ஒருவரின் இறப்பை துல்லியமாக கணிக்க முடியும்! - அடிமுடி சித்தர் சுவாமிகள்
7இல் இருந்து 8இல் வந்தால் சந்திராஷ்டமம் என்று சொல்வார்கள். அது இரண்டே கால் நாட்கள் நடக்கும். அது குறிப்பாக, ஒவ்வொருவரின் நட்சத்திரத்தை பொறுத்து ஒவ்வொருநாள் சிரமத்தை ஏற்படுத்தும். வருட கிரகங்களில் நான்கில் இரண்டாவது நன்றாக இருந்தால்தான் நல்லபடியாக பலன் தரும். மூன்று சரியில்லை என்றால் நல்ல பலன் தராது.;
உலகில் ஒவ்வொரு நாளும் நடக்கிற அசம்பாவிதங்களை பார்க்கும்போது எல்லாருக்குள்ளும் ஒருவித பயம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் ஜாதகங்களில் முன்கூட்டியே கணித்து அறிவிக்கின்றனர். அப்படி கூறுபவை பெரும்பாலும் அப்படியே நடக்கின்றன. அதுபோல இந்த ஆண்டு தொடக்கத்திலேயே கிரக சேர்க்கை மற்றும் சனி பெயர்ச்சி அடுத்தடுத்து நடந்து ஜோதிட பலன்களை நம்புவோருக்கு பெரும் பயத்தையும் திகிலையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதில் என்னென்ன ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும்? யாருக்கெல்லாம் கெடுதல் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், எப்பேர்ப்பட்ட விதியையும் மதியால் வெல்லலாம் என்கிறார் பிரபல ஜோதிடர் அடிமுடி சுவாமிகள். ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தாலும் கடைசியில் எண்ணம்போல்தான் வாழ்க்கை என்று சொல்லும் அவர், நம்முடைய பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்.
ஒரு மனிதனுடைய இறப்பை துல்லியமாக கணித்து சொல்வது சாத்தியமா?
நிறைய நடந்து இருக்கிறது. அனுபவம் வாய்ந்த எல்லா ஜோசியருக்குமே அது சாத்தியம்தான். நேரம், நாள் என அனைத்தையுமே குறிக்கமுடியும். மரணத்தின்மீது பயமில்லாதவர்கள் இதை தெரிந்துகொள்ள அதீத ஆர்வம் காட்டுவார்கள். சிலர் இதை தவறாக பயன்படுத்த முற்படுவார்கள். ஆனால் அதற்கு துணைபோக முடியாது. உதாரணத்திற்கு, வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்குள்ள தனது பெற்றோரின் மரண நாள் எப்போது என தெரிந்தால்தான் லீவ் எடுக்க முடியும் என்று கேட்பார்கள். சிலர் மாமியார் குறித்து கேட்பார்கள். நாடி ஜோசியத்தில் தமிழ் வருடம், கிரக சூழல் போன்றவற்றை பொறுத்து எட்டாவது காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கும். அதிலும் எந்தவிதமான மரணம் ஏற்படும், வீட்டிலா அல்லது வெளியிலா, உடன் யார் இருப்பார்கள் என்பது போன்ற அனைத்து விவரங்களும் சொல்லப்படும். இதை தெரிந்துகொள்ள அதிகம் செலவுசெய்யவேண்டி இருக்கும்.
தவறு செய்துவிட்டு பரிகாரம் செய்துவிட்டால் அது போய்விடும் என்று சொல்வது எந்த அளவிற்கு சாத்தியம்?
