உற்சாகம் பொங்கும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் வரலாறும் மரபும்
ஓணம் பண்டிகையன்று தயாரிக்கப்படும் ஓணம் சத்யாவில் 24 வகைகளுக்கு மேலான உணவு பதார்த்தங்கள் அடங்கியிருக்கும்.
“சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்” என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுக்கேற்ப ஜாதி மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடக்கூடிய பண்டிகையாக பார்க்கப்படுவதுதான் ஓணம் பண்டிகை. பொதுவாக இந்த பண்டிகை கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்றாலும் வேறு சில மாநிலங்களிலும் தற்போது கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகையன்று குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு விடுமுறை கூட அளிக்கப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்களுக்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 29-ஆம் தேதியன்று ஓணம் பண்டிகை வருகிறது. ஓணத்தின் சிறப்புகளை இந்தப் பதிவில் காண்போம்:
ஓணம் பண்டிகை கேரளாவின் அறுவடை திருவிழாக்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஓணம் திருநாளில் வழிபாடு, இசை, நடனம், விளையாட்டு, படகுப் போட்டி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஓணம் பண்டிகை சிங்கம் (ஆவணி) என்ற மலையாள மாதத்தின் திருவோணம் நட்சத்திர நாளில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது. கேரளப் பெண்கள் வீட்டை சுத்தம் செய்து தங்கள் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு பூக்களால் வீடுகளை அலங்கரிப்பதோடு வாசலில் அத்தப்பூ (பூக்கோலம்) கோலமிட்டு மன்னன் மகாபலியை வரவேற்கிறார்கள் என்பது ஓணம் பண்டிகையின் ஐதீகம். ஓணம் பண்டிகை விருந்தில் இரண்டுக்கு மேற்பட்ட பாயாச வகைகள் கட்டாயம் அடங்கியிருக்கும். ‘வல்லம் களி’ என்று அழைக்கப்படும் படகு விளையாட்டுப் போட்டியில் ஒரு படகுக்க 4 மாலுமிகள், 100 துடுப்பு போடுபவர்கள் மற்றும் 25 பாடகர்கள் மேள வாத்தியங்களுடன் பங்கேற்பர். இந்த ‘சுண்டன் வல்லம்’ படகுப் போட்டிகளில் பங்கேற்போர் மேள தாளத்தின் இசைக்கேற்ப படகுகளை செலுத்துவார்கள். இதில் சிறப்பம்சமாக ஒவ்வொரு படகின் மீதும் பட்டு குடை விரிக்கப்பட்டு அதில் தங்க நாணயங்கள் தொங்கவிடப் பட்டிருக்கும். போட்டியில் பங்கேற்போர் பெரும்பாலும் முண்டும் (வேஷ்டி), தலைப்பாகையும் அணிந்திருப்பர். கேரளாவிலுள்ள பல கிராம மக்கள் இன்றளவும் இதில் பங்கேற்று மகிழ்கின்றனர்.
வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடும் குடும்பத்தினர்
ஓணம் வரலாறு
மலையாள தேசத்தை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் தான் மகாபலி சக்கரவர்த்தி. இவர் அசுர குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் தன் நாட்டு மக்களிடம் பேரன்பு கொண்டவராக விளங்கினார். அதுமட்டுமின்றி தான, தர்மம் செய்யும் வள்ளலாகவும் விளங்கினார். இவரின் அன்பில் கட்டுண்ட நாட்டு மக்கள் மன்னரை மனதார போற்றி வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இந்நிலையில் அம்மன்னனுக்கு திடீரென்று மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதைக் குறித்து மகாபலி சக்கரவர்த்தி அவருடைய குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு சுக்ராச்சாரியார், “சிவபெருமானை வேண்டி ஒரு பெரும் யாகம் நடத்தினால் நீ நினைத்தது ஈடேறும்” என்று தெரிவித்தார். குலகுரு ஆலோசனைப்படி யாகத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார் மன்னர் மகாபலி. ஆனால்், இந்த யாகம் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டால் அசுர பரம்பரையை சேர்ந்த மகாபலிக்கு இந்திரனின் சக்தி கிடைத்துவிடும் என்று இந்திரனும் தேவர்களும் கலக்கமடைந்தனர். இந்த செய்தியை உலகைப் படைத்த பிரம்மனிடம் முறையிட, “இதற்கு மகாவிஷ்ணுதான் தீர்வு கூற வேண்டும்” என்று பிரம்மன் இந்திரனையும் தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார். அவர்களின் கவலைக்கு செவிமடுத்த மகாவிஷ்ணு தாமே வாமன அவதாரம் எடுத்து பூலோகம் சென்று மகாபலியின் யாகத்தைத் தடுத்து நிறுத்துவதாக தேவர்களுக்கு உறுதியளித்தார்.
