தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2024 - 3 ராசிகள் சூப்பரா இருக்கு!

தமிழ் வருடங்கள் அறுபதில் முப்பத்தெட்டாவது ஆண்டான "குரோதி" பிறந்துள்ளது. மேஷத்தில் சூரியன், குரு, கன்னியில் கேது, கும்பத்தில் செவ்வாய், சனி, மீனத்தில் புதன், சுக்ரன், ராகு என்ற கிரக அமைப்பில் இந்த குரோதி புத்தாண்டு பிறந்துள்ளது.

Update:2024-04-16 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் வருடங்கள் அறுபதில், முப்பத்தெட்டாவது ஆண்டான "குரோதி" பிறந்துள்ளது. சூரிய பகவான் சித்திரை மாதத்தின் முதல் நாள் மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்துக்குள் நுழைவதே தமிழ் புத்தாண்டு. இந்த புது வருடம், விருச்சிக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. மேலும், மேஷத்தில் சூரியன்-குரு, கன்னியில் கேது, கும்பத்தில் செவ்வாய்-சனி, மீனத்தில் புதன்-சுக்ரன்-ராகு என்ற கிரக அமைப்பில் குரோதி புத்தாண்டு பிறந்துள்ளது. தர்மத்திற்கு விரோதமான செயல்கள் அதிகம் நிகழும் என்று வருடத்தின் பெயர்(குரோதி) காட்டுகிறது. திருட்டு பயம் பெரிதாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. குரோதி என்ற வார்த்தையே பலவிதமான குழப்பங்களையும், பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் காட்டுகிறது. இந்நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் குரோதி ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார் ஜோதிடர் டாக்டர் மகரிஷி மந்த்ராசலம்

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தனி சிறப்புகள் இந்த ஆண்டு மிக அருகில் தெரிகிறது. ஜென்மத்தில் இருந்த குரு இரண்டாம் இடத்திற்கு செல்கிறது. எனவே சகல நிலைகளிலும் வெற்றிகள் குவியப்போகிறது. பொருளாதார உயர்வு, பதவி உயர்வு, திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி மேன்மை என அனைத்தும் கிடைக்கும். கடந்த சில வருடங்களாக பட்ட கஷ்டங்கள், பொருளாதார தடைகள் விலகும். மேன்மை உண்டு. அனைத்து நிலைகளிலும் உயர்வு காணப்படுகிறது. எளிதில் வெற்றிகளை கண்டு மகிழ்ச்சியுடன் வாழலாம். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடம் பொற்காலம் என்று சொல்லலாம். 

ரிஷபம்

ரிஷப ராசிக்கு நீண்ட நாட்களாகவே சில குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், கூடுதல் குழப்பங்களுக்கு இந்த ஆண்டு வழி வகுக்கும். ஆனால் இதுதான் விதி என்று, நடப்பதை தைரியமாக கடந்து செல்வீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். தொழில் சார்ந்த நிலைகள் பிரம்மாண்டம் என்று சொல்ல முடியாது. கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். வருமானம் மிகக் குறைவாக உள்ள போதிலும், தேவையில்லாத செலவுகள் அதிகரித்து காணப்படுகிறது. அதேநேரம், இதுவரை பெரிதாக செலவு செய்யாதவர்கள், கையில் உள்ள பணத்தை இந்த ஆண்டு ஜாலியாக செலவு செய்வார்கள் என்றும் சொல்லலாம். 


மேஷம் - சிறப்பு; ரிஷபம் - கவனம்; மிதுனம் - நன்று; கடகம் - ரொம்ப சுமார்

மிதுனம்

மிதுன ராசிக்கு பிரயாணங்கள் கூடுதலாக காட்டுகிறது. இதுவரை இருந்த நிலையை காட்டிலும் நல்ல பலன்கள் 50 சதவீதம் அதிகம் ஏற்படும். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். இடம் மாறுதல், தொழில் மாற்றம், நற்செலவுகள் ஏற்படும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். மொத்தத்தில் சூப்பர் என்று சொல்ல முடியவில்லை என்றாலும், பாதிக்கு பாதி நல்ல பலன்களே நடைபெறும். தசா புத்திகள் நல்லபடியாக இருந்தால், டாப் பொசிஷனுக்கு வந்துவிடுவீர்கள். 

