இந்தியாவின் முதல் பெண் கடல் விமானியாக உச்சம் தொட்ட தமிழச்சி!
உலக அளவில் பெண் கடல் விமானிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது
ஆண்களுக்கு சமமாக பெண்களும் ஏராளமான துறைகளில் மிகமுக்கிய பங்காற்றி வருகின்றனர். அந்த வகையில் கடல் விமானத் துறையிலும் பெண்கள் கால்பதிக்க தொடங்கிவிட்டனர் என்பதற்கு முதற்புள்ளியாக கடல் விமானத் தலைமை பொறுப்பில் இடம்பிடித்து தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார் ரேஷ்மா நிலோபர் விசாலாட்சி. யார் இந்த ரேஷ்மா? அவரைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
இந்தியாவின் முதல் பெண் மாலுமி
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் மாலுமி (கடல் விமானி) என்று அழைக்கப்பட்டு வருகிறார் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர் விசாலாட்சி இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பெண் கடல் விமானிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்த விதத்தில் இந்தியாவில் ஒரே ஒரு பெண் மாலுமியாக இன்றுவரையில் தனது பணியை சிறப்பாக செய்து வரும் ரேஷ்மா, தற்போது கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகத்திற்கு ஹுக்ளி நதி முகத்துவாரம் வழியாக கப்பல்களை வழிநடத்துவதில் ஈடுபட்டு வருகிறார்.
1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ரேஷ்மா, சிறுவயதிலேயே படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர. தனது பள்ளிப்படிப்பை அண்ணா நகர் எஸ்பிஓஏ பள்ளியில் படித்துள்ளார். ரேஷ்மாவின் குடும்பத்தினரும் அவரது விருப்பத்திற்கு ஒத்துழைத்ததால் பிர்லா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்த சென்னை கானத்தூரை சேர்ந்த அமெட் பல்கலைக்கழகத்தில் கடல் தொழில்நுட்ப பொறியியல் பிரிவில் தனது படிப்பை முடித்தார். இயல்பாகவே மற்றவர்களைப் போன்று இல்லாமல் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்த ரேஷ்மா, 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா துறைமுகத்தில் பணியில் சேர்ந்தார். அதிலிருந்து கடற்படை மாணவியாக ஒரு வருடப் பயிற்சிக்குப் பின்னர் முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்ச்சி சான்றிதழை பெற்றுள்ளார்.
கப்பலில் ரேஷ்மா நிலோபர் விசாலாட்சி
‘நாரி சக்தி புரஸ்கார் விருது’
அடுத்ததாக கொல்கத்தா துறைமுகம் நடத்திய மூன்றாம் தர தேர்வில் தேர்ச்சி பெற்று ஆறு மாதத்தில் கடல் விமானியாக பணியில் அமர்ந்தார். தனது பயிற்சி நேரங்களில் சிறிய கப்பல்களை ஓட்டி அனுபவம் பெற்று தரம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ள பெரிய கப்பல்களை வழி நடத்தத் தொடங்கினார். இக்கப்பல்களின் எடை 7000 டன். அதன் நீளம் 300 மீட்டர். 2018 ஆம் ஆண்டு தேர்ந்த கடல் விமானியாக உருவான ரேஷ்மா, தொடர்ந்து தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக சிறந்த கடல் விமானிகளின் பட்டியலில் ஒருவராகவும் இடம்பிடித்தார். 2019ஆம் ஆண்டு ரேஷ்மாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குடியரசு தலைவரிடம் விருது பெற்ற போது
ரேஷ்மா பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி
தொழிற்துறையின் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் தங்கள் வாழ்வில் கடல் பகுதி சார்ந்த துறைகளில் முன்னேருவதற்காகவும், போர்ட் அறைகளில் நுழைந்து தலைமை, நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் பாத்திரங்களை ஏற்று செயலாற்ற அவர்களுக்கான திறன்-வளர்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் கடல் துறையில் 50% பெண்களை, போர்டு ரூம்களிலும் தலைமைப் பொறுப்புகளிலும் நியமிக்க வேண்டும் - கடல் துறையில் ஆண்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பெண்கள் தங்களின் சக்தியை உணர வேண்டும். உலகம் நம்மை பின்னோக்கி தள்ள ஆயிரம் சொல்லிக் கொண்டேதான் இருக்கும். அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் நீங்கள் விரும்பும் தொழிலில் பல மைல்களையும் அடைய வேண்டும் என்று தன்னம்பிக்கை மிளிர கூறுகிறார் ரேஷ்மா.
மாலுமியாக நிலோபர்