சந்திராஷ்டம நாளில் இறைவாக்கு இப்படித்தான் கிடைக்கும் - ஆன்மிக ஜோதிடர் சிவஸ்ரீ மணிகண்ட சிவத்துடன் நேர்க்காணல்
குளிசம் என்பது சனிபகவானின் ஒரு மகன். மற்றொருவன் மந்தன். அதனால் நாழிகைகளில் குளிகை நேரம் என்று சொல்லக்கூடிய நேரங்களில் நல்ல விஷயங்களை துவங்கலாம். கெட்ட விஷயங்களை துவங்கக்கூடாது. கடன் கட்டுதல், திட்டங்களை தொடங்குதல் போன்ற நல்ல காரியங்களை குளிச நேரத்தில் ஆரம்பித்தால் இனிதே நடந்து முடியும்.
ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சிறப்பு இருக்கிறது. இந்து மதத்தை பின்பற்றுபவர்களில் நாள், கிழமை நட்சத்திரம் பார்க்காத நபர்களை நமது நாட்டில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு நல்லது, கெட்டது என எது நடந்தாலும் உடனே ஜோதிடத்தை நாடிச்செல்வார்கள். அப்படி காலங்காலமாக ஜாதகம், ஜோதிடம் பார்த்தாலும் அதில் நிறைய சந்தேகங்கள் பலருக்கு இருக்கின்றன. அதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஆன்மிக ஜோதிடர் டாக்டர் சிவஸ்ரீ மணிகண்ட சிவம்.
ஓரை, குளிகை என்றால் என்ன?
ஓரை என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகங்களின் தாக்கம் இரண்டுமுறை நம்முடைய பயணத்தில் இருப்பதாகும். உதாரணத்திற்கு, செவ்வாய்க்கிழமை என்றால் காலை 6 -7 மணிவரை மற்றும் மதியம் 1 - 2 மணிவரை சுக்ர ஓரை இருக்கும். அதேபோல் இரவு 8 - 9 செவ்வாய் ஓரை இருக்கும். அதுவே திங்கட்கிழமையாக இருந்தால் அதே நேரத்தில் சந்திர ஓரை வரும். இதுபோல ஒவ்வொரு நாளுக்கும் ஓரை வரும்போது அந்த நேரங்களில் கிரகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். சூரியன், சுக்ரன், புதன், குரு போன்ற ஓரைகளில் காரியங்களை செய்யும்போது தடையில்லாமல் நடக்கும். அந்த நேரத்தில் மனதில் ஒரு தைரியமும் பக்கத்தில் நிழல்போல யாரோ நிற்கிறார் என்ற நம்பிக்கையும் இருப்பதுதான் அதற்கு காரணம். அதுவே செவ்வாய், சனி போன்ற ஓரைகளில் பயந்துகொண்டே, தனித்து செயல்படவேண்டி இருக்கும். எனவே ஓரைகளின் அடிப்படையில் காய்களை நகர்த்துவது மிகவும் நல்லது. அதேபோல் ராகுகாலம், எமகண்டம், குளிகை அல்லது குளிசம் என நேரங்களை பார்த்து செயல்பட வேண்டும். குளிசம் என்பது சனிபகவானின் ஒரு மகன். மற்றொருவன் மந்தன். அதனால் நாழிகைகளில் குளிகை நேரம் என்று சொல்லக்கூடிய நேரங்களில் நல்ல விஷயங்களை துவங்கலாம். கெட்ட விஷயங்களை துவங்கக்கூடாது. கடன் கட்டுதல், திட்டங்களை தொடங்குதல் போன்ற நல்ல காரியங்களை குளிச நேரத்தில் ஆரம்பித்தால் இனிதே நடந்து முடியும். அதுவே வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் குளிச நேரத்தில் உடலை எடுக்கக்கூடாது. அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தல், மருந்துகளை வாங்குதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. குளிகை நேரத்தை பொருத்தவரை நல்லதுக்கு நல்லது.