குற்றங்களுக்கு எல்லாம் தண்டனை என்பது நாட்டில் இருக்கிறது. ஆனால் அது தெரிந்தும் தவறு செய்பவர்கள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல ஒவ்வொரு விஷயத்துக்கும் பரிகாரம் இருப்பது தெரிந்தும் தவறு செய்பவர்கள் செய்துகொண்டேதான் இருப்பார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே தவறு, பாவம் என்பதை உணர்ந்தவர்கள் அதை எப்போதும் செய்யமாட்டார்கள். கிறிஸ்தவ மதத்தில் தவறு செய்துவிட்டு, கூண்டில் நின்று பாவத்திற்கு மன்னிப்பு கேட்கும்போது, அங்குள்ள பாதிரியார் கடவுள் பெயரால் அதை மன்னித்துவிடுவார். இது மிகவும் எளிமையாக இருப்பதால் தொடர்ந்து தவறு செய்துகொண்டே இருக்கவேண்டுமா என்ன? கடவுளுக்கு பயப்படுபவர்கள் எப்போதும் தவறு செய்யவே மாட்டார்கள். அப்படியே சூழ்நிலையால் செய்துவிட்டாலும் இனிமேல் செய்யக்கூடாது என்ற நல்ல எண்ணத்தால்தான் அங்குசென்று மன்னிப்பு கேட்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மருத்துவம் இருந்தாலும் அது எல்லாமே வெற்றியடைகிறதா என்றால் இல்லை. அதுபோல் பரிகாரம் எல்லாவற்றுக்கும் இருந்தாலும் அவை அனைத்துக்கும் வெற்றியடையுமா என்றால் இல்லை. இது ஒரு முயற்சிதான்.
பாவத்திற்கு செய்யும் பரிகார பலன் எப்படி கிட்டும் என்பதன் விளக்கம்
குடும்பத்தில் ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அப்பா, அம்மா அல்லது மாமியார் போன்றோருக்கு பாதிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும்போது எப்படி இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்?
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். நம் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் அடுத்தவர்களால் வராது. அவரவருடைய கர்மாவை அவரவர் அனுபவிப்பார்கள். சில நட்சத்திரங்கள் மாமனார், மாமியாருக்கு ஆகாது என்று சொல்வார்கள். அது தவறு. ஒரு பொதுப்பலனை வைத்து எந்தவகையிலும் பலன் சொல்லக்கூடாது. ராசிபலன், சனி பெயர்ச்சி வைத்து பார்ப்பதும் தவறு. உதாரணத்திற்கு, மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்துவிட்டதால் அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று நிறையப்பேர் சொல்கிறார்கள். ஆனால் நிச்சயம் அப்படி இருக்காது. மே 15ஆம் தேதிவரைதான் அவர்களுக்கு கொஞ்சம் நல்லது இருக்கலாம். அதன்பிறகு, குரு பகவான் 6ஆம் இடத்திற்கு வந்துவிடுவார். ராகுவும், கேதுவும்கூட மாறி மோசமான இடத்திற்கு வந்துவிடுவார்கள். இதையெல்லாம் சேர்த்து பார்க்கும்போது அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு மோசமான நேரம்தான். ஏழரை முடிந்தாலும் எந்த நல்லதையும் அனுபவிக்க முடியாது. இது ஒரு சேர்க்கை. சனி, ராகு, கேது, குரு என வருட கிரகங்கள் 4 இருக்கும். சனி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை மாறுவார். ராகுவும், கேதுவும் ஒரே நேரத்தில் ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை மாறுவார்கள். தோராயமாக ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை குரு மாறுவார். இந்த பெயர்ச்சிகள்தான் பெரிதும் பேசப்படுகின்றன. சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என மாத கிரகங்கள் 4 இருக்கும். இவை தோராயமாக ஒன்றிலிருந்து ஒன்றரை மாதங்களுக்குள் மாறக்கூடியவை. சூரியனை பொறுத்து இந்த பலன்கள் கணிக்கப்படும். தின பெயர்ச்சி என்பதில் சந்திரன் மட்டும்தான். அது 7இல் இருந்து 8இல் வந்தால் சந்திராஷ்டமம் என்று சொல்வார்கள். அது இரண்டே கால் நாட்கள் நடக்கும். அது குறிப்பாக, ஒவ்வொருவரின் நட்சத்திரத்தை பொறுத்து ஒவ்வொருநாள் சிரமத்தை ஏற்படுத்தும். வருட கிரகங்களில் நான்கில் இரண்டாவது நன்றாக இருந்தால்தான் நல்லபடியாக பலன் தரும். மூன்று சரியில்லை என்றால் நல்ல பலன் தராது.
