வலுவாகும் போர் - இஸ்ரேல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துமா?

கடும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஹமாஸ். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருக்கும் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸாமீது தாக்குதல்களை நடத்திவருகிறது.

Update: 2023-10-23 18:30 GMT
Click the Play button to listen to article

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக நீடித்துவந்த பகை தற்போது போராக உருவெடுத்திருக்கிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் என்ற அமைப்பானது பகிரங்க தாக்குதலை நடத்தியது. மேலும் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பிணையக் கைதிகளாக பிடித்துச்சென்றது. இது இஸ்ரேல் நாட்டினரின் கோபத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. உலகின் மிகச்சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றான மொசாட்டை கைக்குள் வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டையே ஏமாற்றியிருக்கிறது ஹமாஸ் அமைப்பு. கடும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஹமாஸ். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருக்கும் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸாமீது தாக்குதல்களை நடத்திவருகிறது.

இதற்குமுன்பே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையே அவ்வபோது மோதல்கள் இருந்துவந்த போதிலும், தற்போது மாறி மாறி நடந்துவரும் தாக்குதல்களில் பொருட்சேதம் மட்டுமில்லாமல் உயிர்பலிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. இஸ்ரேலுடன் ஒப்பிடுகையில் காஸாவில் உயிர்பலி அதிகம் என்றே சொல்லலாம். மிகச்சிறிய நாடாக இருந்தாலும் உலகின் வல்லமை படைத்த ராணுவப்படையைக் கொண்டது இஸ்ரேல். அப்படிப்பட்ட நாட்டின்மீது தாக்குதல் நடத்துவது என்பது எளிதல்ல. ஹமாஸ் அமைப்பு தனியாக இப்படி ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது என்றால் அதன்பின்பு எவ்வளவு பெரிய திட்டம் தீட்டப்பட்டிருக்கும்? ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ பாலஸ்தீனம்தான்.


காஸா எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய படை

போரின் ஆரம்பம் முதல் தற்போதைய நிலவரம் வரை

அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி இன்றுவரை காஸாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் மாறி மாறி நடந்துவருகிறது. சுமார் 22 லட்சம் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காஸா பகுதியில் எப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலும் உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும். ஆனால் இம்முறை இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன உலக நாடுகள். அதற்கு காரணம், ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் பிற நாட்டினர்களும் அடக்கம். இந்நிலையில் அமெரிக்கா தனது வலிமை மிகுந்த போர்க்கப்பல்களை இஸ்ரேலுக்கு அளித்திருக்கிறது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் அதிகம் பதுங்கியிருக்கும் வடக்கு காஸா மீது தாக்குதல் நடத்தவிருப்பதாகவும், எனவே பொதுமக்கள் அனைவரும் தெற்கு காஸா நோக்கி இடம்பெயருமாறும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்கள் அனைவரும் புலம்பெயர்வதற்கு முன்பே இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கிவிட்டது. குறிப்பாக, வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களில் இஸ்ரேல் இறங்கப்போவதாகவும், இதனால் எந்தவிதமான சேதங்கள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார் என்றும் இஸ்ரேல் பகிரங்கமாக தெரிவித்தது.


தாக்குதலுக்கு பின் காஸா மருத்துவமனையின் அவலம்

இஸ்ரேலும் தான் சொன்னபடியே காஸா எல்லையைச் சுற்றிலும் தாக்குதல்களை நடத்த தயார் செய்யும்விதமாக 3 லட்சத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் ஏந்திய ராணுவ வீரர்களை நிறுத்தியது. மேலும் காஸாவுக்கு செல்லும் குடிநீர், உணவு மற்றும் மின்சாரம் என அனைத்தையும் நிறுத்தியது இஸ்ரேல். பிறகு சில உலக நாடுகள் மற்றும் ஐ.நா அமைப்பின் கோரிக்கைக்கு இணங்க தண்ணீர் தர ஒப்புக்கொண்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அல் அஹ்லி மருத்துவமனையின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகையே பதைபதைக்க வைத்தது. அங்கு சிகிச்சைபெற்றுவந்த 400 குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இதற்கு அமெரிக்க உட்பட பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை என்றும், வேறொரு தீவிரவாத அமைப்பான இஸ்லாமிக் ஜிகாத் என்ற அமைப்பு நடத்தியிருக்கலாம் என்றும் இஸ்ரேல் தரப்பில் ஆதாரமாக ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டாலும் சில உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ‘ஹமாஸ் அமைப்பில் கடைசி ஆளைக்கூட மிச்சம் வைக்கமாட்டோம்’ என்று உறுதியாக சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. எந்த நேரமும் தரைவழி தாக்குதலை நடத்துவோம் என்று அறிவித்திருக்கிற இஸ்ரேல் கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகியும் காஸாவுக்குள் ஊடுருவ தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்திருக்கிறது.


போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா மக்களின் நிலை

தயக்கம் ஏன்?

மிகச்சிறிய நாடாக இருந்தாலும் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய பலம் என்றால் அது அந்நாட்டின் ராணுவம்தான். பிற நாடுகளுடனான நேரடி போர் என்றால் அதில் கட்டாயம் இஸ்ரேல் வென்றுவிடும். அந்த அளவிற்கு டெக்னாலஜி மற்றும் அதிநவீன ஆயுதங்கள் இஸ்ரேலிடம் உள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் வாழும் பொதுமக்களுடன் கலந்து இருப்பதும், மேலும் பிணையக் கைதிகளை வைத்து பந்தாடுவதுமே இஸ்ரேலின் தயக்கத்திற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச போர் விதிகளை இஸ்ரேல் ராணுவமே சுலபமாக மீறி அப்பாவி பொதுமக்கள்மீது தாக்குதல்களை நடத்தும்போது, போர்விதிகளை ஹமாஸ் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. காஸா முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எல்லையை விரிவாக்குவதில் முனைப்பு காட்டுகிறது இஸ்ரேல். ஆனால் போருக்கு ஆதரவு தெரிவிக்கும் சில நாடுகள்கூட இஸ்ரேலின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

யூதர்களின் நாடாக மாறுமா இஸ்ரேல்? அரபு நாடுகள் ஒன்றுகூடி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா? காஸா மக்களின் நிலை என்ன? என்பது குறித்து அடுத்த பகுதியில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்