அரசியல் தளத்தில் பெண்களின் சுதந்திரம் - ‘அனைத்து மக்கள் கட்சி’ தலைவி ராஜேஸ்வரி பிரியாவின் பார்வை
ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் பங்களிப்பு சமூகத்தை நிர்வகிப்பதிலும் இருக்க வேண்டும்
அரசியலில் பெண்களின் பங்கு பெரும்பாலும் ஆண்களை சார்ந்துதான் இருந்து வருகிறது. அரசியலில் சுதந்திரமாக இயங்கும் பெண்கள் மிக மிக குறைவு. அந்தக் குறைக்கு என்ன காரணம்? பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குவது ஏன்? இது குறித்து ஒரு பெண்ணாக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி புதிதாக ‘அனைத்து மக்கள் அரசியல் கட்சி’யை தொடங்கியிருக்கும் ராஜேஸ்வரி பிரியா அவர்களின் அரசியல் பார்வையை இங்கு காண்போம்.
அரசியல் கட்சித் தலைவி ராஜேஸ்வரி பிரியாவுக்கும் குடும்பத் தலைவி ராஜேஸ்வரி பிரியாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன?
இரண்டும் ஒரே மாதிரியான பொறுப்புதான். ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் பங்களிப்பு சமூகத்தை நிர்வகிப்பதிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறேன். நாளடைவில் நிறைய பெண்கள் அரசியலுக்குள் வர வேண்டும் என்ற பெரும் நோக்கத்துடன்தான் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தொடங்கியதன் நோக்கம் என்ன?
அரசியல் என்பது ஒரே நாளில் தோன்றும் எண்ணம் இல்லை. விவரம் தெரிய வரும் காலத்திலிருந்தே சமூகத்தின் மீது உண்டாகும் அக்கறைதான் ஒருவரை அரசியல்வாதியாக மாற்றும். எனது அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அதனால் சிறு வயதிலிருந்தே எனக்கு அரசியல் பழக்கமானது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டிருந்த எனது அப்பாவுக்காக அரசியல் களப்பணிகளை எல்லாம் செய்திருக்கிறேன். குடும்பப் பொருளாதாரம், சூழ்நிலையை தகவமைத்துக் கொண்டு அரசியலுக்குள் வரவேண்டும் என்பதால் நான் எட்டு ஆண்டு காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து எனது பொருளாதாரப் போராட்டங்களை முடித்துக் கொண்டு சமூகத்துக்காக போராட அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவி ராஜேஸ்வரி பிரியா
பா.ம.க. வழங்கிய மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பை உதறிவிட்டு எப்படி தைரியமாக ‘அனைத்து மக்கள் அரசியல் கட்சி’யை ஆரம்பித்தீர்கள்?
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உலக நாடுகளின் சிறந்த திட்டங்கள் இருந்ததைப் பார்த்துதான் நான் அந்த கட்சியில் இணைந்தேன். எல்லோரையும் இணைத்ததுக்கு முக்கிய காரணமாக அமைந்த விஷயத்தையே அவர்கள் கைவிட்டு விட்டதால் நான் அந்த கட்சியிலிருந்து விலகி விட்டேன். தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருவது ஒரு முறை. அதேபோன்று பதவியில் இல்லா விட்டாலும் மக்களுக்காக குரல் கொடுத்து மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்காக அரசியலுக்கு வருவது மற்றொரு முறை. நான் இரண்டாவது முறையை தேர்ந்தெடுத்திருக்கிறேன். மக்களுக்கான ஒரு குரலாக ஒலிப்பதற்கு எனக்கு சுதந்திரம் தேவைப்பட்டது. எந்த கட்சியிலிருந்து செயல்பட்டாலும் அந்த சுதந்திரம் கிடைக்காது என்ற எண்ணத்தில்தான் தனியாக கட்சித் தொடங்கியிருக்கிறேன்.
பா.ம.க. உங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையா அல்லது பொறுப்புகள் கொடுப்பதற்கு மறுக்கப்பட்டதா?
அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அந்தக் கட்சியைப் பொறுத்த வரையில் எனக்கு அரசியல் அனுபவம் கிடையாதுதான். இருந்தாலும் எனக்கு பொறுப்பைக் கொடுத்தார்கள். நான் அதற்கு தகுந்த மாதிரி எனது உழைப்பைக் கொடுத்தேன். நான் பா.ம.க.வில் இணைந்தபோது மிகப்பெரும் பொறுப்பைக் கொடுத்தார்கள் நான் அதை சரியாக செய்ய வேண்டும் என்ற வகையில் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகள் இணைந்து பயணித்தேன்; ஆனால் அது பத்தாண்டுகளுக்கு இணையான பயணம். அந்தளவுக்கு எல்லா மாவட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். எல்லா மேடைகளிலும் எனது குரலை பதிவு செய்திருக்கிறேன். எனக்கென்று தனியாக மேடை கூட அமைத்துக் கொடுத்தார்கள். வாய்ப்புகளில் எந்த குறையும் இல்லை; ஆனால் சில இடங்களில் சில தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது அவ்வளவுதான்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ராஜேஸ்வரி பிரியா பா.ம.க. தலைவர் அன்புமனி ராமதாஸ்
நீங்கள் ஏன் வேறு கட்சிகளில் சேராமல் புதிதாக கட்சி ஆரம்பித்தீர்கள்?
நான் பா.ம.க.விலிருந்து வெளியேறியதும் பல கட்சிகளிலிருந்தும் தொடர்பு கொண்டு அழைத்தார்கள். ஆனால் வேறு கட்சியில் சேர எனக்கு விருப்பம் இல்லை. நான் அரசியல் கட்சி ஆரம்பிக்க மிக முக்கிய காரணம் சுதந்திரம்தான். அரசியலில் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே இது பொருந்தும். தமிழகத்தில் 5% பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 12 உறுப்பினர்கள் மட்டுமே பெண்கள். இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்களா? அல்லது இருக்கும் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? என இதுபோன்ற நிறைய கேள்விகள் என்னுள்ளே எழுந்திருக்கிறது. ஒருவேளை ஆண்கள் அரசியல் கட்சி நடத்துவதால் பெண்கள் அரசியலுக்குள் வருவதற்கான தயக்கங்கள் இருக்கலாம். அதனால் ஒரு பெண் அரசியல் கட்சி நடத்தினால் அதில் நிறைய பெண்கள் சேரலாம் என்ற அடிப்படையில்தான் நான் புதியதொரு கட்சியைத் தொடங்கினேன். என்னுடைய நோக்கம் எந்த எதிர்பார்ப்புமின்றி தெளிவாகவும் நேர்மையாகவும் இருப்பதால் இன்று நிறைய இளைஞர்கள் எனது கட்சியில் வந்து இணைகின்றனர்.
ம.நீ.ம. தலைவர் கமலஹாசன் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராஜேஸ்வரி பிரியா
புதிய கட்சி ஆரம்பித்ததும் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
நிறைய சவால்களை எதிர்கொண்டேன். பா.ம.க.விலிருந்து வெளியேறியதும் பல தரப்பிலிருந்து மிரட்டல்கள், ஆபாச செய்திகள் போன்றவை வந்தன. புதிதாக கட்சி தொடங்கியதும் எனது கருத்துகளை பேட்டிகளில் வெளிப்படுத்தும்போது உதாரணமாக உதயநிதி குறித்து கூறியதற்காக திமுகவினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தனர். பெண்கள் என்றாலே இந்த சமூகம் ஒரு வரையறை செய்கிறது. நாம் நமது மனதில் பட்ட கருத்தினை பதிவு செய்தால், அது அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்படி ஒரு பெண் இப்படி பேசலாம்? என்று நினைக்கிறார்கள். அதையே ஒரு ஆண் பேசும்போது வேறுமாதிரி பார்க்கிறார்கள். ஒரு பெண் முடிவெடுப்பதையோ, தைரியமாக நிற்பதையே குறிப்பிட்ட ஒரு சில சதவீத ஆண்கள் விரும்புவதில்லை. இன்றளவுக்கும் அரசியலில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னெவென்றால் சமூக வலைதளங்களில் கெட்ட வார்த்தைகளை பதிவிடுவதுதான். மணிப்பூர் பிரச்சினையில் பெண்களை நிர்வாணப்படுத்தியதை நாம் எப்படி கொடுமையாக கருதுகிறோமோ, அதேபோன்ற கொடுமைதான் பெண்களுக்கு எதிராக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிற மனப்போக்கும். இதற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. பெண்கள் வெற்றியிலக்கை எட்டும் முன்பு அவர்களை அந்த துறையிலிருந்தே அகற்றி விட வேண்டும் என்ற சிந்தனையும் இங்கு இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் உடைத்து தகர்த்து நான் கண்டிப்பாக முன்னேறுவேன்.
