12 ராசிகளுக்கும் துல்லியமான தமிழ் புத்தாண்டு பலன்கள்!
ஆன்மிகத்திற்கு விரோதமாக இருப்பவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிக்கப்போகிறார்கள். குறிப்பாக இந்து தர்மத்திற்கு எதிராக இருப்பவர்கள் தண்டனை அனுபவிக்கப்போகிறார்கள். ஏனென்றால் சனீஸ்வர பகவான் அங்குதான் கைவைப்பார். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும். ஒருசில நன்மைகள் இருந்தாலும் இந்த வருடம் கவனமாக இருக்கவேண்டும்.;
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பு ஆங்கில நாள்காட்டியின்படி ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. இந்த ஆண்டு விசுவாவசு வருடம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தமிழ் வருடங்கள் எப்போதும் பிரபவ என்ற 1ஆம் ஆண்டில் கணக்கிட்டு தொடங்கப்பட்டு அட்சய என்ற 60ஆம் ஆண்டில் முடியும். மீண்டும் அதே பிரபவ என்ற பெயரில் அடுத்த ஆண்டு தொடங்கும். அந்த வரிசையில் 39வது ஆண்டின் பெயர் விசுவாவசு என்று அழைக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு பிறக்கக்கூடிய தமிழ் புத்தாண்டின் பெயர் இது. விசுவாவசு தமிழ் வருடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன மாதிரியான பலன்கள் கிட்டும்? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் சொல்கிறார் ஜோதிடர் கே.ஆர் மகரிஷி மந்த்ராச்சலம். கூடவே இந்த தமிழ் வருடப்பிறப்பின் தன்மை குறித்தும் அதனுடைய பலன்கள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் எடுத்துரைக்கிறார்.
2025ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டின் தனித்துவமும் சிறப்புகளும்
குரோதி வருடம் பங்குனி மாதம் 30வது நாள் நள்ளிரவு 3 மணி 21 நிமிடத்தில் பிறக்கிறது. அதாவது ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயம் தொடங்கி 53 நாழிகை 20 விநாடியில் கும்ப லக்னத்தில் மகர நவாம்சத்தில் விசுவாவசு வருடமானது பிறக்கிறது. ராசி லக்னமும் அம்சா லக்னமும் இரண்டுமே கும்பம் மகரமாக இருக்கிறது. எனவே இவை இரண்டுமே தெள்ள தெளிவாக சனீஸ்வர ராசியில் பிறக்கிறது. இதிலிருந்தே இந்த வருடத்தின் நிலை என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். இந்த விசுவாவசு வருடத்தில் யாரெல்லாம் தர்ம நிலையில் வாழ்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நவ கோள்கள் நற்துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தர்மத்திற்கு விரோதமாக செயல்படுவர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய தண்டனையை பெற்றுத்தரப் போகிறது என்பதையும் மறுக்கமுடியாது. தேய்பிறை ஞாயிற்றுக்கிழமையில் பிறப்பதால் கிழமைக்கு அதிபதி புதனாக இருப்பதால் இந்த வருடம் மார்க்கெட்டிங் சார்ந்த தொழில், வியாபாரிகள், ஆன்லைன், கல்வி சார்ந்த நிலைகளில் ஒருவித சிறப்புகளையும் பலவித குழப்பங்களையும் பார்க்கமுடியும். இந்த வருடம் புதன் பகவானின் கை மேலோங்கி இருப்பதால் ஏதோ ஒரு இடத்தில் தனித்துவத்தை காட்டுகிறது. கும்ப லக்னம் என்பதால் புதன் கும்ப லக்னத்துக்கு 5க்கு உடையவர் என்ற நிலையை பெற்றிருப்பதாலும் ஒருவிதத்தில் சிறப்புகளை காட்டுகிறது. ஆகவே கிழமைக்கு அதிபதியான புதன், வருட பிறப்பில் மீன ராசியில் லக்னாதிபதியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது ஒருசில பிரச்சினைகளை கொடுக்கும்.
