இவற்றை தெரிந்துகொள்ளாமல் IVF சிகிச்சைக்கு செல்லாதீர்கள் - விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர்

மாதவிடாய் ரத்தமானது வெளியே வராமல் கருக்குழாய் மூலமாக திரும்ப உள்ளே சென்று ஓவரி அருகே ரத்தக்கட்டியாக உருவாகிவிடும். இந்த பிரச்சினையைத்தான் எண்டோமெட்ரியோசிஸ் என்று சொல்கின்றனர். எல்லாருக்குமே உதிரப்போக்கானது வெளியேறும்போது ஒருசிலருக்கு அது ஏன் உள்ளே சென்று ரத்தக்கட்டியாக உருவாகிறது என்பதற்கான காரணம் மருத்துவர்களுக்கே தெரிவதில்லை.

Update:2024-12-31 00:00 IST
Click the Play button to listen to article

இளம்வயதினரோ அல்லது 30 வயதை கடந்தவர்களோ யாராக இருந்தாலும் கருத்தரித்தல் என்பது அவர்கள் திட்டமிட்ட சமயத்தில் நடக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காதபோது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதுண்டு. உடனே நேரடியாக IVF சிகிச்சை மேற்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் IVF சிகிச்சை முறையை எப்போது யாரெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்து மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதுகுறித்து யோசிக்கக்கூடாது. IVF கருத்தரித்தலும் இயற்கை கருத்தரிப்பை போன்றதுதான் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மனு லட்சுமி. IVF சிகிச்சையிலிருக்கும் வழிகள் மற்றும் சவால்கள் குறித்து அவர் நம்முடன் உரையாடுகிறார். 

IVF சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பது எதனால்?

அப்படி கிடையாது. ஆனால் எந்த காரணத்திற்காக IVF சிகிச்சை மேற்கொள்கிறோம் என்பதை பொருத்து இருக்கிறது. கர்ப்பப்பையில் கட்டி இருந்தாலோ, ஏற்கனவே அறுவைசிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ அல்லது பிற காரணங்களாலோ சிகிச்சை மேற்கொள்ளலாம். இதுபோன்றோர் கருத்தரித்த பிறகு அவர்களுடைய உடலில் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளை பொருத்து, அதற்கேற்றபடி ஓய்வு, மருந்து, ஊசிகள் போன்றவை தேவைப்படுமே தவிர, IVF சிகிச்சை மேற்கொண்ட அனைவருமே கட்டாயம் பெட் ரெஸ்ட்டில் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உதாரணத்திற்கு, ஒரு பெண்ணின் கணவருடைய விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்து அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் IVF மேற்கொண்டிருந்தால் அந்த பெண்ணுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்காது. எப்போதும்போல எல்லா வேலைகளும் செய்யலாம், வேலைக்கும் செல்லலாம். அவர்களுக்கு கருத்தரித்தலில்தான் பிரச்சினையே தவிர கருவை சுமப்பதில் இல்லை. அதேபோல் IVF-இல் நார்மல் டெலிவரி ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. கட்டாயம் சி-செக்‌ஷன் செய்யவேண்டுமென்று அவசியமில்லை. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே சில அறுவைசிகிச்சை செய்தவர்கள் போன்றோர்தான் பெரும்பாலும் IVF சிகிச்சை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு சிசேரியனும் தேவைப்படும்.

IVF சிகிச்சை மேற்கொண்டாலும் சுக பிரசவம் ஆகுமென்று சொல்கிறீர்கள். அதற்கு எதில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டும்?

