ஆடி மாத ஸ்பெஷல் - வேப்பிலைக்காரி பெரியபாளையத்து அம்மன் தரிசனம்!

அன்னையின் ஆணைப்படி புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டு எழுந்தது. புற்றுக்குள் சுயம்பு வெளிப்பட்டது.

Update: 2024-07-22 08:18 GMT

சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றங்கரையோரம் சுயம்புவாக எழுந்தருளிய பெரியபாளையத்து பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் தொடங்கி, 14 வாரங்களுக்கு ஆடி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதனை ஒட்டி, வேப்பிலைக்காரியான பவானி அம்மனை காண சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை என தமிழகம் மட்டுமன்றி, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெரியபாளையத்தில் குவிகின்றனர்.

வளையல் வியாபாரி மூலம் வெளிப்பட்ட அன்னை

புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மன், திடீரென ஒருநாள் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் தோன்றி, பெரியபாளையத்தில் குறிப்பிட்ட இடத்திலிருக்கும் புற்றை இடிக்க ஆணையிட்டாலாம் அன்னை. அவ்வாறே அங்கு புற்று இடிக்கப்பட, புற்றிலிருந்து சுயம்பு ஒன்று வெளிப்பட்டது. சுயம்பிலிருந்து ரத்தம் பீறிட்டு வடிந்தது. அதற்கு சாட்சியாக இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் பார்க்கலாமாம்.

மீனவப் பெண்களின் தாய் "பவானி"

மீனவக்குலப் பெண்களின் தாயாக பெரியபாளையத்து பவானி அம்மன் விளங்குகிறாள். கடலுக்குச் செல்லும் தங்கள் கணவர்கள் பத்திரமாக கரை திரும்ப பவானியே துணை நிற்கிறாள் என்பது அவர்களின் நம்பிக்கை. கடலில் அசம்பாவித சூழல்கள் ஏற்பட்டு, பெரும் போராட்டத்திற்கு பின், கணவன் உயிர் பிழைத்து திரும்பினாள், பெரியபாளையத்தாளுக்கு தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவதை மீனவ பெண்கள் இன்றும் பின்பற்றி வருகின்றனர். 

திருமணம், குழந்தை வரம் அருளும் "பவானி தேவி"

திருமணம் கைகூடவும், குழந்தை வரம் கிடைக்கவும் அன்னை பவானி உடனடி அருள்புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயிலில் உள்ள வேப்ப மரம், பிள்ளையில்லாத பெண்களின் பெருந்துயரை நீக்கும் சிறப்பு கொண்டது. வேப்ப மரத்தில் தொட்டில்கட்டி வழிபட்டால், பிள்ளை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படி நம்பிக்கையோடு இங்கு வந்து பலன் பெற்றவர்கள் இன்றும் அதற்கு சாட்சியாக பவானி தேவியை கொண்டாடி வருகின்றனர். 

நேர்த்திக்கடன்கள் ஏராளம்

பெரியபாளையத்து வேப்பிலைக்காரிக்கு ஏராளமான நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகின்றன. திருமண வேண்டுதல் நிறைவேறியவர்கள், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பட்டாடை உடுத்திவந்து, சந்தனமும் குங்குமமும் பூசிக் கொண்டு, அம்மனுக்குப் பிடித்த இசைக் கருவிகள் முழங்க, தலையில் கரகம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இது "குடைக் கல்யாணம்" என்று அழைக்கப்படுகிறது.

அத்துடன் தீச்சட்டி ஏந்தல், வேப்பஞ்சேலை கொடுத்தல், கோழி-சேவல் சுற்றி விடுதல், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், அங்கப் பிரதட்சனம் செய்தல், மாவிளக்கு ஏற்றுதல், துலாபாரம் கொடுத்தல், சேலை சாத்தல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், திருமாங்கல்யம் காணிக்கை என பெரியபாளையம் கோயில் முழுக்க பக்தி அலை வீசுவதை காணலாம்.

வேப்பஞ்சேலை வழிபாடு

அன்னையை வேண்டி அம்மை நோயிலிருந்து குணமாகியவர்கள், வேப்பஞ்சேலை அணிந்து கோயிலை சுற்றி வலம்வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது இங்கு மிக விசேஷம். மேலும் ஆடி மாதங்களில் கூழ் ஊற்றி வழிபடுவதும் இக்கோயிலின் சிறப்பம்சங்களில் ஒன்று.

தீராத நோய்களை தீர்க்கும் தீர்த்தம்

பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு தினமும் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளைகளும் தீர்த்த அபிஷேகம் நடைபெறும். குங்குமமும் மஞ்சளும் கலந்த இந்த தீர்த்தம் தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் என்று பக்தர்கள் நம்புவதால், அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம் வழங்கப்படுகிறது. மேலும், மழை பொழியவும், காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும் இந்த பவானி அம்மனே காவல் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

பெரியபாளையம் செல்வதற்கான கூகுள் மேப்

Full View

சென்னையில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரியபாளையத்திற்கு, கோயம்பேடு மற்றும் ரெட் ஹில்ஸிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. வசதிக்கேற்ப அவரவர் சொந்த வாகனங்களிலும் செல்லலாம். இந்த ஆடி மாதத்தில் பெரியபாளையத்து அம்மனை மனதார வேண்டி வேப்பிலைகாரியின் அருளை அனைவரும் பெறுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்