ஏசு பிறப்பை எதிர்நோக்கிய அன்னையின் கிறிஸ்துமஸ் பெருவிழா! கர்ப்பிணியாக பக்தர்களுக்கு ஆசி வழங்கிய மாதா!
நம் மெசியாவாகிய ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றோம்.
ஏசு கிறிஸ்து என்ற இந்த பெயரை உச்சரிக்கும் போதே ஒவ்வொரு கிறிஸ்தவருக்குள்ளும் ஒளி பிறக்கும். அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் ஒரு தீர்க்கதரிசியாக அவதரித்து, நம் பாவங்களை போக்குவதற்காக சிலுவையில் அறையுண்டு தன் உயிரையே நீத்து இன்றும் மறைசாட்சியாக ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நம் மெசியாவாகிய ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றோம். இப்பெருவிழாவையொட்டி ஒவ்வொரு கிறிஸ்தவ வீடுகளிலும், தேவாலயங்களிலும் குடில்கள் அமைப்பது, நட்சத்திரம் கட்டுவது என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி திருவிழாவான இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஒரு பகுதியாக சென்னை தோமையார் மலையில் வீற்றிருக்கும் எதிர்நோக்கிய அன்னையின் பெருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சென்னை தோமையார் மலையில் உள்ள எதிர்நோக்கிய அன்னைக்கும் கிறிஸ்து பிறப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஏன் இந்த திருவிழா கிறிஸ்துமஸ் வருகைக்கு முன்பாக கொண்டாடப்படுகிறது? அதன் சிறப்புகள் என்ன? கிறிஸ்துமஸ் பெருவிழாவின் வரலாறு என்ன? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
ஏசு கிறிஸ்து பிறந்த தினம்
தொட்டிலில் பிறந்த குழந்தையின் சிரிப்பு, வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள், பரிசுகளால் நிறைந்த மரம்... இவை எல்லாம் கிறிஸ்துமஸை நினைவுபடுத்தும் அடையாளங்கள். ஆனால், இந்த அழகான அடையாளங்களுக்கு பின்னால் உள்ள கதை என்பது இன்னும் அழகானது. மிகவும் அற்புதமானது. ஒரு சின்ன ஊரில் மரியா என்ற பெண் இருந்தாள். அவள் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவள். ஒரு நாள், தேவதூதன் அவளிடம் வந்து, அவள் ஒரு குழந்தையைப் பெறப் போவதாகச் சொன்னான். அந்தக் குழந்தைதான் எசு கிறிஸ்து. மரியாவும் அவளது கணவர் யோசேப்பும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அந்த நாட்களில் ரோமர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் எல்லா மக்களையும் ஒரு நகரத்திற்கு சென்று சில நாட்கள் தங்கும்படி கட்டளையிட்டார்கள். இதனால் மரியாவும் யோசேப்பும் தங்கள் சொந்த ஊரான நசரேத்திலிருந்து பெத்லகேம் என்ற ஊருக்குப் பயணம் செய்தனர். ஒரு குளிர்கால இரவில், இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் சென்ற அவர்களுக்கு அங்கு ஒரு அற்புதமான நிகழ்வு நடக்கப் போகிறது என்பது அப்போது தெரியாது. யோசேப்பும், மரியாவும் நீண்ட பயணத்தை முடித்து, அந்த நகரை அடைந்த போது, மரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பாதுகாப்பான இடத்தை தேடினர். ஆனால் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை காத்திருந்தது. அந்த ஊரில் எல்லா இடங்களும் நிறைந்திருந்தன. அவர்களுக்கு தங்க இடம் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில், ஒரு தொழுவத்தில் தங்க இடம் கிடைத்தது. அந்த தொழுவத்தில்தான் பிறந்தார் ஏசு கிறிஸ்து.
பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் யோசேப்பு - மரியாவுக்கு ஏசு கிறிஸ்து பிறந்த காட்சி
அந்த நேரத்தில், வானில் ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது. அந்த நட்சத்திரத்தைப் பார்த்த மூன்று ஞானிகள், ஒரு புதிய அரசன் பிறந்துவிட்டான் என்று உணர்ந்து, அந்த குழந்தையை வணங்க வந்தனர். அவர்கள் ஏசுவை கண்டுபிடித்து, தங்கம், குங்குமப்பூ போன்ற அற்புதமான பொருட்களை பரிசாக கொடுத்தனர். இந்த நிகழ்வுகள் நடந்த தினத்தைதான், நாம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறோம். ஏசு பிறந்த அந்த இடத்தில் இன்று நேட்டிவிட்டி தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும். ஏனென்றால், இது ஏசு கிறிஸ்து பிறந்த இடம் என்று நம்பப்படுவதால்தான். கிறிஸ்துமஸ் என்பது ஏசுவின் பிறந்தநாள் மட்டுமல்ல. இது அன்பு, பகிர்வு மற்றும் மகிழ்ச்சியின் பண்டிகை. இந்த நாளில், மக்கள் ஒருவரையொருவர் வாழ்த்தி, பரிசுகள் பரிமாறிக்கொண்டு, விருந்துகள் நடத்துகிறார்கள். கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, கிறிஸ்துமஸ் கேரல்களை பாடுகிறார்கள். இவ்வாறு தான் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
புனித தோமையார் மலை
ஏசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின், அவரின் 12 சீடர்களில் ஒருவரான தோமையார், உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஏசுவின் நற்செய்திகளைப் பரப்பினார். அந்தப் பயணத்தில், அவர் இந்திய மண்ணையும் வந்தடைந்தார். இது கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். கி.பி. 52-ம் ஆண்டில், இந்திய அரசன் கோண்டோபாரேயின் வணிகர் ஹப்பானுடன், தோமையார் கேரளாவின் அழகிய மலபார் கடற்கரையில் உள்ள கிரங்கனூர் என்ற இடத்திற்கு வந்தடைந்தார். அமைதியான கடற்கரையின் அழகில் மயங்கிய தோமையார், அங்கு பல ஆலயங்களை கட்டி, ஏசுவின் அன்பான போதனைகளை மக்களிடம் பகிர்ந்தார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மக்களின் இதயத்தை தொட்டது. கேரளாவில் தனது பணிகளை முடித்த பின்னர், தோமையார் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையான கோரமண்டல் பகுதிக்கு வந்தார். அங்கு நற்செய்திகளைப் பரப்பும்போது, சிலர் அவரை எதிர்த்தனர். ஆனால் அவர் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. இருப்பினும் எதிரிகளின் தொல்லைகளுக்கு அஞ்சி, அவர் லிட்டில் மவுண்ட் என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தார்.
புனித தோமையார் மலையில் வீற்றிருக்கும் எதிர்நோக்கிய அன்னை ஆலயம்
பின்னர், தற்போது தோமையார் மலை என்றழைக்கப்படும் பரங்கிமலைக்கு வந்தார். அந்த மலையில் ஜெபத்தில் ஆழ்ந்திருந்தபோது, கி.பி. 72-ம் ஆண்டில், தோமையார் தனது எதிரிகளால் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில், தோமையார் வழிபட்ட சிலுவை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 அடி உயரத்தில் உள்ள இந்த மலைக்குச் செல்வதற்கு, 135 படிக்கட்டுகளைக் கொண்ட பாதையை ஆர்மீனியர்கள் அமைத்தனர். இங்குள்ள ‘எதிர்பார்த்த அன்னையின் ஆலயத்தின்’ உள்ளே, புனித தோமையாரின் சிறு எலும்புத் துண்டு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12 திருத்தூதர்களின் திருப்பண்டங்கள் (எலும்புத் துண்டு, சதைத் துண்டு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்) உட்பட 124 புனிதர்களின் திருப்பண்டங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலயத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் பழமையானவை. குறிப்பாக, புனித லூக்கா வரைந்ததாகக் கூறப்படும் அன்னை மரியா, ஏசு மற்றும் அவரது 12 திருத்தூதர்களின் ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை. இப்படி புகழ் பெற்ற இந்த எதிர்நோக்கிய அன்னையின் ஆலயத்தில்தான் ஆண்டுதோறும் டிசம்பர் 18 அன்று ஏசுவின் வருகையை வரவேற்கும் விதமாக ‘எதிர்நோக்கும் அன்னை மரியாள் திருவிழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இவ்விழாவில் மத வேறுபாடு இன்றி இன்றும் பலர் பங்கேற்று வருகின்றனர்.