IVF சிகிச்சை என்பது கர்ப்பந்தரிக்கத்தானே தவிர, அதன்பிறகு, அதுவும் ஒரு கர்ப்பம்தான். கருத்தரித்தபிறகு, அவர்களுடைய வயது, முன்பிருந்த பிரச்சினைகள் என்னென்ன, ஒரு குழந்தையா அல்லது இரட்டைகுழந்தையா? ஏதேனும் மருத்துவரீதியான பிரச்சினைகள் இருக்கிறதா? பிபி, சுகர் பிரச்சினைகள் இருக்கிறதா? என்பது போன்ற விவரங்களின் அடிப்படையில்தான் ஒருவருடைய கர்ப்பகாலம் எப்படியிருக்கும் என்பதை தீர்மானிக்கமுடியும். எந்த பிரச்சினையும் இல்லையென்றால் சாதாரண கருத்தரிப்பை போன்றே முதல் 3 மாதங்களுக்கு கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும். அதன்பிறகு, வாக்கிங், யோகா, உடற்பயிற்சி மற்றும் பிற பிஸிக்கல் ஆக்ட்டிவிட்டிஸை தொடங்கலாம். அதுவே இயற்கையாகவே கருத்தரித்திருந்தாலும், IVF மூலம் கருத்தரித்திருந்தாலும் ஏற்கனவே உடலில் பிரச்சினைகள் இருந்தால், ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்பாடுகள் இருக்கும்.


IVF சிகிச்சை மேற்கொள்வதற்கான காரணங்களும் கட்டுப்பாடுகளும்

ஒரு பெண் எந்த வயதுவரை கருத்தரிக்கலாம்?

கர்ப்பகாலம் சுலபமாக இருக்கவேண்டும் என்றால் 20 முதல் 30 வயதிற்குள் கருத்தரிக்கவேண்டும். 30 வயதை தாண்டியபிறகு கருமுட்டையின் தரம் மற்றும் ஜெனிட்டிக் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகும். 40 வயதிற்கு மேல் இயற்கை கருத்தரித்தல் என்பது சற்று கடினம்தான். 45வயதிற்கு பிறகு மெனோபாஸ் நிலையை அடைந்துவிடுவார்கள் என்பதால் கருத்தரித்தல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை. சிகிச்சைகள்மூலம்கூட 50 வயதிற்கும் மேல் கருத்தரிப்பது நல்லதல்ல. அதற்கும்மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த குழந்தைக்கு சமூகரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். எனவே மருத்துவர்களும் அதுபோன்று குழந்தைபெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதில்லை.

50 வயதுக்கு மேல் IVF சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

கர்ப்பத்தை தாங்கும் சக்தி உடலுக்கு முதலில் இருக்கவேண்டும். கர்ப்பம் என்பது உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். ரத்தத்தின் அடர்த்தி, இதயத்துடிப்பு போன்றவை கிட்டத்தட்ட இருமடங்காகும். நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றின்மீது அழுத்தம் அதிகமாக இருக்கும். 9 மாதங்களுக்கு இந்த அழுத்தங்களை தாங்கும் அளவிற்கு உடல் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். அதேபோல் கர்ப்பகாலத்தில் பிபி, டயாபட்டீஸ் போன்றவை வரலாம். அதனால் கர்ப்பம் மற்றும் உடலின்மீதான அழுத்தம் இரண்டுமே சிரமத்திற்குள்ளாகும் என்பதால் இதுகுறித்து சிகிச்சைக்கு வருபவரிடம் கலந்தாலோசிக்கப்படும்.


கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகளால் கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள்

22 அல்லது 23 வயதில் திருமணமாகி இருந்தாலும் 2 வருடங்கள் குழந்தையில்லை என்றாலே IVF சிகிச்சைக்கு போகிறார்கள். அவர்களை எப்படி கையாளுவீர்கள்?

எந்தவிதமான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென்றாலும் அது மெடிக்கல் ரீதியாகத்தான் இருக்கவேண்டும். எடுத்தவுடன் IVF சிகிச்சை அளிக்கமுடியாது. பிரச்சினை என்னவென்று ஆராய்ந்து, அதன் அடிப்படையை கண்டறிந்து, அதை சரிசெய்ய முயற்சிக்கவேண்டும். அதுதவிர, வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? கருமுட்டையின் தரம் எப்படியிருக்கிறது? ஃபெலோபியன் குழாயில் அடைப்பு இருக்கிறதா? விந்தணுவின் தரம் எப்படியிருக்கிறது? போன்றவற்றை பரிசோதித்தபிறகுதான் IVF தேவையா என்பதை முடிவெடுக்கவேண்டும். அதற்கு முன்பும் வேறு சில எளிமையான சிகிச்சைகளை செய்துபார்க்கவேண்டும்.

