பசுமை நர்த்தனமாடும் சொர்க்க பூமி வாகமன்! குறைந்த பட்ஜெட்டில் சுற்றிப்பார்க்கலாம் வாங்க...

கேரளாவில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில், இளைஞர்களையும், மலையேற்ற சாகச விரும்பிகளையும் பெரிதும ஈர்ப்பது மூணார், வயநாடு, வாகமன், பொன்முடி, தேக்கடி உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள் தான்.அதில் கேரளாவில் உள்ள பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்று வாகமன். இந்த நகரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல இடங்கள் உள்ளன

Update:2024-04-23 00:00 IST
Click the Play button to listen to article

கேரளாவில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில், இளைஞர்களையும், மலையேற்ற சாகச விரும்பிகளையும் பெரிதும் ஈர்ப்பது மூணார், வயநாடு, வாகமன், பொன்முடி, தேக்கடி உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள்தான். அதில் கேரளாவில் உள்ள பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்று வாகமன். இந்த நகரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல இடங்கள் உள்ளன. வித விதமான வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களும், மரம் விட்டு மரம் தாவும் குரங்குகளும் நிறைந்திருக்கும் மலைப்பாதை வழியே ட்ரெக்கிங் செல்வதென்பது இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரவசம் கலந்த மகிழ்ச்சியளிக்கும் இனிய அனுபவமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் தென் இந்தியாவில் ட்ரெக்கிங் செய்ய அற்புதமான இடங்களில் வாகமனும் ஒன்றாகும். இந்த கட்டுரையில் வாகமனிலுள்ள இடங்களை பற்றியும் அதன் சிறப்பம்சத்தை பற்றியும் காணலாம்.

குருசுமலை :

வாகமனில் முக்கியமான இடங்களில் குருசுமலையும் ஒன்று. கோட்டயத்தின் வாழிக்கடவில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து அல்லது டாக்ஸி மூலம் இங்கு செல்லலாம். குருசுமலை என்பது 'குரிசு' மற்றும் 'மலா' என்கிற இரண்டு மலையாள வார்த்தைகளின் கூட்டில் உருவானது. 'குரிசு' அதாவது குறுக்கு மற்றும் 'மலா' என்றால் மலை. இம்மலை கத்தோலிக்க மட்டும் நஸ்ரனி கிறிஸ்தவ மக்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. புனித வெள்ளி போன்ற புனித தினங்களில், யாத்ரீகர்கள் இந்த மலையின் உச்சியிலுள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையை வழிபடுவர். கிறிஸ்தவ பண்டிகைகளின்போது இந்த மலை வண்ண ஒளியால் மிளிரும். 


கிறிஸ்தவ மக்களின் புனித ஸ்தலமாக விளங்கும் குருசுமலை 

மர்மலா நீர்வீழ்ச்சி :

கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய அருவி இது. 60 மீ உயரத்தில் இருந்து விழும் மர்மலா நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகள் மற்றும் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. வாகமனின் தெற்கே தோட்டங்களின் நடுவே சிறிது தூரம் நடைபயணம் செய்தால் மனதை கொள்ளையடிக்கும் மர்மலா நீர்வீழ்ச்சியை அடையலாம். வாகமனுக்கு உட்பட்ட அடர் வனப் பகுதியில் உருவாகும் நீர் பெருகி மீனாட்சி என்னும் காட்டாறாக உருவாகிறது. நீண்ட தூரம் பயணத்திவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடுவதற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் இங்கு அதிகளவில் குவிகின்றனர். கோடைகாலத்திற்கு செல்ல இந்த நீர்வீழ்ச்சியை விட சிறந்த இடம் வேறேதும் இருக்க முடியாது. நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 


மனதை கொள்ளைகொள்ளும் மர்மலா நீர்வீழ்ச்சி 

முண்டகாயம் காட் :

முண்டகாயம் காட் வாகமனில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்று. இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம் மீனச்சில் என்னும் ஆற்றின் கரையில் உள்ளது. இந்த பகுதியில் மலையேற்றம் செய்தும், பறவைகளை ரசித்தும் மகிழலாம். பெரும்பாலான நாட்களில், முண்டகாயம் காட் நீல நிற சிகரங்கள் போல காட்சியளிக்கும். மேலும் இங்கிருந்து சாம்பல் நிற வானத்துடன், வாகமனில் தோன்றும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமானத்தை ரசிக்கலாம். இங்கு கடினமான விஷயம் என்னவென்றால், வழியில் இருக்கும் பாறைகள் மற்றும் சாதகமற்ற சாலை. இந்த இடம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் எரட்டுப்பேட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


இயற்கை எழில் கொஞ்சும் முண்டகாயம் காட் 

வாகமன் பைன் காடு :

வாகமனில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான இடங்களில் பைன் காடுகளும் ஒன்றாகும். பைன் காடுகள், புகைப்படம் எடுத்து மகிழ சிறந்த இடமாகும். இந்த பைன் காடுகள் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளன. நகர மையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பைன் காடுகள் அமைந்துள்ளன. பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மூலமாகவோ அல்லது நகர மையத்திலிருந்து டாக்ஸி மூலமாகவோ இங்கு எளிதில் செல்லலாம்.


பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ள வாகமன் பைன் காடுகள் 

இடுக்கி அணை :

இடுக்கி அணை வாகமனில் மிகவும் பிரபலம். இந்தியாவின் மிக உயரமான அணைகளில் இடுக்கி அணையும் ஒன்று. இங்கு வரும் பார்வையாளர்கள் நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்யலாம். மேலும் மலையேற்றம் சென்று பிரமிக்க வைக்கும் காட்சிகளை அனுபவிக்கலாம். இந்த அணை பல வகையான பறவைகளின் இருப்பிடமாக இருப்பதால், பறவைகளை பார்த்து ரசிப்பதற்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த சுற்றுலா இடமாக இது இருக்கும். கேரளா மற்றும் அருகிலுள்ள மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும்,  இடுக்கியில் இருந்தும், சாலை வழி பயணமாக இங்கு எளிதாக சென்றடையலாம்.


கேரளாவின் மிகப்பெரிய அணை - இடுக்கி 

கூகுள் மேப் உதவியுடன் வாகமன் செல்ல விரும்புவோருக்கு...

Full View

Tags:    

மேலும் செய்திகள்