வைகாசி விசாக விரத மகிகை - இன்று முருகனை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா!
முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுவது வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் இத்தினம், முருகனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுவது வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் இத்தினம், முருகனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை 08.18 மணி துவங்கி, நாளை காலை 09.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.
முருகனின் அவதாரம்
காசியப்ப முனிவருக்கும், மாயை என்பவளுக்கும் பிறந்தவன்தான் அசுரன் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். இந்த கொடிய அரக்கனை சக்திவாய்ந்த அவதாரத்தால்தான் அழிக்க முடியும் என்று தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அப்போது அவதரித்தவர்தான் ஆறுமுகன்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அதிலிருந்து 6 நெருப்பு பொறிகள் வெளிப்பட்டன. அது மூன்று உலகத்தையும் தகித்தது. யாருமே அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து அந்த 6 நெருப்பு பொறிகளையும் தன் கைகளில் தாங்கி பிடித்தார் அக்னி பகவான். அக்னி பகவானாலேயே அந்த நெருப்பு பொறிகளை தாங்க முடியலில்லை. தாங்க முடியாத வெப்பத்தில் இருந்த 6 நெருப்பு பொறிகளையும் சரவண பொய்கையில் கொண்டுபோய் குளிர வைத்தார் அக்னி பகவான். 6 நெருப்பு பொறிகளும் 6 குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை வளர்க்க 6 கார்த்திகை பெண்கள், சரவணப்பொய்கையில் தோன்றி 6 குழந்தைகளையும் கையில் எடுத்தனர். பிறகு அந்த 6 குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறியது. ஆறுமுகம், 12 கைகள், 2 கால்களுடன் முருகன் காட்சியளித்தார். எனவே முருகப்பெருமான் பிறந்த இந்த வைகாசி விசாகத்தை உலக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்.
சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பு பொறியிலிருந்து அவதரித்த முருகப்பெருமான்
முருகன் ஆலயங்களில் கோலாகலம்
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன. முருகன் திருக்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
வைகாசி விசாக நாளின் பிற சிறப்புகள்
இந்த அற்புத நாள் ஆறுமுகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வேளையில், எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே இந்த நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் முருகனின் அருளும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
மகாபாரதத்தில் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்றதும் இந்த தினத்தில்தான். வைகாசி விசாக சுப தினத்தில்தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடியதாக கூறப்படுகிறது. ராமாயணத்தில் ஒரு பகுதியில், ராமர் மற்றும் லட்சுமணனுக்கு முருகப்பெருமானின் பிறப்பு மற்றும் அவரின் அருமை பெருமைகளை விளக்கி கூறுவது போல அமைந்திருக்கும். முருகனின் அருமை பெருமைகளை கேட்பவர்களுக்கு, அவர்களின் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பதை குமார சம்பவம் என ராமாணயத்தில் வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
வைகாசி விசாக புண்ணிய நாளில்தான் கெளதம புத்தர் ஞானத்தை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.
முருகன் ஆலயங்களில் அலைமோதும் கூட்டம் - நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பக்தர்கள்
நினைத்ததை நிறைவேற்றிதரும் வைகாசி விசாக விரதம்
வைகாசி விசாகத்தன்று முருகனை நினைத்து விரதமிருந்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். இத்தினத்தில் நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தால் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், பால்-பழம் அல்லது ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இவ்வாறாக விரதம் இருந்து வழிபட்டால் கண்டிப்பாக நம் வேண்டுதல்கள் அனைத்தையும் முருகப்பெருமான் நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை. குழந்தை பேறும் உண்டாகும். பிரிந்த தம்பதியினர் ஒன்றுசேருவர். சகல தோஷங்கள் விலகுவதுடன், சகல புண்ணியங்களும் கிடைக்குமாம். இந்த நாளில் கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு கோயிலுக்கு செல்லலாம். மேலும் வைகாசி விசாக நாளில் முருகன் கோயிலுக்கு பால் வாங்கி கொடுப்பது விசேஷமாக கருதப்படுகிறது.