ஃபெலோபியன் டியூபில் உருவாகும் அடைப்பால் என்னென்ன பிரச்சினைகள் வரும்?

கருக்குழாய் என்பது 10 செமீ நீளமுள்ள ஒரு பைப் போன்றது. கருமுட்டை உருவாகும் இடத்திற்கும் கருப்பைக்கும் இடையிலுள்ள பைப் அது. அதன்மூலம்தான் கருமுட்டையானது கர்ப்பப்பைக்குள் வந்து சேரும். சிறுவயதில் ஏற்பட்ட தொற்றுகளாலோ, குடல் மற்றும் கர்ப்பப்பை அருகே செய்த அறுவைசிகிச்சைகளாலோ கருக்குழாயில் அடைப்பு ஏற்படலாம். HSG பரிசோதனைமூலம் கருக்குழாய் அடைப்பை கண்டறியமுடியும் அல்லது லேப்ரோஸ்கோபி மூலமும் இதை கண்டறியலாம். கருக்குழாயில் அடைப்பு இருந்தால் இயற்கையாக கரு தங்குவதற்கு வாய்ப்பு குறைவு. இந்த மாதிரி சூழ்நிலையில் IVFதான் ஒரே தீர்வு. ஏனென்றால் கருக்குழாயின் விட்டமே 1 - 2 மி.மீ அளவுதான் இருக்குமென்பதால் அதில் இருக்கும் அடைப்பை நீக்குவது கடினம். இவர்களுக்கு நார்மல் டெலிவரி ஆவதற்கான வாய்ப்புகள் இல்லை.


கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவு

கர்ப்பப்பை இல்லாதவர்களுக்கு IVF மூலம் சிகிச்சையளிக்க முடியுமா?

கர்ப்பப்பை இல்லாதவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே வழி வாடகைத்தாய் முறைதான். கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சையானது ஒருசில இடங்களில் சாத்தியமானாலும் இன்னும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பப்பையை மாற்றிவைத்து, அதை உடல் ஏற்றுக்கொண்டு, அதில் கரு உருவாகி, அதை தாங்கக்கூடிய சக்தி அதற்கு இருக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன.

கருத்தரித்தவர்கள் ஆரம்பகட்டத்தில் என்னென்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? எவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டும்?

கருத்தரிக்கும் முன்பே உடல் எடையை நார்மலாக வைத்துக்கொள்ள வேண்டும், BMI கட்டுக்குள் இருக்கவேண்டும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று சொல்வதுண்டு. முதல் 3 மாதங்களுக்கு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாகவே பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகளில் ஃபோலிக் ஆசிட் இருக்குமென்பதால் அவற்றை அதிகம் சாப்பிடவேண்டும். மூன்றாம் மாதத்திலிருந்து ரெகுலர் உணவுடன் கட்டாயம் இரண்டுவகை பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடவேண்டும். ஜங்க் ஃபுட்ஸ், சாக்லெட்ஸ் மற்றும் ஸ்வீட்ஸ் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். இதனால் கர்ப்பகால டயாபட்டீஸை தவிர்க்கலாம்.

பப்பாளி, அன்னாசி மற்றும் சூடான பொருட்களை கர்ப்பகாலத்தில் தவிர்க்கவேண்டுமென்று சொல்கிறார்களே. அது உண்மையா?

எந்த உணவாக இருந்தாலும் அளவாக எடுத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை. அன்னாசி, பப்பாளி போன்றவற்றை கிலோக்கணக்கில் சாப்பிட்டால்தான் பிரச்சினை.


கருவுற்றிருக்கும் சமயத்தில் பப்பாளி பழம் சாப்பிடுவது குறித்த விளக்கம்

டெலிவரி சமயத்தில் எவற்றில் கவனமாக இருக்கவேண்டும்?

