ராம நவமி ஏன் கும்பிடுகிறோம்? ராம நவமியன்று "இமயமலை நீம் கரோலி பாபாவை" ஏன் வழிபட வேண்டும்?
‘நான் உபதேசிக்க வந்தவன் அல்ல; என்னை நம்பினால் வாழ்க்கையில் பெரும் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்துவிட்டால் நான் வந்துவிடுவேன்’ என்று சொல்கிறார் பாபா.;
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமர் அவதாரத்தை கொண்டாடும் நாள்தான் ராம நவமி. அசுரர்களை அழித்து நீதியை நிலைநாட்ட விஷ்ணு ஏழாவது அவதாரமாக ராமர் அவதாரம் எடுத்த இந்த நாளில் இந்துக்கள் அனைவரும் விரதம் இருந்து ராமரை பூஜித்து வழிபட்டால் வாழ்க்கையில் பல நன்மைகள் வந்துசேரும் என்று நம்புகின்றனர். தென்னிந்தியாவில் ராம நவமியானது ராமன் - சீதையின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. ராமர் அவதாரத்துடன் சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதால் இவர்களையும் இந்த நாளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் இந்த நாளில் நம்மில் பலருக்கும் தெரியாத நீம் கரோலி பாபா என்ற சித்தரை மனதில் நினைத்து வேண்டினாலே பெரும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். நீம் கரோலி பாபா குறித்தும், அவருடைய சிறப்புகள் குறித்தும் அவர் நம்முடன் உரையாடுகிறார்.
யார் இந்த நீம் கரோலி பாபா?
நீம் கரோலி பாபா என்பவர் மிகப்பெரிய அனுமன் பக்தர். இவர் இமயமலையில் நைனிடால் பக்கம் இருக்கக்கூடிய கெய்ஜிதாம் என்ற பகுதியில் வாழ்ந்தவர். இவரை சுற்றி பல்வேறு அற்புதங்களும் அனுபவங்களும் நிகழ்ந்துகொண்டே இருந்தன. இவர் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என இயல்பான வாழ்க்கை வாழ்ந்தவர். துறவிகளுக்குண்டான லட்சணம் இவருக்கு இருக்காது. தன்னை பார்க்க வருவோருக்கெல்லாம் பழங்கள் தருவார். சாதாரண ஒரு கிராமத்துவாசியாக இவர் வாழ்ந்துவந்தாலும் ஆஞ்சநேயர் மீது இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. எப்போதும் ராம நாமத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். இவருக்கு சிறந்த நகைச்சுவை உணர்வும் உண்டு. இவ்வாறு ராம நாமம் சொல்லிக்கொண்டே நீம் கரோலி என்ற இடத்தில் ரயில் நிலையத்தில் அமர்கிறார். அது ஒரு பனிபிரதேசத்திலிருக்கிற கிராமம் என்பதால் ரயில்கள் மூலமாகத்தான் அங்குள்ளவர்கள் வேறு பகுதிகளுக்கு செல்லமுடியும். வேறு போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஆனால் அங்கு ரயில்கள் எதுவும் நிற்காது என்பதால் அங்குள்ள மக்கள் அதிகாரிகளிடம் சென்று, ‘எங்கள் ஊரிலும் ரயிலை நிறுத்தச் சொல்லுங்கள். எங்கள் குழந்தைகளெல்லாம் படிக்க போகவேண்டும் என்றும், வீட்டிலுள்ள முதியவர்களுக்கு மருத்துவ வசதிகளுக்காக நகரத்துக்கு செல்லவேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் ஆங்கிலேய அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்துவிடுகிறார். உடனே நீம் கரோலி பாபா ‘நான் சென்று பேசிப்பார்க்கிறேன்’ என்று சொல்கிறார். ஆனால் அவரை அங்கிருந்து இறக்கிவிடுகிறார்கள். அவர் அங்கேயே உட்கார்ந்து ‘ராம் ராம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது ரயில் அங்கிருந்து செல்ல மறுத்துவிடுகிறது. இதை பார்த்த ஆங்கிலேய அதிகாரி மிரண்டுபோய், பெரிய பெரிய பொறியாளர்களை எல்லாம் அழைத்துவந்து ரயிலை சரிசெய்கிறார்கள். ஆனால் ரயிலோ இயங்கவில்லை. ஒருகட்டத்தில் ரயிலிலிருந்த அதிகாரிகளுக்கு புரிந்துவிடுகிறது. அப்போது மேலதிகாரி இதுகுறித்து கேட்க, ‘இந்த பாபா இங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக ரயிலை விடச்சொன்னபோது நாங்கள் மறுத்துவிட்டோம்’ என்று சொல்கின்றனர். உடனே மேலதிகாரி தங்களுடைய தவறை உணர்ந்து பாபாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன், இனிமேல் அங்கு ரயிலை நிறுத்துவதாக உறுதியளிக்கிறார். நீம் கரோலி என்ற அந்த ஊரின் பெயரே அதிலிருந்து பாபாவின் பெயராக மாறியது.