மீனத்தில் 6 கிரக சேர்க்கையுடன் மாந்தி என்ற துணைக்கோளும் வருவதாக சொல்கிறார்கள். இதனுடைய தாக்கம் எப்படி இருக்கும்?
ஜோதிட சாஸ்திரத்தில் மாந்தி போன்ற துணைக்கோள்கள் பிரதானமாக இல்லை. எனவே 6 கிரகங்களை வைத்து சொல்லலாம். கிரக சேர்க்கை என்பது ஓர் அமைப்பு. இது ஒரு அரசியல் கூட்டணி போன்றது. எந்த கட்சியில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேர்ந்து பலமாக மாறுகிறது என்பதைப் போன்றது. அதுபோல சிம்மத்துக்கு எட்டாம் இடமான மீனத்திலே இந்த 6 கிரகங்களும் கூடுவது சில ராசிகளுக்கு மோசமான பலன்களை தரும். உதாரணத்திற்கு 2019 டிசம்பர் மாதத்தில் மகரத்தில் இதுபோன்று 6 கிரக சேர்க்கை நடந்தது. அப்போது கணிக்கமுடியாத வகையில் உலகளவில் அழிவை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதேபோல கொரோனா வந்தது. இப்போது 5 வருடங்களுக்கு பிறகு மீனத்தில் 6 கிரக சேர்க்கை நடக்கிறது. இதனால் உலகில் சிறு அழிவாவது ஏற்படும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதேபோல் மியான்மரில் நிலநடுக்கத்தால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஜாதகத்தில் 6, 8, 12 என்பது நல்ல இடங்கள் கிடையாது. சிம்ம ராசிக்கு 8ஆம் இடத்தில் 6 கிரகங்கள் சேர்வதால், வயது முதிர்ந்த அல்லது உயர் அந்தஸ்த்தில் இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் 28ஆம் தேதியிலிருந்து மே 15ஆம் தேதிக்குள் பெரிய சரிவும், ஆபத்தும், கண்டமும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த 40 நாட்களில் பெரிய தலைவர்கள்கூட இறக்க வாய்ப்புகள் உண்டு அல்லது இழப்புக்குள்ளாகும் வாய்ப்புகளும் உண்டு. அல்லது மருத்துவமனை, காவல் நிலையம், நீதிமன்றம் போன்ற போகக்கூடாத இடங்களுக்கு போகின்ற வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்ததாக, மேஷ ராசிக்கு 12ஆம் இடமாக இருப்பதால் விரயங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்புகள் இருக்கின்றன. அதே 45 நாட்களுக்குள் எதிர்பாராத நஷ்டங்களும், விரயங்களும் நிச்சயமாக இருக்கும். துலாம் ராசிக்கு 6ஆம் இடத்தில் இருப்பதால் சில சுப கிரகங்களும் பாவ கிரகங்களும் கலந்திருப்பதால் நல்லது கெட்டது இரண்டுமே நடக்கலாம். அதை கணிக்கமுடியாது. மீன ராசிக்கு ஜென்மத்தில் 6 கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. மோசமான சில சூழ்நிலைகள் இந்த 45 நாட்களில் உருவாகும்.
கிரக சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களுக்கு நடப்பவை
6 கிரக சேர்க்கையால் எந்தெந்த ராசிகள் நல்ல பலனை அடைவார்கள்?
மிதுன ராசிக்கு நல்ல பலன்களை அடையக்கூடிய அமைப்பு நிறைய இருக்கிறது. அதேபோல் விருச்சிக ராசிக்கும் நல்ல பலன்கள் ஏற்படும். ஏனென்றால் குரு இன்னும் 7இல் தான் இருக்கிறார். கும்ப ராசிக்கு முன்னேற்றங்கள் கிடைக்கும். அதேமாதிரி கடக ராசிக்கு 9ஆம் இடத்தில் இருப்பதால் சமூக சேவை, ஆன்மிகம், அரசியலில் இருப்பவர்கள் அல்லோலப்படுவார்கள். துக்கம், இழப்பு, குழப்பம், பிரச்சினை, அவமானங்கள் போன்றவை ஏற்படும். ஒருசில எதிர்பாராத ஆன்மிகவாதிகளின் மரணம்கூட ஏற்படலாம். ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் நன்றாக இருப்பார்கள்.