சனிபகவானின் ஒரு மகனின் பெயர் குளிகன்; நல்ல காரியங்களை குளிகை நேரத்தில் ஆரம்பித்தால் இனிதே நடந்து முடியும்
சூரியாஷ்டமம், சந்திராஷ்டமம், சூலை, திதி என்றெல்லாம் சொல்கிறார்களே. இவை ஒருவரின் அன்றாட செயல்களை பாதிக்குமா?
இருண்ட உள்ளத்தில் வெளிச்சத்தை கொடுக்கக்கூடிய அற்புதமான விஷயம் ஜோதிடம். ஜோதிடர் சொல்வதைக் கேட்டு செயல்படுவது நலம். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஜோதிடர், ஒரு மருத்துவர், ஒரு வக்கீல்தான் இருக்கவேண்டும். ஒரு வருடத்திற்கு அவர் சொல்கேட்டு நடந்து, எதுவும் நடக்கவில்லை என்றால் வேறொருவரைத் தேடிப் போகலாம். ஒரே மாதத்தில் ஒருவரைப்பற்றி தெரிந்துகொள்ள முடியாது. அதேபோலத்தான் திதி, வாரம், நட்சத்திரம், கரணம் போன்றவையும். இந்த நாட்களை பார்த்துதான் ஒரு காரியத்தை நாம் செய்யவேண்டும். அப்போதுதான் நினைத்த காரியம் கைகூடும். இல்லாவிட்டால் சோதனைமேல் சோதனை வரும். சந்திராஷ்டமத்தை எடுத்துக்கொள்ளலாம். 8ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் அதை சந்திராஷ்டமம் என்பர். உதாரணத்திற்கு, சமீபத்தில் நீட் தேர்வு நடந்து முடிந்தது. அப்போது மகன், மகள் என ஒரே வீட்டில் மூன்று பேருக்கு சந்திராஷ்டமம். இதெல்லாம் ஒன்றும் செய்யாது என்று சொல்லிவிட்டு, அவர்களில் ஒரு பெண் நீட் தேர்வு எழுதச் சென்றார். அப்போது அவர் உடையில் ஒரு எழுத்து இருப்பதாக வீட்டிலேயே ஒருவர் கூறியிருக்கிறார். அதெல்லாம் பார்க்கமாட்டார்கள், நான் கடந்த ஆண்டே தேர்வெழுதி இருக்கிறேன் என கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அதை சுட்டிக்காட்டி உடையை மாற்றிவிட்டு வருமாறு கூறி அனுப்பிவிட்டார்கள். இப்படித்தான் சந்திராஷ்டமம் வேலைசெய்யும்.
அஷ்டமம் என்பது எட்டாம் இடம். குரு, சந்திரன், சனி என எது அஷ்டமத்தில் வந்தாலும் கடவுள் யாரோ ஒருவர் ரூபத்தில் வார்த்தையை கொடுப்பார். அதைக் கேட்டு நம்மை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் யார் பேச்சையும் கேட்கத் தோன்றாது. அதனால்தான் நிறைய ஜோதிடர்கள் தங்களுடைய சந்திராஷ்டமம், ஜென்ம நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் யாருக்கும் ஜாதகம் பார்க்கமாட்டார்கள். பௌர்ணமி அன்று தவமிருந்து சுவாமிக்கும் தங்களுக்குமான தொடர்பை பலப்படுத்தி ஞானத்தை வாங்க காத்திருப்பார்கள்.
அன்றாட வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும் சூர்யாஷ்டமம் மற்றும் சந்திராஷ்டமம்
அதனால்தான் ஐடி, கலைத்துறை, அரசியல் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது பௌர்ணமி அன்று மௌன விரதம் இருக்கவேண்டும். அந்த சமயத்தில் செல்போன் பார்க்கலாமா என்றால் கூடாது. மௌனம் என்பது முதலில் ‘மனதில்’ தொடங்கவேண்டும். எதை பார்த்தாலும் மனம் எதையாவது யோசிக்க ஆரம்பித்துவிடும். எனவே ஒரு நாள் மௌனவிரதம் இருந்துவிட்டால் மற்ற அனைத்து நாட்களிலும் மன வலிமை கிடைக்கும். அதுவே ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மௌன விரதம் இருந்தால் திதி, வாரம், நட்சத்திரம், கர்ணம் அனைத்துமே சாதகமாக அமையும். பிரச்சினைகளிலிருந்து விலக முடியும்.
