6 கிரக சேர்க்கையால் உலகளவில் ஏற்படப்போகும் மாற்றங்கள்! - விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்
சனி, ராகு சேர்க்கை அதனுடைய ராசியில் ஏற்படும்போது சனீஸ்வரர் தனது வீட்டைவிட்டு வெளியேறுவார். திரும்ப தனது வீட்டிற்கு வர 25 வருடங்கள் ஆகும். அதேபோல் ராகுவிற்கு முழு பலமும் கும்ப ராசியில் உண்டு. சனியும் ராகும் வீடு மாறும்போது இடையே சந்தித்துக்கொள்வார்கள். அதற்கு சங்கர்ஷனம் என்று பெயர்.;
ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையும் தனித்து இருப்பதுதான் மனிதர்களுக்குண்டான சிறப்பு. ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறை மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்த அம்சங்கள் ஜோதிடத்தில் காரகங்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த காரகங்களை பொருத்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும். அப்படி பல காரகங்கள் ஒன்றாக இணைந்து வரக்கூடியதுதான் கிரகச் சேர்க்கை என்று சொல்லப்படுகிறது. அதாவது, சில கிரகங்கள் ஒரே கோணத்தில் வரும்போது அவற்றிற்கான பலன்களும் விளைவுகளும் மாறிக்கொண்டே போகும். அப்படி கடந்த 2019ஆம் ஆண்டு பல கிரக சேர்க்கை ஒரே ராசியில் நடைபெற்றது. அப்போது உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு இந்த ஆண்டு மீன ராசியில் 6 கிரக சேர்க்கை நடக்கவிருக்கிறது. தற்போது நடக்கவுள்ள இந்த கிரக சேர்க்கையால் உலகளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும்? அதிலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும் என்பது குறித்தெல்லாம் நம்முடன் விரிவாக உரையாடுகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.
எந்தெந்த கிரகங்கள் எந்த ராசியில் எப்படி சேரப்போகிறது?
இது உலகில் பல பெரும் மாற்றங்களின் துவக்கமாக இருக்கப்போகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் இதேபோல் பல கிரக சேர்க்கைகள் தனுசு ராசியில் ஏற்பட்டது. அதற்கு பின்பு உலகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை நாம் அனைவருமே நன்கு அறிவோம். ஒரு கிரக சேர்க்கை ஏற்பட்டால் ஏதேனும் ஒரு வகையில் உலகில் மாற்றங்கள் துவங்கும். எனவே அதற்கேற்ப நாம் முன்னமே தயாராகிவிட்டால் நம் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். 29.03.2025 அன்று சூரிய கிரகணம் வரவிருக்கிறது. ஏற்கனவே மீன ராசியில் ராகு நிலைபெற்றிருக்கிறார். ராகு என்றாலே பேராசைத்தன்மையை குறிக்கக்கூடியது. ஸ்வர்பானு என்று சொல்லக்கூடிய அசுரன் பாதி உடலை இழந்து தலையுடன் இருக்கிறான். எந்த அளவில் நிறுத்தவேண்டும் என்பதை புரிந்துகொள்ள அதற்கு வயிறு இல்லாததால் தலையை பொருத்தவரை எல்லாவற்றையும் உட்கொள்ள வேண்டுமென ஆசைப்படும். உதாரணத்திற்கு, ஒருவர் ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் சேர்க்கையில் இருந்தால் நிலம் சார்ந்தவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். நிலத்தில் முதலீடு செய்துவிடுவர். ஆனால் எவ்வாறு வெளியேறவேண்டுமென்ற வித்தை தெரியாது. அதேபோல் சனியும் ராகுவும் சேர்ந்தால் உலகத்திற்காக உழைத்துக்கொண்டே இருப்பார், ஆனால் தன்னைப்பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. அதுபோல் செவ்வாய் ராகு சேர்க்கை இருக்கக்கூடியவர்தான் எலான் மஸ்க். அவர் பொருளாதார தேடலில் சென்றுவிட்டார். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று எதையும் செய்யாமல் மக்களுக்காக செய்தார்.