IVF அல்லது நார்மல் என எந்தவகை கர்ப்பமாக இருந்தாலும் குழந்தையின் அசைவுகளில் கவனம் செலுத்தவேண்டும். நார்மல் டெலிவரிக்கு முயற்சிப்பவர்கள், யோகா, உடற்பயிற்சி மற்றும் ஃபிசிக்கல் ஆக்ட்டிவிட்டி போன்றவற்றை முறையாக செய்யவேண்டும். கர்ப்பகாலத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்கத்தான் மருத்துவமனைக்கு வந்துபோகிறார்களே தவிர, அதை ஒரு வியாதியைப் போன்று பார்க்கக்கூடாது. முன்கூட்டியே கர்ப்பகால பிபி மற்றும் டயாபட்டீஸை கண்டறிந்தால் கடைசியில் சிரமப்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

டெலிவரிக்கு மருத்துவமனையில் அட்மிட் ஆனபிறகு குழந்தைபிறக்கும்வரை ஓரிரு மணிநேரங்களுக்கு தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்களே. அது ஏன்?

அப்படியெல்லாம் கிடையாது. பிரசவ வலி வரும் நேரத்தில் ஒருசிலருக்கு குமட்டல், வாந்தி உணர்வு வரும். அந்த நேரத்தில் இதுபோன்று இருந்தால் அசௌகர்யம் ஏற்படும் என்பதால் சிலசமயம் தண்ணீர் குடிக்கவேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் குடிக்கலாம். மேலும் சிசேரியன் செய்யவேண்டிய நிலை வந்தால் குறைந்தது 6 மணிநேரத்திற்கு வயிறு காலியாக இருக்கவேண்டும். அதுபோன்ற சமயங்களில் உணவை நிறுத்தி, நீராகாரங்களை குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சைமுறை குறித்து சொல்லுங்கள்!

மாதவிடாய் ரத்தமானது வெளியே வராமல் கருக்குழாய் மூலமாக திரும்ப உள்ளே சென்று ஓவரி அருகே ரத்தக்கட்டியாக உருவாகிவிடும். இந்த பிரச்சினையைத்தான் எண்டோமெட்ரியோசிஸ் என்று சொல்கின்றனர். எல்லாருக்குமே உதிரப்போக்கானது வெளியேறும்போது ஒருசிலருக்கு அது ஏன் உள்ளே சென்று ரத்தக்கட்டியாக உருவாகிறது என்பதற்கான காரணம் மருத்துவர்களுக்கே தெரிவதில்லை. அதிகப்படியான வலி மற்றும் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படும். மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள்மூலம் இதனை சரிசெய்ய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருசிலருக்கு கட்டி பெரிதாகும்போது அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படும். குழந்தைபெற்றுக்கொள்ள நினைத்தால் IVF செய்யவேண்டி இருக்கும்.


மாதவிடாய் சீரற்று வருவதால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

சீரற்ற மாதவிடாயால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும்?

ஹார்மோன் சமநிலையின்மையால் ஓவரியில் ஏற்படும் பிரச்சினையே சீரற்ற மாதவிடாய்க்கு காரணம். இதற்கு தைராய்டு, ப்ரோலாக்டின் ஹார்மோன், பிசிஓடி போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் எடையை குறைத்தல், உடற்பயிற்சி செய்தல் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. 5 முதல் 10 நாட்கள் முன்பின் வந்தால் பிரச்சினை இல்லை. அதுவே 2 அல்லது 3 மாதங்கள் வரவில்லை என்றால்தான் பரிசோதிக்கவேண்டும். இப்போது வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவற்றால் அவ்வப்போது நிறையப்பேருக்கு மாதவிடாய் சீரற்று வருகிறது.

திருமணமாகப்போகும் பெண்களுக்கும், திருமணத்தை தள்ளிப்போடுபவர்களுக்கும் உங்களுடைய அட்வைஸ் என்ன?

கர்ப்பத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். எப்போது உடலளவிலும் மனதளவிலும் ரெடியாக இருக்கிறோமோ அப்போது கர்ப்பத்தை திட்டமிட வேண்டும். திட்டமிடாத கருத்தரிப்பு, அதன்பிறகு கருக்கலைப்பு, அதற்கு வழி இல்லாமல் குழந்தையை பெற்றுக்கொள்வது போன்றவை கூடாது. திட்டமிட்டு கருத்தரிக்கும்போது உடலுக்கும் கர்ப்பப்பைக்கும் பிரச்சினை வராது.

Tags:    

மேலும் செய்திகள்