பிசிஓடி இருப்பவர்கள் இப்படி செய்தால் எளிதில் எடை குறைக்கலாம் - சித்த மருத்துவர் விளக்கம்

பொதுவாக சினைப்பையில் ஏற்படக்கூடிய நீர்க்கட்டிகள் என்கின்றனர். இதனை எளிமையாக விளக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் உருவாகிற கருமுட்டைகள் அந்தந்த மாதவிடாய் காலங்களில் வெளியேறாமல் உள்ளேயே தேங்கிவிடுவதால்தான் நீர்க்கட்டி உருவாகிறது.

Update:2024-01-16 00:00 IST
Click the Play button to listen to article

இன்றைய பெண்களில் பத்தில் ஒருவருக்கு பிசிஓடி பிரச்சினை இருக்கிறது. பிசிஓடியும் பிசிஓஎஸும் ஒன்றா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினை இருப்பவர்களில் ஒரு தரப்பினர் மெலிந்துகொண்டே செல்கின்றனர் மற்றொரு தரப்பினருக்கோ உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. இதுகுறித்து விரிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் யோக வித்யா.

நீர்க்கட்டி எதனால் உருவாகிறது?

பிசிஓஎஸ் என்றால் Polycystic ovary syndrome என்று அர்த்தம். பிசிஓடி என்றால் Polycystic Ovarian Disease என்று பொருள்படுகிறது. சிண்ட்ரோம் இருக்கும் பெண்களுக்கு ஆண்மை ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பதால் முகப்பரு, முடி கொட்டுதல், கழுத்தை சுற்றி கருமை படிதல், முகத்தில் முடி அதிகரித்தல், உடல் எடை கூடுதல் அல்லது குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுவே நாள்பட்ட பிரச்சினையாக மாறும்போது டிசீஸாக உருவாகிறது. இதனை வெளிநாடுகளில் பிகாட்(PCOD), பிகாஸ் (PCOS) என்று சொல்கின்றனர். இதுபற்றி ஏற்கனவே நிறையப்பேருக்கு தெரிந்திருக்கும். இதனை பொதுவாக சினைப்பையில் ஏற்படக்கூடிய நீர்க்கட்டிகள் என்கின்றனர். இதனை எளிமையாக விளக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் உருவாகிற கருமுட்டைகள் அந்தந்த மாதவிடாய் காலங்களில் வெளியேறாமல் உள்ளேயே தேங்கிவிடுவதால்தான் நீர்க்கட்டி உருவாகிறது.


கருமுட்டைகள் உள்ளேயே தேங்கி நீர்க்கட்டிகள் உருவாதல்

சித்த மருத்துவத்தை பொருத்தவரை ‘கழிவுகளே நோய்’ என சொல்லப்படுகிறது. எனவே உடலை சுத்தப்படுத்துவது அவசியம் என சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது. சரி பிசிஓடி பிரச்சினைக்கு வருவோம். மாதந்தோறும் உருவாகும் முட்டைகள் அந்தந்த மாதவிடாய் காலங்களில் ஏன் வெளியேறுவதில்லை என்று பார்த்தோமானால், அதற்கு முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறையே காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இப்போது பெண்களும் ஆண்களுக்கு இணையாக நைட் ஷிஃப்ட்களில் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் உடலின் சுழற்சி முறை மாறுபடுகிறது. நீர்க்கட்டியும் உருவாகிறது. இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், அழகு ரீதியாகவும் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் பங்கு

ஒல்லியாக இருக்கும் நிறையப்பேருக்குக்கூட இப்போது பிசிஓடி பிரச்சினைகள் இருக்கின்றன. ஆரோக்கியமான ஒரு பெண்ணுக்கு முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு அதிகமாகவும், அடுத்த 14 நாட்களுக்கு புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பும் அதிகமாக இருக்கும். அதுவே நீர்க்கட்டிகள் கருப்பையில் இருக்கும்போது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பானது மாதம் முழுவதும் அதிகமாக இருக்கும். இது மூளையில் லுடினைசிங் ஹார்மோன் (luteinizing hormone) சுரப்பை தூண்டும். இந்த ஹார்மோனானது கணையத்திலிருந்து சுரக்கும் அனைத்து ஹார்மோன்களையும் எடுத்து டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஆண்மை ஹார்மோனை உருவாக்குகிறது. அதாவது LH + இன்சுலின்தான் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனாக உருவாகிறது. இன்சுலின் இப்படி போய்விடுவதால் நாம் சாப்பிடும் சர்க்கரை எனர்ஜியாக மாற்றப்படாமல் கொழுப்பாக உடலில் சேர்கிறது. இந்நிலையில் இன்சுலின் சுரப்பு மாத்திரைகளை உட்கொண்டால் அதுவும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் எண்ணிக்கையைத்தான் அதிகரித்து எடையையும் கூட்டும்.


டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பால் வரும் முகப்பரு போன்ற பிரச்சினைகள் 

நீரிழிவு நோய்க்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கணையம் போதுமான இன்சுலினை சுரக்காதது. மற்றொன்று அப்படியே இன்சுலின் சுரந்தாலும் அதனை உடல் முறையாக பயன்படுத்திக் கொள்ளாதது. உதாரணத்திற்கு நிறைய டயட் முறைகளில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது இன்சுலின் சுரப்புக்கு முக்கிய காரணமாகிறது. ஒரு அளவிற்குத்தான் உடலுக்கு ஆற்றல் தேவைப்படும். அதற்குமேல் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ளும்போது 120 கிராம் வரை கல்லீரல் அதனை கிளைகோஜெனாக மாற்றி வைத்துக்கொள்ளும். சாப்பிடாத சமயங்களில் அதனை குளுக்கோஸாக மாற்றி உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். ஆனால் அதற்கும் அதிகமாக அரிசி உணவை சாப்பிடும்போது அது இன்சுலின் சுரப்பை அதிகரித்து கொழுப்பாக மாற்றுகிறது. இதனால் எடை அதிகரிக்கிறது.

எப்படி எடை குறைப்பை எளிதாக்கலாம்?

உடலில் இருக்கக்கூடிய நீர்க்கட்டிகளை கரைத்து வெளியேற்றுதல் மற்றும் கல்லீரலின் இயக்கத்தை மேம்படுத்துதல் இரண்டையும் கருத்தில்கொண்டு செயல்பட்டால் எளிதில் எடை குறையும். முதலில் குடலை சுத்தல்செய்தல் அவசியம். 3 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக உடலில் தேங்கிய ஹார்மோன் உட்பட அனைத்து அழுக்குகளுமே வெளியேறும். இந்த கழிவுகள் உடலிலேயே தங்கும்போது நோய்கள் உருவாகின்றன. தவிர கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, கீழாநெல்லி உருண்டையை நெல்லிக்காய் அளவிற்கு எடுத்து 48 நாட்களுக்கு தினமும் காலை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். கீழாநெல்லி கிடைக்காதவர்கள் மஞ்சள் பூ பூக்கக்கூடிய கரிசாலை இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவிற்கு வாயில்போட்டு மோர் குடித்துவரலாம்.


கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கீழாநெல்லி மற்றும் கரிசாலை

உடல் சுத்தம் அவசியம்

சரியாக மலம் கழிக்காவிட்டாலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதற்கு நிலவாரை அல்லது பொன்னாவாரை மாத்திரையையோ அல்லது சூரணத்தையோ சுடுதண்ணீரில் கரைத்து இரவு குடித்துவர வேண்டும். இப்படி செய்வதால் அடுத்த நாள் காலை கழிவுகள் எளிதாக வெளியேறுவதுடன், உடலில் காற்றும் அதிகளவில் தங்காது. இதனால் நீர்க்கட்டிகள் உருவாகாது.

மாதவிடாய் பிரச்சினை இருப்பவர்கள் மலை வேம்பாதி தைலத்தை மாதவிடாய் காலங்களில் காலை நேரங்களில் இரண்டு டேபிள் ஸ்பூன் நீராகாரத்தில் கலந்து குடித்து வரலாம். இதனால் கர்ப்பப்பை சுத்தமாகும். இல்லாவிட்டால் பெருங்காயம், பூண்டு, கருப்பட்டி மூன்றையும் சம அளவு எடுத்து மாதவிடாய் காலங்களில் காலையில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் கர்ப்பப்பை சுத்தமாகும். நீர்க்கட்டிகளும் வெளியேறும்.


வாதம் - பித்தம் - கபம் என்ன என்பதற்கான எளிய பட விளக்கம்

எடை குறைப்புக்கு மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூன்றுமே சரியாக வெளியேறுதல் அவசியம். வாதம், பித்தம், கபம் மூன்றையும் எடுத்துக்கொண்டால் வாதம்(காற்று) மலம் வழியாக வெளியேறி விடும். பித்தமானது வாந்தி அல்லது சிறுநீர் வழியாக வெளியேறும். ஆனால் வியர்த்தால் மட்டுமே கபநீர் வெளியேறும். அதற்கு உடல் உழைப்பு அவசியம். கூடவே வெள்ளரிக்காய், சுரக்காய், பீர்க்கங்காய், வெண் பூசணி போன்றவற்றை எடுத்துக்கொண்டால் எடை குறைப்பு கண்கூடாக தெரியும். அதேபோல் இரவு உணவை மாலை 6 அல்லது 7 மணிக்குள் முடித்து விடுவது நல்லது. இதனால் எடை குறைப்பு எளிதாக நடக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்