இந்தியாவில் ட்ரெக்கிங் செய்வதற்கு சிறந்த இடம் "லோனாவாலா"!

மும்பைக்கும் புனேக்கும் போகிற வழியில் இருக்கின்ற ஓர் அழகிய மலைப்பிரதேசம்தான் லோனாவாலா. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் குகைகள் அதிகமாக இருப்பதால் இதற்கு லோனவாலா என்கிற பெயர் வந்தது. லோனவாலா என்பது ஒரு சமஸ்கிருத பெயர். அழகிய மலைபிரதேசமான லோனவாலாவில் ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் கோடைகாலத்தில் ட்ரெக்கிங் செய்வதற்கு சிறந்த இடம் இந்த லோனவாலா .

Update: 2024-04-29 18:30 GMT
Click the Play button to listen to article

மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கும் புனேக்கும் இடையே இருக்கின்ற ஓர் அழகிய மலைப்பிரதேசம்தான் "லோனாவாலா". கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இது அமைந்திருக்கிறது. இப்பகுதியில் குகைகள் அதிகமாக இருப்பதால் இதற்கு லோனாவாலா என்கிற பெயர் வந்துள்ளது. லோனாவாலா என்பது சமஸ்கிருத வார்த்தை. அழகிய மலைப்பிரதேசமான லோனாவாலாவில் ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் கோடைகாலத்தில் ட்ரெக்கிங் செய்வதற்கு சிறந்த இடம் இந்த லோனாவாலா. மராத்தியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியை செய்ததற்கான தடயங்கள் இன்றளவும் லோனாவாலாவில் இருக்கின்றன. 1871 ஆம் ஆண்டு பம்பாயின் கவர்னராக இருந்த எல்பின்ஸ்டோன் என்பவர் லோனாவாலா நகரத்தை உருவாக்கினார். அப்படி லோனாவாலாவில் என்னதான் இருக்கிறது? கோடைகாலத்தில் அங்கு சென்று என்னனென்ன செய்யலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.


அழகிய டியூக்ஸ் நோஸ் மலை 

டியூக்ஸ் நோஸ் :

லோனாவாலாவில் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய இடம் இந்த டியூக்ஸ் நோஸ். நாகபாணி என்னும் இடத்தில் இந்த டியூக்ஸ் நோஸ் என்கிற மலை அமைந்துள்ளது. ட்ரெக்கிங் செய்வதற்கு இதைவிட சிறந்த மலை இருக்க முடியாது என்றே சொல்லலாம். ட்ரெக்கிங் செய்ய விரும்பும் நபர்கள் இந்த மலைக்கு கண்டிப்பாக வரலாம். இந்த மலையின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இரவு நேரத்தில் கூட இங்கு ட்ரெக்கிங் செய்யலாம். ஆனால் 20 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், 40 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கும் மட்டுமே இரவு நேரத்தில் ட்ரெக்கிங் அனுமதி வழங்கப்படுகிறது. மலையின் உச்சிக்கு சென்று அங்கே கேம்ப் அமைத்து இரவு முழுக்க தங்கலாம். இது ஓர் அற்புதமான அனுபவத்தை நமக்கு தரும்.


பூஷி அணையில் நீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி 

பூஷி அணை :

காண்டலா நகரிலிருந்து உருவாகி வரும் இந்திரயானி நதியின் குறுக்கே அமைந்துள்ளது பூஷி அணை. இது 1860 ஆம் ஆண்டு நீராவி எஞ்சின் ரயிலுக்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இந்த அணையை மஹாராஷ்ட்ரா அரசு சுற்றுலாதலமாக அறிவித்தது. அதற்குபின் அணையை சுற்றிலும் சிறு உணவகங்கள், மீன் கடைகள் என்று எப்பொழுதும் திருவிழா போன்று காட்சியளிக்கும். அணையின் மீது நின்று நாம் நதியின் அழகையும், லோனாவாலாவின் அழகையும் கண்டு ரசிக்கலாம். இங்கு படகு சவாரி, மீன்பிடித்தல் போன்ற நிகழ்வுகள் எல்லா காலகட்டத்திலும் நடக்கும். குறிப்பாக மழை காலங்களில் மீன்கள் ஆற்றிலிருந்து துள்ளி குதிக்கும். அதை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் லோனாவாலாவிற்கு செல்லும். கோடைகாலத்தில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.


