மகா சிவராத்திரியை எதற்காக கொண்டாடுகிறோம்? எப்படி உருவானது சிவராத்திரி?
பிரம்மா, விஷ்ணு உட்பட அனைத்து தேவர்களும், முனிவர்களும் பாடி துதிக்க, ஈசன் மனம்குளிர்ந்து, அனைவருக்கும் அண்ணாமலையாய், அருணாச்சல லிங்கமாய் காட்சியளித்தார். இந்த அருட்பெரும் ஜோதியான பேரொளியை பார்த்த அனைவரின் ஆணவமும் அடங்கிய நாள்தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம், சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம் என்று சொல்லுவர். ஏனென்றால் இந்த இரண்டு விரதமுமே இரவுநேரத்தில் கடைபிடிக்கக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் மிகப்பெரிய விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மகா சிவராத்திரியானது ஆண்டுக்கு ஒருமுறைதான் வரும். அதாவது ஆண்டுதோறும் மாசிமாதம் கிருஷ்ணபட்ச என்று சொல்லக்கூடிய தேய்பிறை சதுர்த்தசியன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளானது பிப்ரவரி 26ஆம் தேதி காலை 11:08க்கு தொடங்கி 27ஆம் தேதி காலை 8:54க்கு முடிகிறது. சிவராத்திரி விரதம் என்றால் என்ன? இந்த விரத்தத்தில் 5 வகைகள் இருக்கின்றன. அவை என்னென்ன? இந்த விரத்தின் சிறப்புகள் என்னென்ன? சிவராத்திரியை எப்படி வழிபட வேண்டும்? இதனால் நமக்கு கிட்டும் பலன்கள் என்னென்ன? பார்க்கலாம்.
சிவராத்திரி என்றால் என்ன?
சிவனுக்கு உகந்த இரவு சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது. இந்த இரவில் லிங்கத்துக்கு பூஜை செய்து வழிபட்டால் சிவன் மனம் மகிழ்ந்து குளிர்வார் என்பது நம்பிக்கை. எதனால் இந்நாள் சிறப்பு பெறுகிறது என்று பார்த்தோமானால் இதற்கு பின்னால் ஒரு புராண கதை இருக்கிறது. படைப்பின் கடவுளான பிரம்மாவுக்கு, தான் மட்டும் உயிர்களை படைக்காவிட்டால் உலகில் இயக்கம் ஏது? என்று ஒருநாள் திடீரென சந்தேகம் எழுந்தது. அதனால் தனக்குள் ஆணவம் எழவே, விஷ்ணுவை சந்தித்து இதுகுறித்து விவாதிக்க சென்றார். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விஷ்ணுவை எழுப்பி, நான் மட்டும் உயிர்களை படைக்காவிட்டால் உனக்கு ஏது காத்தல் தொழில்? என்று ஆணவத்துடன் கூற, கோபத்தில் வெகுண்டெழுந்தார் விஷ்ணு. இருவருக்குமிடையே ஆரம்பித்த சொற்போரானது மிகப்பெரிய போராக மாறியது. இதனால் அனைத்து அண்டசராசரங்களும் நடுநடுங்க, தேவர்களும், சித்த முனிவர்களும் தங்களை காக்கும்படி சிவனை சரணடைந்தனர். தீவிர போரில் ஈடுபட்டிருந்த பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே மாபெரும் பேரொளி தோன்றியது. ‘எவர், சிவனின் அடி முடியை கண்டடைகிறாரோ அவரே பெரியவர்’ என்று கூறி அந்த பேரொளி மறைய, இருவரும் வெவ்வேறு அவதாரங்கள் எடுத்து சிவனின் அடி முடியை கண்டறிய புறப்பட்டனர். அன்னப்பறவை அவதாரம் எடுத்த பிரம்மா வானில் பறக்க, வராக அவதாரம் எடுத்த விஷ்ணு பூமியை குடைந்தார். இருவராலும் ஈசனின் அடி முடியை கண்டறிய முடியவில்லை என்ற சூழ்நிலையில், விஷ்ணு, ஈசனை சரணடைந்தார். ஆனால், பிரம்மாவோ பொய் சொல்லியாவது தன்னை பெரியவர் என்று நிரூபிக்க எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் ஈசனின் தலைமுடியிலிருந்து விழுந்த தாழம்பூவை கண்டார். தான் ஈசனின் அடி முடியை கண்டதாக, தாழம்பூவை பொய் சாட்சி சொல்லும்படி பிரம்மா கெஞ்சினார். பூவும் ஒத்துக்கொண்டது.
பிரம்மா மற்றும் விஷ்ணுவின் ஆணவத்தை அடக்கிய ஈசன்
அக்னி பேரொளியான ஈசனிடம் சென்ற பிரம்மா, தங்களின் அடி முடியை தான் கண்டதாக கூற, தாழம்பூவும் ஆமாம் என்று பொய் சாட்சி கூறியது. இதனால் ஈசனுக்கு கோபம் உச்சிக்கேறியது. என்னிடம் பொய் கூறிய உனக்கு இவ்வுலகில் கோவில்களும் வழிபாடுகளும் கிடையாது என்று பிரம்மனை சபித்ததோடு மட்டுமல்லாமல், நீதி தவறியதால் உன்னை இனிமேல் யாரும் பூஜைக்கு பயன்படுத்த மாட்டார்கள் என பொய்ச்சாட்சி கூறிய தாழம்பூவையும் சபித்தார். இருந்தாலும் சிவனின் கொந்தளித்த கோபம் அடங்கவில்லை. உடனே பிரம்மா, விஷ்ணு உட்பட அனைத்து தேவர்களும், முனிவர்களும் பாடி துதிக்க, ஈசன் மனம்குளிர்ந்து, அனைவருக்கும் அண்ணாமலையாய், அருணாச்சல லிங்கமாய் காட்சியளித்தார். இந்த அருட்பெரும் ஜோதியான பேரொளியை பார்த்த அனைவரின் ஆணவமும் அடங்கிய நாள்தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
இதைத்தான் கந்த புராணத்தில் ‘அரியும், யானும் முன்தொடும் அவ்வனற்கிரி அலை
கிரியெனும் படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த
இரவே சிவராத்திரி ஆயினது’ என்று பிரம்மா கூறுகிறார்.