மகாவிஷ்ணு தான் அளித்த வாக்கின்படி 3 அடி உயரமுள்ள வாமனனாக அவதாரம் எடுத்து, யாகம் நடக்கும் இடத்திற்கு சென்றார். யாகம் நடந்து கொண்டிருந்த யாகசாலையில் மன்னன் மகாபலியிடம் ஏராளமானோர் தானம் பெற்றுக் கொண்டிருந்தனர். மூன்று அடியில் வாமனனாக அவதாரம் தரித்த மகாவிஷ்ணு தனது இடக்கையில் ஓலைக் குடையும், வலக்கையில் கமண்டலமும் ஏந்திய படி தானம் பெறுவதற்காக வரிசையில் நின்றார். ஆனால் அவருடைய முறை வருவதற்கு முன்னரே தானம் வழங்குவது முடிந்து விட்டது. இதைப் பார்த்த மன்னன் மகாபலி, வாமனரிடம் சென்று, “சிறுவனே நீ தாமதமாக வந்துவிட்டாய் தானம் வழங்கும் நிகழ்வு முடிந்துவிட்டது. இருந்தாலும் உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன்” என்றார். அதற்கு வாமனன் அவதாரத்தில் வந்த விஷ்ணு தன் கால்களால் அளக்கும் 3 அடி நிலத்தை தானமாக வழங்க வேண்டும் என்று மன்னனிடம் கேட்டார். உடனே மன்னன் மகாபலி வாமனரின் கையில் இருந்த கமண்டலத்தை பெற்று அதிலிருந்த தண்ணீரை நிலத்தில் விட்டு அவன் கேட்ட தானம் வழங்கப்படும் என்றார். உடனே வாமனர் விஸ்வரூபம் எடுத்து அவருக்கு வழங்கிய 3 அடி நிலத்தில் 1 அடியால் பூலோகத்தையும் மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார். இப்படி 2 அடிகள் அளந்த நிலையில் 3வது அடியை அளப்பதற்கான நிலம் எங்கே என்று மகாபலியிடம் கேட்டார். இதை கண்டு பரவசமடைந்த மன்னர் மகாபலி மகாவிஷ்ணுவை வணங்கி 3வது அடியை தன் தலை மீது வைக்கும் படி கூறினார். அவர் கூறியவாறே வாமனனும் மகாபலி சக்கரவர்த்தியின் தலை மீது தன்னுடை காலை வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளி விட்டார்.
மகாபலி சக்கரவர்த்தி தலைமீது கால் வைத்து பாதாளத்திற்கு அனுப்பும் வாமனன்
பாதாள உலகம் சென்ற மகாபலி மன்னன், “கடவுளே நான் என் நாட்டின் மீதும் என் மக்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே வருடத்திற்கு ஒரு முறை என் நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழும் நிலையைக் காண்பதற்குரிய ஒரு வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்” என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டி கேட்டுக் கொண்டார். மகாவிஷ்ணுவும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக வரம் வழங்கினார். மன்னன் மகாபலி தனது மக்களை காண வரும் அந்த நாளையே கேரள மக்கள் காலங்காலமாக ஓணம் பண்டிகை என்று கொண்டாடி வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
ஓணம் பண்டிகையின் 10 நாட்கள்
பொதுவாக ஓணம் பண்டிகை சிங்கம் (ஆவணி) மாதத்தின் அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திர தினங்களில் 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த 10 நாட்களிலும் விதவிதமாக பூக்களை வைத்து அத்தப்பூ கோலம் போடுவது கேரளாவின் மரபு.