எலான் மஸ்க் மற்றும் காமராஜரின் ஜாதகங்களுக்கு ஏற்ப அவரவரின் குணாதிசயங்கள்
மீனம் என்ற ராசி கடலை குறிக்கக்கூடியது. கால புருஷ தத்துவத்தில் 12ஆம் இடம் மீனம். இது காலை குறிக்கக்கூடியது. அதாவது பாதத்தை குறிக்கும். உடலின் முழு எடையையும் அது தாங்கக்கூடியது. கால புருஷ தத்துவத்தில் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய 3 ராசிகளை நீர் ராசிகள் என்று சொல்கிறோம். அதில் கடகம் என்றால் ஒரு ஆற்றையோ, குளத்தையோ அல்லது தாய்மையையோ குறிக்கும். இதில் குரு உச்சமடைந்து விடுவார். அதுவே விருச்சிகம் தேங்கிய நீர்நிலையை குறிக்கும். அதுவே மீனம் என்று சொன்னால் பெரும்கடலை குறிக்கும். சமீபகாலமாக கடலிலிருந்து விசித்திரமான உயிரினங்கள் வெளியே வருவது குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். எனவே இயற்கை ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகிறது. மீனம் என்பது குரு மட்டும் ஆட்சி செய்யக்கூடிய வீடு கிடையாது. கேதுவின் தன்மை அதில் உண்டு. ஆனால் தனுசு என்பது குருவின் ஆளுகைக்கு மட்டும் உட்பட்ட ஒரு வீடு. நீர் ராசிகளை பொருத்தவரை அவர்கள் மிகவும் சென்டிமென்ட்டாக இருப்பார்கள். மீன ராசியில் சுக்கிரன் உச்சம்பெற்று, புதன் நீச்சமடைகிறது. புதன் என்பது வங்கிகள், பொருளாதாரம், லாஜிஸ்டிக், பங்குச்சந்தை போன்றவற்றை குறிக்கும். சுக்கிரன் என்று சொன்னால் அது வசதி, மனைவி மற்றும் வெள்ளியை குறிக்கும். ராகுவும், சனியும் உடலில் வாத நோயையும் காற்றின் தத்துவத்தையும் குறிக்கக்கூடியவர்கள். வருகிற கிரகண காலத்தில் சனி, ராகு, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியோர் ஒன்றாக வரப்போகிறார்கள். கூடவே உபகிரகம் என்று சொல்லக்கூடிய சனீஸ்வரரின் மகனான மாந்தியும் வரப்போகிறார். இப்படி 7 கிரக சேர்க்கைகள் நடக்கப்போகிறது. இதில் உபகிரகமானது மற்ற 6 கிரகங்களின் பலத்தில் 75 சதவீதத்தை எடுத்துவிடக்கூடியது. இதற்கு சமுத்திர மந்தனம் என்று பெயர். ஏற்கனவே 1991இல் மகரத்திலும் 2002இல் ரிஷபத்திலும் இதுபோன்றதொரு சேர்க்கை இருந்தது. அப்படியிருக்கையில் இப்போது மட்டும் ஏன் பயப்படவேண்டுமென எல்லாரும் கேட்பார்கள். சனி, ராகு சேர்க்கை அதனுடைய ராசியில் ஏற்படும்போது சனீஸ்வரர் தனது வீட்டைவிட்டு வெளியேறுவார். திரும்ப தனது வீட்டிற்கு வர 25 வருடங்கள் ஆகும். அதேபோல் ராகுவிற்கு முழு பலமும் கும்ப ராசியில் உண்டு. சனியும் ராகுவும் வீடு மாறும்போது இடையே சந்தித்துக்கொள்வார்கள். அதற்கு சங்கர்ஷனம் என்று பெயர். இது மார்ச் 15ஆம் தேதிமுதல் துவங்குகிறது. அப்போதே சூழல் மாற துவங்கிவிட்டது என்பதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்.
கிரக சேர்க்கையால் உயரும் தங்கம் விலை மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீட்டில் கவனம் தேவை
6 கிரக சேர்க்கை தங்கம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
உலக ஜாகத்தை எடுத்துக்கொண்டால் குருவும், சூரியனும்தான் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதாக சொல்வார்கள். எப்போதெல்லாம் சூரியனும் குருவும், சனீஸ்வரராலோ அல்லது கேதுவாலோ பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்றம் ஏற்படும். தற்போது 6 கிரகங்களுடன் உபகிரகமும் சேர்ந்து 29ஆம் தேதிமுதல் ஏழாக இருக்கப்போகிறது. இதுபோன்ற சூழலில் புதன் வக்கிரமடைகிறது. இந்த சூழலில் பங்குச்சந்தை முதலீட்டில் மிகுதியான கவனம் தேவை. 2019ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கிரக சேர்க்கை எங்கே என்று பார்க்கவேண்டும். தனுசில் ஏற்பட்டதால் 9ஆம் இடமான அதை வழிகாட்டுதல் என்று சொல்வார்கள். அதன் நேரெதிர் ராசியான மிதுனத்தில் பாதிப்பை உண்டாக்கியது. அது காற்று ராசி என்பதால், காற்று செல்லக்கூடிய தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பானது உலகெங்கும் செல்லக்கூடிய விமான பயணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை மறக்கமுடியாது.
