கக்குவான் இருமலுக்கு "முதலைக்கறி" சாப்பிடலாமா? - நுரையீரல் நிபுணர் விளக்கம்

இன்சோம்னியாவால் உடலில் எல்லா உறுப்புகளுக்கும் பிரச்சினை வரும் என்பதால் நுரையீரலுக்கும் கட்டாயம் பிரச்சினை வரும். இன்சோம்னியாவிற்கு மாத்திரை சாப்பிடவேண்டிய அவசியமில்லை. அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்தாலே போதும்.

Update:2025-01-07 00:00 IST
Click the Play button to listen to article

இன்றைய இளைஞர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்சினை என்றால் அது தூக்கமின்மை. தூக்கமின்மை உடலில் பல்வேறு வியாதிகளுக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக, இதயம், நுரையீரல் மற்றும் மூளை போன்ற பல முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளில் தூக்கம் முக்கியப்பங்கு வகிக்கும் என்பதால் தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்வது அவசியம் என்கிறார் நுரையீரல் நிபுணர் அவினாஷ். மேலும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நிமோனியா, பல்வேறு தொற்றுகள், ஈசனோபிலியா, ப்ராங்கைட்டிஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நம்முடன் உரையாடுகிறார்.

இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மைக்கும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

கொரோனா காலத்திற்கு பிறகு தூக்கத்தின் தரம் குறைந்துவிட்டது. தூக்கம் என்பதே நிறையப்பேருக்கு பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. தூக்கமின்மைக்கான மருந்துகளில் 1970களில் இருந்து தொடர்ந்து இன்றுவரை பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தூக்கம் சரியாக இல்லையென்றால் மனநிலை சரியாக இருக்காது, இதயம் சரிவர இயங்காது, நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக வேலைசெய்யாது போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே 6லிருந்து 8 மணிநேரம் முறையான தூக்கம் உடலுக்கு தேவை. இதற்கு sleep hygiene மிகவும் அவசியம். Sleep hygiene என்பது தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருப்பதுதான். அது எந்த நாளாக இருந்தாலும் சரி. தூங்கும் அறையில் டிவி, செல்போன் போன்ற ப்ளூ லைட் டிவைசஸையும் பார்க்கக்கூடாது. ஒரு மணிநேரத்திற்கு முன்பே அவை அனைத்தையும் எடுத்து வைத்துவிட வேண்டும். ஏனென்றால் அதிலிருக்கும் ப்ளூ லைட்ஸ் மூளையை ஒரு மணிநேரத்திற்கு விழிப்புடன் வைத்திருக்கும். அடுத்து சாப்பிடவுடன் படுப்பது கூடாது. ஏனென்றால் உணவு செரிமானமாகும்போது ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்றுப்பகுதிக்கு செல்வதால் மூளையால் தூங்கமுடியாது. எனவே தூங்குவதற்கு 2 - 3 மணிநேரங்களுக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். இரவு 10 மணிக்கு தூங்கச்செல்ல வேண்டுமென்றால் மாலை 4 மணிக்குமேல் டீ, காபி எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அடுத்து தூங்கும் அறை இருட்டாக இருக்கவேண்டும். உடலுக்கு பிடித்த வெப்பநிலையில் அறை இருக்கவேண்டும். தூங்கும் இடத்தை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. இதையெல்லாம் செய்தாலே இன்சோம்னியா பிரச்சினை போய்விடும். இன்சோம்னியாவால் உடலில் எல்லா உறுப்புகளுக்கும் பிரச்சினை வரும் என்பதால் நுரையீரலுக்கும் கட்டாயம் பிரச்சினை வரும். இன்சோம்னியாவிற்கு மாத்திரை சாப்பிடவேண்டிய அவசியமில்லை. அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்தாலே போதும்.


நிமோனியாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த உதவும் நிமோகாக்கல் தடுப்பூசி

நிமோனியா வராமல் தடுக்க நிரந்தர தீர்வு இருக்கிறதா?

தொற்றுகள், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் நிமோனியா வரலாம். எனவே எந்த காரணத்தால் இந்த பிரச்சினை வந்திருக்கிறது என்பதை பார்க்கவேண்டும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் நிமோனியாவானது பெரும்பாலும் இவர்களுக்கே அதிக பிரச்சினைகளை கொடுக்கிறது. எனவே இவர்கள் உடனடியாக சிகிச்சை எடுக்கவேண்டும் அல்லது முன்கூட்டியே Pneumococcal vaccine என்ற தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வருகிற கக்குவான் என்று சொல்லக்கூடிய தொடர் இருமலுக்கு முதலைக்கறி கொடுத்தால் சரியாகும் என்று சொல்கிறார்களே. அது உண்மையா?

ஆதாரங்கள் இல்லாமல் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. ஒரு மருந்தை கண்டுபிடிக்கும்போது வியாதி இருக்கும் 100 பேர், வியாதி இல்லாத 100 பேருக்கு அதை கொடுத்து, வியாதி இருப்போருக்கு குணமாகிறதா? வியாதி இல்லாதவர்களுக்கு அதனால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுகிறதா? என்பது பரிசோதிக்கப்படும். அப்படி பார்க்கும்போது முதலைக்கறியை அப்படி பரிசோதித்தற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எந்த காரணத்தால் கக்குவான் இருமல் வருகிறது என்ற காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்தாலே போதும்.


தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனாவைவிட பெரிய தொற்று வரப்போவதாக சொல்கிறார்கள். அதுபோன்ற சமயங்களில் மக்கள் எவ்வாறு இருக்கவேண்டும்?

கொரோனாதான் உலகின் முதல் தொற்று அல்ல; அதேபோல் கொரோனாதான் கடைசித் தொற்றும் அல்ல. உலகை திரும்பி பார்த்தால் இதுபோன்று பல தொற்றுகள் வந்திருக்கின்றன. எனவே இவற்றை தடுக்க, தடுப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், போதுமான தூக்கம், யாருக்காவது சளி, இருமல் இருந்தால் அந்த நபரும், அவரை பராமரிப்பவரும் மாஸ்க் அணிதல், கைகளை நன்றாக கழுவுதல், வீட்டிலேயே சமைத்த ஃப்ரஷ்ஷான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், நிறைய பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுதல், ஆரோக்கியமான சிந்தனை மற்றும் வாழ்க்கைமுறை போன்றவை அடிப்படையாக நாம் செய்யவேண்டியது. வைரஸை நம்மால் கட்டுப்பாட்டில் எடுக்கமுடியாது என்பதால் நம்மால் முடிந்தவற்றை நாம் சரியாக செய்துகொள்ள வேண்டும்.

ஈசினோபிலியா மற்றும்  ஆகிய இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?

பொதுவாக ஈசனோபில் என்ற செல்கள்தான் அலர்ஜியை ரத்தத்திற்குள் கொண்டுசெல்லும். சில ஒட்டுண்ணிகளாலோ அல்லது கிருமிகளாலோ அப்படி வரலாம். ஈசனோபிலியா ஒரு வியாதி கிடையாது. ஆனால் Tropical pulmonary eosinophilia என்ற வியாதியானது ஒட்டுண்ணியால் நுரையீரலில் வரக்கூடிய பிரச்சினையாகும். இதுதவிர அலர்ஜி அல்லது மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் ஈசனோபில் அதிகமாகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஈசனோபிலியா வருகிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த காரணத்தால் வருகிறதோ அதை சரிசெய்தாலே ஈசனோபிலியா போய்விடும். ப்ராங்கைட்டிஸ் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயின் உட்பகுதியில் ஏற்படும் வீக்கமாகும். இது தொற்றுக்கிருமிகள், அலர்ஜி போன்ற பல காரணங்களால் வருமென்பதால் அந்த காரணத்தை கண்டறிந்து சரிசெய்தாலே போதும்.


நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்

நுரையீரலை பராமரிக்க தனியாக பயிற்சிகள் இருக்கிறதா?

உடல் ஆரோக்கியத்திற்கு செய்யக்கூடிய அனைத்துமே நுரையீரலுக்கும் பொருந்தும். தினமும் 30 நிமிடம் வாக்கிங், ஜாக்கிங் அல்லது ஏரோபிக் உடற்பயிற்சி என ஏதேனும் ஒன்றை செய்தாலே நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். அடுத்து ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமுள்ள ப்ளூபெர்ரீஸ், அவகேடோ, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அடுத்து மூச்சுபயிற்சி செய்யவேண்டும். அடுத்து நுரையீரல் சம்பந்தப்பட்ட ஏதேனும் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை எடுக்காமல்விட்டால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும்.

நுரையீரல் பிரச்சினைகளுக்கு முதலுதவிகள் இருக்கிறதா?

ஒரு வியாதியை தாமதமாக கண்டறிவது எப்போதுமே பிரச்சினையைத்தான் கொடுக்கும். இருமல், வீசிங் போன்றவை அலர்ஜியால் ஏற்பட்டால் அதிமதுரம் அல்லது இஞ்சி கலந்த தேன் போன்றவற்றை சாப்பிட்டு குணப்படுத்தலாம். ஆனால் சில நேரங்களில் அந்த இருமல் மற்றும் வீசிங்கே காசநோய் அல்லது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். எனவே அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை எடுக்காமல் மருத்துவர்களை அணுகி பரிசோதிப்பது நல்லது.

திடீரென மூச்சுவிட முடியாமல் போவது, மூச்சுவிடும்போது முதுகுவலி ஏற்படுவது போன்றவை எதனால்?

எந்த வயதில் இந்த பிரச்சினைகள் வருகிறது என்பதை முதலில் பார்க்கவேண்டும். இளம்வயதினருக்கு தசைப்பிடிப்போ அல்லது விளையாடும்போதோ, டென்ஷனாலோ மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். அதுவே வயதானவர்களுக்கு வந்தால் அது இதயத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம். மன அழுத்தம் இருந்தாலும் மூச்சு பிரச்சினைகள் வரலாம்.

Tags:    

மேலும் செய்திகள்