"தென்னகத்து காஷ்மீர்" என்றழைக்கப்படும் "மூணாறில்" பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!

மூணாறு, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஒரு மலைவாசஸ்தலம், வருகைத் தருவதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடமாகும். முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும் மூன்று மலை நீரோடைகளின் சங்கம இடத்தில் அமைந்துள்ளது - மேலும், ”மூணாறு” என்ற வார்த்தையும் மலையாளத்தில் மூன்று ஆறுகள் என்று பொருள்படுகிறது. தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறில் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் குளுகுளுவென இருக்கும். வெயில் காலத்தில் மட்டும் கொஞ்சம் வெயில் இருக்கும். ச

Update:2024-05-21 00:00 IST
Click the Play button to listen to article

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களில் ஒன்று "மூணாறு". இங்கு அறிந்துகொள்வதற்கும், அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்ட ரம்மியமான இடங்கள் ஏராளம் உள்ளன. முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும் மூன்று மலை நீரோடைகளின் சங்கம இடத்தில் அமைந்துள்ளது "மூணாறு". "மூணாறு" என்ற வார்த்தை மலையாளத்தில் மூன்று ஆறுகள் என்று பொருள்படுகிறது. தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறில் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் குளுகுளுவென இருக்கும். வெயில் காலத்தில் மட்டும் கொஞ்சம் வெயில் இருக்கும். சமவெளி அளவிற்கு வெயில் இருக்காது என்றாலும் ஓரளவு வெயில் இருக்கும். இந்த மலைவாசஸ்தலம் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. தற்போது கேரளாவில் சீசன் டைம் தொடங்கியுள்ளது. ஆதலால் இந்த கட்டுரையில் மூணாறில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி காணலாம்.

ஆடுக்காடு நீர்வீழ்ச்சி :

மலைகள் மற்றும் காடுகளுக்கு நடுவே இந்த ஆடுக்காடு நீர்வீழ்ச்சி மறைந்திருக்கிறது. இப்படி மறைந்திருக்கும் அழகிய நீர்வீழ்ச்சியைக் காண உலகிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் இருக்கின்ற குளத்தில் பயணிகள் நீராடி மகிழலாம். இங்கு பார்க்கிங் வசதியும் இருக்கின்றது. அதனால் நீங்கள் எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் இந்த இடத்திற்கு செல்லலாம். அதுமட்டுமில்லாமல் இங்கு அனுமதி இலவசம்தான்.


மூணாறின் அழகிய ஆடுக்காடு நீர்வீழ்ச்சி 

டாப் ஸ்டேஷன் :

6,700 அடிக்கு மேல் உள்ள மூணாறின் மிக உயரமான சிகரம் இந்த டாப் ஸ்டேஷன். ட்ரெக்கிங் செல்ல விரும்புவோருக்கு இந்த இடம் சொர்க்கம் என்றே கூறலாம். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகு மற்றும் கீழே உள்ள பள்ளத்தாக்கின் அழகான காட்சியை இந்த சிகரத்திலிருந்து காணலாம். இந்த சிகரம் ட்ரெக்கிங் செல்பவர்களிடையே மிகவும் பிரபலமானது. இப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீல குறிஞ்சி மலர்கள் பூக்கும். மூணாறுக்கு சென்றால் தவறாமல் டாப் ஸ்டேஷனிற்கு சென்று வாருங்கள். இந்த இடத்தில் பார்க்கிங் வசதி இருக்காது. அதேநேரம் அனுமதி இலவசம்தான்.


ட்ரெக்கிங் செல்ல விரும்புவோரின் சொர்க்கபூமி - டாப்ஸ்டேஷன் 

டாடா டீ மியூசியம் :

தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்று வரும்போது மூணாறு தனக்கென்று ஒரு மரபினைக் கொண்டிருக்கிறது. மூணாறு, தேயிலைத் தோட்டத்திற்கு மிகவும் பிரபலமானது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த அருங்காட்சியகம் மூணாறில் இருக்கின்றது. ஆங்கிலேயர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? மூணாறில் அவர்கள் நடத்திய கொடுமைகள் என்னென்ன? என்பதையெல்லாம் இந்த டாடா டீ மியூசியத்தில் நீங்கள் காணலாம். இங்குதான் பிரபல டீ தூளான கண்ணன் தேவன் டீ தூள் தயாரிக்கப்படுகின்றது. டாடா டீயின் நத்தன்னி தோட்டத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் மூணாறை தேயிலை நிலமாக மாற்றப் பயன்படுத்திய நினைவுச் சின்னங்கள், புகைப்படங்கள் மற்றும் பழைய இயந்திரங்கள் என்று பார்த்து ரசிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இந்த அருங்காட்சியகம் நகரத்தின் மைய பகுதியில் அமைந்திருப்பதால், பயணத்திற்கு இது மிகவும் எளிதானது. அதுமட்டுமில்லாமல் இங்கு பார்க்கிங் வசதியும் உள்ளது. மூணாறுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை பார்க்க தவறுவதில்லை.