அத்தம்
ஓணம் பண்டிகையின் முதலாவது நாள்தான் அத்தம். இந்த முதல் நாளன்று மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்ததும் குளித்து முடித்து கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். மறைந்த கேரள மன்னன் மகாபலியை பாதாள உலகத்திலிருந்து கேரளாவிற்கு வரவேற்பதற்கான ஆயத்த பணிகள் இந்நாளில் தொடங்கப்படுகிறது. மகாபலியை பூமியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாக நம்பப்படும் கொச்சிக்கு அருகில் உள்ள திருப்புனித்துரா என்ற இடத்தில் அத்தம் நாளில் நடைபெறும் ஓணம் கொண்டாட்டம், மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமான ஊர்வலத்துடன் தொடங்குகிறது. பூக்களம் (மலர் கம்பளம்) இடும் பாரம்பரிய சடங்கு அத்தம் நாளில் தொடங்குகிறது. இந்த முதல் நாளில் அத்தப்பூ கோலம் சிறியதாக வரையப்படும். முக்கியமாக மஞ்சள் நிற பூக்களை மட்டுமே கோலங்களை அலங்கரிக்க பயன்படுத்துவர். ஆனால் இரண்டாவது மூன்றாவது நாள் என்று போக போக கோலம் பெரியதாக வரையப்படும்.
பிரமாண்ட அத்தப்பூ கோலம்
சித்திரை
திருவிழாவின் இரண்டாவது நாளான சித்திரை நாளன்று மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வர். முதல் நாளில் சிறியதாக வரையப்பட்ட கோலத்தில் இரண்டாவது அடுக்கு வரையப்படும்.
சுவாதி
பண்டிகையின் மூன்றாவது நாளில், பூக்கோலத்தின் அளவு வெவ்வேறு பூக்களைக் கொண்டு பல அடுக்குகளாக விஸ்தரிக்கப்படுகிறது. ஓணம் நாளன்று தாங்கள் அணிவதற்கு மேலும் பிறருக்கு பரிசாக அளிப்பதற்கென புதிய ஆடைகள் மற்றும் நகைகளை குடும்பத்துடன் சென்று வாங்கி வருவர்.
விசாகம்
ஓணத்தின் மிகவும் புனிதமான நாளாக விசாகம் கருதப்படுகிறது. ஓணம் சத்யா விருந்துக்கான தயாரிப்பு இந்நாளில்தான் தொடங்கப்படுகிறது. ஓணம் சத்யாவில் பரிமாறப்படும் பதார்தங்களின் வகைகள் குடும்பத்திற்கு ஏற்றாற்போல் வேறுபடும். ஆனால் பெரும்பாலும் 26 வகையான பதார்த்தங்களை தயாரிப்பது பொதுவான பழக்கம். அதேபோன்று இந்த விசாகம் நாளில்தான் அறுவடை செய்தப் பொருட்களின் விற்பனை தொடங்கப்படுகிறது. இதனால் விசாகம் நாள் பரபரப்புடன் இயங்கும் நாளாக இருப்பது வழக்கம்.
அனுசம்
ஐந்தாம் நாள் வல்லம் களிக்கான (படகுப்போட்டி) பாம்பு படகுகள் பந்தயத்திற்கு தயார்படுத்தப்படுகின்றன. ஓணம் பண்டிகையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றான அனுசம் நாளில் வல்லம் களி - பாம்புப் படகு போட்டிககான கொடி ஏற்றப்படுகிறது.
கேட்டை
ஆறாவது நாளன்று, அத்தப்பூ கோலம் 5 முதல் 6 அடுக்குகள் வரை பெரிதுப்படுத்தப்படுகின்றன. அதேபோல் இந்நாளில் குடும்பத்தோடு மூத்தோர் வீட்டுக்குச் சென்று பிரியமானவர்களுடன் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
மூலம்
மூலம் நாளில் உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். ஓணம் சத்யா வகைகளை சுவைக்கத் தொடங்குவர். பெரும்பாலான கோயில்களில் இந்த நாள் முதல் சிறப்பு சத்யாக்கள் வழங்கப்படுகின்றன. விழாக்களில் புலி களி (புலியாட்டம்) மற்றும் கைகொட்டி களி போன்ற பாரம்பரிய களியாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நாளில் ஊஞ்சலை பூக்களால் அலங்கரித்து பெண்கள் ஊஞ்சலாட்டம் ஆடி மகிழ்வர்.
