செல்வம் செழிக்க வேண்டுமா? - சென்னை குபேரன் கோயிலுக்கு போங்க..!

பார்வதி தேவி குபேரன் அறியாமையால்தான் செய்திருக்கிறார் என்பதனை அறிந்து சுட்டு வீழ்த்திய கண்ணை அகற்றிவிட்டு அதற்கு மாற்றுக்கண்ணை குபேரனுக்கு வழங்கினார். ஆனால் மாற்றாக கொடுத்த அந்த கண் சிறியதாக இருந்தது. அப்படி இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் குபேரன் ஏற்றுக்கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.

Update:2023-08-15 00:00 IST
Click the Play button to listen to article

சென்னையை அடுத்த வண்டலூருக்கு அருகே இருக்கும் ரத்தினமங்கலம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஆலயம். இக்கோயில் சுமார் 4000 சதுர அடி பரப்பளவில் 5 அடுக்கு கோபுரங்களாக கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது இக்கோயில். இந்தியாவிலேயே குபேரருக்கென தனி ஆலயம் இதுமட்டுமே என்ற பெருமையும் இந்த ஆலயத்திற்கு உண்டு. குபேரனுக்கு வடக்கு திசையே உகந்தது என்பதால் இந்த கோயில் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. அதேபோல் குபேரனை தரிசனம் செய்யும்போது நாணயங்களால் ஓசை எழுப்பி மந்திரம் கூறி வழிபடுவது வழக்கமாய் இருந்து வருகிறது.

குபேரன் கைலாயத்திற்கு தரிசிக்க சென்றபோது சிவனையும் பார்வதியையும் சந்தித்தாராம். அழகான பார்வதியை கண்ட குபேரன், தன்னையும் அறியாமலேயே பார்வதியை நோக்கி ஒற்றை கண் அடித்ததாகவும், இதனைக் கண்டு கோபம் அடைந்த பார்வதி தேவி, `குபேரன் தன்னை தவறான பார்வையில் பார்த்தான்’ என்று எண்ணி, சிமிட்டிய அந்த கண்ணை வெடித்துச் சிதற வைத்ததாகவும் வரலாறு கூறுகிறது. பின்னர் குபேரன் சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும், தான் தவறான எண்ணத்தில் பார்க்கவில்லை என்று கூறி மன்னிப்புக் கோரினார். அதற்கு சிவபெருமான், `இதில் நான் முடிவெடுக்க எதுவும் இல்லை; பார்வதிதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறிவிட்டாராம். பார்வதி தேவி குபேரன் அறியாமையால்தான் செய்திருக்கிறார் என்பதனை அறிந்து சுட்டு வீழ்த்திய கண்ணை அகற்றிவிட்டு அதற்கு மாற்றுக்கண்ணை குபேரனுக்கு வழங்கினார். ஆனால் மாற்றாக கொடுத்த அந்த கண் சிறியதாக இருந்தது. அப்படி இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் குபேரன் ஏற்றுக்கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.


குபேரன் கோயில், சென்னை

குபேரன் கோயிலின் தனிச்சிறப்பு!

குபேரன் கோயிலின் வாயிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் கண்களில் படுவது ராஜ கணபதி. இவரை தரிசனம் செய்தபிறகு சோடச கணபதியை (16 வகையான கணபதிகள்) வழிபடுவதே இக்கோயிலின் வழக்கமாக இருக்கிறது. 16 வகையான மந்திரங்களுக்காகவும், 16 வகையான திதிகளுக்காகவும் இங்கு 16 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது இக்குபேர கோயிலுக்கு தனிச்சிறப்பை சேர்த்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று ஈசனை வணங்கி ஈசான மூலையில் இருக்கும் குபேர லிங்கத்தை வழிபடுவது வழக்கம். அதேபோல் இக்கோயிலின் ஈசான மூலையில்தான் குபேர லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இவரை தரிசனம் செய்தபிறகே நவகிரகங்களை வழிபட வேண்டுமாம். அதுவும் இக்கோயிலில் வீற்றிருக்கும் நவகிரகங்கள் அனைத்தும் தமக்குரிய வாகனங்களுடனும் தம்பதிகளுடனும் அமைந்திருப்பது விசேஷமானது. நவகிரகங்களை வழிபட்ட பின்னர் அங்குள்ள ஆஞ்சநேயர் மற்றும் பிரம்மன் சிலையை வழிபட வேண்டும்.