டாடாவின் அழகிய தேயிலை மியூசியம் 

இரவிகுளம் தேசிய பூங்கா :

இரவிகுளம் தேசியப் பூங்கா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா, நீலகிரி லங்கூர், உலகின் மிகப்பெரிய அந்துப்பூச்சிகள், புலிகள், சிறுத்தைகள் என ஏராளமான விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் யானைகளின் எண்ணிக்கை இங்கு அதிகமாக காணப்படுகிறது. மூணாறுக்கு சென்றாலே அடிக்கடி நீங்கள் யானைகளை சாலைகளில் காணலாம். இரவிகுளம் தேசிய பூங்காவில் அனைவருக்கும் அனுமதி இலவசம் கிடையாது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி இலவசம். 


யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இரவிகுளம் தேசியப் பூங்காவின் காட்சி

குண்டலா ஏரி :

குண்டலா ஏரி மூணாறில் உள்ள மிக அழகான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மலைகளால் சூழப்பட்ட குண்டலா அணையால் உருவாக்கப்பட்ட ஒரு அழகான செயற்கை ஏரி இது. மேலும் பூமியில் சொர்க்கத்தின் முழுமையான உருவகமாக இந்த ஏரி திகழ்கிறது. குண்டலா ஏரி, ஷிகாரா மற்றும் மிதி படகு சவாரிக்கு பெயர் பெற்றது. இந்த ஏரியில் படகு சவாரி செய்வது மூணாறில் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களில் ஒன்றாகும். 


படகு சவாரிக்கு பெயர்போன குண்டலா ஏரி 

களரி க்ஷேத்ரா :

களரிபயிற்று, உலகின் மிகப் பழமையான தற்காப்புக் கலை. குறிப்பாக இந்த கலை தென்னிந்தியாவில் உருவானது. இந்த சண்டை முறை மூணாறில் களரி க்ஷேத்திரத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்கு களரி கலையை கற்பிக்கவும் செய்கின்றனர். கேரளாவில் வேரூன்றிய வரலாற்றைக் கொண்ட கதகளி நடன நிகழ்ச்சிகளுடன், களரிபயிற்று நிகழ்ச்சியும் இங்க நாள்தோறும் நடைபெறுகிறது. மூணாறில் உங்கள் மாலைப் பொழுதைக் கழிக்க இது சிறந்த இடமாகும்.


 களரி க்ஷேத்திரத்தில் நடைபெறும் களரிபயிற்று 

பொத்தமேடு வியூ பாயிண்ட் :

மலையேற்றம் செய்பவர்கள் மற்றும் சாகசக்காரர்கள் மத்தியில் பொத்தமேடு வியூ பாயிண்ட் மிகவும் பிரபலம். பசுமையான தேநீர், காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களை இந்த வியூ பாயிண்டிலிருந்து கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு நிலப்பரப்பிலும் உள்ள தோட்டங்கள் உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்கும். இங்கிருந்து சிறந்த காட்சிகளைக் காண சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது இந்த இடத்திற்கு செல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த சிகரம் இரவிகுளம் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ளது. எனவே நீங்கள் இந்த இரண்டு சுற்றுலா தலங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லலாம். ஒட்டுமொத்தமாக, இது மூணாறில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும் , மேலும் மூணாறின் அழகை அதன் சரியான வடிவில் பார்க்க நீங்கள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.


மலையேற்றம் செய்பவர்கள் மற்றும் சாகசக்காரர்களிடையே பிரபலமான பொத்தமேடு வியூ பாயிண்ட்

எக்கோ பாயிண்ட் :

மூணாறின் எக்கோ பாயிண்ட் மிகவும் வேடிக்கையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில் நின்றுகொண்டு நாம் கத்தினால் அந்த சத்தம் எதிரொலிக்கும். இந்த இயற்கை விளையாட்டை நம் மனதிற்கு பிடித்தவர்களோடு விளையாடி மகிழலாம். எக்கோ பாயிண்டில் இருக்கும் ஏரியில் படகு சவாரி கூட செய்யலாம். மேலும் இந்த இடம் மூன்று பக்கங்களிலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டு பார்க்கவே ரம்மியமாக இருக்கும். 


மனதை மயக்கும் எக்கோ பாயிண்ட் வியூ 

பட்ஜெட் மற்றும் பயண திட்டம் :

மூணாறுக்கு இரண்டு வழியில் செல்லலாம். நீங்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்றால் தேனி வழியாக செல்ல வேண்டும். அதுவே கேரளாவை சேர்ந்தவர் என்றால் ஆலப்புழா வழியாக வரவேண்டும். இதை தவிர்த்து இந்தியாவில் பிற மாநிலங்களிலிருந்து வர நினைக்கும் நபர்கள் தேனி வழியாக வருவதே சிறந்தது. பட்ஜெட் என்று எடுத்து கொண்டால் மூணாறில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை செலவாகலாம் (உணவு மற்றும் தங்குமிடம் சேர்த்து). மூணாறுக்கு செல்ல இந்த நேரத்தைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது.

சுற்றுலா இடங்களுடன்கூடிய மூணாறு வரைபடம் :

Full View


Tags:    

மேலும் செய்திகள்