பாம்புகளுடன் குடும்பம் நடத்தும் இந்திய கிராமம்!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு என்றால் கிராம மக்கள் அனைவரும் பயமின்றி ஏதோ செல்லப்பிராணி போல் கொண்டாடுகின்றனர்

Update:2024-08-27 00:00 IST
Click the Play button to listen to article

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மஹாராஷ்ட்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு என்றால் கிராம மக்கள் அனைவரும் பயமின்றி ஏதோ செல்லப்பிராணி போல் கொண்டாடுகின்றனர். பாம்பு என்றவுடன் ஏதோ தண்ணீர் பாம்பு என நினைத்துவிடாதீர்கள். கிராம மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வேலைகளை விஷப் பாம்புகளுடன் மிகவும் சகஜமாக செய்துகொண்டு வாழுகின்றனர். அந்த பாம்புகள் அனைத்தும் நாகப்பாம்புகள் என்பது அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்தியாவின் பாம்பு கிராமம் என்று அழைக்கப்படும் அந்த கிராமம் எது? எப்படி அந்த கிராம மக்கள் பாம்புகளுடன் சகஜமாக வாழுகின்றனர்? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம்.


பாம்புகளுடன் விளையாடும் ஷெட்பால் கிராம குழந்தை 

பாம்புகளின் கிராமம் :

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பின்னணி, மரபு மற்றும் கதைகள் உள்ளன. ஆனால் "ஷெட்பால்" என்ற கிராமம் பெரும்பாலானோர் இதுவரை கேள்விப்படாத விசித்திரமான கிராமம். மஹாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது இந்த ஷெட்பால். இது மோஹோல் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம். புனேவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 2600 பேர் வசிக்கின்றனர். இவர்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை யாருக்குமே பாம்பைக் கண்டு அச்சமில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த ஊரில் உள்ள மக்கள் யாரையும் இதுவரை எந்த பாம்பும் தீண்டியதில்லை என்பதும் ஆச்சர்யமான செய்தி. 


ஷெட்பால் கிராம மக்களை இதுவரை எந்த பாம்புகளும் தீண்டியதில்லை

தேவஸ்தானம் - பாம்புகளை வணங்கும் மக்கள் :

ஷெட்பால் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் பாம்புகள் சர்வசாதாரணமாக வந்து செல்கின்றன. அவற்றை யாரும் துரத்துவதும் இல்லை. அடிப்பதும் இல்லை. இந்த கிராமத்தில் வீடுகள் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும், ஊரும் உயிரினங்களான பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் அவை குடும்ப உறுப்பினர்கள் போல நடத்தப்படுகின்றன. குடும்பத்தில் உள்ள ஒரு நபரை போல, பாம்புகளுக்கும் வீட்டைச் சுற்றித் திரிவதற்கு உரிமை உண்டு. மேலும் கிராமம் முழுவதும் அவை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றன.

பாம்புகளுக்கு என்றே வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கோயில் போல மக்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். அவை தேவஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றன. கிராமத்தில் புதிதாக வீடுகட்டும் மக்களும், தங்கள் வீட்டில் பாம்புகளுக்காகவே ஒரு இடத்தை ஒதுக்கிவைப்பதை உறுதி செய்கிறார்கள்.


 குடும்ப உறுப்பினர்கள்போல நடத்தப்படும் பாம்புகள் 

பாம்புகளுடன் விளையாடும் குழந்தைகள் :

கொடிய விஷம் கொண்ட இந்த பாம்புகளைக் கண்டு சிறு குழந்தைகள் கூட அஞ்சுவதில்லை. பிறந்ததில் இருந்தே பாம்புகளுடன் வளரும் அவர்களுக்கு அச்சம் என்பதே ஏற்படுவதில்லை என கிராம பெரியவர்கள் கூறுகின்றனர். ஆண்டுதோறும், இந்த கிராமத்தில் நாகபஞ்சமி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஷெட்பால் கிராமத்தில் வாழும் குழந்தைகள் முற்றிலும் நலமாக இருக்கிறார்கள். மேலும் தங்கள் வகுப்பறை இடத்தையும் நாகப்பாம்புகளுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் கூறுவது என்னவென்றால், தெரியாதவர்களுக்கு மட்டுமே நாம் பயப்படுகிறோம். நாங்கள் பாம்புகளை எங்கள் உடன் பிறப்புகள் போல பார்க்கிறோம்.


ஷெட்பால் கிராமத்தில் மனிதர்களைவிட பாம்புகளின் எண்ணிக்கை அதிகம்.

மனிதர்களை விட பாம்புகள் அதிகம் :

ஷெட்பால் கிராமத்தில் மனிதர்களைவிட பாம்புகளின் எண்ணிக்கை அதிகம். ஷெட்பாலில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், அந்த வீட்டில் உள்ள ஜனத்தொகையைவிட பாம்புகள் அதிகம் வசிக்கின்றன. மேலும் பாம்புகளுக்கு கூடுதல் கவனிப்புடன் கிராம மக்கள் உணவளிக்கின்றனர். பாம்புகளுடன் விளையாடுவதை குழந்தைகள் பொழுதுபோக்காக வைத்துள்ளனர். 

பாம்பு கிராமத்திற்கான வழிகாட்டி வரைபடம் :

Full View

பாம்புகள் என்றால் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லும் யார் வேண்டுமானாலும் தங்கள் கிராமத்துக்கு வருகை தரலாம் என்று ஷெட்பால் கிராமவாசிகள் வரவேற்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்