பெண்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறதா அல்லது மறைக்கப்படுகிறதா?
பெண் சுதந்திரம் மறுக்கப்படுவதில்லை. இன்றைக்கு பெண்கள் எல்லா துறைகளிலும் வந்து விட்டார்கள். அதை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதில் கூட சந்தேகம் இருக்கிறது. மது அருந்துதல், புகைப்பிடித்தல், ஆபாசமாக உடையணிவதைக் கூட சுதந்திரம் என நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களும் அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். பெண்கள் சுதந்திரத்தை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற பெண்கள் குறைவாக இருக்கும் துறைகளுள் அரசியலும் ஒன்று. இப்படி பெண்கள் குறைவாக இருக்கும் துறைகளுக்கு அவர்கள் அதிகம் வர வேண்டும். அதற்கான முயற்சியில் பெண்களும் ஈடுபட வேண்டும். அதற்கு உண்டாகும் தடைகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும். சுதந்திரத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவதில்தான் பிரச்சினைகள் இருக்கிறது. மிருகத்தனமான செயல்கள் மற்றும் மனிதாபிமானமற்ற வார்த்தைகளை பயன்படுத்தாத களமாக உருவானால் இன்னும் அதிகப்படியான பெண்கள் சாதிக்க முடியும் என நான் நினைக்கிறேன்.
இன்றைய திரைப்படங்கள் சமூகத்தை சீரழிக்கிறதா அல்லது ஆரோக்கியமான முறையில் இருக்கிறதா? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இன்று அதிகமாக ஜாதிய அடிப்படையிலான திரைப்படங்கள்தான் வெளிவருகிறது. இதை சமூகத்திற்கு ஆபத்தானதாகதான் நான் பார்க்கிறேன். பழைமையை காண்பித்து பிரிவினையை தூண்டுவதாகத்தான் எடுக்கிறார்கள். இது வணிகரீதியாக வேண்டுமானால் வெற்றியடையலாம். அதேபோன்று பப் காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை எனலாம். மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காட்சிகள் இல்லாத படங்களை விரல் விட்டுகூட எண்ணமுடியாது என நினைக்கிறேன். முன்பெல்லாம் சமூக அக்கறையோடு மக்கள் பிரச்சினைகளை பிரதிபலிப்பதான திரைப்படங்கள் அமைந்திருக்கும். ஆனால் இப்போது ஆபாசத்தை பிரதிபலிக்கும் படங்கள்தான் நிறைய வருகின்றன.
தமிழ் திரைப்படங்களை விமர்சிக்கும் ராஜேஸ்வரி பிரியா
ஒரு சில படங்கள் விதிவிலக்காக இருந்தாலும் தோராயமாக 80% படங்கள் சமூக சீரழிவாகத்தான் வெளிவருகிறது. திரைத்துறையினர் கதை களத்திற்கு தேவைப்படுகிறது அதனால் எடுக்கிறோம் என்கிறார்கள். அப்படியானால் அதற்கேற்ற கதைக்களத்தை உருவாக்கலாமே! அதேபோன்று மக்கள் விரும்புகிறார்கள் அதற்காகத்தான் இப்படி எடுக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். அதற்காக இப்படி மாறிவிடலாம் என்பதும் எனக்கு ஏற்புடையதாக இல்லை.