ராகு, புதன், கேது திசை என்கிறார்களே, ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளிலும் எத்தனை திசைகள் இருக்கின்றன?
மனிதனுக்கு எத்தனை திசை வருகிறது என்பது ஆயுட்காலத்தை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ஸ்வாதி நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்தால் அவர்கள் ராகு திசையில்தான் பிறப்பார்கள். அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்தால் செவ்வாய் திசையில் பிறப்பார்கள். பூச, அனுஷ நட்சத்திரங்களில் பிறந்தால் சனி திசையில்தான் பிறப்பார்கள். ஏனென்றால் அந்தந்த நட்சத்திரங்களுக்கு அந்தந்த கிரகம் இருக்கும்.
பாம்பின் தலையை ராகு என்றும், உடலை கேது என்றும் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்
குழந்தை பிறக்கும்போது சிலர் எந்த நேரத்தில் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்கலாம் என கேட்பார்கள். அவர்களிடம் அனுஷ நட்சத்திரத்தில் குழந்தையை எடுக்கச் சொன்னால் பிறக்கும்போதே சனி திசை இருக்கும். அனுஷம் முதல் பாதமாக இருந்தால் சனி திசை ஏறத்தாழ 16 முதல் 19 வருடங்கள் வரை காட்டும். அதுவே இரண்டாம் பாதமாக இருந்தால் அதைவிட குறைவாக இருக்கும். நான்காம் பாதமாக இருப்பின் 3 முதல் 4 வருடங்களுக்கு சனி திசை இருக்கும். அது முடிந்தவுடன் புதன் திசை ஆரம்பமாகும். அடுத்து கேது, அடுத்து சுக்ர திசை என அடுத்தடுத்த திசைகள் நடக்கும். திசைகள் மாறும்போது அந்த திசைக்குரிய கிரகங்கள் நன்றாயிருந்தால் அவை நம்மை பலப்படுத்தும்.
கைரேகை பார்த்தே ஒருவரின் ஜாதகத்தை சொல்லமுடியுமா? இது ஜோதிடத்தில் உண்மையா?
எல்லா ஜோதிடமும் உண்மை. ஒரு மனிதனுக்கு வெளிச்சத்தை உண்டுபண்ணி, நம்பிக்கையை ஊட்டும் இடம்தான் ஜோதிடம். நியூமராலஜி, நேமாலஜி, பிரசன்ன ஜோதிடம், பக்ஷய சாஸ்திரம், அருள்வாக்கு போன்றதுதான் கைரேகையும். உதாரணத்திற்கு நாம் ஒருவரை சந்திக்கும்போது கைகுலுக்குகிறோம். அப்படி குலுக்கும்போதே ஒருவரின் பலத்தை மற்றொருவரால் அறிந்துகொள்ள முடியும். நமது கைகளில்தான் எல்லாமே இருக்கிறது. அப்படிப்பட்ட கைகளிலிருக்கும் ரேகையை கணிக்கும்போது சுக்ர மேடு, சூரிய மேடு என்றெல்லாம் சொல்வார்கள். அவை எல்லாமே ஜோதிட சாஸ்திரத்தில் உண்மைதான். கிரகங்கள் கைரேகை அடிப்படையில் முன்னேற வேண்டுமென்றால், மருதாணி போட்டுக்கொள்ளவும். கைகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். நகங்களை வெட்டவேண்டும். இப்படி கைகளை நன்றாக வைத்திருந்தாலே கைகளில் வசீகரம் ஏற்பட்டு, எல்லா கிரகங்களும் கைக்குள் அடங்கிவிடும்.