6 கிரக சேர்க்கையால் உலகளவில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும்?
45 நாட்களில் முதல் 2 நாட்கள்தான் நிலம் சம்பந்தப்பட்ட உலகளவிலான பிரச்சினைகள் இருக்கும். இனிமேல் அப்படி இருக்காது. தனிமனிதனுக்குத்தான் பிரச்சினை.
விஜய் இனிமேல் அரசியலில்தான் இருப்பாரா? அல்லது மீண்டும் சினிமாவுக்கு வருவாரா?
விஜய்யின் ஜாதகம் என் கையில் இல்லை. இண்டர்நெட்டில் இருப்பதையெல்லாம் நான் எடுத்து பார்ப்பதும் இல்லை. ஏனென்றால் சில தலைவர்களுக்கு நெட்டில் இருப்பது தவறாகக்கூட இருக்கலாம். உதாரணத்திற்கு, முன்னாள் முதலமைச்சரின் ஜாதகம் என்று நெட்டில் ஒன்றை பார்த்தேன். ஆனால் அதை ஆராய்ந்து பார்த்தபோது அது அவருடைய ராசியே கிடையாது. எனவே பெரிய ஆட்களின் ஜாதகத்தை நெட்டில் பார்ப்பதை நம்பமுடியாது. ஆனால் எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்கிறார்கள். அதுபோல் விஜய் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து அவருடைய எதிர்காலத்தை சொல்லமுடியும். விஜய்யின் சுபாவப்படி அவர் கமல்ஹாசன் போன்று யூ-டர்ன் எடுக்காமல் அரசியலில்தான் தொடர்ந்து பயணிப்பார். ஆனால் முதலமைச்சர் ஆக காலம் கணியாது. இன்னும் 10 வருடங்கள்கூட ஆகலாம். அதற்குள் அரசியல் அவரை மிகவும் பக்குவப்படுத்தும்.
ஜாதகத்தை பார்க்காவிட்டாலும் குணாதிசயங்களை பொருத்து விஜய் மற்றும் சீமானின் அரசியல் நிலை
ஒருவருக்கு மறுபிறவி இருப்பதை எதை வைத்து சொல்லமுடியும்?
உலகில் எதுவுமே சமம் கிடையாது. பிறப்பில்கூட சிலர் பெரிய மருத்துவமனையில் பிறக்கிறார்கள். சிலர் சாதாரண மருத்துவமனையில் பிறக்கிறார்கள். பிறப்பே இங்கு சமம் கிடையாது. ஏன் சமத்துவம் இல்லாத வாழ்க்கையை கடவுள் கொடுக்கிறார் என்று பார்த்தால், அதுதான் பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படை. பொருளாதார அடிப்படையை தவிர்த்துவிட்டு, பிறப்பை மட்டும் பார்த்தாலும்கூட ஒரு இடத்தில் ஒரு நாளில் பிறக்கிற 10 குழந்தைகளும் எந்தவித ஊனமும் குறையும் இல்லாமல் பிறக்கிறதில்லை. அந்த பிறப்புக்கு அறிவியல்பூர்வமாக பல விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் சமமின்மைக்கு காரணம் பூர்வ ஜென்ம பாவ புண்ணியம்தான்.
இந்த ஜென்மத்தின் கர்ம வினைகள் அடுத்த ஜென்மத்தில் இருக்குமா?
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதேபோல் ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்று சொல்லியிருக்கிறார் இளங்கோவடிகள். ஊழ் என்றால் பூர்வஜென்மத்தை குறிக்கும். நல்லதோ கெட்டதோ சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் பலன் கிடைத்துவிடும். ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை என ஒன்று இருக்கிறது. அது இந்த ஜென்மத்தில் நடக்கவில்லை என்றால் அடுத்த ஜென்மத்துக்கு தொடரும்.
