உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்?

அமெரிக்காவைவிட வலிமைமிக்கதா கத்தார்? இந்த போரில் ரஷ்யா மற்றும் சீனாவின் திட்டம் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது குறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

Update:2023-11-07 00:00 IST
Click the Play button to listen to article

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஒருமாதம் முடிவடைந்துவிட்டது. ஆனால் போர் குறைந்தபாடில்லை. காஸாவில் உயிரிழப்புகள்தான் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலக நாடுகள் நேரடியாக மற்றும் மறைமுகமாக பங்கேற்றிருக்கும் இந்த போர்ச்சூழல் உலக பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்? பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க, அமெரிக்காவால் முடியாத பட்சத்தில் கத்தாரின் உதவியை நாடியிருக்கிறது இஸ்ரேல். அமெரிக்காவைவிட வலிமைமிக்கதா கத்தார்? இந்த போரில் ரஷ்யா மற்றும் சீனாவின் திட்டம் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது குறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

ஹமாஸை அழிக்கும் திட்டத்தில் அழிக்கப்படும் காஸா பொதுமக்கள்

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நோக்கில் இறங்கியிருக்கிற இஸ்ரேல் வான், கடல் மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் அமைப்பினர் காஸாவின் வடக்குப் பகுதியில் பதுங்கியிருப்பதாகவும், எனவே அங்கு தாக்குதல் நடத்தப்போவதாகவும் அறிவித்த இஸ்ரேல், பொதுமக்களை தெற்குப் பகுதியில் தஞ்சமடைய வலியுறுத்தியது. அதற்காக ஓரிரு நாட்கள் கால அவகாசமும் கொடுத்தது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகக் கூறி, சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதில் கிட்டத்தட்ட 60 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஒரு மாதக்கால போரில் 9,700 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 4000 பேர் குழந்தைகள் எனவும் தெரிவித்திருக்கிறது பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்.


ஹமாஸ் படையினர் மற்றும் பாதிக்கப்பட்ட காஸா பொதுமக்கள்

ஐ.நா மற்றும் பல உலக நாடுகளின் கண்டனத்திற்கு பிறகு, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை தெற்குப்பகுதிக்கு அனுப்பும் வரை வடக்கு காஸா மீதான தாக்குதல்களை கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் இஸ்ரேல் ராணுவ தூதுவர். இருப்பினும் ஹமாஸ் அமைப்பினரைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து இஸ்ரேல் ராணுவம் அழிக்கும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இஸ்ரேலின் நோக்கம் ஹமாஸ் பக்கம் இருக்க பிற உலக நாடுகள் இந்தப் போரை எப்படி தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, இந்தப் போரில் காஸாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிவருகிறது. அதேபோல, இஸ்லாமிய நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை காஸாவுக்கு ஆதரவு அளிக்கின்றன. ஆனால் இதுபோன்று நாடுகள் மாறி மாறி ஆதரவு அளிப்பது உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


போரால் உலக பொருளாதாரம் பாதிப்படையும் அச்சம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் உலக பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் - ரஷ்யா போரால் உலக பொருளாதாரம் மோசமடைந்திருக்கிறது. அதிலிருந்து சற்று மீண்டுவர முயற்சித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இஸ்ரேல் போரானது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடந்த இஸ்ரேல் - அரேபிய போரால் ஏற்பட்ட எண்ணெய் தடை போல இந்தப் போர் இருக்காது என நம்புகின்றன உலக நாடுகள். மேலும் முக்கிய உலக நாடுகளின்மீது அமெரிக்கா தனது செல்வாக்கைக் கொண்டுள்ளது. இருப்பினும், அரபு நாடுகள் ஒன்றுசேர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், பாலஸ்தீன தரப்பில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்தால் நிலைமை மோசமாகக்கூடும். இதனால் அரபு நாடுகள் ஒன்றுசேர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் தீர்மானத்தை எடுத்தால் அதில் பாதிக்கப்படுவது இந்தியா உட்பட மேற்கு நாடுகளுக்கு வெளியே உள்ள நாடுகளும்தான் என்பது சற்று கவலையளிக்கிறது.


