சென்னையை உலுக்கிய ‘மிக்ஜாம்’ - களத்தில் இறங்கிய பிரபலங்கள்!
புயல், மழை, வெள்ளம் என சென்னைக்கு பாதிப்பு என்றாலே ஓடோடி வந்து உதவ பல மனிதநேயமிக்கவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொருட்சேதம் மற்றும் கால்நடைகள் இறந்ததுடன் பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, இந்த மழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பலரும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்த சோகத்திலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் ஒருபுறம் உதவிகளை செய்தாலும், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் களத்தில் இறங்கி தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்தனர். மிக்ஜாம் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
2015 வெள்ளத்தை பீட் செய்ததா மிக்ஜாம்?
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலால் அதி கனமழை பெய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த பாதிப்பின் அளவு என்பது குறைவாகவே பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது மின்சாரம், தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் போன்ற அனைத்துமே துண்டிக்கப்பட்டதுடன், அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன.
2015 ஆம் ஆண்டு வெள்ளம் vs 2023 ஆம் ஆண்டு வெள்ளம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டதே 2015 பெருவெள்ளத்திற்கு காரணம் என யுஜிசி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்துமே நீரில் மூழ்கி வெள்ளக்காடாயின. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டதால் பன்மடங்கு விலை கொடுத்து உணவுப்பொருட்களை வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் வெளியூர்களிலிருந்து தன்னார்வலர்கள் பேருந்து, லாரிகள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை சென்னைக்கு கொண்டுவந்தனர். பல பகுதிகளில் 2, 3 -வது தளம் வரை வெள்ளம் சூழ்ந்ததால் ஹெலிகாப்டர்கள்மூலம் உணவுகள் விநியோகிக்கப்பட்டன. வீடுகளுக்குள் சிக்கிய மக்களும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அனைத்து போக்குவரத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டன. இயல்பு நிலைக்கு திரும்ப 15 நாட்களுக்கும் மேலானது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ஏறத்தாழ 200 என தெரிவித்தன ஊடகங்கள். மாபெரும் இழப்பை சந்தித்தது சென்னை.
ஆனால் இம்முறை அதி கனமழை பெய்திருந்தாலும் 2015 உடன் ஒப்பிடுகையில் பாதிப்புகள் மிகவும் குறைவு என்றுதான் சொல்லமுடியும். சென்னையை சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் நீரின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதுடன், சரியான இடைவெளியில் நீர் வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்புகள் தடுக்கப்பட்டன. இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்படவில்லை. ஓரிரு நாட்களுக்குள் மின்சாரம், போக்குவரத்து என அனைத்துமே படிப்படியாக சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 முதல் 12 என்கின்றன தரவுகள்.
சென்னை அருகே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் மற்றும் அதனால் பொங்கி எழுந்த கடல் அலை
தாக்கத்தை ஏற்படுத்திய மிக்ஜாம்
ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடகிழக்கு பருவமழையுடன் சேர்ந்தே புயல்களும் உருவாகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே வார்தா, ஒக்கி, நிவர், மாண்டஸ் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புயல் உருவாகி சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அந்த புயல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சற்று வித்தியாசமானது என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு காரணம், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி கனமழை பெய்திருக்கிறது. பொதுவாக ஒரு புயல் கரையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதை பொருத்துதான் அதன் தாக்கமும் இருக்கும். அதேபோல் புயல்கள் மணிக்கு 10 முதல் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்துகொண்டே செல்லும். ஆனால் இந்த மிக்ஜாம் புயலானது நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்ததுடன், மணிக்கு வெறும் 7 கி.மீ வேகத்தில் மெதுவாகவே நகர்ந்தது. கிட்டத்தட்ட 18 மணிநேரமாக சென்னைக்கு அருகிலேயே, அதாவது 90 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்தது. குறிப்பாக, 5 கி.மீ வேகத்தில் சென்னைக்கு அருகிலேயே நின்றதாகவும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. இதனால், டிசம்பர் 3ம் தேதி இரவு தொடங்கி 4ம் தேதி இரவு 9 மணிவரை விடாது கொட்டித்தீர்த்தது காற்றுடன் கூடிய கனமழை. காற்றும் குறையாமல், கடலும் கொந்தளித்துக்கொண்டிருந்ததால் ஆற்றுநீர் கடலில் கலக்க வழியில்லாமல் போனது. இதனாலேயே அடையாறு, கூவம் ஆறுகள் வழியாக ஓடிய வெள்ளம் கடலில் கலக்காமல் ஊருக்குள்ளேயே திரும்பியது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்
வெள்ளத்தில் மூழ்கிய சென்னை பகுதிகள் - ஏரிகளின் நிலை