சந்திரன் யோகியாகவும், புதன் அவயோகியாகவும் இருக்கும் நிலையை வஜ்ர நாமயோகம் என்கின்றனர். கிழமைக்கு அதிபதி அவயோகி ஆகிறார். யோகி கிரகம் திதி சூன்ய ராசியில் இருக்கிறது. இப்படி ஒருசில குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. கெளலவ கரணம் மிகச்சிறப்பாக காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் கும்ப லக்னத்தில் வருடம் பிறந்து லக்னாதிபதியாகிய சனீஸ்வர பகவான் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் அற்புதமான நிலையில் பல கோள்களுடன் இருப்பது நன்றாக இருந்தாலும் இந்த ஆண்டு சட்டங்கள் புதுமையாக்கப்படும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தண்டனைகள் கிடைக்கும். இந்த வருடம் முழுக்கவே ராசி, அம்சம் இரண்டின் லக்னமும் சனி பகவானின் வீட்டில் விழுந்திருக்கிறது. எனவே இந்த ஆண்டை சனீஸ்வர பகவான் முழுமையாக கையில் எடுத்துக்கொண்டு கோர தாண்டவம் ஆடப்போகிறார். வருடப்பிறப்பின்போது அவர் வலிமையாக இருக்கிறார். அதனால் தவறு செய்பவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி. நிறையப்பேர் சிறைக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் பதவியில் இருப்பவர்களுக்கு குறிப்பாக இந்த தன்மைகள் காட்டுகிறது. லக்னாதிபதியுடன் ராகு இருக்கிறார். சூரியன், புதன், சுக்கிரன் என 5 கோள்கள் இருக்கிறது. அதனால் லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்திருப்பதுடன் அது நீர் ராசியாக இருப்பதால் ஒருசில வைரஸ்கள் வரும். நிறைய இயற்கை சீற்றங்கள் வரும். குறிப்பாக, கடல் மற்றும் கடல்சார்ந்த வணிகம் விருத்தியடைந்தாலும் நிலச்சரிவுகள், பெரும் வெள்ளங்கள், பனிப்பாறைகள் போன்ற பலவிதமான இயற்கை சீற்றங்கள் வரலாம். அதேபோல் இரண்டாம் இடம் சார்ந்த நிலையில் தொழில் போன்ற பலவிதமான சிறப்புகள் இருந்தாலும் இந்த வருடத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆன்மிகத்திற்கு விரோதமாக இருப்பவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிக்கப்போகிறார்கள். குறிப்பாக இந்து தர்மத்திற்கு எதிராக இருப்பவர்கள் தண்டனை அனுபவிக்கப்போகிறார்கள். ஏனென்றால் சனீஸ்வர பகவான் அங்குதான் கைவைப்பார். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும். ஒருசில நன்மைகள் இருந்தாலும் இந்த வருடம் கவனமாக இருக்கவேண்டும்.
மேஷம்
12ஆம் இடத்தில் பலவிதமான கோள்கள் கூட்டாக இருந்தாலும் பெரிய அளவில் பயப்பட வேண்டாம். காரணம், 11இல் வருடம் முழுவதும் ராகு பகவான் இருப்பதால் எங்கேயோ ஒரு இடத்தில் ஒருசில சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் மிக முக்கியமாக, வருமானத்தைக் காட்டிலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். எனவே சுப விரயங்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பொருளாதார நெருக்கடிகள் வரும். அலைச்சல் அதிகமாக இருக்கும். இருந்தாலும் பயப்படவேண்டாம். ஏழரை சனி பெரிய பாதிப்பை தராது.
மேஷம்: செலவுகள் கூடுதலாக இருக்கும் - ரிஷபம்: பல மடங்கு வருமானம் வரும்
ரிஷபம்
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் பல அதிசயங்களை செய்யப்போகிறீர்கள். பிரம்மாண்டங்களை பார்க்கப்போகிறீர்கள். பலவிதமான முன்னேற்றங்கள் வரும். படிக்கக்கூடியவர்களுக்கு படிப்பு சரியாக அமையும். திருமண வாழ்க்கை, புதிய தொழில் பிரம்மாண்டமாக அமையும். என்ன செலவு செய்தாலும் அதைவிட பல மடங்கு வருமானம் வரும். மகிழ்ச்சியாக வாழப்போகிறீர்கள்.
மிதுனம்
இந்த ஆண்டு வருமானம் அதிகமாக இருக்கும். குறைவுகள் இருக்காது. உடல்நலம் சார்ந்த விஷயங்களில் மட்டும் கவனமாக இருங்கள். மற்றபடி கல்வி, திருமணம், தொழில், அசையும் அசையா சொத்துகள் போன்றவை மிக சிறப்பாக அமையும். பேச்சை மட்டும் கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து களத்தில் இறங்கினால் ஜெயித்துவிடலாம்.
