முகப்பரு தழும்பை சரிசெய்வது கடினமா? - சரும நிபுணரிடம் ஓர் அலசல்

முகத்தை சுத்தமாக க்ளென்ஸ் செய்துவிட்டு, மாய்ஸரைசர் தடவி, அப்போதைக்கு உள்ள சரும பிரச்சினைகளுக்கு நிபுணரின் ஆலோசனைபெற்று அந்த சிகிச்சையையும் எடுத்துக்கொண்டாலே சருமம் ஓரளவு க்ளீனாகவே இருக்கும்.

Update:2023-08-08 00:00 IST
Click the Play button to listen to article

இன்றைய இளம் தலைமுறையினர் மட்டுமில்லாமல் அனைத்து வயதினருக்குமே சருமம் குறித்த அக்கறையும், அதனை பராமரிக்க வேண்டுமென்ற எண்ணமும் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால் உணவு பழக்கவழக்கங்கள், தூக்கமின்மை, அதிக ஸ்க்ரீன் பயன்பாடு போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதில், சரும பிரச்சினையும் முக்கியமான ஒன்று. சருமத்தை எப்படி பாதுகாக்கலாம்? எளிமையான முறையில் சருமத்தை பராமரிப்பது எப்படி? என்பது குறித்து விளக்குகிறார் சரும நிபுணர் பூர்ணிமா.

1. சருமத்தை க்ளீனாக வைத்துக்கொள்வது எப்படி?

சருமத்தை க்ளீனாக வைத்துக்கொள்ள என்னென்ன ப்ராடக்ட்ஸ் பயன்படுத்துகிறோம் என்பது விஷயமல்ல. இது அடிப்படை வாழ்க்கைமுறையை பொருத்தது. சாப்பிடும் உணவு, தூக்கம், உடற்பயிற்சி என நாள்முழுவதும் என்ன செய்கிறோம் என்பதை பொருத்தே சருமமும் இருக்கும். உள்ளுறுப்புகளுடைய ஆரோக்கியத்தின் பிரதிபலிப்புதான் சருமம். எனவே க்ரீம்களைவிட நல்ல உணவு அவசியம். சருமத்திற்கு ஏற்றாற்போல் ஒரு நல்ல ஃபேஸ் வாஷ், க்ளென்சர் மற்றும் மாய்ஸரைசர் பயன்படுத்தினாலே போதுமானது. சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது மிக மிக அவசியம். இரவும் அதேபோல் முகத்தை சுத்தமாக க்ளென்ஸ் செய்துவிட்டு, மாய்ஸரைசர் தடவி, அப்போதைக்கு உள்ள சரும பிரச்சினைகளுக்கு நிபுணரின் ஆலோசனைபெற்று அந்த சிகிச்சையையும் எடுத்துக்கொண்டாலே சருமம் ஓரளவு க்ளீனாகவே இருக்கும்.


ஆரோக்கியமான வாழ்க்கைமுறை

2. இயற்கையான முறையில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

உணவில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, புரதச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். தென்னிந்திய டயட் உணவுகளில் புரதச்சத்து என்பது சற்று குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலானோர் சைவம் சாப்பிடுபவராகவும் அல்லது வாரத்தில் ஒருநாள் மட்டுமே அசைவம் சேர்ப்பவராகவும் இருக்கின்றனர். அதற்கு பதிலாக ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் புரதச்சத்தை சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். போதுமான புரதச்சத்து இல்லையென்றால் இன்சுலின் சரியாக சுரக்காது. இன்சுலின் சரியாக சுரக்காவிட்டாலும், பி12, டி3 போன்ற வைட்டமின்கள் குறைபாட்டாலும் சருமம் கருமையாதல், மரு உருவாதல் போன்ற பிரச்சினைகள் வருகிறது.

இதுதவிர, சருமத்திற்கு ஒரு வாழைப்பழ பேக் போட நினைப்பவர்கள், அதனை சாப்பிடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். பழங்களை அரைத்து அதனை முகத்தில் போடுவதால் அதிலுள்ள நன்மைகள் 10% கூட கிடைக்காது. மஞ்சள், எலுமிச்சை, லவங்கம் என பயன்படுத்துபவர்கள் எந்த விகிதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இதனால் நன்மையைவிட தீமையே அதிகம் ஏற்பட்டு, சருமத்தை அதிக சென்சிட்டிவாக மாற்றிவிடும்.


ஆரோக்கியமான உணவுமுறை

3. முகப்பரு தழும்பை சரிசெய்வது எப்படி?