இதுபோக, தேவர்களும், அசுரர்களும் அமுதம் வரவைக்க, திருப்பாற்கடலை கடைந்தபோது, ஆலகால விஷம் அதிலிருந்து தோன்ற, காக்கும் கடவுளான பெருமாள் அந்த விஷத்தை உண்டு உலகை காத்தார். சதுர்த்தசியான இந்நாளில் தேவர்கள் சிவனுக்கு பூஜை செய்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் உலகம் அழியாமல் இருக்க, உலகை சூழ்ந்திருந்த காரிருளுக்கு நடுவே, பார்வதி தேவி, ஆகமங்களில் கூறியதன்படி, சிவபெருமானை நான்கு காலம் வழிபட்டாள். அப்படி வழிபடும்போது, ‘இந்நாளில் நான் வழிபட்டதைப்போன்று யாரெல்லாம் வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் தரவேண்டும்’ என வேண்டிக்கொண்டாள். அப்போது சிவனும் அவள்முன் தோன்றி அப்படியே ஆகட்டும் என அருள்பாலித்தார். அதன்படிதான் சிவராத்திரியன்று நான்கு காலங்கள் பூஜை செய்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
தன்னிடம் பூஜித்த பார்வதி தேவிக்கு அருள்பாலித்த சிவபெருமான்
சிவராத்திரியின் வகைகள்
சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி என 5 வகைகள் இருக்கின்றன. யோக சிவராத்திரி என்பது யோகிகள் சிவனுக்கென்று ஒரு இரவை ஒதுக்கி வழிபடும் ராத்திரி. நித்திய சிவராத்திரி தினமும் வரக்கூடியது. 15 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடியது பக்ஷ சிவராத்திரி. மாதந்தோறும் வருவது மாச சிவராத்திரி. அதுவே வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைக்கு முதல்நாள் சதுர்த்தசியில் வருவது மகா சிவராத்திரி. உணவு மற்றும் தூக்கத்தை மட்டுமல்லாமல் ஐம்புலன்களையும் அடக்கவேண்டும் என்பதே இந்த மகா சிவாராத்திரியின் நோக்கமாகும். கோபம் குளிர்ந்த சிவன் ஆனந்த தாண்டவம் ஆடிய இந்த நள்ளிரவில் அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால பூஜை நடத்தப்படும். காலையில் குளித்துவிட்டு விரதம் இருந்து 4 கால பூஜைகளில் கலந்துகொண்டு சிவ நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். அது முடிந்தபிறகு வீட்டிற்கு வந்து உணவு உண்டு விரதத்தை முடிக்கவேண்டும். குறிப்பாக, இந்த பூஜையில் வில்வ இலைகளால் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யப்படும். அதுபோக, பால், நெய், தேன், இனிப்புகள் மற்றும் பழங்கள் போன்றவை சிவனுக்கு படைக்கப்படும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதன்மூலம் ஆன்மா தூய்மையடைவதுடன், நீண்ட ஆயுளும், செல்வங்களும் வந்துசேருவதுடன், விருப்பங்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மகா சிவராத்திரியன்று லிங்கத்துக்கு செய்யப்படும் சிறப்பு பூஜை
சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் பலன்கள்!
‘மகா’ என்றால் பாவத்திலிருந்து விடுபடுவது என்று பொருள். எனவே மகா சிவராத்திரியன்று விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் போகும். வருடத்தில் ஒருமுறை சிவராத்திரியன்று விரதம் இருந்தால் நூறு அசுவமேத யாகம் செய்த பலனையும், பலமுறை கங்கா ஸ்நானம் செய்த பலனையும் தரும். இந்நாளில் சிவனுக்கு கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவை கலந்து தயாரிக்கப்படும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது சிறப்பு. சனிபிரதோஷ தினத்தன்று வருகிற சிவராத்திரிக்கு கவுரிசங்கரமண மகா சிவராத்திரி என்று பெயர். இந்நாளில் ஈசன் தனது மனைவி பார்வதி தேவியுடன் காட்சியளிப்பார் என்பதால் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும். மகா சிவராத்திரிக்கு பெயர்போன சில சிறப்பு கோவில்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஊத்துக்கோட்டை அருகிலுள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் வீற்றிருக்கிறார். அங்கு சிவராத்திரி தினத்தன்று அவருக்கு வெள்ளை அங்கி உடுத்தப்படும் என்பதால் சிறப்பு தரிசனம் பெறலாம். அதேபோல், கஞ்சனூரில் 2 தட்சிணாமூர்த்திகள் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து வீற்றிருப்பதால் சிவராத்திரியன்று இவர்களை வழிபட சிவஞானம் கிட்டும். சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்ற பொருள் இருக்கிறது. எனவே ஒருவர் ‘சிவ சிவ’ என்று எந்த அளவிற்கு இந்த நாமத்தை உச்சரிக்கிறாரோ அந்த அளவிற்கு நன்மைகள் கிடைக்கும். சிவராத்திரியன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படித்தால் கூடுதல் சிறப்பு.