நீம் கரோலி பாபாவின் ஆசரமம்
மகாராஜ் என்று புகழப்பட்ட நீம் கரோலி பாபா!
இப்படி நீம் கரோலி பாபா என்ற பெயருடன் இருந்த அவர், ஒருமுறை முடிதிருத்தும் கடைக்கு செல்கிறார். அங்கு முடி திருத்துபவர், தனது மகன் வேலைவாய்ப்புக்காக இமயமலையிலிருந்து கீழே சென்றதாகவும், ஆனால் அதன்பிறகு தனது மகன் குறித்து எந்த விவரமும் இல்லை என்றும் சொல்கிறார். இதை கேட்டுக்கொண்ட பாபாவோ திடீரென வெளியே சென்று மறைந்துவிடுகிறார். சில நிமிடங்களில் திரும்ப வருகிறார். மறுநாள் முடி திருத்துபவரின் மகன் அங்கு வந்து, ‘அப்பா நேற்று ஒரு மனிதர் என்னிடம் வந்து பணத்தை கொடுத்து வீட்டுக்கு போய்விடு என்றார். திடீரென நான் இங்கு வந்துவிட்டேன்’ என்று சொல்கிறான். உடனே அந்த முடி திருத்துபவர் பாபாவை காண்பித்து ‘அவரா நேற்று உன்னிடம் வந்தார்?’ என்று கேட்க, மகனும் ஆமாம் என்று கூறி ஆச்சர்யபடுகிறான். இப்படி பார்ப்பதற்கு இயல்பாக இருந்தாலும் இதுபோன்ற செயல்கள் குறித்து அவரிடம் கேட்டால் சிரித்துக்கொண்டே அங்கிருந்து போய்விடுவாராம். இதுபோன்று மருத்துவ அற்புதங்களும் அங்கு நிகழத்துவங்கின. அந்த சமயத்தில் அமெரிக்காவில் ஹிப்பியிசம் என்ற ஒரு கருத்து பரவுகிறது. அதாவது மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். வாழ்க்கையில் கட்டுப்பாடுகளே கூடாது என்பது போன்ற கருத்துகள் பரவுகின்றன. இதில் பல இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது பெரிய பல்கலைக்கழங்களில் மனோதத்துவத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த ரிச்சர்டு ஆல்ஃபர்ட் என்பவர், தான் செய்வது தவறு என்று உணரத் துவங்குகிறார். ஏனென்றால் அவரும் ஹிப்பியிசம் கொள்கையை ஒருகாலத்தில் கடைபிடித்தவர். மனம் வருந்திய அவர், இந்தியாவில் இமயமலை பகுதிக்கு வருகிறார். அவரிடம் ‘அங்கு ஒரு துறவி போன்ற ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்று உங்களுடைய பிரச்சினையை விளக்குங்கள்’ என்று அங்குள்ளவர்கள் சொல்கின்றனர். அவரும் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்துகொண்டிருந்த நீம் கரோலி பாபாவிடம், தனது கருத்தை விளக்குவதற்காக பாட்டில் ஒன்றை திறக்கிறார். அதில் மிட்டாய் போன்று ஏதோ இருக்கிறது. அதை கையில் வாங்கிய பாபா உடனே அதை வாயில் போட்டுவிட்டார். அது ஆராய்ச்சி பொருள் என்பதால் அவ்வளவு சாப்பிட்டால் இவர் இறந்துவிடுவாரே என்று ரிச்சர்டு பயந்தார். ஆனால் அதை சாப்பிட்டும் பாபா ஒரு நாள் முழுக்க எந்த போதையும் இல்லாமல் தெளிவாக இருக்கிறார். இதை பார்த்த மனோதத்துவ விஞ்ஞானி அரண்டுபோகிறார். மறுநாள் ரிச்சர்டை அழைத்த பாபா, ‘இதைவிட இனிப்பான ஒன்றை உனக்கு சொல்கிறேன். ராம நாமம். இறைவனது பெயரைத் தவிர உனக்கு நன்மையை தரக்கூடிய போதை வேறு எதுவும் கிடையாது. இறைவன் பக்கம் திரும்பு. இதையெல்லாம் நிறுத்திவிடு’ என்று சொல்கிறார். இதை கேட்ட விஞ்ஞானிக்கு ஒரு உணர்வு வந்துவிடுகிறது. ஆனால் இதுபற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என்று நீம் கரோலி பாபா சொல்லிவிடுகிறார்.