கத்தார் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இப்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது ஈரான். லெபனான் மற்றும் சிரியாவில் ஈரானின் போராளிக் குழுக்களின் ஈடுபாடு சற்று அதிகம். அப்படியிருக்கும் பட்சத்தில், இஸ்ரேலும் ஈரானுக்கும் இடையே ஒரு நேரடி மோதல் உருவானால் உலகளவில் கச்சா உற்பத்தி திறன் அதிகமுள்ள சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஈரான் பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம். இதனால் உலக பொருளாதாரத்தில் கணிக்கமுடியாத அடி விழும் வாய்ப்புகளும் அதிகம். அல்லது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் பட்சத்தில் உலக பண வீக்கம் கணிசமாக அதிகரிக்கும். இதனால் உலக வளர்ச்சி சதவீதம் 2 சதவீத புள்ளிகளாகக் குறையக்கூடும் என்கின்றன ஆய்வறிக்கைகள். இந்த போர் தீவிரமானால் சீன வளர்ச்சியின் மந்த நிலை மற்றும் உக்ரைன் போர் போன்றவற்றின் தாக்களும் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்காவைவிட வலிமைமிக்கதா கத்தார்?

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இந்த போரில் உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான கத்தார் முக்கியப்புள்ளியாக மாறியிருக்கிறது. பெட்ரோல் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடான கத்தாரின் பேச்சுவார்த்தையால்தான் ஹமாஸால் பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இதற்காக இஸ்ரேல் உட்பட பல உலக நாடுகள் கத்தாரை பாராட்டியிருந்தன. ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பலர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். இவர்களை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருக்கிறது கத்தார். ஆனால் காஸா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்கிறது. ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் அறிவித்தபோதும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸின் அரசியல் பிரிவுக்கு கத்தார் ஆதரவு அளிப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைக்கின்றன பல உலக நாடுகள்.


போரால் நிலைகுலைந்துள்ள இஸ்ரேல் மற்றும் காஸா நகரங்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட போரால் பல உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இரு நாடுகளிடையே சமரச பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஒரு மத்தியஸ்தர் தேவை என்பதில் ஆச்சரியம் இல்லை. 2012ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் அரசியல் பிரிவு அலுவலகம் கத்தாரில் அமைந்திருக்கிறது. மேலும் காஸா மக்களின் முன்னேற்றம் மற்றும் சேவைகளுக்காக மில்லியன்க்கணக்கில் செலவிடுகிறது கத்தார். மேலும் கத்தாரின் பல அதிகாரிகள் ஹமாஸின் மூத்த தலைவர்களுடன் பழக்கத்தில் இருக்கிறார்கள். பிற நாடுகளைவிட இஸ்ரேலுடன் கத்தாரின் உறவானது முறையாக இல்லாவிட்டாலும், ஹமாஸ் விவகாரத்தில் சுமுகமான உரையாடல்களே இருப்பதாக தெரிவிக்கின்றன தரவுகள். எனவே பணையக்கைதிகளை விடுவிக்கும் பேச்சு வார்த்தையில் வெற்றிபெறும் வாய்ப்பானது அமெரிக்காவைவிட கத்தாருக்குத்தான் அதிகம் என நம்புகின்றன உலக நாடுகள்.

போர் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் இஸ்ரேலில் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் காஸாவுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். உலக அமைதியை கருத்தில்கொண்டு உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன ஐக்கிய நாடுகள். ஆனால் தங்களின் இழப்புக்கு ஈடுகட்டும் வரையில் ஓயமாட்டோம் என உறுதியாக தெரிவித்துவிட்டது இஸ்ரேல். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உலக நாடுகள் மாறி மாறி ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் இருநாடுகளின் சண்டை உலக நாடுகளின் சண்டையாகக் கூட மாறும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் நிபுணர்கள். அப்படி நாடுகள் அணிகளாக பிரியும் நிலை ஏற்பட்டால்,கட்டாயம் மூன்றாம் உலகப் போர் உருவாகலாம் என்பதில் சந்தேகமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்