கடகம்

12 ராசிகளில் சிக்கலில் உள்ள ராசி கடகம். கடகத்தை தாண்டி மற்ற ராசிகள் இயங்காது என்ற தனித்துவம் உள்ள போதிலும், இந்த ஆண்டு வருட கோள்கள் அனைத்தும் தவறாக உள்ளன. அஷ்டமத்தில்(8ல்) சனி, ஒன்பதில் ராகு இருக்கிறது. அஷ்டம சனியைவிட கொடிய இடம் ராகுவுக்கு ஒன்பதாம் இடம். இருந்தபோதிலும், 10-ல் உள்ள குரு மே 1 முதல் 11-ம் இடம் செல்வதால் கொஞ்சம் ரிலீஃப் தெரிகிறது. அந்த ரிலீஃப் சூப்பர் என்றெல்லாம் சொல்ல முடியாது. 25 முதல் 30 சதவீதம் பரவாயில்லை என்று சொல்லலாம். பொருளாதார ரீதியாக மேன்மை இருக்கும். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு கோள்களின் இருப்பிடம் சிறப்பாக இல்லை. 7-ல் இருக்கக்கூடிய சனி பகவானோ, 8-ல் இருக்கக்கூடிய ராகு பகவானோ சரியில்லை. தற்போது குரு பகவான் 9-வது இடத்தில் இருப்பதால் சுமாராக உள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் பல தடைகளை தாண்டி, கையில் இருக்கும் பணத்தை சந்தோஷமாக செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால் வரும் மே 1 அன்று நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில், குரு 10-ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் தொழிலில் இடமாற்றம் இருக்கும். கடன் சுமை அதிகரிக்கும். 100  ரூபாய் சம்பாதித்தால் 500 ரூபாய் கடன் வரும். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் 50 ஆயிரம் ரூபாய் செலவு வரும். மொத்தத்தில் வருமானம் ஒரு பங்கு இருந்தால், செலவு 5 மடங்கு ஏற்படும். உடல் நலனில் மிக மிக கவனம் தேவை. 


சிம்மம் - செலவு; கன்னி - சாதகம்; துலாம் - பொருளாதார இழப்பு; விருச்சிகம் - மகிழ்ச்சி

கன்னி 

முன் ஜென்மத்தில் பட்ட கடனை அடைப்பதற்காகவே பிறவி எடுத்தவர்கள்தான் கன்னி ராசிக்காரர்கள். இவர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு நன்றாகவே இருக்கிறது. நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளதால், இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடி, கடன் நெருக்கடி, தொழில் நெருக்கடி உள்ளிட்ட சிரமங்கள் விலகி வளர்ச்சி ஏற்படும். நீண்ட நாளைக்கு பிறகு நிம்மதி பெருமூச்சுவிடப்போகிறீர்கள். வெற்றி காணப்போகிறீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் உடல்நலன் சார்ந்த விஷயத்தில் முதலில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம், உறவுகள், தொழில் உள்ளிட்ட விஷயங்களிலும் கவனம் தேவை. குறிப்பாக இந்த ஆண்டு துலாம் ராசியினருக்கு பொருளாதாரத்தில் பெரும் இழப்பு காட்டுகிறது. செலவு வேறு. இழப்பு வேறு. எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதைத்தவிர்த்து முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கப்பெறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். வாகனங்களை ஓட்டும்போதும், ஆயுதங்களை கையாளும்போதும் எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்

விருச்சிகம் என்றாலே, இவர்களுக்கு எல்லா ஆண்டும் ஒன்றுதான். எந்த கோள்கள் எங்கே போனாலும், இவர்கள் தன்னை கஷ்டப்படுத்திக் கொள்வதற்காகவே பிறப்பெடுத்தவர்கள். அப்படிப்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகச் சாதகமாக, மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை இருந்துவந்த பொருளாதார நெருக்கடி, தொழில் நெருக்கடி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் குரோதி ஆண்டில் விலகுகிறது. தொழிலில் ஏற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் நன்றாக உள்ளது. வருட ஆரம்பமே முன்னேற்றம் உண்டு. வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் சம்பள உயர்வும், தொழில் செய்பவராக இருந்தால் லாபமும் அதிகரிக்கும். ஒன்றே ஒன்று, உடல்சார்ந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கை, கால் வலியில் ஆரம்பித்து, உடல்நலன் சார்ந்த சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை பார்த்துவிடுவது நல்லது. 