அதுவும் பல கோயில்களில் பிரம்மனானவர் தனி சன்னதியில் வீற்றிருப்பது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் தனது துணைவி சரஸ்வதியுடன் ஜோடியாக அமைத்திருக்கிறார். மேலும் இக்கோயில் சன்னதியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ வெங்கடாசலபதி சன்னதிகளும் இந்த ஸ்தலத்தின் கன்னி மூலையில் லக்ஷ்மி கணபதியும், 18 படிகளுக்கு மேலே ஐயப்பன் சிலையும் இருக்கிறது. இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக அமைந்திருப்பதுதான், லாஃபிங் புத்தா (Laughing Buddha) என்று அழைக்கக்கூடிய சீன அதிர்ஷ்ட குபேரர். இங்கு வரும் பக்தர்கள் எல்லோரும் சீன அதிர்ஷ்ட நாணயங்களை வாங்கி குபேரரின் இடது கைகளில் வைத்து அவருடைய வயிற்றுப்பகுதியை தடவி, அவருக்கு சந்தோஷம் ஏற்படுத்தி கொடுத்தால் அவரும் நமக்கு பல சந்தோஷங்களை அள்ளித்தருவார் என்பது இந்த கோயிலின் ஐதிகமாக இருக்கிறது.


லாஃபிங் குபேரர்

குலதெய்வங்களுக்கு ஈடு!

திருப்பதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமான் தனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனுக்கான வட்டியை இன்றளவும் பெருமாள் குபேரனிடம் வழங்கி கொண்டிருப்பதாகவும் வரலாறு கூறுகிறது. அதேபோல் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் அக்கோயிலுக்கென பசுக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. சாஸ்திரங்களின்படி கோமாதா பூஜை, குபேர பூஜைக்கு ஈடாக கருதப்பட்டு இக்கோயிலில் கோமாதா பூஜை நடத்தப்பட்டு வருகிறது. குபேரனுக்கு திருமஞ்சளும் வஸ்திரங்களும் சாத்தப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் லாஃபிங் குபேரர் தனது இடது கையில் சங்கந்தி பானையை ஏந்தியவாறும் வலது கையில் பத்மநிதி கலசத்தை ஏந்தியவாறும் காட்சி அளிக்கிறார்.

அதேபோல் தங்கள் குடும்பத்தின் குலதெய்வம் யார் என்பதை அறியாதவர்கள் இந்த கோயிலில் வீற்றிருக்கும் ஸ்வர்ண கௌரியை வழிபட்டால் குலதெய்வங்களை வழிபடுவதற்கு ஈடாக சொல்லப்படுகிறது. ஸ்வர்ணம் என்பது லக்ஷ்மியையும் கௌரி என்பது பார்வதியையும் குறிக்கும் 'ஸ்வர்ண கௌரி’ மீன் வாகனத்தில் வீற்றிருக்கிறார். இச்சந்நதிற்கு வழிபட வரும் பக்தர்களில் பலரும் மீன் சின்னம் பொருத்திய டாலரை அணிந்திருப்பார்கள் என்றும், மீன் என்பது அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது என்று அக்கோயிலின் பூசாரி கூறியிருந்தார். இந்த சிலையின் அருகாமையில் அதிர்ஷ்ட தேவியும், அறுபடை செல்வ முத்துக்குமரன் சுவாமியும், மூலவரான லக்ஷ்மி குபேரரும் இருக்கின்றனர்.


குழந்தை செல்வம் வேண்டுவோர் வழிபட..

செல்வம் பெருகும்!

இந்த தலத்தில் நடக்கும் குபேர பூஜைகளால் வளம் பெருகும் என்றும், குழந்தை செல்வம் கிடைக்கும் என்றும், பல பக்தர்களும் நம்பிக்கையோடு வந்து வணங்கிச் செல்கின்றனர். திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வழிபட முடியாதவர்கள் இந்த கோயிலிலிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமானை வழிபட்டால் திருப்பதிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இக்கோயிலின் குபேரனானவர் தனியாக இல்லாமல் தன் துணைவி சித்திரலேகாவுடன் இணைந்து மகிழ்ச்சியாக காட்சி தருகிறார். இந்த கோயிலில் பச்சை நிற குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.வீட்டில் செல்வம் செழிக்க குபேரனின் படமும் ஒரு நாணமும் கொடுக்கப்படுகிறது. இந்த குபேர படத்தையும் நாணயத்தையும் பீரோவில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்