ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் ஏன் சேரக்கூடாது? சமயபுரம் மாரியம்மனை ஏன் கண்டிப்பாக தரிசிக்க வேண்டும்?

புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல. காலமெல்லாம் அவர்கள் இணை பிரியாமல் வாழ்வதற்கான பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

Update:2024-07-25 13:36 IST

ஆடி மாதம் என்றாலே ஆடி பூரம், ஆடி தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி கூழ், ஆடி தள்ளுபடி, அம்மன் ஆலயங்களில் தீ மிதி என எங்கு திரும்பினாலும் விழா மனநிலையிலேயே பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். ஆனால் புதுமண தம்பதிகளை ஆடி மாதம் ஏங்கவைத்து விடுகிறது. காரணம் புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் இந்த மாதத்தில் பிரித்து வைக்கப்படுகின்றனர். ஆடி மாதம் புதுமண ஜோடிகளை ஏன் பிரிக்கிறார்கள்? இந்த மாதத்தில் ஏன் திருமணம் செய்வதில்லை. ஆடியில் புதுமண ஜோடிகள் ஏன் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சிறந்தது? உள்ளிட்டவை குறித்தெல்லாம் பார்க்கலாம் வாங்க.

ஏன் திருமணம் கூடாது?

"ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி". ஏனென்றால் ஆடி மாதத்தில் மழையும், காற்றும் அற்புதமாக இருக்கும் என்பதால், உழவுப்பணிகளை மேற்கொள்ள ஏற்றதாக இருக்கிறது. எனவே இந்த மாதத்தில் விவசாயத்திற்கு அதிக பணம் செலவு செய்யப்படும். விவசாயத்திற்கு அதிக பணம் செலவாகும் சூழலில், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே ஆடியில் திருமணங்கள், அந்த காலம்தொட்டே நடத்தப்படாமல் இருந்து வருகின்றன. கிராமங்களில், ஆடியில் சேதி மட்டும் சொல்லிவிட்டு, ஆவணியில் பரிசம் போட்டு திருமணத்தை நடத்துகின்றனர். ஆனால் ஆடியில் திருமணம் செய்யும் சமூகத்தினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுகுறித்து கீழே பார்ப்போம். 

ஏன் தாம்பத்யம் கூடாது?

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் ஒன்று சேர்ந்தால், சித்திரையில் குழந்தை பிறக்கும். வழக்கமாக சித்திரையில் வெயில் உக்கிரமாக இருப்பதுடன், கத்தரி வெயிலும் வாட்டி வதைக்கும். இது பிறக்கும் குழந்தைக்கும், பெற்றெடுக்கும் தாய்க்கும் மிகவும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும் என்பதே, ஆடியில் தாம்பத்யம் கூடாது என்பதற்கான அறிவியல் காரணம். இதுவும் ஆடியில் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. 


புதுமண தம்பதிகள் சமயபுரத்தாளை வணங்கி வழிபாடு செய்தால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை

சிலர் திருமணம் செய்கின்றனரே?

ஆனால், சில சமூகத்தினர் ஆடியில் திருமணம் செய்கின்றார்களே... என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. இதில் அவசியம் பார்க்க வேண்டியது மனக் கட்டுப்பாட்டு. "ஆடியில் திருமணம் செய்தாலும், சாந்தி முகூர்த்தத்தை ஆவணியில் சுபநாளாகப் பார்த்துத்தான் அமைப்பார்கள்'' என்று பல தகவல்கள் கூறப்படுகின்றன. 

ஆடியில்தான் அம்மனே இறைவனோடு சேர்ந்தார்!

இறைவன் அன்னை பார்வதியின் இல்லத்தை நாடிச்சென்ற மாதம்தான் ஆடி என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தாராம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலம் என்பதால் ஆடி மாதம் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். எனவேதான் ஆலயங்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடத்தப்படுகின்றன.

இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்? புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல. காலமெல்லாம் அவர்கள் இணை பிரியாமல் வாழ்வதற்கான பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

சகல ஐஸ்வர்யங்களை அருளும் சமயபுரத்தாள்

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கிய கோயில்களில் ஒன்றாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. திருமணமான புதிய ஜோடிகள், சமயபுரம் மாரியம்மனை வணங்கி வழிபடுவது மிக மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அதுவும் ஆடியில் தரிசித்தால் சகல ஐஸ்வர்யங்களையும் அருளுவாளாம் சமயபுரத்தாள். ஐஸ்வர்யம் பெருகுவதுடன், குடும்பம் நிச்சயம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான புதுமண தம்பதிகள் இங்குவந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்