தைப்பூசம் எதற்காக கொண்டாடுகிறோம்? தைப்பூசத்தின் வரலாறு என்ன?
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அது போல முருகன் கோயில்கள் அனைத்திலும் மிக முக்கியமான விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படும்.
தமிழ்க்கடவுளான முருகன், அசுரர்களை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்தில், பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம் வரும் தினம் பெளர்ணமியாகவே இருக்கும். முருகப்பெருமானுடைய இந்த விசேஷ தினமான தைப்பூசத்தின் வரலாறு என்ன? ஏன் இந்த தினத்தை விமரிசையாக கொண்டாடுகிறோம் என்பதை பற்றியெல்லாம் விரிவாக காண்போம்.
தைப்பூச திருவிழா 2024
கந்தன், குமரன், வேலன், சரவணன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள், இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் கந்தன் வீற்றிருக்கும் ஆலயங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளன. முருகனுக்குரிய முக்கிய வேண்டுதல்களில் ஒன்று காவடி எடுப்பது. இந்த காவடி எடுக்கும் முறை பழனி மலையில்தான் தோன்றியதாம். அப்படிப்பட்ட பழனி தலத்தில் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தைப்பூசம். தைப்பூசத்திற்கும் பழனி மலை தலத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது.
பழனிமலை முருகன் கோயில் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் ஆலயம்
அம்பாளும் தைப்பூசமும்
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் சிவபெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடினார். அதனை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் அரங்கேற்றினார். இந்த நடனத்தை ரசித்துப் பார்த்த பார்வதி அம்மைக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது. அதேநேரம், சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர். ஆகையால், முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும். சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என பெயர்பெற்றது. அதனால் இந்நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய தினமாக மாறியது. ஆனால் இந்நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம்தான் பழனி.
முருகப்பெருமானின் தேரோட்டம் மற்றும் பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்வு
பழனிக்கும் தைப்பூசத்திற்கும் உள்ள தொடர்பு
பழனி மலை அடிவாரத்தில் பெரியநாயகி அம்பாள், கைலாச நாதருடன் தனிக்கோயிலில் வீற்றிருக்கிறாள். இங்கு சிவன் மற்றும் அம்பாள் சன்னதிக்கு நடுவே முருகன் சன்னதி உள்ளது. எனவே ஆலயத்தின் பிரதான தெய்வங்களாக பெரியநாயகி அம்மனும், சிவபெருமானும் இருந்தாலும், பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதிக்கு எதிரிலேயே அமைந்துள்ளதால், கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முதலில் முருகனை தரிசித்த பிறகே அம்பாள் மற்றும் சிவனை தரிசிக்க முடியும். காலப்போக்கில் இத்தலத்தின் முக்கிய தெய்வமாக முருகப்பெருமானே மாறினார். தைப்பூச விழாவிற்கான கொடியும், முருகன் சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்திலேயே ஏற்றப்பட்டதாம். இப்படி சிவனின் அம்சமாகவும், சக்தியின் அம்சமாகவும் முருகப் பெருமானே விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாக மாறியது என்கின்றன புராணங்கள். மேலும் தைப்பூச விழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடத்தப்பட்டு, விழாவின் ஏழாம் நாளில் நடக்கும் தேரோட்டமும் இக்கோயிலில் இருந்தே புறப்பட்டு வீதி உலா வருகிறது.
முருகனுக்குரிய தைப்பூசத்தின் வரலாறு
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் அசுரர்களை அழிக்க முடியாமல் தேவர்கள் திணறினர். எனவே பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டினர். இதையடுத்து கருணைக்கடலான எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று உருவாக்கிய அவதாரமே கந்தன்.
அசுர குலத்தை அழிக்க முருகப்பெருமான் எடுத்த கந்தன் அவதாரம்
கந்தன் அவதரிப்பு
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாகின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றி நிம்மதி அடையச் செய்தார். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களை காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வெற்றி வேலின் சிறப்பு
அசுரர்களை வதம் செய்து வெற்றிக்கொண்ட முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், தீய சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பதும் ஐதீகம்.
முருகனின் வெற்றி வேல் மற்றும் அன்னை பார்வதி தேவி வழங்கிய வேலுடன் பழனி ஆண்டவர்
தைப்பூச விரதம்
ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத தொடக்கத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
பழனியில் கோலாகலமாய் கொண்டாடப்படும் தைப்பூசம்
தைப்பூச நாளில் பழனிமலை முருகன் கோயில் தேரோட்டம் மற்றும் பக்தர்கள் செலுத்தும் காவடி நேர்த்திக்கடன்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அது போல முருகன் கோயில்கள் அனைத்திலும் மிக முக்கியமான விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படும் என்றபோதிலும், பழனியில் கூடுதல் சிறப்பாக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரை வருகிறார்கள். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுவோர், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அழுத்தமாக உள்ளது. இதனால், முருகன் உறையும் அனைத்து தலங்களிலுமே தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படி, தைப்பூச நாளுக்குரிய சிறப்பு என்ன என்பது பற்றிய விளக்கங்களை தெரிந்து கொண்டு அன்றைய நாளில் முறையாக விரதமிருந்து வழிபட்டு முருகன் அருளை முழுவதும் பெறுவோம்.