முகப்பரு தழும்பை சரிசெய்வது எப்படி என்பதைவிட அதனை வராமல் தடுப்பது எப்படி என்பதில் முதலில் கவனம் செலுத்தவேண்டும். எந்தவொரு தழும்பாக இருந்தாலும், அதனை 100% நீக்கிவிட முடியாது. பெரும்பாலும் பூப்பெய்தும்போது முகத்தில் பருக்கள் வருவது சகஜம்தான் என்று அதனை பராமரிக்காமல் விட்டுவிடுவார்கள். பருக்கள் வருவது நின்றாலும், அதனால் ஏற்பட்ட தழும்புகளை குணமாக்குவது என்பது கடினம். தழும்புகளை க்ரீம் பயன்படுத்தி சரிசெய்துவிட முடியாது. அதற்கு energy based devices என்று சொல்லக்கூடிய லேசர், மைக்ரோ நீடிலிங் போன்றவற்றை பயன்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். டீனேஜ் சமயத்தில் முகப்பரு வரும்போதே அதற்கு சிகிச்சை எடுப்பதுடன், முகப்பருவை தூண்டக்கூடிய பால் பொருட்கள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.


முகப்பரு தழும்பு

4. ப்ளாக் ஹெட், ஒயிட் ஹெட் எதனால் வருகிறது?

முகப்பருவை பற்றி தெரிந்துகொள்ளும்போது அதன் வகைகளையும் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் ப்ளாக் ஹெட், ஒயிட் ஹெட் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். முகப்பருவில் 4 வகைகள் இருக்கின்றன. பொதுவாக ஒயிட் ஹெட், ப்ளாக் ஹெட்டை கொமிடோன்கள் என்கின்றனர். இதுதான் முதல் நிலை பரு. பிறகு சிறுசிறு பருக்களாக வரும். அடுத்து சீழ் பிடித்த நிலை. கடைசி நிலைதான் கட்டிபோன்று பெரிதாக வரும். சருமத்திலுள்ள எண்ணெய் சுரப்பிகளை ஒருவித புரதக்கூறு அடைத்துக்கொள்வதால் வருகிறது. இதனை ‘பாதோபிஸியாலஜி’ என்கின்றனர். புரதமானது சருமத்தின்மேல் அடைக்கும்போது கருப்பாகவும், சருமத்தின் அடியில் அடைக்கும்போது வெள்ளையாகவும் உருவாகிறது. இதற்கு சாலிசிலிக் ஆசிட் மற்றும் க்ளைகாலிக் ஆசிட் கொண்ட ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் பரு வருவது குறைக்கப்படும்.


ப்ளாக் ஹெட், ஒயிட் ஹெட்

5. இப்போதைய டீனேஜர்கள் அதிகம் கவலைப்படுகிற கண்ணை சுற்றி கருவளையம், சருமம் கருமையாதலுக்கு என்ன தீர்வு?

அதிக சூரிய ஒளியால் சருமம் கருமையாகிறது. எனவே வெளியே செல்லும்போது கட்டாயம் சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும். சன் ஸ்க்ரீனை தேர்ந்தெடுக்கும்போது SPF 30 முதல் 50 வரை இருக்கவேண்டும். சருமத்திற்கு ஏற்ற, இலகுவான சன் ஸ்க்ரீன்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும். Non-comedogenic ப்ராடக்ட்ஸை பயன்படுத்தவேண்டும். இயற்கையாகவே எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள், ஜெல் தன்மையுள்ள சன் ஸ்க்ரீனை பயன்படுத்தவேண்டும். சற்று வயதானவர்கள், க்ரீம் தன்மையுள்ள சன் ஸ்க்ரீனை பயன்படுத்தினால் சருமம் நீரேற்றத்துடன் இருக்கும். ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த கலர் காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சருமம் கருமையாவதை குறைக்கலாம்.


கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சருமம் கருமையாதல்

அதுவே சருமம் கருமையாகிவிட்டால், வாரத்திற்கு ஒருமுறை எக்ஸ்ஃபாளியேட் செய்வது அவசியம். இதனால் சருமத்தின் மேலுள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, ஆரோக்கியமான சருமம் உருவாகும். பொதுவாக இந்த எக்ஸ்ஃபாளியேஷன் முறையை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களை பார்த்து செய்யும்போது சருமம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே நிபுணரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.

இளம்வயதினருக்கு கண்களை சுற்றி வருகிற கருவளையத்துக்கு முக்கிய காரணம் ரத்தசோகை அல்லது சத்து குறைபாடுதான். அடுத்து, அதிக நேர செல்போன் பயன்பாடு, மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு குறைபாடு போன்றவற்றால் கண்கள் சோர்வடைதல், வீக்கமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கஃபைன், ரெட்டினால் உள்ள சீரம்களை பயன்படுத்தலாம். இரும்புச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். தூக்க நேரத்தை சரிசெய்ய வேண்டும். அதையும் மீறி கருமை இருந்தால் வைட்டமின் கே கொண்ட க்ரீம்களை நிபுணர் பரிந்துரையின்பேரில் வாங்கி பயன்படுத்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்