"ராணியின் சாபத்தால் மண்ணில் புதைந்த கோவில்கள்" - மர்மம் நிறைந்த தலக்காடு!

கர்நாடகா மாநிலம் அழகான நீர்வீழ்ச்சிகள், பசுமையான காடுகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளைப் கொண்டது. ஆனால், இந்த மாண்டியா மாவட்டத்தில் உள்ள தலக்காட்டில் உள்ள மினி பாலைவனத்தின் மறைவான ரகசியத்தை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த இடத்தில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன, அவை இப்போது மணலுக்கு அடியில் புதைந்துள்ளன என்று கூறப்படுகிறது.இங்கு தொடர்ந்து குன்றுகள் உருவாகி, ஒரு மைல் நீளத்துக்கு நீண்டு, பெரும்பாலான கோயில்களை புதைத்து வைக்கின்றன என்று இன்னொரு புறம் கூறுகின்றனர். பல முயற்சிகளுக்கு பிறகு எப்படியோ கீர்த்தி நாராயணா கோவில் வெற்றிகரமாக தோண்டியெடுக்கப்பட்டது.

Update: 2024-09-09 18:30 GMT
Click the Play button to listen to article

கர்நாடக மாநிலம் அழகான நீர்வீழ்ச்சிகள், பசுமையான காடுகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளை கொண்டது. ஆனால் மாண்டியா மாவட்டத்தின் தலக்காட்டில் உள்ள மினி பாலைவனத்தின் மறைவான ரகசியத்தை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த இடத்தில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன; அவை இப்போது மணலுக்கு அடியில் புதைந்துள்ளன. இங்கு தொடர்ந்து குன்றுகள் உருவாகி, ஒரு மைல் நீளத்துக்கு நீண்டு, பெரும்பாலான கோவில்களை மண்ணில் புதைத்துள்ளது. இதற்கு ராணி ஒருவரின் சாபமே காரணமாக கூறப்படுகிறது. அப்படி இந்த இடத்தில் என்னதான் நடந்தது? இந்த தலக்காடு பகுதி சாபம் நிறைந்த இடமாக இன்றளவும் கருதப்படுவது ஏன்? என இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.


கர்நாடகாவின் சிறப்பை விளக்கும் தலக்காடு 

தலக்காட்டின் வரலாறு :

மைசூர் மாவட்டத்தில் காவேரி ஆற்றங்கரையில் உள்ள தலக்காடு என்னும் மர்மமான இடம் பெங்களூரில் இருந்து 140 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. தலக்காட்டின் வரலாறு கிபி 2ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. மன்னன் ஹரிவர்மாவால் நிறுவப்பட்டு கங்கா வம்சத்தின் கட்டுப்பாட்டில் இந்த இடம் இருந்துவந்தது. கங்கர்கள் இந்த இடத்தை 800 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். அந்த நீண்ட காலத்தில் வணிகம், கலை மற்றும் கலாச்சாரம் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் செழித்து வளர்ந்தது. பல நூற்றாண்டுகளாக, சோழர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் மைசூர் ராஜ்ஜியத்தின் வடேயர்கள் உட்பட பல்வேறு வம்சங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்டது தலக்காடு. தலக்காட்டின் ஒவ்வொரு வம்சமும் அதன் கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வடிவமைத்து, நகரத்தில் அதன் அடையாளத்தை விட்டுச்சென்றன. தனித்துவமாக நீண்டு செல்லும் குன்றுகள் தலக்காட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.


தலக்காட்டில் மண்ணில் புதைந்த நிலையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட கோவில் 

பஞ்சலிங்கம் நிறைந்த தலக்காடு :

