல் அரங்கேற்றிய சாதுர்யம் போன்றவை சினிமாவையே விஞ்சிவிட்டன. ஜாலியுடைய இரண்டு மகன்கள்கூட தனது தாய்க்கு ஆதரவாக நிற்கவில்லை. ஒருவழியாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஜாலி ஜோசப்பிறகு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாலி 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை காப்பாற்றிவிட்டனர்.

இந்நிலையில் இந்த உண்மை சம்பவத்தை ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் கிறிஸ்டோ டாமி. கிட்டத்தட்ட 1.35 மணி நேரம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஷாலினி உஷாதேவி திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தியா டுடே தயாரிக்க, ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி ரீலீஸானது. 6 கொலைகளை ஒரு பெண் அரங்கேற்றியதற்கு என்ன காரணம்? ஜாலிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? ஒரு கொலையில் கூட ஜாலி மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தது எப்படி? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது கதைக்களம். ராய் தாமஸின் தங்கை ரெஞ்சி, காவல் அதிகாரி, பத்திரிகையாளர், ஜாலி ஜோசப்பின் வழக்கறிஞர், சமூக ஆர்வலர் போன்றோர் தங்கள் தரப்பினை விவரிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு கிரைம் - திரில்லர் படத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் மக்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த ஆவணப்படம் ஆழமான கருத்துக்களை ஒருபுறம் கூறினாலும் சமூக ஊடங்களில் மீம்ஸ் மூலம் டிரெண்டாக்கி வருகின்றனர் இன்றைய தலைமுறையினர். ‘எவ்வளவு பாவங்கள் செய்தாலும் ஆண்டவர் மன்னிப்பதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. அதுபோல தானும் மன்னிக்கப்படுவேன்’ என்று ஆவணப்படத்தின் இறுதியில் ஜாலி ஜோசப் சொன்னதாக கூறப்படும் இடங்கள், அவர் அதற்காக வருத்தப்படவில்லை என்பதை காட்டுவதாக கூறுகின்றனர் விமர்சகர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்