மிகவும் எளிமையாக வாழ்ந்த நீம் கரோலி பாபா
பொதுவாகவே நல்லதோ கெட்டதோ ஒருவரிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னால் அதை உலகம் முழுக்க சொல்லிவிடுவார்கள். அதுபோல் ரிச்சர்டு ஆல்ஃபர்ட் அமெரிக்காவிற்கு சென்றபிறகு புத்தகங்களை எழுதுகிறார். அவற்றில் பாபாவை ‘மகாராஜ்’ என்று குறிப்பிடுகிறார். ரிச்சர்டை பார்த்த அவருக்கு நெருங்கியவர்கள், ‘நீ இந்தியா சென்றபோது வேறு மாதிரி இருந்தாயே. ஆனால் அங்கிருந்து வந்தபிறகு திடீரென இங்கு நடப்பதையெல்லாம் தவறு என்று சொல்கிறாய். மக்கள் கட்டுப்பாடோடு வாழவேண்டும் என்கிறாய். குடும்ப அமைப்பு தேவை என்கிறாய். இந்த மாற்றம் உனக்குள் எவ்வாறு நிகழ்ந்தது?’ என்று கேட்கின்றனர். ராமதாஸ் என்று மாறிவிட்ட ரிச்சர்டு ஆலஃபர்டை காண நிறையப்பேர் வருகிறார்கள். இதுகுறித்து நீம் கரோலி பாபாவிடம் ராமதாஸ் கேட்க, ‘கிறிஸ்துவை போல அன்பு செய். சக உயிர்களிடம் நேசத்தை செலுத்து’ என்று சொல்கிறார். ஏனென்றால் நீம் கரோலி பாபாவிற்கு இயேசுவின்மீது மிகுந்த அன்பும் பக்தியும் உண்டு. இதையே ராமதாஸ் தன் வாசகமாக எழுதுகிறார். மந்திரமாக சொல்லத் துவங்குகிறார். அவரைச் சுற்றி பல்வேறு நலன்கள் நடக்கின்றன. போதை வஸ்துக்களில் அடிமையான இளைஞர்கள் திருந்த துவங்குகிறார்கள். வாழ்க்கையில் பெரும் பொருளாதார வசதிகள் பெருகத் துவங்குகிறது. இதை பார்த்த ஜெஃப்ரி கேஹல் என்ற இளைஞர், தானும் திருந்தவேண்டுமெனவும், அந்த மந்திரம் குறித்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவரிடம் பாபா குறித்து கூறுகிறார் ராமதாஸ். பாபாவை பார்க்க ஜெஃப்ரியும் இந்தியாவுக்கு வருகிறார். நீம் கரோலி பாபாவை தேடுகிறார். அவர் அலகாபாத்தில் கங்கை என்ற இடத்திலே இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அதற்குள் நீம் கரோலி பாபா, ‘இன்று இமயமலையிலிருந்து 27 பேர் என்னை தேடி வரப்போகிறார்கள். சாப்பாடு செய்துவை’ என்று வீட்டிலிருப்பவர்களிடம் கூறுகிறார். அதேபோல் அங்கு ஒரு பேருந்து வந்து நிற்கிறது. அதிலிருந்து வந்தவர்கள் பாபா குறித்து விசாரிக்க, அங்கிருந்தவர்கள், ‘நீங்கள் 27 பேர் வருவீர்கள் என்றும், உங்களுக்காக அவர் சாப்பாடு தயார் செய்து வைத்திருக்கிறார்’ என்றும் கூற, வந்தவர்கள் அரண்டுபோகின்றனர். அவர்கள் பாபாவிடம், தங்களுக்கு ஏதேனும் யோகா அல்லது உபதேசம் சொல்லமுடியுமா என்று கேட்கின்றனர். அதற்கு, ‘நான் உபதேசிக்க வந்தவன் அல்ல; என்னை நம்பினால் வாழ்க்கையில் பெரும் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்துவிட்டால் நான் வந்துவிடுவேன்’ என்று சொல்கிறார் பாபா.