ஓணம் சத்யா சுவைக்கும் குடும்பத்தினர்
பூராடம்
இந்த நாளில் மகாபலி மற்றும் வாமனரின் சிறிய சிலைகளை எடுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வலம் வந்து பூக்களத்தின் மையத்தில் வைக்கப்படுகின்றன. இந்த நாள் முதல் அந்த சிலை ‘ஓணத்தப்பன்’ என்று அழைக்கப்படுகின்றன. மகாபலியை மக்கள் தங்கள் வீட்டிற்கு அழைக்கும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது. முதல் நாளில் சிறியதாக வரையப்பட்ட கோலம் நாள்தோறும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணம் நிறைந்த பெரிய பூக்கோலமாக அலங்கரிக்கப்படுகிறது.
உத்திராடம்
ஓணம் பண்டிக்கைக்கான புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது இந்த உத்திராடம் நாள். அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மன்னன் மகாபலி நாட்டுக்குள் வருகை வந்து தனது குடிமக்களை ஆசீர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது.
‘புலி களி’ ஆடும் குழுவினர்
திருவோணம்
ஓணம் பண்டிகையின் முக்கிய நாள்தான் இந்த திருவோணம். மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, பிரதான நுழைவாயிலில் அரிசி மாவு தடவி வைப்பர். புத்தாடைகளை அணிந்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆடைகளை வழங்குவார். கேரளாவில் பெரும்பாலான நகரங்கள் விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளால் ஒளிரும். இன்றுதான் விழாவின் முக்கிய நிகழ்வான சுவையான ஓணம் சத்யா விருந்துகள் தயார் செய்யப்படுகின்றன. மக்கள் மாலை வேளையில் திரண்டு கேரளாவின் பல பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி களிப்பார்கள். திருவாதிரை களி, கும்மட்டி களி, புலி களி போன்றவை கேரளாவின் சில பாரம்பரிய களியாட்டங்களாகும்.
‘திருவாதிரை களி’ ஆடும் பெண்கள்
ஓணம் சத்யா
ஓணம் பண்டிகையன்று தயாரிக்கப்படும் ஓணம் சத்யாவில் 24 வகைகளுக்கு மேலான உணவு பதார்த்தங்கள் அடங்கியிருக்கும். கடன் வாங்கியேனும் ஓணம் கொண்டாடு என்பது கேரளாவின் ஓணம் பழமொழியாகும். அதன்படி ஓணம் நாளன்று வீட்டின் விருந்து மிகவும் தடபுடலாக தயாரிக்கப்படும். உப்பேரி, எலுமிச்சை ஊறுகாய், அப்பளம், மாங்காய் ஊறுகாய், நேந்திரம் சிப்ஸ், இஞ்சி புளி, இஞ்சி கிச்சடி, கோஸ் தோரன், கூட்டுக்கறி, கேரட் பீன்ஸ் மெழுக்குவறட்டி, அவியல், ஒலன், எரிசேரி, சாதம், பருப்பு, சாம்பார், ரசம், புளிசேரி, தக்காளி பச்சடி, காளன், பருப்பு பிரதமன், அடை பிரதமன், பால் பாயாசம், சம்பரம் என வரிசையாக பதார்த்தங்களை இலை நிறைய பரிமாறப்படுவதே ஓணம் சத்யா என்றழைக்கப்படுகிறது.
ஓணம் சத்யா
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தின் பண்டிகையாக இருந்தாலும் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் கேரள பாணியில் உடை அணிந்து, ரங்கோலி கோலம் வரைந்து பலரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி சில நிறுவனங்களிலும் கூட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஓணம் கொண்டாடப்படுகிறது. பண்டிகை எதுவாயிருந்தால் என்ன மனம் மகிழ்ந்தால் அது எப்போதும் கொண்டாட்டம்தானே.