தலக்காடு ஏழு நகரங்களையும் ஐந்து மடங்களையும் கொண்டது. ஆற்றின் எதிர்புறத்தில் உள்ள மயிலங்கி நகரம் ஒரு பெரிய இடமாக இருந்தது மற்றும் ஜனநாதபுரம் என்ற பெயரைக் கொண்டிருந்தது. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, இது ஹொய்சாளர்களின் வசம் இருந்து பின்னர் விஜயநகர மன்னர்களிடம் சென்றது. அதுமட்டுமில்லாமல் அர்கேஸ்வரா, வாசுகிஷ்வரா, சைகதேஸ்வரா, மல்லிகார்ஜுனா ஆகிய நான்குடன் வைத்யேஷ்ரா கோவிலும் இங்கு பஞ்சலிங்கங்களாக உள்ளன. இந்த ஐந்து லிங்கங்களும் சிவனின் ஐந்து முகங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. பாடலேஸ்வர சிவலிங்கம் பகலில் நிறம் மாறும் என்று கூறப்படுகிறது (காலை சிவப்பு, மதியம் கருப்பு, மாலையில் வெள்ளை). அதன்பிறகு பஞ்சலிங்க தரிசனம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய யாத்திரையாகும். பக்தர்கள் முதலில் அருகில் உள்ள கோகர்ண தீர்த்தத்தில் நீராடி, கோகர்ணேஸ்வரரையும், சண்டிகாதேவியையும், வைதீஸ்வரரையும் வணங்கி, காவேரியின் வடகிழக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நீராடி, அர்கேஸ்வரர், பாடலேஸ்வரர், மரலேசுவரர், மல்லிகார்ஜுனரை வணங்கித் திரும்ப வேண்டும் என்பது மரபு. ஒவ்வொரு வழிபாட்டிற்கு பிறகும் வைதீஸ்வரரை நோக்கி, இறுதியாக கிருத்திநாராயணனை வணங்கி, ஒரே நாளில் யாத்திரையை முடிப்பார்கள்.


பாலைவன நகரத்தில் காவேரி நதி 

தலக்காட்டின் சாபம் :

"தலக்காடு சாபம்" என்று அழைக்கப்படும் இந்த மணல் நிலப்பரப்பு 17 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட ராணி அலமேலம்மாவால் உச்சரிக்கப்பட்ட சாபத்தின் விளைவு என்று கூறப்படுகிறது. புராணத்தின் படி, தலக்காடு நகரத்தை ராணி சபித்துள்ளார். சாபத்தின் காரணமாக, பழைய நகரமான தலக்காடு, மணலின் அடியில் கிட்டத்தட்ட ஒரு மைல் நீளத்திற்கு முற்றிலும் புதைந்துகிடக்கிறது. இரண்டு கோபுரங்களின் உச்சி மட்டும் வெளியே தெரியும். முக்கியமாக தென்மேற்குப் பருவமழையின் போது, ​​மூன்று பக்கங்களிலும் மணல் அழுத்தும் ஏற்படும்போது, ​​மணல் மலைகள் ஆண்டுக்கு 9 அல்லது 10 அடிகள் என்ற அளவில் நகரத்தை நோக்கி முன்னேறும். தலக்காட்டில் வசிப்பவர்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டுவிட்டு மேலும் உள்நாட்டிற்கு பின்வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படித்தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கோவில்கள் மணலுக்குள் புதைந்து கிடக்கின்றன.


 சுற்றுலாத்துறையில் மிக பெரிய எழுச்சியைக் கண்டுள்ள தலக்காடு 

சுற்றுலா பயணிகளை ஈர்த்த தலக்காடு :

சமீப ஆண்டுகளில், தலக்காடு சுற்றுலாத்துறையில் மிக பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது. இந்த இடத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளாமான பார்வையாளர்கள் வருகின்றனர். நகரின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், நிலையான சுற்றுலா நடைமுறைகளை மேம்படுத்தவும், உள்ளூர் அரசாங்கம் முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. குன்றுகளைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக, தலக்காடு தொடர்பான பாரம்பரியங்கள் மற்றும் கதைகளைப் பாதுகாப்பதில் உள்ளூர் சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்கால சந்ததியினர் அதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


கலாச்சார முக்கியத்துவத்தை பாதுகாக்கும் உள்ளூர்வாசிகள் 

தலக்காட்டிற்கு எப்படி செல்வது?

தலக்காடு அனைத்து ஆன்மிகவாதிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா தலமாகும். தலக்காட்டிற்கு மைசூரு (45 கிமீ) அல்லது பெங்களூர் (140 கிமீ) வழியாக எளிதில் சென்றடையலாம். தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், அதாவது KSRTC க்கு சொந்தமான பேருந்துகள் நகரங்களுக்கு இடையே தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அப்படி இல்லையென்றால் மைசூரில் இருந்து டாக்ஸியில் தலக்காட்டிற்கு செல்லலாம்.

தலக்காட்டிற்கான வரைபட வழிகாட்டி

Full View

Tags:    

மேலும் செய்திகள்