பங்குனி உத்திரம் 2024 : இவ்வளவு சிறப்புகளா? விரத முறையும்! வழிபாட்டு நேரமும்!

முருகன் திருக்கல்யாணம், மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி உள்ளிட்டவை நடைபெறும்.

Update:2024-03-19 00:00 IST
Click the Play button to listen to article

பங்குனி மாத பெளர்ணமியன்று வரும் உத்திர நட்சத்திரம் என்பது தென்னிந்தியாவில் முக்கிய விரத நாட்களில் ஒன்றாக பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுவது வழக்கம். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு பல மகிமைகள் உள்ளன. தமிழ் மாதங்களில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், 27 நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரம். இந்த திருநாளில் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அவ்வளவு பெருமை வாய்ந்த இந்த நாளுக்குரிய சிறப்புகள் என்னென்ன? பங்குனி உத்திரம் விரதம் இருக்கும் முறை என்ன? வழிபாட்டு நேரம் என்ன? என்பது குறித்தெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

பங்குனி உத்திர விழா

கோடை காலத்தின் துவக்கமே பங்குனி மாதம்தான். பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன. வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவதைப்போல, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் இந்த பங்குனி உத்திரம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும், முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக களைகட்டும். அனைத்து ஆலயங்களிலுமே தெய்வ திருமணங்கள் நடைபெறும் ஒரு நாளாக பங்குனி உத்திரம் இருக்கிறது.


சிவன்-பார்வதி, முருகன்-தெய்வானை, இந்திரன்-இந்திராணி, ராமர்-சீதை திருமணங்கள்

பங்குனி உத்திரத்தில் நடைபெற்ற தெய்வ திருமணங்கள் 

உலகாளும் சிவபெருமான்-பார்வதியை மணந்ததும், தமிழ் கடவுளான முருகப் பெருமான்-தெய்வானையை கரம் பிடித்ததும், ஸ்ரீராமர்-சீதா தேவியை திருமணம் முடித்ததும், தேவர்களின் தலைவனான இந்திர பகவான்-இந்திராணியை கல்யாணம் செய்ததும் இதே பங்குனி உத்திர திருநாளில்தான் என புராணங்கள் கூறுகின்றன. மேலும், இருபத்தேழு நட்சத்திரங்களுடன், சந்திரனின் திருமணங்கள் நடந்தேறியதும் இந்த பங்குனி உத்திரத்தன்றுதானாம். சுந்தரேஸ்வரர், அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தானாம். எனவேதான் ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

பங்குனி உத்திர நாளின் பிற சிறப்புகள்

சிவன் மற்றும் விஷ்ணுவின் புதல்வனாகப் பிறந்த தர்ம சாஸ்தாவான சுவாமி ஐயப்பன் அவதரித்த திருநாள் பங்குனி உத்திர நாளாகும். பங்குனி உத்திர திருநாளில் சபரிமலையில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; நாராயணனின் மார்பில் மஹாலட்சுமி அமர்ந்தது, பிரம்ம தேவனின் வாக்கில் சரஸ்வதி அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன், ரதியின் வேண்டுதலால் மீண்டும் உயிர் பெற்ற நாளும் இதுதான். மேலும் விஷ்ணு பகவானின் மனைவியான லட்சுமி தாயார் பார்கவ மகரிஷியின் மகளாகப் பூமியில் பார்கவி என்னும் பெயரில் இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் அவதரித்தாராம்.


பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள்

2024 பங்குனி உத்திரம் எப்போது?

2024 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் நட்சத்திரம் மார்ச் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. உத்திரம் நட்சத்திரம் திதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:35 மணிக்கு தொடங்கி, மார்ச் 25-ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:38 மணிக்கு முடிவடைகிறது. அதே போல் மார்ச் 24-ம் தேதி காலை 11.17 மணி துவங்கி, மார்ச் 25-ம் தேதி பகல் 01.16 வரை பெளர்ணமி திதி உள்ளது. ஆனால், மார்ச் 25 ம் தேதிதான் சூரிய உதய சமயத்தில் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்துள்ளன. எனவே மார்ச் 25-ம் தேதியையே பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக்கொண்டு விரதம் இருக்க வேண்டுமாம்.

பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் காவடி எடுத்து அபிஷேகங்களுடன் பக்தர்கள் மிக விமரிசையாக இந்த திருவிழாவைக் கொண்டாடுவார்கள். ஆலயங்களில் முருகன் திருக்கல்யாணம், மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடைபெறும். 


காவடியுடன், அலகு குத்தி முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்துதல்

பங்குனி உத்திர விரத மகிமை

பங்குனி உத்திர விரதம் இருந்து வழிபாடு செய்தால், வீட்டில் தடைபட்டுக்கொண்டே உள்ள சுபகாரியங்கள் தடையின்றி நடந்தேறுமாம். குறிப்பாக இந்த நாளில் ஆலயங்களில் நடைபெறும் இறைவன் திருக்கல்யாணங்களில் கலந்துகொண்டால் திருமணத்தடை நீங்குமாம். சிலருக்கு திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனால், பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதோடு, மனதுக்கு பிடித்தவரை கரம் பிடிக்கவும் பங்குனி உத்திர விரதம் இருப்பது மிகுந்த பலனைக் கொடுக்குமாம். சூரிய பகவானுக்கு உரிய உத்திர நட்சத்திரமும், சூரிய பகவான் தன்னுடைய ஓராண்டு பயணத்தை நிறைவு செய்யும் கடைசி மாதமுமான பங்குனியும் இணைந்து வரும் பங்குனி உத்திர நாளில் முருகனை வழிபாடு செய்தால் அரசு சார்ந்த காரியங்கள் எல்லாம் சுபமாக முடியுமாம். மேலும் வேலை தேடுவோருக்கு நல்ல வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு நினைத்தபடி பதவி உயர்வும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 


பங்குனி உத்திரத்தன்று கோயில்களில் நடைபெறும் கடவுளர்களின் திருமணங்கள்

திருமணத்திற்காக பங்குனி உத்திர விரதம் இருக்கும் முறை

திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பவர்கள் ஒரு ஜாக்கெட் பிட், பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு மற்றும் ஒரு ரூபாய் வைத்து வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் சுமங்கலி பெண்கள் எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கும் கொடுக்கலாம். திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண், பெண் என இருபாலரும் இதனை செய்வது நல்லது. அவர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், காலையிலேயே பூஜை அறையில் அந்த பொருட்களை வைத்து வணங்கி விட்டு, சிறிய பைகளில் அவர்கள் கைகளால் போட்டு எடுத்து வைத்து விடலாம். பிறகு அவர்கள் சார்பாக அவர்களின் அப்பாவோ, அம்மாவோ, உடன் பிறந்தவர்களோ மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.


நைவேத்தியம் படைத்து வழிபடும் முறை

நைவேத்தியம் 

திருமணம் ஆக வேண்டும் என வேண்டிக்கொண்டு விரதம் இருப்பவர்களும் சரி, வேண்டுதல் ஏதும் இல்லாமல் சாதாரணமாக முருகனின் அருள் வேண்டி விரதம் இருப்பவர்களும் சரி, சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் போன்ற ஏதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் காய்ச்சிய பால் மட்டும் வைத்து அதோடு தேன், சர்க்கரை கலந்து, பழம், வெற்றிலை, பாக்கு வைத்து படைக்கலாம். பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான அப்பம் செய்து படைப்பது மிகவும் சிறப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்