நீம் கரோலி பாபாவின் வழிகாட்டுதலை பின்பற்றிய பிரபலங்கள்
உலக செல்வந்தர்களுக்கு வழிகாட்டி!
அதேபோல் ஒருநாள் அலகாபாத்தில் ரிக்ஷாக்காரரிடம் சென்ற நீம் கரோலி பாபா, என்னுடைய எடையோ பெரிது. நான் உனக்கு பணம் தரட்டுமா? என்று கேட்கிறார். ஆனால் அந்த ரிக்ஷாகாரரோ, ‘ஐயா பரவாயில்லை இருக்கட்டும். நீங்கள் எப்போதும் ராம நாமம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை கூட்டிப்போகிறேன் என்று சொல்கிறான். அவனிடம் பாபா ஒரு சிறு பணமுடிப்பை கொடுத்து உன் வாழ்க்கை உயரும் என்று வைத்துக்கொள்ள சொல்கிறார். அதேபோல் அவனும் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுவிடுகிறான். அவர் நீம் கரோலி பாபா என்று அறிந்து பல கோயில்களை கட்டிவிடுகிறான். அதுபோல் கான்பூரில் கோயில் கட்டிய அவர், பாபாவை அங்கு அழைக்கிறான். ஆனால் பாபாவோ இமயமலையை விட்டு வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார். ஆனால் அந்த ரிக்ஷாக்காரர் வருந்தி அழைக்க, இரு என்று கூறிய அடுத்த நொடியே கான்பூரிலும் தெரிகிறார் பாபா. அங்கு வந்த அமெரிக்க பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அங்கு ஜெஃப்ரி கேஹலும் வந்து பாபாவிடமிருந்து அனுமன் சாலிசாவை கற்றுக்கொள்கிறார். இவர்தான் பின்னாளில் கிருஷ்ணதாஸ் என்ற பெயரில் கிராமி விருது பெற்ற உலக புகழ்பெற்ற பாடகர். இன்று உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் கூட பொருளாதார சிக்கலை சந்தித்த சமயத்தில் 1973ஆம் ஆண்டு நீம் கரோலி பாபாவிடம் ஆசிபெற இந்தியா வந்தார். ஆனால் அப்போது பாபாவின் உயிர் பிரிந்துவிட்டது. கையில் ஆப்பிள் பழங்களுடன் பாபாவை பார்க்கவந்த ஸ்டீவ் ஜாப்ஸோ வருத்தப்பட்டு நின்றுகொண்டிருந்த சமயத்தில் அங்குவந்த ஒரு குரங்கு அந்த பழங்களை தட்டிவிட்டதுடன், அதில் ஒன்றை எடுத்து கடித்துவிடுகிறது. அப்போது அவர் மனதிலே இதையே ஒரு சின்னமாக வைத்து ஒரு நிறுவனம் தொடங்கினால் என்ன? என்ற எண்ணம் உதிக்கிறது. அதுதான் இப்போது அனைவர் கையிலும் ஆப்பிள் போனாக மிளிர்கிறது. கூகுளுக்கு அடித்தளமிட்ட லாரி கிராண்ட் வந்தபோதும், திருச்செந்தூர் சுப்ரமணியனை தரிசித்து வரச்சொல்லி நீம் கரோலி பாபாதான் வழிகாட்டியுள்ளார். மார்க் ஜூகர்பெர்க்கும் 2002, 2003ஆம் ஆண்டுகளில் கஷ்டத்தில் இருந்தபோது ஸ்டீவ் ஜாப்ஸிடம் வழிகாட்டச் சொல்லி கேட்கிறார். அவர் நீம் கரோலி பாபா சமாதிக்குச் சென்று மனதார தரிசிக்கச் சொல்கிறார். இன்று மெட்டா நிறுவனத்தை நிறுவி பெரும் செல்வந்தராக மாறிவிட்டார். ஜூலியா ராபர்ட்ஸ், விராட் கோலி போன்றோரும் நீம் கரோலி பாபாவை சென்று வணங்கி தரிசித்து பல்வேறு நலன்களை பெற்றுள்ளனர்.