பாவ சங்கிலி இப்படி தொடர்ந்துகொண்டே போனால் இனிமேல் மறுபிறவி இருக்காது என்று எப்போது கூற முடியும்?
ஒரு ஜாதகத்தில் கர்ம காரகன் சனி பகவான் என்று சொல்வார்கள். கர்மா முழுவதும் தீர்ந்துவிட்டால் நல்ல இடத்தில் அமைந்துவிடுவார். அதன்பிறகு சுகபோகமாக வாழ ஆரம்பித்துவிடுவார்கள். மறுபிறப்பு பற்றி பேசினால் ஆத்மாவை பற்றி சொல்லவேண்டும். ஞான காரகன் கேது பகவான், ஆத்ம காரகன் சூரிய பகவான் மற்றும் ஆன்மிக காரகன் குரு பகவான் ஆகிய 3 கிரகங்களும் ஒன்றுக்கொன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ லக்னத்திற்கு அல்லது ராசிக்கு 1, 5, 9, 12 ஆகிய இடங்களில் இருக்குமேயானால் அந்த நபருக்கு நிச்சயமாக கடைசி ஜென்மம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஜென்மத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள். மொத்த கணக்கையும் தீர்த்தபிறகு அனைத்தும் முடிந்து சிவலோகம், சொர்க்கம் எல்லாம் கிட்டும்.
மறுபிறவி இல்லாத அரசியல் தலைவராக காமராசர் இருக்க வாய்ப்பு
அடுத்த பிறவி இல்லாத பெருந்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இருக்கிறார்களா?
அரசியல் அல்லது சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒரு சுபாவம் இருக்கும். எனவே அவர்களுக்கு வாய்ப்பே இருக்காது. அதாவது சகிப்புத்தன்மையுடன், பாவத்தை பார்த்துக்கொண்டிருந்தாலும் பாவம் வந்து நம்மை சேரும். திரௌபதியுடைய வஸ்திர உரிப்பு சம்பவத்தை பார்த்த அத்தனை பேருக்கும் பாவம் சேர்ந்ததாக கிருஷ்ணர் சொல்கிறார். அரசியல்வாதிகள் வாங்குகிற லஞ்சம் போன்ற செயல்களை நேர்மையுடன் செயல்படுகிற ஐஏஎஸ் அதிகாரிகள், காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பார்த்துக்கொண்டிருப்பர். மேலதிகாரிகள் சொல்வதற்காக கீழுள்ள காவலர்கள் ஒருவரை அடிக்கின்றனர். எல்லாமே பாவம்தான். நாம் படித்தவரை காமராஜர் போன்றோர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.
விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றாலும், விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்கிறார்களே. அது எந்த அளவிற்கு சாத்தியப்படும்?
விதியை மதியால் வெல்லலாம். ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று திருவள்ளுவர் சொல்கிறார். கடவுள் நிர்ணயித்ததை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் விதி பலமானது. அதை வெல்லக்கூடியது மதிதான். ஆனால் மதியின் பலவீனமே அது மயங்கக்கூடிய தன்மை கொண்டது. அப்படி மயங்கும்போது மீண்டும் விதியே வேலைசெய்யும். எனவேதான் பெரியவர்கள் ‘எண்ணம்போல் வாழ்க்கை’ என்று சொல்கிறார்கள். அதைத்தான் ஆங்கிலத்திலும் change your attitude change your life என்று சொல்கின்றனர். எனவே ஜாதகம் போல வாழ்க்கை கிடையாது. எண்ணம்தான் வாழ்க்கை. விதி போல வாழ்க்கை என்று சொன்னாலும் விதியை போன்றே நடப்பதில்லை. இயற்கை, இடி மின்னல் போன்ற நமது கட்டுப்பாட்டில் இல்லாதது எல்லாம் விதி. உதாரணத்திற்கு, நாம் சிக்னலில் காத்திருக்கும்போது பின்னாக ஒரு வாகனம் வந்து மோதினால் அதற்கு விதி காரணம். அதுவே போன் பேசிக்கொண்டோ கவனக்குறைவாகவோ சென்று வாகனத்தில் மோதினால் அதற்கு மதி காரணம்.