இப்போது மீனத்திற்கு நேரெதிர் ராசியான கன்னி ராசியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது கடன் துறை, வங்கி, என்.வி.எஃப்.சி, பேங்கிங் செக்டார் போன்றவற்றை குறிக்கும். அதேபோல் இது விவசாயத்தையும் குறிக்கும் என்பதால் உணவுப்பொருட்களிலும் கவனம் செலுத்தவேண்டும். கன்னி ராசி என்றால் கால புருஷ தத்துவத்தில் 6ஆம் வீடான வயிற்றை குறிக்கக்கூடியது. புதன் என்றால் வேலையையும் குறிக்கும். எனவே பங்குச்சந்தையில் மிகுதியான கவனம் தேவை. அரசாங்கம் சொல்லக்கூடியதைக் கேட்டு அதில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். போலியான விளம்பரங்களை நம்பி எதிலும் தவறான முதலீடு செய்துவிட வேண்டாம். க்ரிப்டோகரன்சியை நம்பி பணத்தை இழக்கவேண்டாம். தங்கத்தின் விலை தற்போது ஏறிக்கொண்டே போனாலும் அக்டோபருக்கு பிறகு இதே விலையேற்றம் இருக்குமா என்று சொல்வது சிரமம்தான். எனவே கடனை வாங்கி எதிலும் முதலீடு செய்யவேண்டாம். ஏனென்றால் குருவானது 2026ஆம் ஆண்டு கடகத்தை கடந்தபின் தங்கத்தின் மதிப்பு இதுபோன்று இருக்குமா என்றும் சொல்லமுடியாது. எனவே புதிய முதலீடுகளை செய்யவேண்டாம். 90 நாட்கள் நிலம் சார்ந்தவற்றில் முதலீடு செய்வது நல்லதல்ல. வேலையில் இருப்பவர்கள் வார்த்தைகளை விட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். வேலையிடத்தில் பொறுமையாக இருக்கவேண்டும். அப்படி வேலையை விட்டால் அதன்பிறகு வரக்கூடிய 5, 6 மாதங்களுக்கு முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இது உலகம் முழுவதும் பொருந்தும். அடுத்து குரு மிதுனத்தில் பிரவேசம் செய்து திருவாதிரையில் இருப்பார். திருவாதிரை ராகுவின் நட்சத்திரம் என்பதால் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு வேலை மாற்றங்களில் சிரமம் இருக்கும்.
கிரக சேர்க்கை அபாயங்களிலிருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் - பெற்றோரை வழிபடல்
6 கிரக சேர்க்கைகளால் எந்த ராசிகள் கவனமாக இருக்கவேண்டும்?
சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உண்ணவேண்டும். அடுத்து கணவன் - மனைவி விவாதத்தில் அதிகம் ஈடுபட வேண்டாம். அமைதியாக கடந்து சென்றுவிடுவது நல்லது. துலாம் ராசிக்காரர்களுக்கு மருத்துவரீதியாக கவனம் தேவை. உணவு உண்ணுவதிலும் மிகுதியான கவனம் இருக்கவேண்டும். அதேபோல் கன்னி ராசிக்காரர்கள் பிசினஸ் பார்ட்னர்களிடம் சண்டை போடவேண்டாம். புதிய பார்ட்னர்ஷிப்பில் இறங்க நினைப்பவர்களுக்கு யோசனை தேவை. மனைவியுடன் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தைகளின் நலனில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தவும். தனுசு ராசிக்காரர்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மருத்துவரை சென்று பார்க்கவேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். ஹவுஸ் லோன் போட நினைத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வார்த்தையை விடவேண்டாம். வண்டியை கவனமுடன் ஓட்டவும். மகர ராசிக்கார்கள் அதிகம் போன் பேசவேண்டாம். சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டாம். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்த்துவிடவும். மீன ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தனை யோகம் இருப்பதால் பயப்படவேண்டாம். எனவே ஆலய வழிபாட்டில் கவனம் செலுத்தி உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை இடங்களில் சண்டை சச்சரவுகள் வேண்டாம். யாராவது தவறாக பேசினால்கூட அமைதியாக கையாளவும். தூக்கத்திற்கு நேரம் செலவு செய்யுங்கள். கால் பாதம் போன்ற பகுதிகளின் ஆரோக்கியத்திற்கு மருத்துவரை அணுகி அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும். தனுசு ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். கருத்து வேறுபாடுகள் வேண்டாம். மிதுன ராசிக்காரர்கள் இருக்கிற வேலையில் பயங்கர அழுத்தம் இருந்தாலும் 90 நாட்கள் வேலையை விட்டுவிட வேண்டாம். கடக ராசிக்காரர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. பெற்றோரின் ஆசி கட்டாயம் தேவை. எனவே அவ்வப்போது பெற்றோர்களை நினைத்து பிரார்த்தனைகளை செய்யவும். ஆரோக்கியத்திலும் முதலீடுகளிலும் கவனம் செலுத்தவும். இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியவர்கள் கடகம், கன்னி மற்றும் சிம்மம். கும்பமும் மீனமும் ஓரளவு கவனமுடன் இருக்கவேண்டும்.
கிரக சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்?
எந்தவொரு காலகட்டத்திலும் பெற்றோரை மதிப்பவர்கள், எங்கே கிரகங்கள் இருந்தாலுமே அனுக்கிரகத்திலே தப்பித்துவிடுவார்கள். உலக ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் நாம் இருக்கும் இடத்தின் ஜாதகம்தான் 90% பேசும், தனிப்பட்ட ஜாதகம் என்பது 10% தான். இது உலகெங்குமே கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம். எனவே அசாத்தியமான காரியத்தையும் சாதிக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு, வடைமாலை சாற்றி வணங்குவது மிகமிக நல்லது. இதை செய்ய முடியாவிட்டால் தாய், தந்தை மற்றும் குருவின் பாதங்களை மனதார நினைத்து வணங்கலாம். இதை தினமும் செய்தாலே பெரிய தாக்கங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.