நீம் கரோலி பாபாவின்மீது கொண்ட பற்றுதலால் ராமதாஸாக மாறிய ரிச்சர்டு ஆல்ஃபர்ட்
நீம் கரோலி பாபாவை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாடுகளும் தேவையில்லை. உணவிலும் கட்டுப்பாடுகள் தேவையில்லை. அவரவர் அவரவராகவே இருந்தால் போதும். அவரை நினைத்து வணங்கினாலே போதும் என்கிறார். நீம் கரோலி பாபாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமிருக்கிறது. தனது உடலைவிட்டு போகப்போகிறோம் என்று அவருக்கு முன்கூட்டியே தெரிந்ததும், ‘நான் தமிழ்நாட்டிலுள்ள சிவாலயங்களை தரிசிக்கவேண்டும்’ என்று வந்துள்ளார். அவரை இங்குள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் சாதாரணமாக ஒரு சத்திரத்து வாசலில் படுத்திருக்கிறார். மைலாப்பூர் சீரடி கோவிலுக்கு வந்திருக்கிறார். அங்கு கழுத்தில் சாய்பாபாவின் உருவத்தை அணிந்துசென்ற ஒரு பெண்ணை பார்த்து அதுபோன்ற பக்தி தனக்கும் வரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதுபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயில், சென்னை வீரபுரம் ஆஞ்சநேயர் கோயில் போன்ற இடங்களிலெல்லாம் தியானம் செய்திருக்கிறார். மீண்டும் இமயமலைக்கு செல்ல பயணத்தை துவங்கி, அலகாபாத் செல்ல முற்படுகிறார். பாதி வழியிலேயே, இத்துடன் தனது பயணம் முடிவதாகவும், இதயத்தில் அசௌகர்யம் ஏற்படுவதாகவும் சொல்கிறார். உடனே ரயிலை நிறுத்தி ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு படுத்துக்கொண்டிருந்தபோது, தனக்கு கங்கை நீர் வேண்டுமென கேட்கிறார். ஆனால் மருத்துவரோ கங்கை நீரை குடித்துவிட்டால் உயிர் போய்விடுமென பயந்து அங்கிருந்த ஒரு குழாய் தண்ணீரை கொடுக்கிறார். அதை தெரிந்துகொண்ட பாபா, ‘சாதாரண குழாய் தண்ணீராக இருந்தாலும் அதை கங்கை தண்ணீர் என்று சிவன் பெயரை நம்பி சொல்லிவிட்டால் அது கங்கை தண்ணீர்தான். ஜெய் ஜெகதீசகரே!’ என்று சொல்லி நீரை அருந்திவிட்டு உடலைவிட்டு பிரிகிறார். நீம் கரோலி பாபாவை ராம நவமி அன்று வணங்கி, ஒவ்வொரு நாளும் நம்பி பெரும் பொருளாதாரம் கேட்டு வேண்டினால் கட்டாயம் நடக்கும். நீம் கரோலி பாபாவை வணங்கியவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள், திரைத்துறையில் பிரபலமடைந்துவிட்டார்கள். எனவே பொருளாதார முன்னேற்றம் வேண்டும் ஒவ்வொருவரும் நீம் கரோலி பாபாவை வணங்கினால் அனைவர் வாழ்க்கையிலும் நன்மையே நடக்கும்.