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் வெள்ளம் சூழந்தது. சுழன்று சுழன்று வீசிய காற்றின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டன. மழை நின்றவுடன், சென்னையின் முக்கிய பகுதிகளான சென்ட்ரல், எழும்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் ஒரே நாளில் வெள்ளம் வடிந்தது. போக்குவரத்தும் சரி செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் சீரானது. ஆனால் புறநகர் பகுதிகளான கொரட்டூர், முடிச்சூர், தாம்பரம் போன்ற பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளான மணலி, திருவொற்றியூர், வேளச்சேரி, மாதவரம், கே.கே நகர், ஓட்டேரி, அயனாவரம் போன்ற பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கிய வண்ணமே இருந்தது. குறிப்பாக, பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இடுப்பளவு நீர் தேங்கி நின்றதுடன் பெரும்பாலான இடங்களில் கழிவுநீரும் கலந்தது. இதனால் தரைதளங்களிலுள்ள வீடுகளுக்குள் புகுந்த நீரை அகற்ற முடியாமல் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இணைய சேவைகளும் சரியாக இல்லாததால் மீட்பு பணிகளிலும் தாமதங்கள் ஏற்பட்டன.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர்
அரசின் நடவடிக்கைகள்
ஆண்டுதோறும் சென்னையில் ஏற்படும் வெள்ளத்தை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு புயல் அறிவிப்பிலிருந்தே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதுடன், அத்தியாவசிய பொருட்களுக்கான ஏற்பாடுகள், மக்களை பாதுகாக்க நிவாரண முகாம்களை அமைத்தல் மற்றும் உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தியது. கழிவுநீரை அகற்றுவதற்காக 325 கழிவுநீர் அகற்றும் மோட்டார்கள், அடைப்புகளை தூர்வார 540 வாகனங்கள் மற்றும் 546 சூப்பர் சக்கர் இயந்திரங்களை முன்னேற்பாடு செய்து துரிதமாக பணிகளை மேற்கொண்டது. மேலும் காற்று மற்றும் கனமழையால் விழுந்த மரங்களை அகற்ற, மரம் அறுக்கும் இயந்திரங்களையும் ஏற்பாடு செய்திருந்தது. இதுதவிர, மோட்டார் பம்புகள், ஆம்பியன் வாகனங்கள் மற்றும் ரோபோட்டிக் எஸ்கலேட்டர்களையும் ஏற்பாடு செய்திருந்தது. மேலும், நடமாடும் மருத்துவ குழுக்களையும் அமைத்திருந்தது.
இருப்பினும், எதிர்பார்த்ததைவிட மழைப்பொழிவு அதிகமாக இருந்ததன் காரணமாக ஓரிரு நாட்கள் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்சேவை ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டது. சுமார் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, அடுத்தநாள் (05.12.2023) மீண்டும் தொடங்கியது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள தமிழக பகுதிகளை சீர் செய்திட, இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்ட பிறகு, தமிழ்நாட்டுக்கு ரூ. 450 கோடியையும், ஆந்திராவுக்கு ரூ. 493 கோடியையும் மத்திய அரசு விடுவித்திருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தலா ரூ. 6000 நிவாரணம் வழங்க முடிவெடுத்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி. - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. - டிவி நடிகர் பாலா
களத்தில் இறங்கிய பிரபலங்கள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்படுத்தவும், மக்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும், பொருட்சேதங்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் அரசு ஒருபுறம் முயற்சித்தாலும் மற்றொரு புறம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆங்காங்கே அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவிய வீடியோக்களும், ஃபோட்டோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகின. மழை பெய்து கொண்டிருந்தபோதே கனிமொழி எம்.பி. அவரது வீட்டிலேயே விடிய விடிய உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக காய்கறிகளை வாங்கி வீட்டிலேயே 50க்கும் மேற்பட்ட சமையல்காரர்களை தங்கவைத்து உணவு விநியோகம் செய்தார். எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனும் வெள்ளத்தில் வீட்டுக்குள் சிக்கிய மக்களை படகுகள் மூலம் மீட்டு அவர்களுடனே படகில் சென்றார். மேலும், சிறப்பு மருத்துவ முகாம்களை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
இன்று (07.12.2023), சோழிங்கநல்லூர் - ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில், மிக்ஜாம் புயல் - பெரு மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை, பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி.விமலா கர்ணாவுடன், படகு மூலம் சென்று சந்தித்து அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கினோம்.@arivalayam pic.twitter.com/MEeszT0mcv
— தமிழச்சி (@ThamizhachiTh) December 7, 2023
இதற்கிடையே மழை வெள்ளத்தில் சிக்கி வீட்டுக்குள் தவித்த நடிகர் விஷ்ணு விஷால், அமீர் கான் மற்றும் நமீதா போன்றோர் படகின்மூலம் மீட்கப்பட்டனர். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிமூலம் பிரபலமான பாலா தனது கணக்கில் இருந்த 2 லட்சம் ரூபாயை 200 குடும்பத்தினருக்கு ஆளுக்கு 1000 ரூபாயாக பிரித்துக்கொடுத்தார். இவர் தவிர, அறந்தாங்கி நிஷா மற்றும் பிற பிரபலங்களும் இணைந்து களத்தில் இறங்கி மக்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன், நிவாரணத் தொகை ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். புயல், மழை, வெள்ளம் என சென்னைக்கு பாதிப்பு என்றாலே ஓடோடி வந்து உதவ பல மனிதநேயமிக்கவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.