ஆவின் பாலில் கொழுப்பு சத்தை குறைத்த பிறகும் விலையை குறைக்காதது ஏன்? - அதிருப்தியில் மக்கள்?

பாலில் சேர்க்கப்படும் கொழுப்பு சத்தின் அளவை குறைத்தும் விலையைக் குறைக்காதது ஏன்? என பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவுக்கான காரணம் என்ன? இதனால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள்?

Update:2023-11-28 00:00 IST
Click the Play button to listen to article

தமிழகத்தில் நவம்பர் 25ஆம் தேதிமுதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு. மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டே பச்சை நிற பாக்கெட் விநியோகத்தை நிறுத்தியதாகவும், அதற்கு பதிலாக ‘ஆவின் டிலைட்’ பாலை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருக்கிறார். ஆனால் பாலில் சேர்க்கப்படும் கொழுப்புச்சத்தின் அளவை குறைத்தும் விலையைக் குறைக்காதது ஏன்? என பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவுக்கான காரணம் என்ன? இதனால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள்? மேலும் தனியார் பால் நிறுவனங்கள் இதனை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும்? என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்... பார்க்கலாம்.

ஆவின் நிறுவனம் - தரம் குறைந்ததா?

1981ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தால் தொடங்கப்பட்டு இன்றுவரை இயங்கி வருகிறது ஆவின் நிறுவனம். இந்நிறுவனம், பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் பால் பொருட்கள் விற்பனை போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின்கீழ் பால், தயிர், வெண்ணெய், ஐஸ்க்ரீம், மில்க்‌ஷேக், பால்கோவா உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஆவின் பூத்களை நம்மால் காண முடியும். பிற பால் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஆவின் நிறுவனத்தால் விற்கப்படும் பால் பாக்கெட்டுகளின் விலை குறைவு. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.


ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோகம்

அரசு நிர்ணயித்திருக்கும் தரம் மற்றும் அளவுகளின் அடிப்படையில் ஆவின் பால் தயாரிக்கப்பட்டாலும் அதில் முறைகேடுகள் நடைபெறுவது அவ்வப்போது குற்றமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆவின் பால் பாக்கெட்டுகளை திருடி அதில் நீர் கலத்தல், சரியாக பேக் செய்யப்படாததால் பால் லீக்காகி வீணாதல் போன்ற குற்றச்சாட்டுகள் வாடிக்கையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க அவ்வப்போது பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றமும் பிரச்சினையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆவினை பொருத்தவரை, நைஸ், கிரீன் மேஜிக், டயட் மற்றும் பிரீமியம் என 4 வகையான பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டுவந்த பச்சை நிற பாக்கெட்டை நிறுத்தியிருக்கிறது ஆவின் நிறுவனம்.

பச்சை நிற பாக்கெட்

4.5% கொழுப்புச்சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பால்தான் பச்சை நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை லிட்டருக்கு ரூ. 44. பொதுவாக பசும்பாலில் 3.3 % முதல் 4.3% வரை கொழுப்பு சத்தும், 8.5% இதர சத்துக்களும் அடங்கியிருக்கும். இதில் 1% கொழுப்பு சத்தை செறிவூட்டி, பச்சை நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வந்தது ஆவின் நிறுவனம். இந்த பாலில் சேர்க்கும் கொழுப்பை தயாரிக்க, வெளி மாநிலங்களிலிருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை வாங்குவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.


நிறுத்தப்பட்ட ஆவின் கிரீன் மேஜிக்

இதனால் 1% கொழுப்பு சத்து குறைவாக, வைட்டமின் டி மற்றும் ஏ ஆகியவற்றை தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி செறிவூட்டி, ஆனால் அதே விலையில் ‘ஆவின் டிலைட்’ என்ற ஊதா நிற பாக்கெட் விற்பனைக்கு வந்திருக்கிறது. பால் விலையை பொருத்தவரை ஆவின் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் பிற நிறுவனங்களின் விலை மிகவும் அதிகம். அதனால் இந்த பாலை தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்கும் நடுத்தர மக்கள் கொழுப்பு சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டே கொழுப்பு சத்தை குறைத்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது.

பச்சை நிற பாக்கெட்டுகளை நிறுத்தியது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுவது என்ன?

“விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை அவர்களிடமிருந்து நியாயமான விலை கொடுத்து வாங்குவதையும், தரமான பாலை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அப்படி தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து வாங்கும் பாலில் சராசரியாக 3 முதல் 4 சதவீதம் கொழுப்பும், 8 சதவீத அளவிற்கு புரதம் உள்ளிட்ட பிற சத்துக்களும் அடங்கியிருக்கும். அதனை கருத்தில்கொண்டே 3.5% கொழுப்பும், 8.5% பிற சத்துகளும் கொண்ட ஆவின் டிலைட் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நிறையப்பேருக்கு வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் ஏ குறைபாடு இருப்பதால் இவை இரண்டையும் அந்த பாலில் செறிவூட்டி வழங்குகிறோம். சராசரி மனிதனுக்கு இந்த சத்துக்கள் போதுமானது என்பதை மருத்துவர்களிடம் ஆலோசித்தே இந்த டிலைட் பாலை முன்னிலைப்படுத்துகிறோம். இதன் விற்பனையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.


பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு பதிலாக நீல நிற பாக்கெட் மாற்றம் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ்

அதேபோல் கொழுப்பு சத்து குறைவாக தேவைப்படுபவர்களுக்கு நீலநிற பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது. கொழுப்பு சத்து அதிகம் தேவைப்படுபவர்களுக்கு ப்ரீமியம் என்ற பெயரில் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தாண்டி பச்சை நிற பால் பாக்கெட்டுகளில் 1% கொழுப்பு சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வந்ததை, உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு நிறுத்தி இருக்கிறோம். டிலைட் பால் விலையுடன் ஒப்பிடுகையில் இதை போன்றே செறிவூட்டப்பட்ட பிற தனியார் பால் பாக்கெட்டுகளின் விலை இன்றைய சந்தையில் 12 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை அதிகமாக விற்கப்படுகின்றன. டிலைட் பால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டதால் அப்போதே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது. பச்சை பாலை நிறுத்தியதால் இந்த விலையை நிர்ணயிக்கவில்லை” என்றார்.

ஆவின் கொள்முதல் குறைந்துவிட்டதா?

தமிழகத்தை பொருத்தவரை ஆவின் பால் விற்பனையானது ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டருக்குமேல் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதன் கொள்முதல் அளவோ வழக்கத்தைவிட குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. மேலும் இதே நிலை தொடர்ந்தால் ஆவின் நிறுவனத்தை மூடவேண்டிய சூழல் ஏற்படலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது. குறிப்பாக வருவாய் இழப்பால்தான் மக்களின் விருப்பமான பச்சை நிற பாக்கெட்டுகளின் விநியோகத்தை அரசு நிறுத்தியிருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்குகையில், “ஆண்டாண்டு காலமாக தாங்கள் கொடுக்கும் பாலுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனை திமுக அரசு தற்போது நிறைவேற்றி இருக்கிறது. அவர்களுக்கான உரிய தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பால் நிலுவைத் தொகை என்ற பிரச்சினை இல்லை. பாலை கையாளுதலில் எங்கு இழப்பு ஏற்படுகிறது? தமிழ்நாடு முழுவதும் பால் விநியோகம் வெகு விரைவாக நடைபெறுகிறது. மார்க்கெட்டுகளில் இருந்தும் நல்லவிதமான கருத்துகளே கிடைக்கின்றன. நிர்வாக ரீதியான சீர்திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. வடநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே ஆவின் குறித்து தவறான கருத்துகளை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. விவசாயிகளுக்கு போனஸ் மற்றும் இன்சென்டிவ் வழங்குவதையே நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை நம்பகத்தன்மையோடு கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.


ஆவின் பால் உற்பத்தி குறித்து அண்ணாமலை கருத்து

பால் விலையை குறைக்கும் தனியார் நிறுவனங்கள்?

என்னதான் அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் பாலின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்து மாறி மாறி கருத்து தெரிவித்து வந்தாலும், வாடிக்கையாளர்களான பொதுமக்கள் அவர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ற விலையிலுள்ள பாலையே வாங்குகின்றனர். இந்த நிலை பாலிற்கு மட்டுமல்ல; அனைத்துப் பொருட்களுக்குமே பொருந்தும். பெரும்பான்மையான மக்களின் இந்த மனநிலையை நன்கு புரிந்து வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் மார்க்கெட்டை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன. பச்சை நிற பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் நிறுத்தியதால், 4.5% கொழுப்பு சத்து கொண்ட பால் மற்றும் தயிரின் விலையை குறைத்திருக்கின்றன தனியார் நிறுவனங்கள். மேலும் அண்டை மாநிலங்களிலுள்ள பல முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை குறைக்கலாம் என எச்சரிக்கிறது பால் முகவர்கள் சங்கம். தொடர்ந்து ஆவினுக்கு இணையாக தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை குறைத்தால் மக்கள் தனியார் பக்கம் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் ஆவின் நிறுவனத்தின் பால் விநியோகமானது கணிசமாக குறையவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கிறது பால் முகவர்கள் சங்கம்.

Tags:    

மேலும் செய்திகள்