இந்தியாவிலும் நுழைந்த HMPV வைரஸ்! - கொரோனாவை போன்றே பாதிப்பை ஏற்படுத்துமா?
ரெஸ்பிரேட்டரி சிண்டிகல் வைரஸ், கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்றுதான் HMPV வைரஸும் குளிர்காலத்தில் பரவக்கூடியது என்று விளக்கமளித்திருக்கிறது சீன அரசு. வடக்கு சீனாவில் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் பொதுவாகவே இந்த காலங்களில் அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும் என்றும் கூறியிருக்கிறது.
2020ஆம் ஆண்டை யாராலும் மறக்கமுடியாது. கொரோனா பெருந்தொற்றால் உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் கொத்துகொத்தாக உயிரிழந்தனர். பொதுமுடக்கம், வேலையிழப்பு, தொழில்கள் பாதிப்பு என உலகம் முழுவதுமே கடுமையான பொருளதார வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த தொற்றிலிருந்து நாம் இன்னும் முற்றிலுமே மீண்டுவராத நிலையில், அடுத்து ஒரு தொற்றா? என்ற பயத்தை மக்களுக்கு கொடுத்துள்ளது HMPV வைரஸ். இந்த தொற்றால் பெரிதளவில் பாதிப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும் கொரோனாவை போன்றே இப்போது சீனாவில்தான் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உலகில் பெரும்பாலான நாடுகள் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் இதுவரை கிட்டத்தட்ட 10 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களையே வைரஸ் அதிகமாக தாக்கும் என்பதால் குழந்தைகளும், வயதானவர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். HMPV வைரஸ் என்பது என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? சீனாவில் நிலவரம் எப்படி இருக்கிறது? கொரோனாவைப் போன்று மிகப்பெரிய தாக்கத்தை இந்த வைரஸ் ஏற்படுத்துமா? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
HMPV வைரஸ் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன?
ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் என்பதன் சுருக்கம்தான் HMPV. இந்த வைரஸ் இப்போது புதிதாக உருவானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இந்த வைரஸ் தொற்று ஒருவருக்கு இருந்தது முதன்முறையாக கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த வைரஸ் அவ்வப்போது பரவிவந்தாலும் இப்போது அதிகம் பேசப்படுவதற்கு காரணம் சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வலம்வருவதுதான். பொதுவாகவே வைரஸ்கள் பரவக்கூடியவை என்பதால் நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். HMPV வைரஸ் 3லிருந்து 6 நாட்கள் வரை உயிர்வாழக்கூடியவை என்பதால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருப்போர் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் சளித் திவலைகளுடன் தொடர்பு ஏற்படுவோருக்கு இந்த தொற்று எளிதில் பரவுகிறது. அதாவது பாதிக்கப்பட்ட நபரிடம் கைகொடுப்பது அல்லது அவரை தொடுவது, இருமல், தும்மல் போன்றவை முகத்தில் படுவது அல்லது அவை பட்ட கையை முகத்தில் வைப்பது போன்றவற்றால் தொற்று பரவுகிறது. சுவாச பாதையின் மேற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை உடனடியாக தாக்குகிறது. சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் தும்மல் என பொதுவாக அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும் இந்த தொற்றானது தீவிரமடையும்போது மூச்சுத்திணறல், நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என விளக்குகின்றனர் மருத்துவர்கள். குளிர்காலத்தில் பெரும்பாலும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று எளிதில் பரவுகிறது. இந்த வைரஸால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அறிகுறிகள் தென்பட்டவுடனே மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா உள்ளிட்ட பல வைரஸ்கள் ஈரப்பதம் அதிகமுள்ள காலநிலைகளில் அதிகம் உயிர்வாழக்கூடியவை. எனவேதான் குளிர்காலங்களில் இதுபோன்ற தொற்றுகளின் தாக்கம் மற்ற காலங்களைவிட அதிகமாக இருக்கும். எனவேதான் தற்போது குளிர் அதிகம் நிலவுகின்ற அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, வடக்கு சீனாவில் இப்போது கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சீனாவில் வேகமாக அதிகரித்து வரும் HMPV வைரஸ் தொற்று
சீனாவின் நிலவரம் என்ன?
கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் பரவ ஆரம்பித்து வெகு வேகமாக உலகம் முழுவதும் பரவியது போன்றே இப்போது HMPV வைரஸும் சீனாவில் வேகமாக பரவிவருகிறது. அங்கு 14 வயதுக்கும் குறைவாக குழந்தைகளே இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சீன மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேபோல் 65 வயதுக்கு மேற்பட்டோரையும் HMPV வைரஸ் எளிதில் தாக்குவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனைகளுக்கு மாஸ்க் அணிந்தபடி நோயாளிகள் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனென்றால், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் அதுகுறித்த தெளிவான விவரங்களை வெளியிடாமல் சீனா மறைத்துவைத்ததாக அப்போது பல நாடுகள் குற்றஞ்சாட்டியதுடன், அங்கு போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்து, ஒருகட்டத்தில் சீனாவிற்கு மக்கள் செல்லக்கூடாது, அதேபோல் அங்கிருந்து வரவும்கூட என கட்டளைகள் பிறப்பித்தன. இந்நிலையில் HMPV வைரஸும் அதேபோன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை அண்டை நாடுகளுக்கு கொடுத்திருக்கிறது சீனா. ஆனால் ரெஸ்பிரேட்டரி சிண்டிகல் வைரஸ், கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்றுதான் HMPV வைரஸும் குளிர்காலத்தில் பரவக்கூடியது என்று விளக்கமளித்திருக்கிறது சீன அரசு. வடக்கு சீனாவில் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் பொதுவாகவே இந்த காலங்களில் அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும் என்றும் கூறியிருக்கிறது.
HMPV வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இந்திய அரசு
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கடந்த சில நாட்களில் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகள் மற்றும் பிற ஊர்களுக்கு பயணம் செய்யாத குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொற்று உறுதியானதையடுத்து கொரோனாவின்போது பின்பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் தற்போது மீண்டும் பின்பற்ற அறிவுறுத்தி வருகிறது இந்திய சுகாதாரத்துறை. அதாவது சளி, இருமல், தும்மல் போன்ற அடிப்படை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்போரிடமிருந்து விலகி இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறது. அதேபோல் சளி, இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டையால் வாயை மூடிக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளது. சளி தொந்தரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழுவுவது, வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவது, சளி பிரச்சினை இருந்தால் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுப்பது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோரும் கட்டாயம் மாஸ்க் மற்றும் க்ளவுஸ் அணிவது அவசியம் என்று கூறியிருக்கிறது. அதேபோல் ஒருவர் சாப்பிட்ட உணவை மற்றவருக்கு சாப்பிடக்கொடுக்கக்கூடாது, பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் தண்ணீர்பாட்டில்களை பிறருக்கு கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. கொரோனாவிற்கு ஆரம்பத்தில் எந்தவித தடுப்பூசிகளும் இல்லாததுபோன்றே HMPV வைரஸுக்கும் தனிப்பட்ட சிகிச்சைகளோ தடுப்பூசிகளோ இல்லாத காரணத்தால், பிரச்சினை தீவிரமாகி சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பே உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. HMPV வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் முயற்சியில் அந்தந்த மாநில சுகாதாரத்துறைகள் இறங்கியிருக்கின்றன.
சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் HMPV வைரஸ்
HMPV சிறுநீரகத்தை பாதிக்குமா?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்த பலருக்கு இதய பிரச்சினைகள் ஏற்பட்டதைப் போன்று HMPV வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1970களில் இருந்தே HMPV தொற்று பரவிவருவதாக சொல்லப்பட்டாலும் 2001ஆம் ஆண்டுதான் மருத்துவரீதியாக இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சுவாசப் பிரச்சினைதான் பெரிதளவில் ஏற்படும் என்று சொல்லப்பட்டாலும் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து சிறுநீரகமும் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சுவாசப் பிரச்சினைகளுக்கும் சிறுநீரக பாதிப்புக்கும் தொடர்பு இல்லை என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, சிறுநீரகம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தோருக்கு HMPV வைரஸின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், இவர்களுக்கு கொடுக்கப்படும் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளால் வைரஸின் தாக்கம் அதிகமாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே HMPV வைரஸ் பல்வேறு சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்போருக்கு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.