பழமைவாய்ந்த பாஜா குகைகள் 

பாஜா குகைகள் :

லோனாவாலாவின் சிறப்பே அங்கு இருக்கும் பாரம்பரியங்கள்தான். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாஜா குகைகள். அரேபியன் கடல் பகுதியில் கடல் கொள்ளையர்களின் வாழ்விடமாக இந்த பாஜா குகைகள் இருந்து வந்தன. சுமார் 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடல் கொள்ளையர்களின் தடயங்கள் இன்றளவும் இந்த குகைகளில் இருக்கின்றன. பாஜா குகையின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த குகைகளுக்குள்ளயே மறைமுகமாக 9 குகைகள் உள்ளன. ஆனால் அந்த குகைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது மஹாராஷ்ட்ரா அரசு. எதற்கு அந்த தடை அமல்படுத்தப்பட்டது என்றால் குகைகளுக்கு நடுவே செல்ல செல்ல ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பல பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதனால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் இந்த கோடைகாலத்தில் சென்று நேரத்தை செலவழிப்பதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.


எழில்மிகு டைகர்ஸ் லீப்பின் அற்புத தோற்றம்  

டைகர்ஸ் லீப் :

டைகர்ஸ் பாயிண்ட் என்றும் அழைக்கப்படும் இவ்விடம் லோனாவாலா நகரத்திலிருந்து சற்று வெளியே அமைந்துள்ளது. பூஷி அணையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள இந்த வியூ பாயிண்ட், டியூக்ஸ் நோசை போன்று ட்ரெக்கிங் செய்வதற்கு சிறந்த இடம். கோடைகாலத்தில் எப்பொழுதும் பனிமூட்டத்துடனே காணப்படுவதால் பார்த்து ரசிப்பதற்கு அருமையாக இருக்கும். புலியின் வாய் அமைப்பு போன்று இந்த மலை இருப்பதால் இதற்கு டைகர்ஸ் லீப் என்று பெயர் வந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் இங்கு பைக்கில் வருவோருக்கு பார்க்கிங் வசதியும் இருக்கிறது.


பாரம்பரியமிக்க ராஜ்மச்சி கோட்டை 

ராஜ்மச்சி கோட்டை :

சஹியாத்திரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் ராஜ்மச்சி. இங்கு சத்ரபதி சிவாஜி கட்டிய ஒரு சிறிய கோட்டை இருக்கிறது. லோனாவாலாவிற்கு வரும் மக்கள் கண்டிப்பாக இங்கு வந்துவிட்டுதான் செல்வர். ஏனென்றால் இந்த கோட்டை, காடுகளுக்கு நடுவே தான் இருக்கும். காட்டின் இடையில் ட்ரெக்கிங் செய்து கோட்டையின் அழகை ரசிக்கலாம். அதுமட்டுமில்லாமல் இக்கோட்டையை அடைவதற்கு குறைந்தபட்சம் நான்கு, ஐந்து மணி நேரங்கள் ட்ரெக்கிங் செய்ய வேண்டும். இங்கு கடினமான விஷயம் என்னவென்றால் சூரிய அஸ்தமனம் விரைவில் நடந்து விடும். அதனால் அதிகாலையிலே இங்கு சென்றுவிட வேண்டும். மேலும் இவ்விடத்திற்கு பைக்கின் மூலமாக மட்டும்தான் செல்ல முடியும். நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு ஏற்றார்போல் சாலைகள் இருக்காது.


கர்லா குகைக்குள் அமைந்திருக்கும் எக்விரா கோவில் 

கர்லா குகைகள் :

இந்தியாவில் பழமையான புத்த மடம் இங்குதான் இருக்கின்றது. இந்த குகைக்குள் எக்விரா என்கிற கோவிலும் அமைந்துள்ளது. இங்கு அதிகமாக வெளிநாட்டவர்தான் வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்தோனேசிய மக்களும், நேபாள மக்களும் அதிகளவில் வருகை தருகின்றனர். அதனாலேயே இந்த இடத்தை சுற்றி உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகள் மற்றும் நேபாள மக்களின் உணவு பழக்கமும் இந்த இடத்தில் அதிகமாக இருக்கும். இந்த இடத்திற்கு செல்ல சிறந்த வழி, புனேயிலிருந்தோ மும்பையிலிருந்தோ டாக்ஸி பிடித்து செல்வதுதான். எக்விரா கோவில் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்