தனுசு

தனுசுக்கு கடந்த ஒரு வருட காலம் நிம்மதியாக சென்ற நிலையில், ராசிக்கு அதிபதியான குரு பகவான் 5-லிருந்து 6-க்கு செல்வதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். செல்வ செல்வாக்கில் பாதிப்பு உண்டாகும். வாழ்க்கையில் தற்போது இருக்கும் நிலையிலிருந்து சற்று கீழே செல்லவே வாய்ப்புள்ளது. திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம். முக்கியமாக பொருளாதார தடைகள் ஏற்படும். தொழிலில் குழப்ப நிலை, உடல்நலனில் பாதிப்பு உள்ளிட்டவை காணப்படுகின்றன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் தனுச ராசிக்காரர்களுக்கு சற்று சிரமமான ஆண்டு என்றே சொல்லலாம். தேவையற்ற செலவினங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 


தனுசு - இறங்குநிலை; மகரம் - முன்னேற்றம்; கும்பம் - பரவாயில்லை; மீனம் - சிக்கல்

மகரம்

நீண்ட நாட்களாக பிரச்சினையில் இருந்த ஒரே ராசி மகர ராசி. மகர ராசிக்காரர்களுக்கு 2-ல் சனி உள்ள நிலையில், 4-ம் இடத்தில் உள்ள குரு 5-ம் இடத்திற்கு செல்கிறது. எனவே சுமார் 5 வருடங்களுக்கு பிறகு நன்மை காணப்படுகிறது. கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள், வாகனங்கள் வாங்க வாய்ப்புள்ளது. இதுவரை இருந்த உடல்நல தொந்தரவுகள் நீங்கும். குறிப்பாக தோல் தொடர்பான நோய்கள் குணமாகும். மொத்தத்தில் குரோதி ஆண்டு, மகர ராசிக்காரர்களை நல்ல விதத்தில் வைத்துக்கொள்ள போகிறது. நிச்சயம் இந்த ஆண்டு மகர ராசியினருக்கு சகல நிலைகளிலும் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கப்போகிறது. 

கும்பம்

இவ்வளவு நாளாக அடைத்துவைக்கப்பட்ட ராசி கும்பம். அனைத்து வருட கோள்களுமே தவறான நிலையில் காணப்படும் சூழலில், குரு 3-லிருந்து 4-ம் இடத்திற்கு செல்வதால் வெளிச்சப்புள்ளி கண்ணில் தென்படுகிறது. இருக்கும் பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு காணப்படுகிறது. இதுவரை நீங்கள் தேடிக்கொண்டிருப்பது கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் முழுதாக கிடைக்காது. வெற்றி முழுமையாக இல்லை. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். மொத்தத்தில் கடந்த சில வருடங்களுடன் இந்த ஆண்டை ஒப்பிட்டால், குரோதி வருடம் கும்ப ராசிக்கு பரவாயில்லை என்றே சொல்லலாம். 

மீனம்

மீனத்திற்கு ஏழரை சனி இருந்தாலும், கடந்த ஓராண்டு காலமாக குரு 2-ல் இருந்ததால் பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த வருடத்தில் பெரிய சிக்கலை சந்திக்கக் கூடிய ராசியாக மீன ராசி உள்ளது. 12-ல் சனி, ஜென்மத்தில் ராகு, தன்னுடைய கொடிய ஸ்தானமான 3-ம் இடத்தில் குரு இருக்கிறது. எனவே கொஞ்சம் அல்ல, அதிக கவனம் தேவை. நீங்கள் பெரிய ஆளாக இருந்தால் வருமான வரித்துறை பிரச்சினை வரும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் லஞ்சம் தொடர்பான பிரச்சினை வரும். நடுத்தர குடும்பமாக இருந்தால் வறுமை வரும். எந்த நிலையில் உள்ள மீன ராசியினரும் இந்த ஆண்டு சிரமப்பட்டே தீர வேண்டும். எனவே ஆன்மிக தொடர்பும், சூரிய உதயத்திற்கு முன்பு எழும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால்தான், மீன ராசியினர் இந்த குரோதி ஆண்டை ஏதோ ஒரு வழியில் கடந்துவிட முடியும். 

12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியாக பலன்கள் கூறப்பட்டுள்ள நிலையில், இதில் மகரம், கன்னி, விருச்சிகம் ஆகிய 3 ராசிகள் மிகவும் நன்றாக உள்ளன. குரோதி ஆண்டில் இந்த 3 ராசிகளை டாப் 3 ராசிகள் என்று சொல்லலாம். அதேநேரம், மீனம், சிம்மம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் மிக மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்