மிதுனம்: உடல்நலத்தில் கவனம் தேவை - கடகம்: சுப காரியங்கள் நடக்கும்
கடகம்
நீண்ட நாட்களாக தொந்தரவுகளிலிருந்த உங்களுக்கு உயர்வுகள் வரும். முன்னேற்றங்கள் மற்றும் சிறப்புகள் வரும். எண்ணங்கள் பூர்த்தியடையாவிட்டாலும் நினைத்ததைவிட நன்மைகள் நடக்கும். பிரச்சினைகள், அலைச்சல்கள், சிக்கல்கள் கூடுதலாக இருந்தாலும் கூட்டி கழித்து பார்க்கும்போது நன்மைகளும், வருமானமும், தொழிலில் சிறப்புகளும் அதிகமாகத்தான் இருக்கிறது. சுப காரியங்கள் நடக்கும். அதனால் நிம்மதியாக இருங்கள்.
சிம்மம்
அஷ்டம சனி ஆரம்பித்து விட்டது என்றாலும், சனீஸ்வர பகவான் எட்டில் இருந்தால் ஏழில் ஒரு கோள் இருக்கவேண்டும். இந்த வருடம் முழுவதும் அதிர்ஷ்டங்களை கொட்டிக் கொடுக்கக்கூடிய, பிரம்மாண்டப்படுத்தக்கூடிய ராகு பகவான் ராசிக்கு ஏழில் இருப்பதால் சனீஸ்வரர் முழுமையாக நன்மைகளை செய்யப்போகிறார். கோள்களின் நிலை மற்றும் தனித்தன்மைகளை பார்க்கும்போது சிரமங்கள், அலைச்சல்கள், டென்ஷன் மற்றும் கஷ்டம் போன்றவை இருக்கும். இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி இந்த வருடத்தில் அடுத்த ஒரு படியை, முன்னேற்றத்தை, உயர்வை பார்க்கப்போகிறீர்கள். எனவே தைரியமாக இருங்கள். சொத்துகள், கல்வி, நல்ல குடும்பம், தொழிலில் முன்னேற்றம் போன்றவை கிட்டும். அஷ்டம சனி இருந்தாலும் பொற்காலமாகத்தான் இருக்கப்போகிறது.
சிம்மம்: உயர்வை பார்க்கப்போகிறீர்கள் - கன்னி: தைரியமாக இருங்கள்
கன்னி
தற்சமயம் இருக்கக்கூடிய நிலை மிக சிறப்பாக இருந்தாலும் குரு பெயர்ச்சிக்கு பிறகு குழப்பங்கள் வரும். ஆனால் பெரிய பாதிப்புகள் இருக்கப்போவதில்லை. எனவே தைரியமாக இருங்கள். பல விதங்களில் வருமானங்கள் வரும். அந்த வருமானத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் பார்க்கவேண்டும். குறிப்பாக, அசையும் அசையா சொத்துகளில் பயன்படுத்துங்கள். பிரயோஜனமான வழியில் வாழ்ந்தால் பெரிய சிறப்புகள் இல்லாவிட்டாலும் பாதிப்புகள் இல்லாமல் வாழலாம்.
துலாம்
இதுவரை பொருளாதாரம் சார்ந்த நிலையிலும் தொழிலிலும் தடங்கல்கள், திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு தடைபடல், குடும்பத்தில் பிரச்சினைகள், வருகிற பணத்தை பிரயோஜனமாக செலவுசெய்ய முடியாத நிலை, எல்லா வகையிலும் மன அழுத்தம் மற்றும் டென்ஷன் என்றே இதுவரை இருந்தீர்கள். ஆனால் இந்த வருடத்தில் வருமானம் கூடுதலாக இருக்கும். பலவிதமான சிறப்புகள் இருக்கின்றன. தொழிலில் முன்னேற்றங்கள் இருக்கும். டென்ஷன், பிரச்சினைகள் இருந்தாலும் நினைத்தது நடக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். நினைத்த கல்வி அமையும். மகிழ்ச்சியாக இருக்கப்போகிறீர்கள்.
