இந்தியாவின் சிறந்த கடற்கரைகளை காண வேண்டுமா? அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்லுங்கள்!

இந்தியாவில் உள்ள எட்டு யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் - நிகோபர் தீவுகள் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடமாகும் . இந்திய நிலப்பகுதியில் இருந்து 1200 கி.மீ தூரத்தில் வங்காள விரிகுடாவில் இரண்டு தீவுக் கூட்டங்களாக அமைந்துள்ளது அந்தமான் - நிகோபார். த்ரில்லான நீர்ப் பகுதிகள், ஓய்வெடுக்கும் தளங்கள், பல்வேறு விதமான செயல்பாடுகளை அனுபவிக்கலாம். நீலக்கடலில், பச்சை நிறத்தில் தனித்து நிற்பதால் இதனை ‘எமரால்டு தீவுகள்’ என்றும் அழைக்கின்றனர்.

Update: 2024-05-13 18:30 GMT
Click the Play button to listen to article

இந்தியாவில் உள்ள எட்டு யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகள் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடமாகும். இந்திய நிலப்பகுதியில் இருந்து 1200 கி.மீ. தூரத்தில் வங்காள விரிகுடாவில் இரண்டு தீவுக் கூட்டங்களாக அமைந்துள்ளது அந்தமான் - நிக்கோபார். த்ரில்லான நீர்ப் பகுதிகள், வித்தியாசமான ஓய்வெடுக்கும் தலங்கள் என பல்வேறு விதத்தில் இங்கு இயற்கையை ரசித்து அனுபவிக்கலாம். நீலக்கடலில் பச்சை நிறத்தில் தனித்து நிற்பதால் இது ‘எமரால்டு தீவுகள்’ என்றும் அழைக்கப்படுகிறது. அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் மக்கள் வசிக்கும் தீவுகள் 36. அதுமட்டுமில்லாமல் இங்குள்ள வித்தியாசமான உயிரினங்கள், எவ்வித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் இடங்கள் உள்ளிட்டவை நம்மை திக்குமுக்காட வைத்துவிடும். அப்படிப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காண வேண்டிய இடங்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

ஹேவ்லாக் தீவு

அந்தமானிலுள்ள தீவுகளில் மிகப்பெரிய தீவு இந்த ஹேவ்லாக் தீவுதான். ஸ்கூபா டைவிங் எனப்படும் நீருக்கடியில் நீந்தும் விளையாட்டிற்கு இந்த தீவு மிகப்பிரபலம். உலகிலேயே பவளப் பாறைகள் இங்குதான் அதிகமாக இருக்கின்றன. அந்தமானின் தலைநகரமான போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 41 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தீவு. 1943ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜெனெரலாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் நினைவாக இந்த தீவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு இந்த ஹேவ்லாக் தீவு "ஸ்வராஜ் தீப் " என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இன்றளவிலும் அங்கு இருக்கும் உள்ளூர் மக்கள் "ஹேவ்லாக் தீவு" என்றே அழைக்கிறார்கள். இந்த தீவில் மட்டும்தான் ஸ்கூபா டைவிங் விளையாட்டை மிக குறைந்த செலவில் விளையாட முடியும். அதுமட்டுமில்லாமல் ஹேவ்லாக் தீவிலிருக்கும் அனைத்து படகுகளுக்கும் அடியிலும் கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும், ஏனென்றால் இந்த தீவில் அதிகமான பவளப்பாறைகள் இருக்கின்றன. அதை நாம் படகில் பயணித்து கொண்டே ரசிக்கலாம். இதை தவிர ட்ரெக்கிங், கடற்கரையில் கேம்பிங் என்று வித்தியாசமான அனுபவத்தை நமக்கு ஹேவ்லாக் தீவு தரும்.


அந்தமானின் அழகிய ஹேவ்லாக் தீவு 

மாங்குரோவ் கிரீக், பாராடாங் தீவு

இந்தியாவில் இருக்கும் 13 சதவீத மாங்குரோவ் காடுகள் அந்தமானில்தான் இருக்கின்றன. போர்ட் பிளேயரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாராடாங் தீவு. இந்த பாராடாங் தீவின் கிழக்கு திசையில்தான் மாங்குரோவ் கிரீக் காடுகள் அமைந்துள்ளன. பிச்சாவரத்தில் இருக்கும் மாங்குரோவ் காடுகளைவிட இங்கு பல மடங்கு செடி கொடிகள் அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மாங்குரோவ் காடுகளுக்கு நடுவே நாமே படகை இயக்கி என்ஜாய் செய்யலாம். இங்கு நாம் படகை இடையில் நிறுத்தி மீன் பிடிக்கும் வசதியும் இருக்கிறது. அந்தமானிற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்குதான் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்று அந்தமான் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்தான் இங்கு பயணம் செய்ய முடியும். ஏனென்றால் தூரம் செல்ல செல்ல முதலைகள் வசிக்கும் இடம் வந்துவிடும். அதனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே சுற்றுலாபயணிகள் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படும்.