திருவிழா குறித்து அருட்தந்தை மைக்கேல்
தேசிய அளவில் கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலமாக விளங்கி வரும் சென்னை புனித தோமையார் மலையில் வீற்றிருக்கும் எதிர்நோக்கிய அன்னையின் பெருவிழா கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 18-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அன்னையின் திருத்தேர் பவனியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் எதிர்நோக்கிய அன்னையின் சிறப்புகள் பற்றியும், அங்கு நடந்த பல அற்புதங்கள் குறித்தும் திருத்தலத்தின் அதிபரும், பங்குத்தந்தையுமான அருட்தந்தை மைக்கேல் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதில் இங்கு எதிர்நோக்கிய அன்னையின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தமுறை 501-ஆம் ஆண்டு திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்கிறோம். இந்த நிகழ்வு அன்னையை காணவரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இறை ஆசீரை வழங்கும் திருவிழாவாக இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்று பக்தர்களும் திருப்படிகள் வழியாக இந்த திருமலையை கடந்து வந்து அன்னையை தரிசித்து ஆசீ பெற்று செல்கிறார்கள். திருத்தூதர் தோமாவால் வடிக்கப்பட்ட கற்சிலுவை இந்த திருத்தலத்தின் பிரதான பீடத்தில் அமைந்துள்ளது. இந்த கற்சிலுவையில் 16-ஆம் நூற்றாண்டில் டிசம்பர் 18-ஆம் தேதி அன்று துவங்கி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு அளவிற்கு ரத்தம் வடிந்த வரலாறு இருக்கின்றது.
திருத்தேரில் காட்சியளித்த அன்னை மரியா மற்றும் கிறிஸ்துமஸ் குடில்
அதனால்தான் ஏசுவை எதிர்நோக்கிய அன்னையின் திருவிழாவாகவும், தோமா வடித்த இந்த கற்சிலுவை ரத்தம் சொரிந்த புனித மற்றும் பரிசுத்த நாளாகவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருவிழாவுக்கு முன்பாக 17-ஆம் தேதி அன்னையின் திருத்தேர் பவனி நடத்தப்பட்டு அன்னைக்கு நன்றி காணிக்கை செலுத்தப்படுகிறது. இங்கே வருகின்ற கோடிக்கணக்கான பக்தர்கள் பல்வேறு தேவைகளுக்காக ஜெபிப்பதுண்டு. மாதாவால் அந்த ஜெபங்கள் கேட்கப்பட்டு அதற்கு சாட்சி சொல்லும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு கத்தோலிக்க திருஅவையால் திருத்தந்தை பிரான்ஸிசால் யூபிலி ஆண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருப்பயணிகள் நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். ஏழை, எளியவர்கள், பல்வேறுவிதமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என அனைவரும் நலமான வாழ்வை வாழ்வார்கள் என்ற நம்பிக்கை தரும் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதையொட்டியே இந்த ஆண்டு முழுவதும் திருவிழாக்களும் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
கிறிஸ்து பிறப்பை எதிர்நோக்கி மக்கள்
ஏசு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆசைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள் என்பது அதிகமாகவே இருக்கும். அதிலும் ஒரு மனிதனுக்கு பிரச்சினைகள் அதிகமாகும் போதுதான் அவனின் வேதனைகளை கொட்டித்தீர்க்க, ஆறுதல் தேட ஒருவரை நாடுவான். அப்படி அவன் முதலில் தேடும் நபர் இறைவனாகத்தான் இருக்கும். இதில் மதங்களை கடந்து ஒவ்வொருவருக்கும் விருப்பமான கடவுள் என்று ஒருவர் இருப்பார். அப்படி எல்லா மதத்தினருக்கும் பிடித்த, அனைவரும் தேடும் ஒருவராக இருப்பவர் மேரி மாதாதான். இவ்வுலகில் நம் வேண்டுதல்கள், தேவைகள், எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்து அதை உரிய நேரத்தில் நாமே எதிர்பார்க்காத வகையில் தரக்கூடியவர் மேரி மாதாதான். அதனால்தான் மதங்களை கடந்தும் அவரை நேசிக்க கூடியவர்கள், தேடி செல்ல கூடியவர்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். அந்த வகையில், சென்னை தோமையார் மலையில் வீற்றிருக்கும் எதிர்நோக்கிய அன்னையின் முன்பு தங்கள் வேண்டுதல்களை, தேவைகளை கேட்டுப் பெறுவதற்காக ஏராளமான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். அவர்கள் கேட்கும் வேண்டுதல்களும் உடனே நிறைவேறி நன்றி காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் எதிர்நோக்கிய அன்னையின் திருவிழாவின் போது பல்வேறு கோரிக்கைகளோடு மக்கள் தங்கள் கைகளில் எதிர்நோக்கிய அன்னையை ஏந்தியபடி வந்து தங்களது வேண்டுதல்களை கோரிக்கைகளாக வைத்தது மட்டுமின்றி நன்றி காணிக்கைகளையும் செலுத்தினர். கிறிஸ்துவின் வருகையை அன்னை மட்டுமின்றி தாங்களும் எதிர்நோக்கி காத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறிய அவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.