துலாம்: பலவிதமான சிறப்புகள் இருக்கும் - விருச்சிகம்: வாகனம் வாங்க வேண்டாம்
விருச்சிகம்
உடல் நலம், மன நலம் என பலவிதங்களில் தொந்தரவுகள் இருக்கப்போகிறது. சுற்றியிருப்பவர்கள் உங்கள் மீது போட்டி, பொறாமை கொள்வார்கள். உங்களுடைய செல்வாக்கை குறைக்க பலவிதங்களில் பலபேர் முயற்சிப்பார்கள். பொருளாதாரத்தில் தடை, தொழிலில் தடை, படிப்பில் கவனக்குறைவு, குடும்பத்தில் சிக்கல் இப்படி பலவித பிரச்சினைகள் இருக்கும். ஆகவே இந்த வருடத்தில் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அவற்றை சுப விரயங்களாக மாற்றி தப்பித்துக்கொள்ளுங்கள். சுப செலவுகளை செய்யுங்கள். இடங்கள், கட்டிடங்கள் வாங்குங்கள். வாகனம் வாங்க வேண்டாம். பிரயோஜனமாக செலவுகளை மட்டும் செய்யுங்கள். தடங்கல் ஆனாலும் சுப காரியங்களுக்கு முயற்சி செய்யுங்கள். இந்த ஆண்டு தடைகளை தாண்டித்தான் பயணிக்கவேண்டும்.
தனுசு
நன்மை தீமை இரண்டும் கலந்துதான் இருக்கும். உடல்நலம் சார்ந்த விஷயங்களிலும், உறவுகளிடமும் கவனமாக இருங்கள். மேற்படிப்பு படிப்பவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கல்வி சரிதானா என்று பார்த்து எடுக்கவேண்டும். திருமண வாழ்க்கைக்குள் செல்பவர்கள் தீர விசாரித்து செல்லவேண்டும். தொழில் சார்ந்த விஷயங்களில் ஒருவித சிறப்புகள் இருக்கிறது. வருமானமும் செலவும் கிட்டத்தட்ட சமநிலையில்தான் இருக்கும். இறையருளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
தனுசு: திருமண வாழ்க்கையில் கவனம் தேவை - மகரம்: நிம்மதியாக இருக்க மாட்டீர்கள்
மகரம்
இதுவரை பல சிறப்புகள் சூழ்நிலைகள் இருந்தது. ஏழரை சனி இப்போதுதான் முடிந்திருந்தாலும் ராகு பகவான் இரண்டிற்கு வந்திருக்கிறார். ராசிக்கு அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும் மே மாதத்தில் குரு பகவான் 6க்கு போவதால் மனநிலையை கெடுத்துக்கொள்வீர்கள். நிம்மதியாக இருக்காமல் மற்றவர்களின் மனதையும் கெடுப்பீர்கள். உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். மறதி, சோம்பலுக்கு இடம்கொடுக்காதீர்கள். பொருளாதார சிக்கலை சரிசெய்வதற்கு சுப செலவுகளை செய்யுங்கள். பிரயோஜனமான செலவுகளை செய்யுங்கள்.
கும்பம்
இன்னும் ஏழரை சனி முழுமையாக தீராவிட்டாலும் பல கோள்கள் இருப்பதால் 2இல் உள்ள சனி பகவான் தற்சமயம் நன்றாக இருக்கிறது. கோள்கள் அடுத்தடுத்த ராசிக்கு போனபிறகு ராகு ஜென்மத்துக்கு வருகிறார். அதனால் நிறைய குழப்பம் இருக்கும். தூக்கம் கெடும். என்ன செய்வது என்ற முடிவு எடுப்பதில் தெளிவு இருக்காது. கூடுதலாக வெட்டிச்செலவுகள் இருக்கும். எனவே அவற்றை சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். ஜீவ சமாதி வழிபாடுகள் உங்களை நல்வழிப்படுத்தும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை சனீஸ்வர பகவான் சன்னதிக்குச் சென்று வணங்குங்கள்.
கும்பம்: முடிவு எடுப்பதில் தெளிவு இருக்காது - மீனம்: பணிகள் முற்றுபெறாது
மீனம்
ஜென்மத்தில் சனீஸ்வரரும் 12இல் ராகுவும் இருக்கிறார். வருட கோள்கள் எதுவும் சாதகமாக இல்லை. வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் போகலாம். ஏதாவது ஒரு பணியை தொடங்கினால் அது முற்றுப்பெறாமல் நிற்கும். இந்த வருடம் தொந்தரவுகள் இருக்கும். நிம்மதி இருக்காது. வருமானம் வரும். ஆனால் செலவு இருக்கும். உடல்நலம், உறவு, குடும்பம் சார்ந்த எல்லா விஷயங்களிலும் மிகமிக கவனமாக இருங்கள்.