அந்தமானின் பாராடாங் தீவில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் 

ராஜிவ் காந்தி நீர் விளையாட்டு அரங்கம்

போர்ட் பிளேயரின் மைய பகுதியில் அமைந்திருக்கிறது ராஜிவ் காந்தி நீர் விளையாட்டு அரங்கம். இங்கு அனைத்து விதமான நீர் விளையாட்டுகளும் இருக்கின்றன. பனானா ரைட்ஸ், ஜெட் ஸ்கைங், பாரா சைலிங், ஸ்பீட் படகு பயணம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை இங்கு விளையாடி மகிழலாம். அதுமட்டுமில்லாமல் இங்கு அனுமதி இலவசம். ஆனால் நாம் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனி தனியாக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதன்பிறகு உங்களுக்கு பிடித்த நீர் விளையாட்டை நீங்கள் விளையாடலாம். அரங்கத்திற்குள்ளேயே பலவிதமான உணவு ஸ்டால்கள் இருப்பதால் நீங்கள் ஒரு நாள் முழுவதும் இங்கேயே இருக்கலாம். எனவே அந்தமான் சென்றவுடன் முதலில் கண்டு ரசிக்க வேண்டிய இடம் இந்த ராஜிவ் காந்தி நீர் விளையாட்டு அரங்கம்தான்.


நீர் விளையாட்டுகளின் சொர்க்கம் - ராஜிவ் காந்தி நீர் விளையாட்டு அரங்கம்

மவுண்ட் ஹரியட்

அந்தமானில் நீங்கள் டிரெக்கிங் செய்ய விரும்பினால் இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது. காடுகளுக்கு நடுவே ட்ரெக்கிங் செய்து மலையின் உச்சிக்கு சென்று பரந்து விரிந்த கடற்கரையை கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமில்லாமல் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் வழிகளுக்கு நடுவே குடில்கள் இருக்கும். அங்கு ஓய்வெடுத்து கொண்டு மீண்டும் ட்ரெக்கிங் பயணத்தை தொடங்கலாம். இங்கு அரியவகை தாவரங்கள், மரங்கள் என்று கண்டு ரசிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.


கேம்பிங் மற்றும் ட்ரெக்கிங் செய்வதற்கு சிறந்த இடம் "மவுண்ட் ஹரியட்"

ராதாநகர் பீச்

இயற்கையின் சௌந்தர்யத்துக்கு அந்தமான் தீவுகள் உலகப் புகழ் பெற்றவை. அதிலும் போர்ட் பிளேயர் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் ராதாநகர் பீச் இன்னும் பிரபலம். இங்கே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வந்துபோகிறார்கள். இந்த இடத்தில் கடல் சார்ந்த விளையாட்டுக்கள், கடலுக்கடியில் பயணம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். டைம்ஸ் இதழ் இதற்கு 'உலகின் 7வது சிறந்த கடற்கரை' என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. பனை மரங்களால் சூழப்பட்ட இந்த கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையின் மத்தியில் ஓய்வெடுக்க ஓர் அமைதியான சூழலை வழங்குகிறது. ராதாநகர் கடற்கரையின் மற்றொரு ஈர்ப்பு நீல்ஸ் கோவ். கடற்கரையில் 10 நிமிடங்கள் நடந்தால் இந்த இடத்திற்கு செல்லலாம். நீல்ஸ் கோவ் என்பது ஒரு அழகிய குளம் மற்றும் அதிகம் அறியப்படாத இடங்களில் ஒன்றாகும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தண்ணீரில் நீந்துவது இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.


எழில்மிகு அந்தமானின் ராதாநகர்பீச் 

பட்ஜெட் மற்றும் பயண திட்டம்

அந்தமான் தீவுகளை சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தது 5 நாட்களாவது தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு செல்ல நினைத்தாலும் சரி, இந்தியாவில் இருந்து செல்ல நினைத்தாலும் சரி, நீங்கள் முதலில் வர வேண்டிய இடம் சென்னை விமான நிலையம்தான். அதன்பிறகுதான் நீங்கள் அந்தமானின் தலைநகரமான போர்ட் பிளேயர் நகருக்கு செல்ல முடியும். பட்ஜெட்டை பொறுத்தவரையில் தங்கும் வசதி, உணவு என்று அனைத்தையும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.50000 வரை ஆகலாம். விமான செலவு நீங்கள் வரும் இடத்தை பொறுத்து மாறும்.

Tags:    

மேலும் செய்திகள்